ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் (Christian
Democratic Union CDU)
அமெரிக்க காங்கிரசின் இரு பிரிவுகளின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாயன்று ஆற்றிய உரை ஒபாமா நிர்வாகத்தின்
வெளியுறவு கொள்கைக்கு முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேர்மனிய
அரசாங்கம் மத்திய கிழக்கு, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் விமர்சனமற்ற முறையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு
ஆதரவு என்ற தெளிவான மாற்றத்தை இது பிரதிபலிக்கிறது.
மேர்க்கெல் காங்கிரஸில் உரையற்றும் இரண்டாம் ஜேர்மன் அதிபர் ஆவார்; அதுவும்
காங்கிரஸின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையற்றும் முதல் ஜேர்மன் அதிபர் ஆவார். 1957ம் ஆண்டு
பழைமைவாத அதிபரான கொன்ராட் அடினார் இரண்டு அவைகளிலும் தனித்தனியே உரையாற்றினார். "எல்லையில்லாத
வாய்ப்பைக் கொண்ட நாடு" பற்றி பெரும் ஆர்வத்துடன் நயமான முறையில் துதிபாடிய கருத்துக்கள் நிறைந்த
மேர்க்கெலின் உரை உறுப்பினர்களால் ஆறு முறை பெரும் கரவொலிகளை பெற்றது. ஆனால் ஈரான் பற்றிய
மேர்க்கெலின் உரைக்குத்தான் மிகப் பெரும் கரவொலியும் பாராட்டுக்களும் குவிந்தன.
ஈரான்மீது அமெரிக்க வெளிவிவகாரத்துறையும் மற்றும் பாரக் ஒபாமாவே
பயன்படுத்தும் ஆக்கிரஷோமான நிலைப்பாடு மற்றும் சொல்லாட்சியை எதிரொலித்த வகையில், மேர்க்கெல்
பின்வருமாறு அறிவித்தார்: "பேரழிவு ஆயுதங்கள் உதாரணமாக ஈரான் பிடியில் சிக்கி நம் பாதுகாப்பிற்கு
ஆபத்தைக் கொடுக்கும் என்றால், இதை எதிர்கொள்ள எவ்வித பொறுமையும் எம்மிடம் இருக்க கூடாது." அவர்
தொடர்ந்தார்: "ஹோலோகாஸ்ட்டை மறுக்கும், இஸ்ரேலை அச்சுறுத்தும், இஸ்ரேலின் வாழும் உரிமையை மறுக்கும்
ஒரு ஈரானிய ஜனாதிபதியின் கரங்களில் அணு குண்டு என்பது நம்மால் ஏற்கத்தக்கது அல்ல."
உடனே எழுந்து நின்று கரவொலி கொடுத்த மன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர்
நான்ஸி பெலோசியை, முன்மாதிரியாகக் கொண்டு, கிட்டத்தட்ட முழு காங்கிரஸும் எழுந்து நின்று ஜேர்மனிய
அதிபரை பாராட்டும் வகையில் கைதட்டினர். மேர்க்கெலுடைய கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அப்பகுதியில் அதன்
மிக நெருக்கமான நட்புநாடான இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக சமீபத்திய வருங்காலத்தில் எந்த ஆக்கிரோஷமான
நடவடிக்கை எடுத்தாலும் அதற்குத் தடையற்ற ஆதரவு கொடுக்கப்படும் என்பதைத் தெரிவிக்கின்றன என்று குடியரசு,
மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொண்டனர். அண்மையில் ஒபாமா நிர்வாகம், தெஹ்ரான் அதன்
அணுசக்தி நடவடிக்கைகள் மீது சர்வதேசத் தடைகளை ஏற்கவில்லை என்றால் அதற்கு எதிரான இன்னும் கடுமையான
பொருளாதாரத் தடைகள் வேண்டும், அதற்கு ஜேர்மனி உடன்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த
அக்கறை பற்றி நேரடியாகப் பேசிய மேர்க்கெல் "இந்த அச்சுறுத்தலை....நேரடியாக சந்திப்பது,
தேவையானால் பொருளாதார தடைகள் மூலம் எதிகொள்ளுவது" முக்கியமாகும் என்று உடன்பட்டார்.
ஈரானைப் பற்றிய அவருடைய கருத்துக்கள், முக்கிய அமெரிக்க புள்ளிகளால்
உடனடியான வரவேற்பைப் பெற்றன. வெளியுறவுகள் குழுவைச் சேர்ந்த
Charles Kupchan
கடந்த காலத்தில் "தெஹ்ரானை
அதன் அணுவாயுதத்திட்டத்தில் எதிர்கொள்ளுவதற்கு ஜேர்மனி ஓரளவிற்கு சற்று பின் இருக்கைகளில் இருந்தது"
என்றார். ஆனால் காங்கிரஸில் மேர்க்கெல் உரையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்
Kupchan
முடிவுரையாக: "மேர்க்கெல் ஆதரவை நன்கு உயர்த்தி ஒரு அணுவாயுதம் படைத்த ஈரான் ஏற்கத்தக்கது அல்ல
என்பதை மிகத் தெளிவாக்கியுள்ளார். அவர் மறு தேர்தலில் பதவிக்கு வந்தபின், உறுதியான முடிவை எடுக்கத்
தயாராக உள்ளா எனதெரிகின்றது." என்றார்.
தன்னுடைய அரசாங்கம் இஸ்ரேல் நாட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்கும்
என்பதையும் மேர்க்கெல் அறிவித்தார். "இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு, என்னைப் பொறுத்த வரையில்,
பேச்சுவார்த்தைக்கே இடமில்லாத ஒன்று. இஸ்ரேலை அச்சுறுத்துபவர்கள் எவரும் நம்மையும்தான் அச்சுறுத்துகின்றனர்."
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு தொடர்ந்த ஆதரவிற்கும் அவர் உறுதியளித்து, ஜேர்மனியும் அமெரிக்காவும்
"இப்பாதையில் ஒவ்வொரு படியிலும் ஒன்றாகப் பயணிக்கும்" என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் எந்த அளவிற்கு வலதுசாரிச் சார்பு
கொண்டுள்ளனர் என்பதைப் பெரிதும் எடுத்துரைக்கும் ஒரு கருத்தில், செனட்டின் வெளியுறவு குழுவின் செய்தித்
தொடர்பாளர் "ஒரு சற்றே பழைமைவாத ஜேர்மனிய அதிபரும், சற்றே தாராளவாத ஜனநாயகக்
கட்சியினருக்கும் இடையே உள்ள ஒருமித்த உணர்வு மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்."
தன்னுடைய பேச்சில் அப்பகுதிக்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புவது பற்றி உறுதியான
உத்தரவாதம் எதையும் கொடுக்காத மேர்க்கெல் வருங்காலக் கொள்கை பற்றி அமெரிக்காவுடன் புதிய
ஆலோசனைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ள குறுகிய காலத்தில்
ஆப்கானிஸ்தான் பற்றி ஒரு பரந்த கண்ணோட்டத்தை விரைவில் எடுத்துக்கொள்ள முடிந்துள்ளது. புதிய ஜேர்மனிய
பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் ஜேர்மனியில் ஏற்கப்பட்ட நெறிமுறைகளை விரைவில்
தகர்த்து தான் பதவியை எடுத்துக் கொண்டபின் சடுதியிலேயே ஜேர்மனி உண்மையில் ஆப்கானிஸ்தானில் "ஒரு
போரில்தான்" ஈடுபட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய துருப்புக்கள் தலையிடுவதற்கு எதிரான வெகுஜன
எதிர்ப்பினை எதிர்த்து கூட்டன்பேர்க் அந்த தாக்கப்பட்டுள்ள நாட்டில், "ஜேர்மனிய ஈடுபாட்டிற்கு மாற்றீடு ஏதும்
இல்லை" என்று அறிவித்தார். ஜேர்மனியும் மற்ற முக்கிய ஐரோப்பிய நாடுகளும் துருப்புக்கள் பாரியளவில்
பெருக்கப்படுவதற்கான திட்டம் பற்றி வெள்ளை மாளிகையில் இறுதி முடிவிற்கு இன்னும் காத்திருக்கையில், மேர்க்கெல்
தன்னுடைய உரையில் ஜேர்மனி இப்பிரச்சினையில் அமெரிக்க வழிகாட்டும் தன்மையை ஏற்கும் என்றும் ஐரோப்பிய
ஒன்றியத்திற்குள் அமெரிக்க இராணுவக் கொள்கைக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்பதையும் தெளிவாக்கினார்.
கடந்த வாரம்தான் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் தம்மால்
நியம்க்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி லக்சம்பேர்க்கில் சந்தித்தபோது ஆப்கானிஸ்தானிலும்
பாக்கிஸ்தானத்திலும் இன்னும் உதவி அளிப்பதாக உறுதிமொழி கொடுத்தனர். அவ் ஆணைக்குழு அப்பகுதியில் அரசியல்
மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருகிறது என்று குறித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில்
வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் உணர்வை பொருட்படுத்தும் விருப்பம் ஐரோப்பிய
அரசாங்கங்களுக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கிய அறிக்கை, "ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை ஐரோப்பாவின்
மீது நேரடிப் பாதிப்பைக் கொண்டுள்ளது. நம்மை இன்று எதிர்கொண்டுள்ள பல தீவிர உலகளாவிய அச்சுறுத்தல்களில்
பலவும் இப்பகுதியில் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸிற்கு தான் ஆற்றிய உரையில் மேர்க்கெல் புதிய ஜேர்மனிய அரசாங்கம்
அடுத்த மாதம் டேனிஷ் தலைநகரமான கோபன்ஹாகனில் நடைபெற உள்ள சுற்றுச் சூழல் மாநாட்டில் சுற்றுச் சூழல்
பிரச்சினை கட்டுப்பாடு பற்றிய பிரச்சினையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் என்பதையும்
தெளிவுபடுத்தினார். சுற்றுச்சூழல் மாற்றச் சீர்திருத்தத்தை செயல்படுத்துவதில் பலமுறையும் எதிர்க்கும் மிகப் பெரிய,
முன்னேறிய தொழில்துறை நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. மேர்க்கெல், ஒபாமா நிர்வாகத்திற்கு ஆதரவு
கொடுக்கும் வகையில் புதிய சுற்றுச் சூழல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வளரும் நாடுகளுக்கு கூடுதலான
அழுத்தத்தை கொடுக்கும் நோக்கத்தைக் கொண்ட உடன்பாட்டை அமைக்க ஜேர்மனி உதவும் என்றார். "ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் உள்ள நாம் கட்டுப்படுத்தும் உடன்பாடுகளை ஏற்கத் தயார் என்று காட்டினால், சீனாவையும் இந்தியாவையும்
ஏற்குமாறு வலியுறுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்." என்றார். இவ்விதத்தில் மேர்க்கெலின் உரை அமெரிக்க
காங்கிஸில் ஒபாமாவின் சுற்றுச் சூழல் திட்டங்களுக்கு ஒரு ஆக்கம் கொடுப்பதாகக் கருதப்படுகிறது.
பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டதின் தவிர்க்க முடியாத 20ம் ஆண்டு நிறைவைப்
பயன்படுத்தி, மேர்க்கெல் தன்னுடைய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியில்
தன்னுடைய வேர்கள் இருந்து பற்றியும் மேர்க்கெல் எடுத்துரைத்தார். ஒரு நாட்டுப்புற, மூச்சுவிடா பூசணிக்காய்
பேசும் விதத்தில் மேர்க்கெல் சுருக்கமாக தன்னுடைய கிழக்கு ஜேர்மனித் தோற்றம் பற்றி குறிப்பிட்டு 20
ஆண்டுகளுக்கு முன்பு "என்னுடைய தீவிர கற்பனைக் கனவுகளில்கூட" அமெரிக்காவிற்கு பயணித்து காங்கிரஸில்
உரையாற்றுவோம் என எதிர்பார்த்திருக்க முடியாது என்றார்.
அமெரிக்காவை சுதந்திரத்திற்கு தாயகம், அமெரிக்கக் கனவுகள் ஆகியவை பற்றி
சங்கடம் தரும் வகையில் பெரும் பாராட்டுக்களை தெரிவித்த மேர்க்கெல் போருக்குப் பிந்தைய
அமெரிக்க-ஜேர்மனிய உறவுகளைப் பற்றி சுருக்கமான, மேம்போக்கான தொகுப்பைக் கொடுத்தார். இது
1948ல் பேர்லினில் விமானம் மூலம் நடவடிக்கையில் தொடங்கி ஜனாதிபதிகள் கென்னடி, ரேகன் மற்றும் ஜோர்ஜ்
எச்.டபுள்யூ புஷ் ஆகியோரைப் பற்றிய குறிப்புக்களையும் கொண்டிருந்தது. போருக்குப் பிந்தைய ஜேர்மனியில்
"சுதந்திரத்தைக் பாதுகாக்க உதவிய" 13 இலட்சம் அமெரிக்கத் துருப்புக்களுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கவும்
மேர்க்கெல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு விவிலிய முறையில் (பைபிள் முறையில்) மேர்க்கெல், இதன்பின் கிழக்கு மற்றும்
மேற்கு ஜேர்மனியை பிரித்த "இருண்ட சுவரை" உடைப்பதற்கு அமெரிக்காவின் பெருநோக்குடைய விழைவுதான்
தொடர்ச்சியான அமெரிக்க ஜனாதிபதிகளிடம் உறைந்திருந்து, இறுதியில் "ஒளியை" கொண்டுவந்தது என்று கூறினார்.
தன்னுடைய அரசியல் வாழ்வைப் பொறுத்த வரையில், மேர்க்கெல் கிழக்கு ஜேர்மனி
மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதுமே 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தடையற்ற சந்தை முறையை தங்கள்
அரசியல் போக்கு, சமூக விழைவுகளுக்கு முன்மாதிரியாக நினைத்த சமூக அடுக்குகளின் தேர்ந்த பிரதிநிதியாவார்.
அவரே ஒப்புக் கொண்டுள்ளபடி, 1989க்கு முன் தான் அரசியலில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை என்றும்,
ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனிய மக்கள் பேர்லின் சுவரைத் தகர்க்கும்போது தான் ஆவிபறக்கும் அறையில்
அமர்ந்திருந்ததாகவும் மேர்க்கெல் கூறினார். அவர் உத்தியோகபூர்வ ஸ்ராலினிச இளைஞர் பிரிவான சுதந்திர
இளைஞர் அமைப்பின்
(FDJ) உறுப்பினராக
இருந்தபோது அதிகாரத்துவத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்தச் சான்றும் இல்லை.
அவருடைய குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் சமூக ஜனநாயகக் கட்சி அல்லது
பசுமைக்கட்சிவாதிகளுடன் சேர்ந்த நிலையில் மேர்க்கெல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் (CDU)
தீவிர அரசியலுக்காக சேர்ந்தார் என்றாலும், "என்னைப் பொறுத்தவரையில் நாட்டின் மறு ஐக்கியத்திற்கு பின்
மூன்று விஷயங்கள் தெளிவாக இருந்தன: நான் பாராளுமன்றத்தில் உறுப்பினராக விரும்பினேன்; விரைவாக ஜேர்மனிய
ஐக்கியம் வரவேண்டும் என்று விரும்பினேன், மேலும் நான் தடையற்ற சந்தை முறைக்கு ஆதரவு கொடுத்தேன்"
என்றார்.
கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கிழக்கு ஜேர்மனியில் இளைய அடுக்குகளிடேயே அதிக
ஆதரவு இல்லாத சூழலில், மேர்க்கெல் மின்னல் போல் அதிகாரத்தின் முக்கிய பதவிகளுக்கு ஏற்றம் பெற்று,
2000ம் ஆண்டில் அதன் தலைவரானார். தொடக்கத்தில் இருந்தே தன்னுடைய அமெரிக்க சார்பு பற்றி அவர்
இரகசியமாக வைத்திருக்கவில்லை. ஈராக் போருக்கு முன்னதாக புஷ் அரசாங்கத்தின் ஆக்கிரோஷமான
கொள்கைகளுக்கு நன்கு தெரியும் விதத்தில் ஆதரவு கொடுத்தார்.
பெப்ருவரி 2003ல், வரவிருக்கும் போர் பற்றி ஜேர்மன் மக்களில் 80
சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் நிராகரிப்பு என்பதைப் பதிவு செய்த கருத்துக் கணிப்புக்கள் இருந்த நிலையில்,
உலகம் அப்பொழுதுதான் இதுகாறும் இல்லாத அளவு பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த
நிலையிலும் மேர்க்கெல் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அப்போதைய ஜேர்மனிய அதிபராக இருந்த சமூக
ஜனநாயகக் கட்சியின் (SPD)
ஹெகார்ட் ஷ்ரோடர்
ஈராக்கிற்கு துருப்புக்கள் அனுப்ப மறுத்ததற்காக தாக்கி ஒரு கருத்துக் கட்டுரையை அனுப்பியிருந்தார்.
கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU)
சமூக ஜனநாயகக் கட்சியுடன்
(SPD)
(2004-2009) கொண்டிருந்த பெரும் கூட்டணி, அதிபர் மேர்க்கெலின் கீழ் புஷ் நிர்வாகத்திடம் இருந்து சற்று
ஒதுங்கியே இருந்து, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொள்ளவும் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவின்
மறைந்துகொண்டிருக்கும் பொருளாதார செல்வாக்கு, அதிகாரம் இவற்றிற்கு ஒரு எதிர் கனமாகக் கட்டமைக்கவும்
முற்பட்டது. 2004ல் பதவியில் இருந்து அகற்றப்பட்டபின், ரஷ்ய காஸ்ப்ரோம்
(Gazprom)
எரிசக்தி நிறுவனத்தில் முக்கிய பதவியை எடுத்துக் கொண்ட முன்னாள் அதிபர் ஷ்ரோடர், பெரும் கூட்டணியில் அதிபர்
அலுவலகத்தில் தன்னுடைய மிக நெருக்கமான சக ஊழியராக இருந்த பிராங்க் வால்ட்டர் ஸ்ரைன்மையர் வெளியுறவு
மந்திரியாக இருப்பது என்பதை உறுதிபடுத்துவதில் எச்சரிக்கையாக இருந்தார்.
2008
இலையுதிர் கால நிதிய
நெருக்கடியைத் தொடர்ந்து, அட்லான்டிக் கடந்த உறவுகள் மீண்டும் இறுக்கம் பெற்று, பல முக்கிய ஜேர்மனியத்
தலைவர்கள் ஜேர்மனிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க நிதிய நிறுவனங்களின் மேலாதிகத்தில் இருந்து
கூடுதலான சுதந்திரத்தைக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
ஆனால் அமெரிக்க காங்கிரஸில் மேர்க்கெல் கொடுத்த உரையோ புதிய யூனியன் கட்சிகள்
மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி (FDP)
ஆகியவற்றைக் கொண்ட
ஜேர்மனிய கூட்டணி அரசாங்கம், கிறிஸ்தவ சமூக யூனியனின் (CSU)
கார்ல் தியோடர் சூ
கூட்டன்பேர்க்கை பாதுகாப்பு மந்திரியாகவும், அட்லான்டிக் கடந்த உறவுகளுக்கு ஆதரவு காட்டும் தாராளவாத
ஜனநாயக கட்சி தலைவர் கீடோ வெஸ்டவெல்லவை வெளியுறவு மந்திரி என்று கொண்டு நாட்டின் வெளியுறவுக்கொள்கை
பற்றி ஒரு புதிய சார்பை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவாத செயல்களுக்கு
விமர்சனமற்ற ஆதரவு என்பது இப்பொழுது ஜேர்மனியில் வல்லரசு அரசியலில் புதிய கட்டத்தைக் கொண்டுவர
பயன்படுத்தப்படுகிறது; இது பெருகிய முறையில் தன் இராணுவ வலிமையைத் அடித்தளமாகக் கொண்டு அதன்
பொருளாதார, அரசியல் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.