World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The Opel-Magna fraud

A betrayal of GM employees in Europe

ஓப்பல்-மாக்னா மோசடி

ஐரோப்பிய GM ஊழியர்கள் காட்டிக் கொடுப்பு

By Ulrich Rippert
5 November 2009

Back to screen version

கார்த் தயாரிப்பாளர் ஓப்பலின் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் 1.6 பில்லியன் யூரோக்களுக்கு ஊதிய, பிற நலன்கள் குறைப்புக்களை செயல்படுத்தும் விருப்பத்தை தெரிவித்த ஆவணத்தை வழங்கிய மறு நாள் ஜெனரல் மோட்டார்ஸின் இயக்குனர் குழு அதன் ஓப்பல்-வாக்ஸ்ஹால் ஐரோப்பிய செயற்பாடுகளை ஆஸ்திரிய-கனேடிய கார்த்தயாரிப்புகளுக்கு பாகங்கள் விநியோகிக்கும் மாக்னாவிற்கு விற்பது என்பதற்கு எதிரான முடிவை எடுத்தனர்.

கடைசிக் கணம் வரை தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் IG Metall தொழிற்சங்க அலுவலர்களும் ஓப்பல் மற்றும் வாக்ஸ்ஹால் மாக்னாவிற்கு விற்க இருப்பது 10,000க்கும் மேற்பட்ட வேலைகள் தகர்ப்பைக் கொடுக்கும் என்றாலும் இந்த மாற்றம் நிறுவன ஊழியர்களின் நலன்களுக்கு மிகவும் உகந்தது என்று கூறிவந்தனர். தொழிற்சங்கம் ஜேர்மனிய அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து ஓப்பல் மாக்னாவிற்கு விற்பனை செய்யப்படுவதற்கு உதவும் வகையில் அரசாங்கத்தை மக்கள் வரிப்பணத்தில் இருந்து 4.5 பில்லியன் யூரோக்களை கொடுக்கவும் வலியுறுத்தியது.

ஐரோப்பிய, ஜேர்மனிய பாராளுமன்றத்திற்கான முக்கியமான தேர்தல்கள் நடக்க இருந்த நேரத்தில், மாக்னா பேரம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய அளவு திசை திருப்பலும் ஓப்பல் மற்றும் ஐரோப்பிய GM தொழிலாளர்கள் அமெரிக்க ஆலைகளுடன் ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.

GM இன் தாய்நிறுவனம் இந்த வசந்தகாலத்தில் ஆரம்பித்திருந்த திவால் நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுவனத்தின் தொழிலாளர் தொகுப்பின்மீது பெரும் தாக்குதல்கள் நடத்துவதுடன் பிணைந்திருந்தது. ஏற்கனவே ஏராளமானவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 27,000 வேலைகள் குறைக்கப்பட்டு, அமெரிக்க GMன் மொத்த தொழிலாளர் பிரிவு 64,000 தொழிலாளர்கள்தான் என்று சரிந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு GM ன் தொழிலாளர் பிரிவு 618,000 என்று இருந்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்கூட GM இல் 110,000 தொழிலாளர்கள் வேலையில் இருந்தனர்.

திவால் நடவடிக்கைகள் 14 ஆலை மூடல்கள், மற்றும் கிட்டத்டட்ட 2,000 கார் விற்பனை நிலையங்கள் மூடலுடன் பிணைந்திருந்தன. கனடாவிலும் சில ஆலைகளை GM மூடி, தொழிலாளர் பிரிவை 7,000 என்று குறைத்தது. 2005ல் GM Canada 20,000 ஊழியர்களை கொண்டிருந்தது.

தொழிலாளர் தொகுப்பின்மீது தீவிர தாக்குதல்களை நடத்த ஒபாமா நிர்வாகத்துடனும் UAW கார்த் தொழிலாளர்கள் சங்கத்துடனும் GM நிர்வாகம் நெருக்கமாக ஒத்துழைத்த நிலையில், ஐரோப்பிய தொழிற்சங்கங்கள், குறிப்பாக ஜேர்மனியின் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் தங்கள் அமெரிக்க, கனேடிய சக ஊழியர்களுக்காக எந்தவித ஒற்றுமை நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டன. மாறாக, அவை மாக்னாவிற்கு ஊதியக் குறைப்புக்களை அளிக்கத் தயார் என்று கூறியதுடன் ஒரு தொழிற்சாலையை மற்ற நாட்டு தொழிற்சாலைக்கு எதிராக மோதவைப்பதின் மூலம் தொழிலாளர் பிரிவை திட்டமிட்டமுறையில் பிரிப்பதற்கும் ஏற்பாடு செய்தன.

அதிபர் மேர்க்கெலை (CDU) ஆலைக் கூட்டம் ஒன்றில் பேச அழைத்து அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக IG Metall ஒரு அரங்கும் அமைத்துக் கொடுத்தது. அரசாங்கம் பெருவணிக கூட்டமைப்புக்களுடன் ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் சமூகநலன்கள் மீதான நேரடித் தாக்குதலை பாராளுமன்ற தேர்தல்கள் வரை ஒத்திவைப்பதற்கான உடன்பாட்டைக் கொண்டிருந்தது என்பதை நன்கு அறிந்திருந்தன. இதற்கு ஈடாக அரசாங்கம் குறுகிய கால ஊழிய ஊதியங்களை சில தடவை விரிவாக்கி, கார்த்தொழிலில் இருந்த நெருக்கடியை புதிய கார்கள் வாங்குவோருக்கான நிதியுதவி (cash-for clunkers) திட்டத்தின் கீழ் நெருக்கடியை ஒத்திவைக்க முற்பட்டது.

இந்த தற்காலிக நீக்க நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தன. தேர்தல் பிரச்சார காலத்தில் பெரும் சமூகப் பூசல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதை அவை நோக்கமாக கொண்டிருந்தன.

ஜெனரல் மோட்டார்ஸ் மே மாதம் தன்னுடைய திவால் நடவடிக்கைகளை தொடங்கிய போது, ஜேர்மனிய தேர்தல் பிரச்சாரத்தில் ஓப்பல் முக்கிய பிரச்சினையாயிற்று. அப்பொழுது பேர்லின் மற்றும் வாஷிங்டனில் மிக உயர்மட்டத்தில் GM நிர்வாகம் பாராளுமன்ற தேர்தல் வரை தன்னுடையை ஐரோப்பிய ஆலைகளின் வருங்காலம் பற்றிய முடிவை ஒத்தி வைக்க வேண்டும் என்று உடன்பாடாயிற்று. இதன் பின் நடந்த காலம் தாழ்த்தும் தந்திரோபாயங்கள், மற்றும் பல முறை அறிவிப்புக்கள், முடிவு பற்றி GM குழு ஒத்திவைத்தவை ஆகியவை இந்த உடன்பாட்டின் நேரடி விளைவு ஆகும்.

அமெரிக்காவில் விரைவாக திவால் நடவடிக்கைகள் நடந்தது, அதன் பேரழிவு விளைவுகளை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கமும் வோல் ஸ்ட்ரீட்டும் பெருகிய முறையில் வழிவகுத்தன. அச்சூழ்நிலையில், GM குழுவின் சில பிரிவுகளைடைய எதிர்ப்பு, ஐரோப்பிய நடவடிக்கைகள் விற்பது பற்றிய எதிர்ப்பு மற்றும் அமெரிக்க வடிவிலான மறுசீரமைப்பு தேவை என்பவை பெருகின.

தன்னுடைய ஐரோப்பிய வணிகத்தையோ, ஜேர்மானிய தொழில்நுட்ப மையத்தையோ விட்டுவிடுவதற்கு GM தயாராக இல்லை. ரஷ்யாவுடன் மாக்னா ஒத்துழைப்பிற்கான திட்டத்தையும் அது எதிர்த்தது. ஏனெனில் ரஷ்ய கார் நலன்கள் முக்கிய போட்டியாளர்களாக எழுச்சி பெற்று வருவதை அச்சுறுத்தியிருந்தது.

ஜேர்மனிய அரசாங்கம் இந்த போக்குகளின் வளர்ச்சி பற்றி நன்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஓப்பலின் வருங்காலம் பற்றிய எந்த முடிவும் தேர்தல் முடியும் வரை ஒத்திப் போடப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியது. எப்படியும், அமெரிக்க அரசாங்கம் ஜேர்மனிய அதிபர் அமெரிக்க காங்கிரஸிற்கு செவ்வாயன்று உரை கொடுக்கும் வரை காத்திருந்து பின்னர்தான் GM குழுவிற்கு அதன் முடிவை அறிவிக்கலாம் என்று பச்சை விளக்கைக் காட்டியது.

மக்னாவின் தலைமை நிர்வாகி Siegfried Wolf டெட்ரோயிட்டில் எடுக்கப்பட்ட முடிவை அமைதியுடனும், சொல்லப்போனால் நிம்மதியுடனும் கூட எதிர்கொண்டார் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. GM குழு ஒப்பலை நிறுவனத்தின் சிறந்த நலன்களைக் கருத்திற்கொண்டு தக்க வைத்துக் கொள்வது என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளது புரிந்து கொள்ளக்கூடியதுதான் என்று Wolf அறிவித்தார். GM ன் ஜேர்மனிய துணை நிறுவனம் உலகங்கிலும் நிறுவனத்தின் அமைப்புக்களில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வல்லுனர்கள் மக்னா பேரத்தில் பல கூறுபாடுகளில் சில விவரங்கள் இல்லாதது பற்றி கவனத்தை ஈர்த்திருந்தனர். அது தன்னுடைய வாங்கும் திட்டங்கள் பற்றி முழுத் தீவிரத்தைத்தான் நிறுவனம் காட்டுகிறதா என்ற வினாவையும் எழுப்பினர்.

ஆயினும்கூட, ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் IG Metall ம் ஓப்பல் தொழிலாளர்களை ஏமாற்றும் விதத்தில் இக்காலம் முழுவதும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அவர்கள் பலமுறையும் மக்னா மாதிரியை ஒரே மாற்றீடு என்று புகழ்ந்து, GM தனது பங்கு உடன்பாட்டை செயல்படுத்துவது உறுதி என்றும் கூறின.

இரண்டு வாரங்களுக்கு உன்பு, மாக்னா-சேர்பாங்க் (Magna-Sberbank) கூட்டு அமைப்புடன் உடன்பாடு என்பதற்கு முக்கிய உந்ததுலாக இருந்தது ஐரோப்பிய கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் தலைவரான கிளவுஸ் பிரன்ஸ் மாக்னாவிற்கு விற்கப்பட இருப்பது ஒருவேளை நடக்காமல் போகலாம் என்றும், அதையொட்டி ஐரோப்பாவில் பல ஆலைகள் மூடப்பட நேரிடலாம் என்ற ஊகங்களை உதறித்தள்ளினார். "விற்பனை உறுதிதான்" என்று பிரன்ஸ் கூறினார்.

எப்படியும் வேலைகள் ஊதியங்களை பாதுகாக்க தீவிர போராட்டங்களைத் தடுப்பது என்பதில் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் உறுதியாக இருந்தன. ஓப்பல் ஊழியர்கள் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டால் அது ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்களை எதிர்கொண்டிருக்கும் மற்ற ஆலைகளுக்கும் பரவக்கூடும் என்று அஞ்சினர். பழைய, புதிய அரசாங்கங்கள் இரண்டுடனுமே அவை முக்கிய முன்னுரிமை கார்த் தொழிலாளர்கள் பரந்த முறையில் திரண்டு எழுவது தடுக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.

மாறாக, அவை பல ஐரோப்பிய இடங்களிலும் உள்ள வேறுபட்ட தொழிலாளர்களை திட்டமிட்டு பிரிப்பதில் ஈடுபட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஜேர்மனியின் Bochum நகர தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் ரெனர் ஐனெக்கல் கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் கிளவுஸ் பிரன்ஸி இற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் Bochum இல் வேலைக்குறைப்புக்களை வரம்பிற்கு உட்படுத்தும் வகையில், தான் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் ஆலையை மூட ஆதரவு கொடுப்பதாக வந்துள்ள கூற்றை ஐனெக்கல் மறுத்துள்ளார். பிரன்ஸின் நிலைப்பாடும் இதுதான்.

தன்னுடைய கடிதத்தில் ஐனெக்கல், "1.ஆன்ட்வெர்ப் ஆலை மூடல் என்பது GM தப்பிப் பிழைக்கும் திட்டங்கள் 1, 2ன் ஒரு பகுதியாகும். இந்த திட்டங்களை பற்றி நீங்கள் பெப்ருவரி 2009ல் இருந்து அறிவீர்கள், ஒப்புக் கொண்டீர்கள். 2. Bochum ற்கு 3 கதவுள்ள அஸ்ட்ரா கார் மாதிரியை தயாரிப்பதை மாற்றுவது என்பது செப்டம்பர் 21, 2009 மக்னா வணிகத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியும், ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். 3. அஸ்ட்ரா 3-கதவு கார் மாதிரி இல்லாமல் ஆன்ட்வெர்ப் தப்பிப் பிழைக்க முடியாது. Bochum ம் இந்த தயாரிப்பு இல்லாமல் தொடர முடியாது. இதன் விளைவு இரு ஆலைகளும் மூடப்படல் என்பதுதான். இதுவா உங்கள் விருப்பம்?'' என அறிவித்துள்ளார்.

IG Metall, தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் பிரிட்டன், ஸ்பெயினில் உள்ள அவற்றின் தொழிற்சங்க அமைப்புக்கள் (The Unit trade union) தற்போதைய நிலைக்கு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளன. பொதுவாக வேலைகள், ஊதியங்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைக்க அவை மறுத்தமை GM ஐ அமெரிக்க மாதிரியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சுமத்த ஊக்கம் கொடுத்துள்ளது. ஜேர்மனி, ஐரோப்பா ஆகியவற்றில் பல ஆலைகள் இப்பொழுது மூடும் அச்சறுத்தலைக் கொண்டுள்ளன.

GM நிர்வாகம் ஜேர்மனிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மக்னாவிற்கு கொடுத்த விட்டுக்கொடுப்புகளை நேரடியாக நம்ப முடிந்தது. கிளவுஸ் பிான்ஸ் இத்தகைய வேலை, ஊதியங்களில் விட்டுக்கொடுப்புகள் இல்லை என்று கூறியபின் டெட்ரோயின் திவால் நடவடிக்கைகளை தொடக்க இருப்பதாக அச்சுறுத்தியது. GM நிர்வாகக் குழு ஐரோப்பாவில் நிரந்தரச் செலவுகள் குறைந்தது 30 சதவிகிதமாவது குறைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஜேர்மனியில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் பல ஆலைகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இவை தற்போதைய நிலைமைக்கு தங்கள் பொறுப்பை மூடிமறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும்.

எதிர்ப்பை வெற்றிகரமாக அமைப்பதற்கு, வேலைகள், ஊதியப் பாதுகாப்புக்கள் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் அல்லது தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் விட்டுவிடக்கூடாது. ஒவ்வொரு தொழிற்சாலை மட்டத்திலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை நிறுவுதல் மிகவும் அவசர தேவையாகும். அது அமெரிக்க GM தொழிலாளர்கள் உட்பட ஒரு சர்வதேச இணைப்பை நிறுவும் நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிராக அது தொழிற்சாலை ஆக்கிரமிப்புக்கள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே அமெரிக்க கார்த் தொழிற்சங்கத்தின் மேலாதிக்கத்தை எதிர்க்க தொடங்கிவிட்டனர். கடந்த வாரத்தில் உள்ளூர் போர்ட் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், பணி நிலைகளில் பெரும் குறைப்புக்களைக் கொண்டுவர இருந்த ஒப்பந்தத்தை 75 சதவிகிதத்தாலும், சில இடங்களில் 90 சதவிகித வாக்குகளில் தோற்கடித்தனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி வேலைகள், சமூக நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான சர்வதேச போராட்டத்தின் ஆரம்ப கட்டமாக இருக்க வேண்டும். இது சோசலிச முன்னோக்கை தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved