World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைEnd the persecution of Sri Lankan Tamils இலங்கைத் தமிழர்கள் மீது வழக்குத் தொடர்வதை நிறுத்து By Wije Dias இலங்கையில் தாங்க முடியாத நிலைமையில் வாழ்ந்துகொண்டிக்கும் தமிழர்களின் துன்பகரமான நிலை, கடந்த ஞாயிறன்று நடந்த துன்பகரமான சம்பவத்தின் மூலம் மிகவும் தெளிவாகியுள்ளது. அன்று 12 புகலிடம் தேடுவோர் சிறிய படகு ஒன்றில் ஆஸ்திரேலியாவை அடைய முயற்சித்த போது, அந்தப் படகு இந்து சமுத்திரத்தில் மூழ்கியதை அடுத்து அவர்கள் துன்பகரமாக தண்ணீரில் மூழ்கினர். புகலிடம் தேடுவோரை, கடலில் பயணிக்கத் தகுதியற்ற சிறிய படகுகளில் ஆகவும் இடரார்ந்த பயணத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய கோட்டை" என்ற குடிவரவுக் கொள்கைகளே இத்தகைய மூழ்கும் சம்பவங்களுக்கு நேரடி பொறுப்பாகும். ஆயினும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கமும் குற்றம்சாட்டத் தக்கதாகும். இலங்கையை விட்டு வெளியேறும் தமிழர்களின் நம்பிக்கை இழந்த நிலையானது, அவரது அரசாங்கத்தின் கொள்கைகளின் ஒரு உற்பத்தியேயாகும். 2005 தேர்தலில் குறுகிய வெற்றி பெற்ற ஜனாதிபதி இராஜபக்ஷ, 2002ல் கைசாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறி, 2006 நடுப்பகுதியில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்கினார். ஆஸ்திரேலியா உட்பட பெரும் வல்லரசுகள் மற்றும் பிராந்திய சக்திகள் அனைத்தினதும் இரகசிய ஆதரவுடன் இரக்கமற்ற முற்றுகை யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை இராணுவம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் வாழ்ந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுகளையும் ஷெல்களையும் வீசியது. மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் கடைசி மாதங்களில், குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. அவர்களில் பலர் இராணுவம் தாமாகவே அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் இருந்தவர்களாவர். பெருந்தொகையானவர்கள் காயமடைந்தும் முடமாகியும் உள்ளனர். தான் புலிகளிடம் இருந்து தமிழர்களை "விடுவித்துள்ளதாக" இராஜபக்ஷ பெருமையாகக் கூறிக்கொண்ட போதிலும், அந்தக் கூற்று மோசடியான பொய்யாகும். புலிகளின் தோல்வியை அடுத்து, 250,000க்கும் அதிகமான பொதுமக்கள் "நலன்புரி கிராமங்கள்" என பெயர் சூட்டப்பட்ட இழிநிலையிலான தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காயமடைந்தவர்களும் ஊட்டமில்லாதவர்களுமாவர். இராணுவத்தால் நடத்தப்படும் இந்த முகாங்களைச் சுற்றி முற்கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பதுடன், இராணுவம் காவல்புரிகிறது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் விரும்பியவாறு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் விசாரிக்கப்பட்டு பத்தாயிரக்கணக்கானவர்கள் "புலி சந்தேகநபர்களாக" கண்காணாத "புணர்வாழ்வு மையங்களுக்கு" இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த மையங்கள் கடந்த காலத்தில் சித்திரவதைகளுக்கு இழிபுகழ் பெற்றவையாகும். முகாங்களுக்கு வெளியிலும் வாழ்க்கை சிறப்பாக இல்லை. யுத்தம் முடிவடைந்திருந்தாலும், அரசாங்கம் ஆயுதப் படைகளை பெருப்பிப்பதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் நிரந்தர ஆக்கிரமிப்பை தயாரிக்கின்றது. இப்போது முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பூராவும் புதிய பொலிஸ் நிலையங்களும் இராணுவ முகாங்களும் கட்டுப்படுகின்றன. தடுப்பு முகாங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் கிராமங்களுக்கு வந்துகொண்டிருந்தாலும் அவையும் இராணுவத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளன. பெரும்பாலனவர்களுக்கு வேலையோ அல்லது தக்க தங்குமிடமோ கிடையாது. அவர்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இளைஞர்கள் தொடர்ச்சியாக சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். சிலர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கூறியவாறு, அது ஒரு பிரமாண்டமான தடுப்பு முகாமில் இருப்பது போன்றது. தலைநகர் கொழும்பிலும் கூட, தமிழர்கள் கடைக்கு நடந்து செல்வதோ அல்லது பஸ்ஸில் வேலைக்கு செல்வதோ ஒரு இடரார்ந்த துணிகரச் செயலாகும். யுத்தம் முடிவடைந்திருந்த போதும், அங்கு இராணுவ சோதனைச் சாவடிகளும், வீதித் தடைகளும் மற்றும் கனரக ஆயுதம் தரித்த சிப்பாய்களையும் எங்கும் காணலாம். வாகனங்களும் வழிப்போக்கர்களும் நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகின்றனர். பஸ் பயணிகள் பஸ்ஸில் இருந்து இறங்க உத்தரவிடப்படுகின்றனர். அடையாள அட்டையில் தமிழ் பெயரை ஒரு பொலிஸ் அதிகாரியோ அல்லது சிப்பாயோ காணும் போது உடனடியாக பாரபட்சம் தலை நீட்டுகிறது. விசாரணைகள் மற்றும் தொந்தரவுகள், பொலிஸ் நிலைய விசாரணைகள் மற்றும் விசாரணையின்றி காலவரையறை இன்றி தடுத்து வைக்கும் நடவடிக்கைகளும் தொடர முடியும். நாட்டின் சகல கொடூரமான அவசரகால விதிகளும் மற்றும் சட்டங்களும் இன்னமும் அமுலில் இருப்பதோடு ஆயிரக்கணக்கான தமிழர்கள் விசாரணையின்றி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் பயங்கரவாத சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். எங்கும் பாதுகாப்பில்லை. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தை சுற்றி வளைக்கவும் வீடு வீடாக தேடுதல் நடத்தவும் மற்றும் மேலதிக விசாரணைக்காக நூற்றுக்கணக்கானவர்களை பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் செல்லவும் எந்தவொரு நபரையும் பல சாக்குப் போக்குகளைக் கூறி பயன்படுத்த முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை "காணாமல் ஆக்கிய" அல்லது படுகொலை செய்த அரசாங்க சார்பு கொலைப் படைகளின் செயற்பாடு மிக மிக கொடுமையானதாகும். கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணையை கண்காணிக்கும் குழு, கடந்த ஆண்டு 283 பேரும் மற்றும் இந்த ஆண்டு இதுவரை 113 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த போதிலும் உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதைவிட அதிகமாகும். அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகக் கூடும். ஒரு குறிப்பிடத் தக்க வழக்கில், இராஜபக்ஷ அரசாங்கத்தையும் அதன் யுத்தத்தையும் விமர்சிக்கும் இரு கட்டுரைகளை பிரசுரிக்க செயற்பட்டமைக்காக, தமிழ் பத்திரிகையாளரான ஜே.எஸ். திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. சித்திரவதைகளுக்குப் பேர் போன பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. திஸ்ஸநாயகம் அந்த "ஒப்புதல் வாக்குமூலத்தை" நிராகரித்ததோடு அதில் வலுக்கட்டாயமாகவே கையெழுத்துப் பெறப்பட்டது எனத் தெரிவித்த போதிலும், பின்னர் அது புலிகளிடம் அவர் பணம் பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளது. தமிழர்கள் மீது வழக்குத் தொடர்வது வெறுமனே இராஜபக்ஷ அரசாங்கத்தின் உற்பத்தி மட்டும் அல்ல. நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாளர்களை பிளவுபடுத்த "ஆஸ்திரேலிய கோட்டை" என்ற இனவாதத்தில் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் தங்கியிருப்பதைப் போலவே, அதன் இலங்கை கூட்டாளிகளும், 1948ல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்தே தமிழர் விரோத இனவாதத்தில் தங்கியிருக்கின்றனர். பத்து லட்சம் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதே புதிதாக சுதந்திரம் பெற்ற அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக இருந்தது. கன்பராவில் உள்ள அரசியல்வாதிகள் குடிவரவுக்கு எதிரான உணர்வை கையிருப்பில் வைத்துக்கொண்டு கிளறிவிடுவது போலவே, கொழும்பில் உள்ள அவர்களின் சமதரப்பினரும் நெருக்கடியேற்படும் போதெல்லாம் மாற்றமின்றி தமிழர் விரோத பேரினவாதத்தை நாடுகின்றனர். 1956ல் சிங்களம் மட்டும் அரச மொழியாக்கப்பட்டு தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதப்பட்டனர். 1972ல் புதிய அரசியலமைப்பில், சிங்களவர்களில் பெரும்பாலானவர்களின் மதமான பெளத்த மதத்தை அரச மதமாக புகுத்துவதன் மூலம், ஏனைய நம்பிக்கைகளுக்கும் எதிராக, குறிப்பாக சிறுபான்மை தமிழர்களின் பிரதான மதமான இந்துமதத்துக்கு எதிராக, பாரபட்சம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம் மறுத்த போதிலும் இந்த பாகுபாடுகளில் அதிகளவானவை இன்னமும் அமுலில் உள்ளன. நடைமுறையில் உத்தியோகபூர்வ செயற்பாடுகள், அவை நீதி மன்றம், அரசாங்க அலுவலகம் அல்லது பொலிஸ் நிலையம் என்றாலும் சரி, அதே போல் கடிதப் போக்குவரத்துகளும் இன்னமும் சிங்களம் அல்லது ஆங்கில மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் மோசடியானது என்னவெனில், "புலி சந்தேக நபர்களிடம்" இருந்து சித்திரவதை மூலம் கறக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் என சொல்லப்படுபவை, கைதிக்கு அந்த மொழியை பேசவோ வாசிக்கவோ முடியாவிட்டாலும், அவை வழக்கமாக சிங்களத்தில் எழுதப்படும் சம்பவங்களாகும். 1951 சர்வதேச அகதிகள் உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ள வரையறைப்படுத்தப்பட்ட தீர்மானம் உட்பட எந்தவொரு தீர்மானத்தின்படியும், முழு தமிழ் சிறுபான்மையினரையும் அகதிகளாக அங்கீகரிக்க முடியும். சட்ட விதி என்ற சொற்களில், "இனம், மதம், தேசியம், குறித்த ஒரு சமூகக் குழுவின் அல்லது அரசியல் கருத்தின் உறுப்பினராக இருத்தல் போன்ற காரணங்களுக்காக தண்டனையளிக்கப்படலாம் என்ற மிக உறுதியான பீதி" சகல இலங்கை தமிழர்களிடமும் உண்டு. பெரும்பகுதி ஆஸ்திரேலிய மற்றும் இலங்கை ஊடகங்கள் தமிழர்கள் மீதான தண்டனையை பற்றிய தொந்தரவான உண்மைகளை புதைத்துவிட்டன. புகலிடம் கோருவோர் மீது பழிதூற்றும் முயற்சியில், அகதி அந்தத்து கோருவோர் மத்தியில் "புலி பயங்கரவாதிகள்" இருக்கலாம் என்ற பீதியை கிளப்பும் கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. சில இடங்களில், தமிழர்களை "பயங்கரவாதிகளாக" நடத்தும் வழக்கத்தைக் கொண்ட இலங்கை அதிகாரிகளின் தவறான அபிப்பிராயங்களை இத்தகைய கட்டுரைகள் வெறுமனே விமர்சிக்காமல் மேற்கோள் காட்டியுள்ளன. இரண்டரை இலட்சம் தமிழ் பொது மக்கள் ஏறத்தாழ யுத்தக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தமிழர்கள் மீது கொண்டுள்ள மனோபாவத்தை தெளிவாகக் காட்டுவது சிறந்த உதாரணமாகும். சோசலிச சமத்துவக் கட்சி அடிப்படையில் புலிகள் அமைப்பின் வேலைத் திட்டத்தையும், அதன் இனவாத நோக்கையும் மற்றும் சிங்கள பொது மக்கள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்த போதிலும், புலிகள் ஒரு "பயங்கரவாத" அமைப்பு அல்ல. மாறாக, அது தனியான முதாளித்துவ ஈழம் அரசு என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய இயக்கமாகும். தமிழர்களுக்கு எதிராக தசாப்த காலங்களாக மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பாரபட்சங்களின் பிரதிபலனாகவே அது தோன்றியது. 1983ல் தீவு பூராவும் அரசாங்க சார்பு குண்டர்கள் கொடூரமான தமிழர் விரோத படுகொலைகளை நடத்திய பின்னரே உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. இந்த படுகொலைகளில் நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியானதோடு தமிழர்களின் வீடுகளும் கடைகளும் பரந்தளவில் நாசமாக்கப்பட்டன. ஆஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்த படகில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருந்திருந்தால், அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் நிச்சயமாக அகதிகளே. அவர்கள் இலங்கைக்குத் திரும்பினால், புலி உறுப்பினர்கள் விசாரணைகளோ குற்றச்சாட்டுக்களோ இன்றி உடனடியாக சிறைவைக்கப்பட்டு சித்திரவதை அல்லது அதைவிட மோசமான ஆபத்தை எதிர்கொள்வர். இலங்கையில் உள்ள தமிழர்கள் மீதும் மற்றும் சிறிய படகில் வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பது இப்போது உக்கிரமடைந்து வருவது தற்செயலானது அல்ல. உலகம் பூராவும் எல்லா இடங்களிலும் தேசியவாத, இனவாத மற்றும் வகுப்புவாத நச்சுப் புகை தோன்றிக்கொண்டிருப்பது, ஒரு நோயினதும் மற்றும் சமூக ஒழுங்கின் அழிவினதும் தெளிவான அறிகுறியாகும். 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு பதிலிறுப்பாக, தமது வர்க்க நலன்களுக்காகவும் மற்றும் உலகை சோசலிச வழியில் சிறப்பாக மாற்றியமைக்கவும் போராட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் தோன்றிவிடுமோ என, இந்த இலாப அமைப்பின் அரசியல் பிரதிநிதிகள் எல்லாவற்றுக்கும் மேலாக பீதியடைந்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத மங்கலான கனவு அல்ல. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, உற்பத்தியின் பூகோள முன்னெடுப்பின் ஊடாக தொழிலாளர்கள் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதோடு பல சமயங்களில் ஒரே பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்களால் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைவானது, சகலவிதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் ஒரு அனைத்துலக கட்சியை அவசியமாக்கியுள்ளது. இலங்கையிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் உள்ள அவற்றின் சகோதரக் கட்சிகளுடன் இந்தப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கின்றன. நாம் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துக்காகக் காத்திருக்கும் புகலிடம் கோருவோருக்கு உதவி செய்யுமாறும் மற்றும் சகல குடிவரவு கட்டுப்பாடுகளையும் நீக்கக் கோருமாறும் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பூகோளத்தின் எந்த மூலையிலும் முழு பிரஜா உரிமையுடன் வாழ்வதற்கு, வேலை செய்வதற்கு அல்லது படிப்பதற்கு உழைக்கும் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அதே சமயம், நாம் இலங்கையில் சகல ஜனநாயக விரோத சட்டங்களுக்கும் உடனடியாக முடிவுகட்டுமாறும், தற்போது தடுப்பு முகாங்களிலும் மற்றும் "புனர்வாழ்வு மையங்களிலும்" தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல தமிழர்களையும் விடுதலை செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மூடப்பட்ட வாழ்க்கையை திரும்பக் கட்டியெழுப்ப உதவுவதன் பேரில் பில்லியன்கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டும். |