World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைA socialist perspective for public sector workers in Sri Lanka இலங்கையில் அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு By the Socialist Equality Party (Sri Lanka) இலங்கையில் சம்பளம் மற்றும் நிலைமைகள் தொடர்பாக இரு அரசாங்க தொழில் துறைகளில் முரண்பாடுகள் வெடித்துள்ளன. மோசமான வாழ்க்கைத் தர சீரழிவுக்கு வழிவகுத்த அரசாங்கத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் பரந்த அமைதியின்மையே இந்த பிரச்சினை தோன்றுவதற்கு காரணம். இலங்கை மின்சார சபையும் (இ.மி.ச.) கூட்டு தொழிற்சங்க முன்னணியும் முன்னெடுக்கும் பரந்த சம்பள உயர்வு பிரச்சாரத்தின் பாகமாக, ரூபா 5,000 (44 அமெரிக்க டொலர்) மாதாந்த இடைக்கால கொடுப்பனவை கோரி கடந்த ஞாயிற்றுக் கிழமை உறுப்பினர்கள் கூட்டமொன்றை நடத்தின. இந்த சம்பள உயர்வு கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து வந்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், துறைமுக அதிகார சபை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றை சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். இந்த தொழில்துறைகள் பூராவும் நவம்பர் 11 முதல் சட்டப்படி வேலை செய்யும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் திகதி வியாழக் கிழமை, அரசாங்கத் துறை தொழிற்சங்கங்கள், வழங்கப்பட வேண்டிய ஆனால் வழங்கப்படாத மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவான 3,158 ரூபாவை பெறுவதற்கான கோரிக்கைக்கு ஆதரவாகவும், அதே போல் பல பிரதான சம்பள முரண்பாடுகளை அகற்றக் கோரியும் பிரச்சாரமொன்றை முன்னெடுக்க முடிவெடுப்பதற்காக பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளன. சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரசாங்க அச்சக தொழிலாளர் சங்கம், புகையிரத தொழிற்சங்க கூட்டு முன்னணி மற்றும் அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சமாசம் ஆகியவை இதில் அடங்குகின்றன. எவ்வாறெனினும், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க தலையீடு செய்யவில்லை, மாறாக நாடு பூராவும் தனியார் மற்றும் அரசாங்கத் துறையில் உள்ள தொழிலாளர்களின் ஆழமான சீற்றத்தை தணிக்கவும் அடக்கவுமே தலையீடு செய்கின்றன என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. இந்த தொழிற்சங்கங்களில் பல, சகல பிரதான பிரச்சினைகளிலும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்துடனும் அடிப்படை வேறுபாட்டைக் கொண்டிராத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) போன்ற எதிர்க் கட்சிகளைச் சார்ந்தவையாகும். நிதி அமைச்சரான ஜனாதிபதி இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது இனவாத யுத்தத்தாலும் இலங்கை ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்த பூகோள பின்னடைவாலும் ஏற்பட்ட மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களே தாங்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். புலிகள் மே மாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னாள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் நிரந்தர ஆக்கிரமிப்புக்கு தயார் செய்கின்ற நிலையில், இராணுவத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றது. அந்நிய செலாவனி நெருக்கடியை தவிர்க்க ஜூலை மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்கள் கடனை பெறத் தள்ளப்பட்ட அரசாங்கம், இப்போது மொத்த தேசிய உற்பத்தியில் வரவு செலவு பற்றாக்குறையை 5 வீதமாக குறைப்பது, வரிகளை அதிகரிப்பது மற்றும் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டத்துக்கு முடிவுகட்டுவது உட்பட நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்துகின்றது. இதன் விளைவு, அரசாங்க துறையில் உள்ளவர்களின் சம்பளம், தொழில் மற்றும் நிலைமைகள் உட்பட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது தவிர்க்க முடியாமல் மேலும் மேலும் தாக்குதல்களை தொடுப்பதாக இருக்கும். இராஜபக்ஷ 2006ல் இருந்தே அரசாங்க துறை பூராவும் சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருந்ததோடு இந்த ஆண்டு முழுமையாக சம்பள உயர்வையும் அதே போல் தொழில் வழங்குவதையும் முழுமையாக தடுத்து வைத்திருந்தார். அதே சமயம், உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப் புள்ளி, 2006 ஜனவரியில் 141 ஆக இருந்து 2009 அக்டோபரில் 207 வரை கிட்டத்தட்ட 50 வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்த இ.மி.ச. தொழிற்சங்க கூட்டு முன்னணி, ஜே.வி.பி. யின் இலங்கை மின்சார தொழிலாளர் சங்கத்தின் தலைமையிலானது. தேசிய ஊழியர் சங்கம் உட்பட யூ.என்.பி. சார்பு சங்கங்கள் பலவும் இதில் பங்கெடுத்தன. ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. யின் வழியில் யுத்தத்தை முழுமையாக ஆதரித்த இந்த சகல சங்கங்களும், இராணுவ முயற்சிகளுக்காக சம்பளத்தை குறைக்க உதவி செய்தன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொதுச் சேவை சங்கஙத்தின் தலைவர் டி.ஜே. இராஜகருணா அண்மையில் அறிவித்தது போல்: "இந்த [5,000 ரூபா] சம்பளம் ஜனவரியில் இருந்து வழங்கப்பட வேண்டி இருந்தாலும், நாட்டின் யுத்த நிலைமை காரணமாக எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்க நாம் முடிவு செய்திருந்தோம். இப்போது யுத்தம் முடிந்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் எந்தவொரு சாக்குப் போக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது." எவ்வாறெனினும், யுத்தத்துக்கு ஆதரவளித்தது போலவே, மேலும் இராணுவத்திற்கு பத்தாயிரக்கணக்கானவர்களை சேர்ப்பதையும், வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பையும் மற்றும் இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் 250,000 தமிழ் பொது மக்களை கூட்டமாக தடுத்து வைத்திருப்பதையும் முழுமையாக ஆதரிக்கும் ஜே.வி.பி.யை சார்ந்தவர்களே இராஜகருணாவும் அவரது சங்கமுமாகும். இந்த ஆண்டு பாதுகாப்புச் செலவுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாவுக்கும் மேலதிகமாக இராணுவத்துக்காக இன்னும் 34 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதை அங்கீகரிக்க அக்டோபர் 20 அன்று ஜே.வி.பி. யும் யூ.என்.பி. யும் அரசாங்கத்துடன் பாராளுமன்றத்தில் வாக்களித்தன. இதே போல், யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் சர்வதேச நாணய நிதிய கடனின் நோக்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, அவர்கள் கொள்கையளவில் அந்த கடனை அல்லது அதோடு சேர்ந்துள்ள வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, "தனியார் வங்கிகளை நாடுவதற்கு பதிலாக நாணய நிதிய வசதியை நாடுமாறு யூ.என்.பி. தான் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது" என்று கூட அப்போது பெருமையாக தெரிவித்தார். இரு கட்சிகளும் "வீணடிப்பு மற்றும் மோசடிக்காக" அரசாங்கத்தை விமர்சித்த போதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உண்மையான தோற்றுவாயை -இலாப முறைமையை- அடையாளங் கண்டுகொள்ளவில்லை. தமது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்கள் சக்கரத்தை பின்னால் சுழற்றத் தொடங்கியிருப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. கடந்த வாரம், சம்பள உயர்வுக்கும் மற்றும் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதை நிறுத்தவும் நெருக்குவதன் பேரில் மூன்று நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு திகதி குறிக்கவுள்ளதாக இ.மி.ச. தொழிற்சங்க முன்னணி அறிவித்தது. ஞாயிற்றுக் கிழமை, இந்தத் தொழிற்சங்கம் அதன் திட்டத்தை சட்டப்படி வேலை செய்யும் பிரச்சாரமாக மாற்றிக்கொண்டது. ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான கே.டி. லால் காந்த, "இந்தப் பிரச்சினையை சினேகப் பூர்வமாக தீர்த்து வைக்க உடனடியாக தலையிடுமாறு" வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நவம்பர் 5ம் திகதி பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசாங்கத் துறை சார்ந்த இந்த 17 சங்கங்களின் கூட்டமைப்பும், மாறுபட்ட முன்நோக்கைக் கொண்டவை அல்ல. இந்த சங்கங்களின் பிரதிநிதி ஒருவர், "அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு" இராஜபக்ஷவை பரிதாபமாக கெஞ்சியுள்ளதோடு, "2010 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கும் அரசாங்கத்தின் வாக்குறுதியை" கைவிட்டமைக்காக அவரை கடிந்துகொண்டும் உள்ளார். இந்த தொழிற்சங்கங்களில் பல, 2006ல் அரசாங்கத் துறை சம்பள மீளாய்வு தொழிற்சங்க கமிட்டியின் பாகமாக இருந்ததை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்தக் குழு, 65 வீத சம்பள உயர்வையும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் இதே போன்ற ஒரு தொகை கோரிக்கைகளை இராஜபக்ஷவிடம் முன்வைத்தன. யுத்த முயற்சிகளை கீழறுப்பதாக அரசாங்கம் தொழிற் சங்கங்களை குற்றஞ்சாட்டிய போது, இந்த தொழிற்சங்க முன்னணி பிரச்சாரத்தை கைவிட்டதோடு, "மேலோங்கும் நிலைமை போராட்டம் நடத்துவதற்கு உகந்ததல்ல" எனத் தெரிவித்தன. இன்று மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அரசாங்கத்துக்கு தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கும் எண்ணம் இல்லை. உண்மையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் நடக்கும் வரை மிகவும் இரக்கமற்ற நடவடிக்கைகளை ஒத்திப் போடும் முயற்சியாக 2010 வரவு செலவுத் திட்டத்தை அது தாமதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சம்பள உயர்வு கோரிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க அலுவலர்களை சந்திக்க முழுமையாக மறுத்த இராஜபக்ஷ, மின்சாரம், எண்ணெய், தண்ணீர் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களை நாட்டை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கும் "சதிகாரர்கள்" என வகைப்படுத்தினார். சம்பள உயர்வை எதிர்பார்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக இராஜபக்ஷ யுத்த மொழியை பயன்படுத்துவது தற்செயலானது அல்ல. தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைக்கத் தவறும் பட்சத்தில், அரசாங்கம் 26 ஆண்டு கால யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய பொலிஸ் அரச இயந்திரத்தையும் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தும். ஜனாதிபதி கடந்த நான்கு ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களிலும் வேலை நிறுத்தங்களை தகர்க்க ஆயுதப் படைகளை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதோடு, எதிர்க் கட்சிகள் ஒவ்வொரு மாதமும் வாக்களிக்கும் கொடூரமான அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டமொன்றில், இ.மி.ச. பட்டியலிடும் அலுவலர்கள் சங்கத்தின் (பி.ஓ.யூ.) தலைவர் பிரியந்த விக்கிரமசிங்க, இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்துக்கு எதிரானது என்ற எந்தவொரு கருத்தையும் எதிர்த்தார். பி.ஓ.யூ., குட்டி முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியான நவசமசமாஜக் கட்சியைச் (ந.ச.ச.க.) சார்ந்ததாகும். "நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசாங்கம் கவிழ்ந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்குத் தேவை சம்பள உயர்வுதான்," என விக்கிரமசிங்க வலியுறுத்தினார். பிரச்சினையை இதைவிட தெளிவாக வெளிப்படுத்த முடியாது. சம்பள உயர்வு போன்ற மிகவும் பிரதான கோரிக்கைக்கான போராட்டத்தை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி தொழிலாளர்கள் முன்னெடுப்பது சாத்தியமற்றது. பாராளுமன்றத்தை பூஜிக்கும் கொள்கையின் ஊடாக நோக்கும் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. ஆக இருப்பதே இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான ஒரே மாற்றீடு என கருதுகிறார். உண்மையில், சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவது அவசியமாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் அவை சார்ந்துள்ள அரசியல் கட்சிகளில் இருந்து முழுமையாக பிரிவதன் மூலமே அத்தகைய போராட்டம் சாத்தியமானதாகும். தொழிலாளர்கள் விவகாரங்களை தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்வதோடு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கிறது. கோரிக்கைகளை தீர்மானிக்கவும் அவற்றுக்காகப் போராட அரசியல் மற்றும் தொழிற்துறை பிரச்சாரங்களை திட்டமிடவும் இந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் தமது சொந்த மாநாட்டை கூட்ட வேண்டும். இந்த பிரச்சாரத்தின் மையமாக, சோசலிச அனைத்துலகவாதம் இருக்க வேண்டும். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் தமிழர் விரோத இனவாதத்ததை பயன்படுத்தி வந்துள்ளன. இராணுவ மோதல்கள் முடிவடைந்திருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமிக்க இராணுவம் விரிவுபடுத்தப்படுகிறது. தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே வழி, இந்த பிரிவினை இனவாதத்தையும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே. தொழிலாளர்கள் சகல தமிழ் பொது மக்களையும் விடுவிக்குமாறும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி திருப்பியழைக்குமாறும் கோர வேண்டும். முதலாளித்துவ வரம்புக்குள் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வெற்றிகொள்ள தொழிலாளர்களால், கிராமப்புற ஏழைகளால் மற்றும் இளைஞர்களால் முடியாது. ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அல்லாமல், பெரும்பான்மை மக்களின் எரியும் சமூகத் தேவைகளை அடைவதற்கு சமுதாயத்தை அடிமுதல் முடிவரை மறு ஒழுங்கு செய்வதெனில், தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அர்சாங்கம் ஒன்று அவசியமாகும். தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. போராடுகிறது. எங்களது முன்நோக்கை படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாம் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். |