World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Plantation unions accept wage sell-out

இலங்கை: பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் சம்பள வியாபாரத்தை ஏற்றுக்கொள்கின்றன

By M. Vasanthan
28 October 2009

Back to screen version

இந்து பண்டிகையான தீபாவளியை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர், இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும், விளைபயனுள்ள விதத்தில் சம்பள வியாபார உடன்படிக்கையின் பின்னால் அணிதிரண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுமார் 500,000 தொழிலாளர்களின் சம்பளம் 405 ரூபா (3.50 அமெரிக்க டொலர்) என்ற வறிய மட்டத்துக்கு வரையறுக்கப்பட்டுள்ளதோடு, உயர்ந்த மட்ட உற்பத்தி இலக்குகளும் திணிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்டிக்கொடுப்பானது, முதலாளிமார்களதும் அரசாங்கத்தினதும் விருப்பத்தை அமுல்படுத்துபவராக செயற்படும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரியாமல், தொழிலாளர்களால் தங்களது மிகவும் அடிப்படையான உரிமைகளைக் கூட பாதுகாத்துக்கொள்வது சாத்தியமில்லை என்பதை இன்னுமொரு முறை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (இ.தே.தோ.தொ.ச.) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகிய மூன்று தொழிற் சங்கங்கள், செப்டெம்பர் 16 அன்று இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ஆயினும், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட பரந்த எதிர்ப்பின் மத்தியில், பல தொழிற்சங்கங்கள் இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டதோடு 500 ரூபா நாள் சம்பளத்தையும் கோரின.

செப்டெம்பர் 17 அன்று செய்தியாளர்கள் மாநாடொன்றை கூட்டாக நடத்திய மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), இலங்கை தொழிலாளர் முன்னணி (இ.தொ.மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச.) மற்றும் பாட்டாளிவர்க்க புதிய ஜனநாயக சங்கமும் (பா.வ.பு.ஜ.ச) அக்டோபர் 17 தீபாவளிக்குப் பின்னரே "கடுமையான நடவடிக்கை" எடுப்பதாக வாக்குறுதியளித்தன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (அ.இ.தோ.தொ.ச.) தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் மாநாட்டில் பங்குபற்றாத போதிலும், ஏனைய சங்கங்களின் பிரச்சாரத்தை ஆதரிப்பதாக வாக்குறுதியளித்தார்.

அப்போது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரித்தது போல், தொழிற்சங்கங்களின் இந்த ஒரு மாத கால தாமதம், தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் சீற்றத்தை தணியவிடுவதற்கான வெறும் சூழ்ச்சி மட்டுமே. 2006 சம்பள உயர்வு போராட்டத்தின் போதும், சம்பள உடன்படிக்கை சம்பந்தமான தொழிலாளர்களின் எதிர்ப்பை தணிப்பதில் இந்த "எதிர்" தொழிற்சங்கங்கள் பிரதான பாத்திரம் வகித்தன. எந்தவொரு பிரச்சாரமும் அறிவிக்கப்படவில்லை. உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தொடர்புகொண்ட போது, பல சாக்குப் போக்குகளை கூறிய சங்கத் தலைவர்கள், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியதோடு, தொழிலாளர்கள் மீதும் குற்றஞ்சாட்டினர் அல்லது அரசாங்கத்தை தலையிடுமாறு வெற்று வேண்டுகோள்களை விடுத்தனர்.

மலையக மக்கள் முன்னணி உப தலைவர் பி. இராதாகிருஷ்னன், கூட்டு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் எனக் கோரி சங்கங்கள் தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பதிலுக்கு காத்திருப்பதாகவும் நமது நிருபருக்குத் தெரிவித்தார். ஆயினும், அரசாங்கமோ சம்பள உடன்படிக்கையை முழுமையாக ஆதரிப்பதாக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதோடு அதை ஏற்றுக்கொள்ளுமாறு சகல சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. செப்டெம்பர் 17, செனவிரத்ன உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலுக்காக கூட்டு ஒப்பந்தத்தை முதலாளிமாரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மலையக மக்கள் முன்னணி கடந்த வாரக் கடைசியில் கூடவிருந்ததாகவும், ஆனால் சங்கத்தின் தலைவர் பெ. சந்திரசேகரன் வெளிநாட்டில் இருப்பதால் கூட முடியாமல் போனதாகவும் அதன் பொதுச் செயலாளர் எஸ். விஜயகுமார் கூறினார். ஒரு பெரிய போராட்டத்துக்கு தயாராகாத காரணத்தால் தொழிலாளர்களை குறை கூற வேண்டும் எனவும் விஜயகுமார் பிரகடனம் செய்தார். உண்மையில், செப்டெம்பரில் தொழிலாளர்கள் கடைப்பிடித்த மட்டுப்படுத்தப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தை கூட ம.ம.மு. எதிர்த்தது.

ஒரு கூட்டு பிரச்சாரத்தை எதிர்ப்பதாக ஏனைய தொழிற்சங்கங்கள் மீது குற்றஞ்சாட்டிய தொழிலாளர் தேசிய சங்க தலைவர் ஆர். திகாம்பரம், பின்னர் தனது சங்கம் முதலில் எந்தவொரு பிரச்சாரத்தையும் முன்னெடுப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை எனத் தெரிவித்தார். "தீபாவளிக்குப் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இப்போது நடவடிக்கைக்குச் செல்வது பயனற்றது," என அவர் தெரிவித்தார்.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசன் வெறும் தட்டிக்கழிப்பவராக இருந்தார். "ஜ.தொ.கா. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நுவரெலியாவில் கூட்டமொன்றை நடத்தியது. நாங்கள் ஏனைய சங்கங்களை சந்தித்து என்ன விதமான நடவடிக்கையை எடுப்பது என முடிவெடுப்போம்," என கூறிய கணேசன், உங்களது சங்கம் முன்வைக்கும் பிரேரணை என்ன என கேட்டபோது, "நான் இப்போது தேசிய அரசியலில் பிஸியாக இருக்கிறேன்," எனக் கூறி பேச்சை முடித்தார்.

இலங்கை தொழிலாளர் முன்னணி தலைவர் கணபதி கனகராஜ், முதலாளிமாருக்கும் அரசாங்கத்துக்கும் இன்னுமொரு முறை பயனற்ற வேண்டுகோள் விடுப்பதை பிரேரித்தார். "நாங்கள் நவம்பர் 1ம் திகதியில் இருந்து கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை தொடங்கவுள்ளோம். அது முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மற்றும் தொழில் அமைச்சருக்கும் அனுப்பப்படும். நாங்கள் 405 ரூபாவை அடிப்படை சம்பளமாக்கவும் மற்றும் கடந்த உடன்படிக்கையின்படி வாழ்க்கைச் செலவு புள்ளி அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை வழங்கவும் கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோருகிறோம்."

தொழில் அமைச்சர் மற்றும் முதலாளிமாரிடம் கெஞ்சுவது முற்றிலும் அர்த்தமற்றதாகும். தேவைப்படுவது என்னவெனில், பெருந்தோட்ட கம்பனிகளின் தனியார் இலாபத்துக்கு மாறாக, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூகத் தேவைகளை முன்நிறுத்தும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமேயாகும். முதலாளித்துவத்தின் உறுதியான பாதுகாவலர்களான சகல தொழிறசங்கங்களும் இத்தகைய போராட்டத்தை கசப்புடன் எதிர்க்கின்றன.

பெரும்பாலான தோட்டப்புற தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாகவும் இயங்குகின்றன. இ.தொ.கா. மற்றும் அதன் எதிர் சங்கமான மலையக மக்கள் முன்னணியும் ஆளும் கூட்டணியின் பங்காளிகள். இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ம.ம.மு. தலைவர் சந்திரசேகரனும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதோடு அரசாங்கத்தின் பிற்போக்கு பொருளாதார கொள்கைகளையும் ஆதரிக்கின்றனர்.

சிறிய தோட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கும் அரசியல் குறிக்கோள்கள் இருப்பதோடு இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) ஆகியவற்றுக்கிடையில் திட்டமிட்டு செயற்பட்ட வரலாறும் உண்டு. உதாரணமாக ஜ.தொ.கா. தலைவர் மனோ கணேசன் மேலக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதோடு யூ.என்.பி. உடன் கூட்டணியிலும் இருக்கிறார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த அவப்பேறான பண்பு, கொழும்பை தளமாகக் கொண்ட வர்த்தகரும், 2004ல் ம.ம.மு. சார்பில் மாகாண சபை உறுப்பினர் ஆனவருமான, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திகாம்பரத்தால் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. அப்போது, மலையக மக்கள் முன்னணியானது யூ.என்.பி. உடன் கூட்டாக இருந்தது. ஆயினும், 2005 ஜனாதிபதி தேர்தலுக்கு சற்றே முன்னதாக ம.ம.மு. வில் இருந்து பிரிந்த திகாம்பரம், இராஜபக்ஷவுக்காக பிரச்சாரம் செய்தார்.

இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதலுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்டதை அடுத்து, தேசிய தொழிலாளர் சங்கம் இன்னுமொரு கரணம் அடித்தது. இந்த ஆண்டு நடந்த மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தில் இருந்து பிரிந்த திகாம்பரம், யூ.என்.பி. உடன் ஒரு கூட்டணியில் நுழைந்துகொண்டார். அண்மைய சம்பள பேச்சுவார்த்தையின் போது, அதில் நேரடியாக பங்குபற்றிய யூ.என்.பி. சார்பு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை முதலில் ஆதரித்த தொழிலாளர் தேசிய சங்கம், தொழிலாளர்களின் எதிர்ப்பு வெளிப்பட்ட பின்னரே அதில் இருந்து விலகிக் கொண்டார்.

இலங்கை தொழிலாளர் முன்னணி தலைவர் சதாசிவத்துக்கும் இதே போன்ற வரலாறு உண்டு. 1990களின் முற்பகுதியில், தலைமைத்துவ சச்சரவு காரணமாக இ.தொ.கா. வில் இருந்து வெளியேறிய அவர், 2007-2008ல் அரசாங்கத்தை ஆதரித்ததோடு இராஜபக்ஷவின் ஆலோசகராகவும் ஆனார். 2009 மாகாண சபை தேர்தல்களுக்கு முன்னதாக, அவரது கட்சி அரசாங்கத்தின் வேட்பாளர் பட்டியலில் இருந்து வெளியில் வைக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதோடு யூ.என்.பி. உடன் இணைந்துகொண்டார்.

எஞ்சியுள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்ததாகும். இது ஏனையவற்றை விட போராளிக்குணம் கொண்ட மாற்றீடு உடையதாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. ஜே.வி.பி. பாராளுமன்ற எதிர்க் கட்சியில் ஒரு பகுதியாக இருந்த போதிலும், 2005ல் இராஜபக்ஷவுக்கு உத்வேகத்துடன் பிரச்சாரம் செய்ததோடு அவரது இனவாத யுத்தத்துக்கும் முழுமையாக ஆதரவளித்தது.

தற்போது, சரிந்து வரும் ஆதரவை தூக்கி நிறுத்தும் முயற்சியில், சம்பள உயர்வு அரசாங்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சார துறை, எண்ணெய் மற்றும் இரயில் போக்குவரத்து தொழிலாளர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை ஜே.வி.பி. ஒழுங்கு செய்து வருகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் மீது அது ஆற்றும் பாத்திரம், ஏனைய தொழிலாளர்களுக்கு அடுத்து வரவிருப்பது என்ன என்பதற்கான ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும்.

ஏனைய சங்கங்களில் இருந்து தூர விலகியிருக்கும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம், இப்போது தமது செயலின்மையை தாமே சாக்குப் போக்கு கூறிக்கொள்கிறது. அதன் செயலாளர் ஏ.டி. பிரேமரத்ன எமது வலைத் தளத்துக்கு கூறியதாவது: "இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டனர். நாங்கள் மேலும் ஏதாவது நடவடிக்கை எடுப்பதென்றால் அதற்கு நாம் தயாராக வேண்டும். ஏனைய சங்கங்கள் ஏதாவது நடவடிக்கையை தொடங்கினால் அதை நாம் ஆதரிப்போம்."

தொழிலாளர்கள் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். தொழிற்சங்கம் என்ற வரம்புக்குள் இருந்து, தமக்கும் தமது குடும்பங்களுக்கும் சாப்பாடும் உடையும் பெற்றுக்கொள்ள போதுமான சம்பளத்தை பெறுவதற்கான தொழிலாளர்களின் மிகவும் அடிப்படையான உரிமையை கூட காப்பது சாத்தியமற்றது. இலங்கையின் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை விற்பனைக்காக அதன் போட்டியாளர்களுடன் முடிவின்றி போட்டியிட உதவுவதற்காக முதலாளிமாருக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாக பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன.

இந்த முட்டுச் சந்தில் இருந்து வெளியேறுவதற்கான பாதையை அக்கரபத்தனையில் பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் காட்டியுள்ளனர். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சோ.ச.க. யின் அரசியல் உதவியுடன் தமது சொந்த நடவடிக்கை குழுவொன்றை அமைந்துள்ளதோடு, ஏனைய தொழிலாளர்களும் தமது தோட்டங்களிலும் வேலைத் தளங்களிலும் அவ்வாறு அமைக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்காக ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்துவதே அந்த வேண்டுகோளின் மையப்புள்ளியாகும்.

இந்த வேண்டுகோளை கவனமாக படிக்குமாறும், சாத்தியமானளவு பரந்தளவில் அதை விநியோகிக்குமாறும், தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்து அதை சோ.ச.க. உடனும் மற்றும் பெல்மோரல் தோட்ட தொழிலாளர்களுடனும் இணைக்குமாறும் சகல தொழிலாளர்களுக்கும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது.

இக்கட்டுரை ஆசிரியர், பின்வரும் கட்டுரையையும் வாசிக்குமாறு பரிந்துரைக்கின்றார்:

இலங்கை: பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு சகல தொழிலாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved