World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு Sri Lanka: the defeat of the LTTE and the dead-end of nationalism இலங்கை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும் தேசியவாதத்தின் முட்டுச் சந்தும் Bill Van Auken தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னால் வட இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாரியளவு துன்பங்களும் சேர்ந்துகொண்டுள்ளன. இலங்கை இராணுவமும் இராஜபக்ஷவின் வலதுசாரி அரசாங்கமும் முன்னெடுத்த இரக்கமற்ற தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் மேலும் பெருந்தொகையானவர்கள் காயமடைந்தும் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதோடு இலட்சக் கணக்கானவர்கள் இழிந்த தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். புலி போராளிகளும் அவர்களது தலைமைத்துவமும் குருதியை உறைய வைக்கும் விதத்தில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயினும், தமிழ் மக்களின் அவலம் தொடர்பான அனுதாபமும் புலி போராளிகளின் துன்பகரமான தலைவிதி பற்றியும் அடிப்படை படிப்பினைகளை பெறுவதை தவிர்த்து விடக் கூடாது. இறுதி ஆய்வுகளில், புலிகள் சந்தித்த தோல்வியானது அரசாங்க ஆதரவிலான தமிழர் விரோத பாரபட்சங்களுக்கு பதில், சிறிய இலங்கை தீவில் தமிழ் சிறுபான்மையினருக்கு ஒரு தனியான இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசை ஸ்தாபிப்பதே என்ற எந்தவொரு முற்போக்கான பொருளாதார அல்லது அரசியல் நுட்பமும் அற்ற ஒரு அரசியல் முன்நோக்கின் விளைவே ஆகும். பெரும்பான்மை சிங்கள வெகுஜனங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட இந்த இயக்கம் பயன்படுத்திய வழிமுறைகள், ஒரு மட்டு மீறிய தன்மையை அல்லது ஒரு உபாய சிக்கலை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, அது வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாக இனப் போராட்டத்தை பதிலீடு செய்வதை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரமற்ற முன்நோக்கின் தவிர்க்க முடியாத உற்பத்தியே ஆகும். இந்த இயக்கம், சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் ரீதியில் அழைப்பு விடுக்கவோ அல்லது தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டுவதற்கு இடைவிடாது முயற்சிக்கும் சிங்கள முதலாளித்துவத்தை எதிர்க்கவோ முற்றிலும் இலாயக்கற்றதாக இருந்தது. அதன் பிரிவினைவாத நோக்கத்தின் காரணமாக, இந்தியாவில் உள்ள தமிழ் தொழிலாளர்களுக்கு கூட அத்தகைய அழைப்பை விடுக்க அதனால் முடியாமல் போனது. மற்றும், தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்குவதில் வெளிப்பாட்டைக் கொண்டிருந்த புலிகளின் ஜனநாயக-விரோத பண்பு, இலங்கை தமிழ் வெகுஜனங்களின் பரந்த தட்டினரின் மத்தியிலேயே அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன்னர், உள்நாட்டு யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே, புலிகளின் ஆயுதப் போராட்டமானது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அரசை அமைப்பதற்காக ஏதாவதொரு பெரும் வல்லரசின் ஆதரவை வெற்றிகொள்ளும் மூலோபாயத்தை கட்டியனைத்துக்கொண்டிருந்தது. 1987ல், இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு புலிகள் வழங்கிய ஆதரவினால் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டது. அது அங்கு ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொன்றது. சுதந்திர அரசு ஒன்றை உருவாக்க இந்திய முதலாளித்துவம் உதவும் என்ற அற்ப நம்பிக்கையில் அதற்கு அடிபணிய புலிகள் உடன்பட்டனர். அடுத்து வந்த தசாப்தங்களில், புலிகள் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுக்காக அழைப்பு விடுத்தமை, தீவில் ஒரு குட்டி அரசை ஸ்தாபிக்கும் அவர்களின் குறிக்கோள் தமிழ் வெகுஜனங்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்துவது அல்ல, மாறாக, சர்வதேச மூலதனத்துக்காக மலிவு உழைப்பை வழங்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்குவதே என்பது தொடர்ச்சியாக தெளிவாகியது. யுத்தத்துக்குப் பிந்திய காலகட்டத்தின் முழு அனுபவங்களும் தேசியவாத வேலைத் திட்டங்களின் வங்குரோத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் வழங்குதல் மற்றும் புதிய தேசிய அரசுகளை உருவாக்குதலும் வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை அடிப்படையில் யதார்த்தமாக்கிவிடவில்லை. மாறாக, இந்த நாடுகளில், -இலங்கை போன்று- பல சந்தர்ப்பங்களில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் பிரிக்கவும் பலவீனப்படுத்தவும் இன மற்றும் வகுப்புவாத பதட்ட நிலைமைகள் கிளறிவிடப்படும் அதே வேளை, அவை ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் ஒரு புதிய தேசிய முதலாளித்துவத்தினதும் நலன்களை பேணுவதற்கான ஊடகமாக ஆகியுள்ளன. மிகவும் அண்மைக் காலத்தில், பாலஸ்தீனத்தில் பீ.எல்.ஓ. முதல் தென் ஆபிரிக்காவில் ஏ.என்.சி. வரையான தேசிய விடுதலை இயக்கங்கள் என சொல்லப்படும் அனைத்தும், ஏகாதிபத்தியத்துடன் பிற்போக்கு உடன்பாடுகளுக்குள் நுழைந்து கொண்டுள்ளன. இந்த உடன்பாடுகள் வெகுஜனங்கள் மீது புதிய ஒடுக்குமுறை நிலைமைகளை திணித்துள்ளன. உற்பத்தியில் நாடுகடந்த அபிவிருத்தி, நிதி மற்றும் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பு போன்ற உலக முதலாளித்துவ கட்டமைப்பிலான மாற்றங்கள், தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய இயக்கங்களின் அதே போல் சமூக மற்றும் அரசியல் அமைப்புக்களின் அத்திவாரத்தை தாக்கியுள்ளன. புலிகளின் இராணுவத் தோல்வி உள்நாட்டு யுத்தத்தின் அடிநிலையில் இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் எதுவும் செய்யப் போவதில்லை. முதலாளித்துவத்தை அடித்தளமாகக் கொண்ட இலங்கை அரசின் ஐக்கியத்தை, இரத்தக்களரி அடக்குமுறை மற்றும் அட்டூழியங்களின் ஊடாக மட்டுமே பேணிக்காக்க முடியும் என்பது வெளிப்படையாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள வலதுசாரி சிங்கள பேரினவாத அரசாங்கம், இராணுவ பலத்தின் மூலம் முதலாளித்துவ அரசின் ஐக்கியத்தை பேணுவதற்கான "உரிமை" என்ற தனது சொந்த தேசியவாத வடிவத்தை பாதுகாக்கும் உணர்வில் உள்ளது. முடிவில், கொழும்பு அரசாங்கத்தின் "வெற்றி" தமிழ் உழைக்கும் மக்கள் பகுதியினர் கொண்டிருந்த வெறுப்பை எரியூட்டச் செய்துள்ள அதே வேளை, பாரபட்சங்கள் மற்றும் வறுமை போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தையும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமத்துவத்துக்கான போராட்டத்தையும் சர்வதேச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும் என்பதையே இந்த கசப்பான அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன. பாரபட்சங்கள் மற்றும் இன ஒடுக்குமுறைக்கான பதிலை தனியான அரசில் அன்றி, சோசலிச புரட்சிக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதிலேயே காண முடியும். இப்போது பலம் வாய்ந்த முறையில் நிரூபிக்கப்பட்டுள்ள இந்த முன்நோக்குக்காகவே அனைத்துலகக் குழுவும் அதன் இலங்கைப் பகுதியும் போராடுகின்றன. சகல விதமான சிங்கள இனவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை சளைக்காமல் பாதுகாக்கும் அதே வேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோரும் சோசலிச சமத்துவக் கட்சி, புலிகளுக்கு அரசியல் ஆதரவு வழங்கவில்லை. இந்த தேசிய பிரிவினைவாத இயக்கத்தின வேலைத்திட்டமானது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்வதோடு, முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிங்கள உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் தமது சொந்த நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என சோ.ச.க. வலியுறுத்துகிறது. இலங்கையிலான துன்பகரமான நிகழ்வுகள், ஒரு முழு காலகட்டத்தினதும் முடிவைக் குறித்த போதிலும், நாட்டின் ஆழமான முரண்பாடுகளில் எதையும் தீர்த்து வைக்கவில்லை. இப்போது திறக்கும் புதிய காலத்தில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் சோ.ச.க. யின் போராட்டம், தீவில் உள்ள வெகுஜனங்களுக்கு ஒரு முன்னணிப் பாதையை காட்டும். அது உலக மட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக, தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சர்வதேச ஈர்ப்புத் துருவமாகவும் சேவை செய்யும். |