World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman cabinet agrees "bad banks" plan for unloading "toxic assets" ஜேர்மனியின் மந்திரிசபை "விற்கமுடியாத சொத்துக்களை" அகற்றுவதற்கு "மோசமான வங்கிகள்" திட்டத்திற்கு உடன்படுகிறது By Stefan Steinberg புதனன்று ஜேர்மனிய மந்திரிசபை "மோசமான வங்கிகளை" அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க ஒப்புக் கொண்டது. இது ஜேர்மனிய வங்கிகளுக்கு அவற்றின் பயனற்ற பத்திரங்களையும் "விற்கமுடியாத சொத்துக்களையும்" அகற்றிவிட உதவும். நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் (சமூக ஜனநாயகக் கட்சி- SPD) முன்வைத்துள்ள இத்திட்டம் நாட்டின் வங்கி, மற்றும் நிதிய முறையை பிணை எடுக்கும் ஜேர்மனிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் சமீபத்தியது ஆகும். கடந்த இலையுதிர்காலத்தில் அரசாங்கம் Soffin என்று அழைக்கப்பட்ட வங்கி மீட்பு நிதியை அமைப்பதற்கு ஆரம்பமாக 500 பில்லியன் பிணை எடுப்பு நிதியை ஒதுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் விரைவாக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து சில வாரங்களில் இந்த சமீபத்திய திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கும். இதனால் கோடை விடுமுறைக்கும் இந்த இலையுதிர்கால கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாகவே சட்டம் இசைவு பெறும். இன்னும் அதிக அளவு ஜேர்மனிய வங்கிகளுக்கு உதவி என்பதற்கான உள்நாட்டு அழுத்தங்கள் விற்கமுடியாத சொத்து முதலீட்டில் அவை கொண்டிருந்த அளவின் உண்மையான தன்மை வெளிப்பட்டதும் பெருகியது. ஏப்ரல் மாதத்தில் Süddeutsche Zeitung பத்திரிகை ஜேர்மனிய வங்கிக் கட்டுப்பாட்டு உரிமத்தின் (Bafin) உள் அலுவலகக் குறிப்பு ஒன்றை வெளிப்படுத்தியது. இதில் ஜேர்மனிய வங்கிகள் நஷ்டம் எனத் தள்ளவேண்டிய கடன்களின் மொத்தமதிப்பு 858 பில்லியன் டாலர் (அமெரிக்க $1 டிரில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. Bafin ல் உள்ள உயர் அதிகாரிகள் செய்தி ஊடகத்திற்கு இத்தகைய கசிவு பற்றி கடுமையாக எதிர்த்து, விவரங்களை வெளியட்டதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் முற்பட்டனர். ஆனால் சாக்கில் இருந்து பூனை ஏற்கனவே தப்பிவிட்டது. ஸ்ரைன்புரூக்கின் திட்டத்தில் முக்கிய பங்கு பெறும் வேட்பு வங்கிகளில் ஒன்று Commerz bank ஆகும்; இந்த ஆண்டு முன்னதாக அது அதன் விற்கமுடியாத சொத்துக்கள் 50 பில்லியன் யூரோக்களாக ( 68 பில்லியன் அமெரிக்க டொலர் ) இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. ஜேர்மனிய மந்திரிசபை புதன்னறு ஒப்புக் கொண்டுள்ள "மோசமான வங்கி" திட்டம் அமெரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்த நடவடிக்கைகளில் இருந்து சில விதங்களில் வேறுபட்டுள்ளது. உண்மையில் அமெரிக்காவின் வங்கிப் பிணை எடுப்புத் திட்டத்தின் சேர்ப்பதற்கு முன்னிபந்தனையாக "அழுத்தம் நிறைந்த சோதனைகள்" வேண்டும் என்ற திட்டத்தை ''பயனற்றது'' என்று ஸ்ரைன்புரூக் உதறித்தள்ளினார். ஸ்ரைன்புரூக்கின் திட்டத்தில் பல சிறிய "மோசமான வங்கிகள்" தோற்றுவிக்கப்பட இருக்கின்றது. தங்கள் சொந்த நிறுவனங்களை ஏற்படுத்தி நச்சுக் கழிவுகளை சேமிப்பாக காட்டுவதற்கு வங்கிகள் ஊக்கம் அளிக்கப்படும். இந்த புதிய நிறுவனங்கள் பின்னர் இந்த பயனற்ற பத்திரங்களை தாய் வங்கிக்கு மறு நிதி அளிப்பதற்கான பத்திரங்களாக கொடுக்கும். இந்த விற்கமுடியாத சொத்துக்கள் பின்னர் ஆண்டுக் கட்டணத்திற்கு மாற்றிக் கொள்ளப்படலாம்; அதாவது ஜேர்மனியின் வங்கி மீட்பு அமைப்பான Soffin வெளியிடும் அரசாங்க உறுதி அளிக்கப்பட்டுள்ள பத்திரங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளை தூய்மைப்படுத்துவதாக கூறப்படும் இந்த முழு வழிவகையும் 20 ஆண்டுகளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்ரைன்புரூக்கின் திட்டத்தில் பங்கு பெறுவது முற்றிலும் சுயேச்சையான விருப்பத்தின் பேரில்தான் இருக்கும். அரசாங்கத்தின் "மோசமான வங்கிகள்" கொள்கை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சமூக ஜனநாயகக் கட்சியின் நிதி வல்லுனர் கூறிய திட்டம் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகளின் எதிர்ப்பு அலையை ஒட்டி தகர்க்கப்பட்டுவிட்டது. செய்தி ஊடகத்தில் கொடுத்த தொடர்ச்சியான பேட்டிகளில் ஸ்ரைன்புரூக் பலமுறையும் அவருடைய திட்டம், அமெரிக்க பிரிட்டிஷ் தீர்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜேர்மனிய வரி செலுத்துபவர்கள் மீது சுமையை பிரதிபலிக்காது என்று கூறினார். ஸ்ரைன்புரூக்கின் கூற்று ஆதாரமற்றது ஆகும். உண்மையில் சிக்கல் வாய்ந்த முறையில் ஒரு வங்கியிடம் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை அனுப்புதல் என்பது தேர்தல் ஆண்டில் ஜேர்மனிய மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான் உள்ளது. திட்டம் முதலில் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டபோது, பைனான்சியல் டைம்ஸ் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒரு ஆதாரம் கூறியதாக பின்வருமாறு மேற்கோளிட்டது: "இறுதியில், அரசாங்கம், அதாவது வரி செலுத்துபவர்கள், பெரும்பாலான இழப்புக்களை ஏற்க நேரிடும்--அதைத்தவிர வேறு வழி இல்லை; அதுவும் ஐந்து மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் வரும் நிலையில் இத்திட்டத்தை ஏற்கச் செய்வதும் சுலபம் அல்ல." ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே அரசாங்கம் நிதிய நெருக்கடியின் அளவு பற்றிய புதிய சான்றுகளை எதிர்கொள்கிறது. வியாழனன்று வரிமதிப்பீடு (Steurschatzung) என்னும் செயற்குழு அனைத்து கூட்டாட்சி, மாநில, உள்ளூர் கருவூலங்களில் மந்த நிலை மற்றும் வரி வருமானங்களில் குறைவு என்பது மொத்தமாக 2013 க்குள் 316 பில்லியன் என இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. மோசமான பொருளாதாரத் தகவல்கள் ஜேர்மனிய அரசாங்கத்தை வங்கிகளை பிணை எடுப்பை எளிதாக்கவில்லை. வணிக செய்தித்தாள் Handelsblatt இந்த வாரம், அரசாங்கம் வங்கி மீட்புப் பொதியின் முழுச் சுமையையும் வரிப் பணம் செலுத்துபவர் மீது தள்ளியிருந்தால் அது "பெரும் மக்கள் எழுச்சியைத் தூண்டியிருக்கும்" என்று எழுதியுள்ளது. "தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு ஒத்தவிதத்தில் நியாயமாக இருக்கக்கூடிய" தீர்வுதான் தேவை என்று செய்தித்தாள் கூறியது. இதைத்தான் துல்லியமாக ஸ்ரைன்புரூக் அளித்துள்ளார்; ஆனால் அனைத்து ஜேர்மனிய எதிர்க் கட்சிகளுடைய ஆதரவு அவருடைய திட்டத்திற்கு இருப்பதால்தான் அதற்கு "நியாயமானது என்ற தோற்றம்" கிடைத்துள்ளது. "மோசமான வங்கி" கொள்கையை செயல்படுத்தும் பொறுப்பு இறுதியில் Soffin இடம், அதாவது ஜேர்மனிய கருவூலம் மற்றும் வரிசெலுத்துபவர்களிடம் உள்ளது. ஸ்ரைன்புரூக்கின் திட்டத்தின்கீழ் Commerz bank இற்கு (மோசமான கடன்கள் 50 பில்லியன் யூரோக்கள் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது) ஆண்டு ஒன்றுக்கு 2.5 பில்லியன் யூரோக்கள் வீதம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சீரான நிலைக்கு வருவதற்காக கொடுக்க நேரிடும். வங்கிகள் அடுத்த இரு தசாப்தங்களில் இரட்டை இலக்க இலாபத்தை ஒவ்வொரு ஆண்டும் பெற்றால்தான் இது முடியும். அதாவது தற்போதைய சர்வதேச நிதிய நெருக்கடியைக் கொண்டுவந்த உயர் இலாப விகிதங்களை கொடுக்கக்கூடிய பயனற்ற பத்திர வகைகள் போன்ற வடிவமைப்புக்களை மேற்கொண்டால்தான். Commerz bank மற்றும் பிற நோயுற்றுள்ள வங்கிகளும் இந்த பாரிய பணியை செய்ய முடியவில்லை என்றால், அவை திவால் ஆகும்; அதையொட்டி அவர்களுடைய முழுக் கடன்களும் ஜேர்மனிய வரிசெலுத்துபவர் தலையில் விழும்.ஜேர்மனிய வங்கிகள் ஒருங்கிணைக்கப்படல் பல தனியார் ஜேர்மனிய வங்கிகளை தவிர்க்க முடியாத திவால்தன்மைக்கு தள்ளுவதை செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கு பின்னர் வைக்கும் முயற்சியில் (விற்கமுடியாத சொத்துக்கள் "ஆழ்ந்த உறைபனியில் இருக்கும்" என்று சில வர்ணனையாளர்கள் இது பற்றிக் கூறியுள்ளனர். ஸ்ரைன்புரூக் குறிப்பாக அதன் அரசாங்கமே நடத்தும் வங்கிகள் (Landes banken) உள்ளடங்கலாக ஜேர்மனிய வங்கி முறையை இணைக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறார். கடந்த மாத இறுதியில் ஸ்ரைன்புரூக் விற்கமுடியாத சொத்துக்களை ஏற்றுக்கொள்ளும் எந்தத் திட்டமும் Landes banken எனப்படும் அரசு வங்கிகள் மறு சீரமைப்படுவதுடன் தொடர்புபடுத்தப்படும் என்று வலியுறுத்தினார். அவற்றுள் பல வங்கிகள் மிகப் பெரிய அளவு விற்கமுடியாத சொத்துக்களை கொண்டுள்ளன. LBBW பயனற்ற பத்திரங்களை 82 பில்லியன் யூரோக்கள் மதிப்பு எனப்படும் நவிற்கமுடியாத சொத்துக்கள் பால் கொண்டுள்ளது; WestLB யிடம் 45 பில்லியன் யூரோக்கள் அத்தகைய நிலையில் கணக்கில் உள்ளன. Merck Finck யில் உள்ள நிதிப் பகுப்பாய்வாளர் கொன்ராட் பெக்கரின் கருத்தின்படி, அரசாங்கத்தின் சமீபத்திய "மோசமான வங்கி" திட்டம் என்பது நாட்டின் அரசாங்க வங்கிகளை பகுத்தறிவார்ந்த முறையில் திருத்துவதற்கு முன்னோடியாக இருக்கலாம். "ஏழு சுதந்திர அரசாங்க வங்கிகள் ஜேர்மனியில் இருப்பதில் அர்த்தமில்லை. மோசமான வங்கித் திட்டம் ஊக்கியாக இருக்கக் கூடும்" என Finck கருதுகின்றது.ஜேர்மனிய வங்கி முறை மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின் வங்கி முறையான Landes banken தகர்த்தலை மேற்பார்வையிடுவது நாட்டின் முக்கிய தனியார் வங்கியான Deutsche Bank மற்றும் அதன் தலைமை நிர்வாகி ஜோசப் அக்கர்மான் ஆகும். இவ்வாண்டில் முன்னதாக அக்கர்மான் அரசாங்க (அதாவது வரிசெலுத்துபவர்கள்) நிதியை நேரடியாக பயன்படுத்து ஒரு மத்திய "மோசமான வங்கி" என்ற திட்டத்தை முன்வைத்தார். அவருடைய திட்டத்தை அரசாங்கம் ஏற்கவில்லை; அத்தகைய திட்டத்திற்கும் பெரும் மக்கள் எதிர்ப்பு இருக்கும் என்று அது கருதியது. ஏப்ரல் மாத இறுதியில் அக்கர்மான் அதன்பின் அவருடைய சொந்த வங்கி அத்தகைய வசதியைப் பயன்படுத்தாது என்றாலும், அரசாங்கத்தின் திட்டம் ஜேர்மனிக்கு "சரியான தீர்வு" என்று அறிவித்தார். அக்கர்மானும் Deutsche Bank உம் தங்கள் சொந்த நடைமுறைக்கு இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ள தீவிரமாக உள்ளனர். மிகப் பெரிய இழப்புக்களைப் பெற்ற மற்ற ஜேர்மனிய வங்கிகள் போல் இல்லாமல், Deutsche Bank 2009 முதல் காலாண்டிற்கு சந்தை பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்ப்பை விட இருமடங்காக இலாபங்களை ஈட்ட முடிந்தது. இதன் அதிக செயற்பாடுகளில் பலவும் அரசாங்கப் பத்திர விற்பனையுடன் பிணைந்திருந்தது; அரசாங்கத்தின் வங்கி பிணை எடுப்புக் கொள்கை மற்றும் ஊக்கத் திட்டங்களுக்காக அவை வெளியிடப்பட்டிருந்தன. தற்போதைய வங்கி சீராக்கும் திட்டச் சுற்றுக்களை ஐயத்திற்கு இடமின்றி தன்னுடைய பேரரசை விரிவாக்கத்தான் அது முற்படும். மோசமான வங்கித் திட்டம் என்ற சமீபத்திய திட்டத்தின் விரிவான விதிகளை இயற்றுகையில், ஜேர்மனிய அரசாங்கம் தேர்தல் ஆண்டில் வங்கியுலகிற்கு இன்னும் சலுகைகளை கொடுப்பது பற்றி ஜேர்மனிய மக்கள் கொண்டுள்ள பரந்த விரோதப் போக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. ஆனால் ஸ்ரைன்புரூக்கினால் இயற்றப்பட்ட இப்பொருளுரையின் திட்டம் ஜேர்மனியின் முக்கிய வங்கிகள், நிதிய நிறுவனங்களின் தேவையைத்தான் சார்பாகக் கொண்டுள்ளது. ஜேர்மனியின் முக்கிய வங்கிகளின் ஆணைகளை ஒட்டி அதுவும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு சிறிய குழுவின் இசைவுடன் அரசாங்கத்தின் கொள்கைகள் இப்பொழுது இருப்பது, ஜேர்மனியில் ஜனநாயக வழிவகை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதற்கு தெளிவான அடையாளம் ஆகும். |