World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China emerges as a major exporter of capital

சீனா ஒரு முக்கிய மூலதன ஏற்றுமதியாளராக உருவெடுக்கிறது

By John Chan 
19 May 2009

Back to screen version

சர்வதேச நிதி நெருக்கடி மோசமடைந்திருந்த நிலையில் கடந்த ஆண்டில், சீனா ஒரு முக்கிய மூலதன ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. உள்நாட்டில் முதலீடு செய்யாமல், சீன அரசும், புதிய முதலாளித்துவ வர்க்க பிரிவுகளும் வெளிநாடுகளில், குறிப்பாக மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்துறை சொத்துக்களைப் பாதுகாப்பாக பெறுவதற்காக, கணிசமான அளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.

2000த்தில் பெய்ஜிங் ஒரு "Go Global" கொள்கையை தொடங்கியது. இது வெளியில் செல்லும் அன்னிய நேரடி முதலீட்டின் விரைவான வளர்ச்சிக்கு இட்டு சென்றது. எவ்வாறிருப்பினும், கடந்த செப்டம்பரில் கடன் முறிவு ஏற்பட்டதிலிருந்து, பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் நிதிக்காக பணத்தைச் சார்ந்திருந்த பல பெருநிறுவனங்களின் தேவை ஆகியவற்றை சாதகமாகக் கொண்டு, சீனாவிலிருந்து பாயும் மூலதனம் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.

2002ல், சீனாவில் இருந்து வெளியே சென்ற முதலீடு வெறும் 2.5 பில்லியன் டாலர் மட்டுமே. 2007ல் இந்த மதிப்பு 18.6 பில்லியன் டாலரை எட்டியது, அதுவே 2008ல் இரண்டு மடங்கிற்கு மேலாக 52.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த கணக்கீடு இந்த பெப்ரவரியில் மட்டும் 65 பில்லியன் டாலரை எட்டும் என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணக்கிடுகிறது. சீனாவிற்கு வரும் அன்னிய நேரடி முதலீடான $80-100 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2009ல் சீனாவில் இருந்து வெளியில் செல்லும் அன்னிய நேரடி முதலீடு 150 முதல் 180 பில்லியன் டாலரை தொடும் என்று அந்த வங்கி முன்கணிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2008க்கான உலக முதலீட்டு அறிக்கையின்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை மட்டுமே 2007ல் வெளிநாடுகளில் $100 பில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்தன. 2008ல், வெளிநாடுகளில் சீனாவின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு உலகின் மொத்த அளவில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமேயாகும். ஆனால் இது விரைவாக உயரக்கூடும்.

சேமிப்புகளில் உலகின் உயர்ந்த விகிதத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் கொண்டிருக்கும் ஜப்பானுடன் ஒப்பிடுகையில், சீனா சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது), பெரியளவிலான வணிக கணக்கு உபரிகளை (1983ல் சாதனையளவாக 4.3 சதவீதம் கொண்டிருந்த ஜப்பானுடன் ஒப்பிடுகையில், 2008ல் சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் மேல் கொண்டிருக்கிறது) மற்றும் உலகில் மிக அதிகளவிலான செலாவணி கையிருப்பை (1.95 டிரில்லியன் அமெரிக்க டாலர்) சீனா கொண்டுள்ளது.

சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கியியல் முறை சர்வதேச நிதி நெருக்கடியிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க பெய்ஜிங்கை ஒரு வலுவான இடத்தில் நிறுத்தி உள்ளது. கூடுதல் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் நிறுவனங்களால் $100 மில்லியனுக்கு குறைவான வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை மே 1 முதல், வர்த்தக அமைச்சகம் மாகாண மற்றும் உள்ளூர் ஆணையத்திற்கு மாற்ற இருப்பதாக அறிவித்திருந்தது.

தன் பரந்த தொழில்துறை அடித்தளத்திற்காக கனிம மற்றும் எரிசக்தி வளங்களில் சீனா முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. Outlook இதழின் சமீபத்திய ஓர் உத்தியோகப்பூர்வ தலையங்கம், "குறிப்பிட்ட மூலோபாய வளங்களின் இறக்குமதிகளை அதிகரிப்பதன் மூலமும், சில மூலதன சேர்ம இருப்புக்களை ஆதாரவள சேர்ம இருப்புக்களாக மாற்றுவதன் மூலமும் சர்வதேச சந்தைகளில் தற்போது நிலவும் மூலப்பொருட்கள் விலை வீழ்ச்சியை சாதகமாக எடுக்க" ஒரு மூலோபாயம் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.

பெப்ரவரியில் இருந்து, நீண்டகால எண்ணெய் வினியோகத்திற்காக ரஷ்யா, பிரேசில், வெனிசூலா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் சீனா $46 பில்லியன் மதிப்பிலான முதலீடு/கடன்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கூடுதலாக, சீன நிறுவனங்கள் ஆதாரவள நிறுவனங்களில் பெருமளவிலான முதலீடுகளையும் செய்து வருகின்றன. அரசு நிறுவனமான சீனல்கோ, ஆங்கிலோ-ஆஸ்திரேலிய பெரிய சுரங்கத்துறை நிறுவனமான ரியோ டின்டோவில் $19.5 பில்லியன் முதலீட்டிற்கு ஆஸ்திரேலிய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மேலும் பல காரணிகளும் சீனாவின் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து வருகின்றன. உலக தேவையின் பொறிவைத் தொடர்ந்து, சீன பெருநிறுவனங்கள் அதிக கையிருப்பால் தொல்லைக்காளாகி இருக்கின்றன என்பதால் இலாபகரமான முதலீட்டிற்காக வெளிநாடுகளின் பக்கம் திரும்புகின்றன. மார்ச்சில், சீனாவின் அலுமினிய திறனில் 30 சதவீதம், சிமெண்ட் மற்றும் கிளாஸில் 20 சதவீதம் மற்றும் செமிக்கண்டக்டர் உற்பத்தியில் 70 சதவீதம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. தொழில்துறை வலிமையாக்கல் மற்றும் சீரமைப்பின் ஓர் அலையானது, உலகளவில் போட்டித்தன்மை மிக்க தொழில்நுட்பம், பிராண்டுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வலைப்பின்னலை உருவாக்க அல்லது வாங்குவதற்கான செயல்பாட்டில் பரந்த சீன திரட்சியை உருவாக்கி வருகிறது.

சீனாவை ஓர் உலகளாவிய பெருநிறுவன இருப்பிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு குறுக்கு வழியாக, பன்னாட்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதும் அல்லது துறைகளில் முதலீடு செய்வதும் "Go Global" திட்டத்தின் மற்றொரு நோக்கமாக உள்ளது. 2004ல், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான TCL, பிரான்சின் தொலைதொடர்பு சாதனங்கள் உற்பத்தியாளர் ஆல்கடெல் SA நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை தோற்றுவித்துடன், ஐரோப்பாவில் தாம்சனின் டிவிடி மற்றும் டிவி செயல்பாடுகளின் மூலம் ஒரு கட்டுப்பாட்டைக் கொணர்ந்தது. 2005ல், லெனோவா IBM இன் கணிணி செயல்பாடுகளைக் கொணர்ந்தது. நான்ஜிங் ஆட்டோமொபைல் பிரிட்டிஷ் கார் நிறுவனமான MG ரோவரின் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியது. 2008ல், ஜூம்லியன் கனரக தொழிற்கூடம் இத்தாலிய கட்டுமான இயந்திர உற்பத்தியாளர் CIFAவை கைப்பற்றியது.

இந்த நகர்வுகள் சீனாவுடனான போட்டியாளர்களுடன் பதட்டங்கள் உருவாக இட்டு சென்றன. கடந்த மாதம் Time இதழ் பின்வருமாறு எச்சரித்தது: "கிறைஸ்லர்ஸ் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதன் சொத்துக்களை ஏலத்தில் எடுக்க ஒரு சீன கார் நிறுவனம் அரசு பணத்தைப் பயன்படுத்த முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. பிரான்சில், கார் விற்பனை தொடர்ந்து நலிந்திருந்தால், நிதி பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் Citroen மற்றும் Peugeot ஆகியவற்றின் நிலைமை மேலும் மோசமடையக் கூடும். ஐரோப்பாவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் Opel ஆலைக்கு உடனடி மூலதனம் தேவைப்படுகிறது என்பதால் அது அமெரிக்காவின் முத் இட நிறுவனத்திடம் இழப்புக்காக விற்றுவிடக் கூடும். அட்லாண்டின் இருபுறமும் இருக்கும் பிராண்டுகள், உற்பத்தி சொத்துக்கள், உற்பத்தி மேம்பாட்டு நபர்கள் மற்றும் முகவர்களையும் சீனா கைப்பற்ற கூடும்."

வெளிநாடுகளில் முதலீடு செய்வதின் அதிகரிப்புக்கு, அமெரிக்க டாலரின் ஸ்திரமின்மை குறித்து பெய்ஜிங்கில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் ஒரு காரணமாகும். வெளிநாட்டு செலாவணி சேமிப்புகளில் சீனாவின் 1.95 டிரில்லியன் டாலரில் பெரும்பான்மை அமெரிக்க கருவூல பத்திரங்களிலும், பிற அமெரிக்க சொத்துக்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. டாலரின் மதிப்பை பெரியளவிற்கு சரிவிற்கு இட்டு செல்லக்கூடிய பெரியளவிலான அமெரிக்க மானிய திட்டங்களால் சீன தலைவர்கள் தங்களின் சொத்துக்களின் மதிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள். உலகளாவிய நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் பங்குகளில் முக்கியமாக முதலீடு செய்வதற்காகவே 2007ல், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன முதலீட்டு கழகம் உருவாக்கப்பட்டது.

அரசியல் பதட்டங்கள்

அரசியல் காரணங்களுக்காக ஏழை நாடுகளுக்கு கடன்கள் மற்றும் உதவிகள் வழங்குதலின் அதிகரிப்பு ஆகியவற்றுடன், உலகளவில் சுரங்க மற்றும் தொழில்துறை சொத்துக்களைச் சீனா பெருமளவில் வாங்கியதானது, ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற சக்திகளிடையே பகைமையை வளர்த்து வருகிறது.

"ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் வெளிநாட்டு உதவி நடவடிக்கைகள்" என்ற தலைப்பில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வு சேவையினால் பெப்ரவரியில் அளிக்கப்பட்ட ஓர் அறிக்கை, இந்த மூன்று பிராந்தியங்களில் அரசு ஆதரவிலான முதலீடு அல்லது சலுகை கடன்கள் என்ற வடிவத்தில் சீனாவின் உதவி, 2002ல் 1 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது. அதுவே 2006ல் 27.5 பில்லியன் டாலராகவும், 2007ல் 25 பில்லியன் டாலராகவும் - குறிப்பாக எண்ணெய் மற்றும் கனிமங்களைப் பெறுவதற்கு வசதியாக - அதிகரித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியது.

இந்த பிராந்தியங்களில் சீனாவின் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு, முக்கிய மேற்கத்திய சக்திகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாகவே உள்ளது. சான்றாக, இலத்தீன் அமெரிக்காவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்னிய நேரடி முதலீடு 2006ல் மொத்தம் $620 பில்லியனாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா $350 பில்லியனையும், சீனா மொத்தம் $22 பில்லியனையும் கொண்டிருந்தது. இருந்தபோதினும், சீனாவின் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்து வருகிறது, மேலும் தற்போது அது இலத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் உள்ளது.

சீனாவின் பெரிய செலாவணி கையிருப்பானது பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்காக மாற்றப்பட்டு வருவது தான் வாஷிங்டன் மற்றும் பிற தலைநகரங்களின் கவலையாக உள்ளது. நிகழ்ந்து வரும் கடன் உடைவுக்கு இடையிலும், உலகில் பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள பல நாடுகளுக்கு முதலீடு, கடன்கள் மற்றும் உதவிகள் அளிக்கும் சில ஆதாரங்களில் சீனாவும் ஒன்றாக உள்ளது.

ஏப்ரலில் வாஷிங்டன் போஸ்ட் ஜமைக்காவை சான்றாக எடுத்துக்காட்டியது. ஜமைக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிதி நெருக்கடியில் போராடி வரும் வேளையில், சீனா $138 மில்லியனுடன் அந்நாட்டின் மீட்புக்கு முன்வந்தது. "ஜமைக்காவின் முன்னணி பத்திரிகைகளின் தலைப்புகள், (ஓராண்டிற்கு முன்னர் அப்பிராந்தியத்தில் வளர்ந்து வந்த சீனாவின் செல்வாக்கு குறித்த கவலைகள் அவற்றில் நிரம்பி இருந்தன) சீனாவின் தாராள மனப்பான்மையை புகழ்ந்தன," என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டது.

ரஷ்யா மற்றும் கஜகஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சீனாவின் பெரிய கடன்கள், "மத்திய ஆசியாவின் புவிஅரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தின் அறிகுறியாக இருந்தன" என்று The Asia Times குறிப்பிட்டது. விலை வீழ்ச்சிகளின் கடுமையான தாக்கம், மத்திய ஆசியாவின் எரிசக்தி-சார்ந்த பொருளாதாரங்கள் சீனாவின் மூலதனத்தை எதிர்பார்க்கின்றன. அவை சீனாவின் கரங்களின் கீழ் அப்பிராந்தியத்தை எடுத்துச் செல்ல அதற்கு ஒரு பெரிய வாய்ப்பை அளிக்கின்றன". சீனாவின் நடவடிக்கைகள் வளமிக்க பிராந்தியத்தில் நேரடியாக அமெரிக்காவின் விருப்பங்களில் குறுக்கிடுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவில், சர்வதேச நிதி நெருக்கடியின் விளைவுகளில் இருந்து மீண்டு வர உதவும் வகையில், கடந்த மாதம் $10 பில்லியன் முதலீட்டு கழக நிதியையும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பிற்கான (ASEAN) கடனில் $15 பில்லியனையும் பெய்ஜிங் அறிவித்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் வலுவான கூட்டணி வைத்திருக்கும் தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் திரும்புகின்றன.

ஆஸ்திரேலியாவில், Rio Tinto வில் சீனல்கோவின் அறிவிக்கப்பட்ட முதலீடு, ஆளும் வட்டாரங்களில், சீன முதலீடு முக்கிய சுரங்க வளங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படுமா என்பதன் மீது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நிதி தேவைப்பட்ட போதினும், ஆசியாவில், குறிப்பாக சீனாவிலும், அமெரிக்காவுடனான அதன் நீண்டகால மூலோபாய கூட்டணியிலும் இருக்கும் அதன் பொருளாதார சார்பிற்கு இடையில் கான்பராவின் சமநிலைப்படுத்தும் நடவடிக்கையின் பிரச்சனைகளை முதலீடு மேலும் அதிகப்படுத்துகிறது.

தற்போதைய அதன் ஆரம்பகால நிலையிலேயே, மூலதன ஏற்றுமதி சீன முதலாளித்துவத்தின் மாறிவரும் பாத்திரத்தை பிரதிபலிக்கிறது. 1978ல் சீனா வெளிநாட்டு மூலதனத்திற்கு திறந்துவிட்டபோது, அரசு நிறுவனங்கள் மற்றும் புராதன கடும் உழைப்புச் சுரண்டலில் இருந்து (அனைத்தும் போலீஸ் அரசு ஆட்சியால் வலிந்து பெறப்பட்டவை) பறிக்கப்பட்டதன் மூலம் ஒரு புதிய உடைமை வர்க்கம் கணிசமான மூலதனத்தை திரட்டியது. மேலும் கூடுதலாக, தாய்வான், ஹாங்காங் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வெளிநாட்டு சீன வணிக மேற்தட்டானது, சீனாவுடன் அதன் மூலதன திரட்சியை ஊக்குவித்து நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி கொண்டது.

தற்போதிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெறுமனே உலகின் பெரிய மலிவு கூலி உழைப்பு மேடையாக செயல்படுவதை விட, சீனா வெளிநாடுகளில் முதலீடு செய்து வருகிறது. மேலும் தற்போதிருக்கும் முக்கிய சக்திகளின் பொருளாதார மற்றும் மூலோபாய நிலைமைகளுக்கும் சவால் விடுகிறது. ஓர் ஆழ்ந்த உலக பொருளாதார நெருக்கடிக்கு இடையில், இந்த தீவிரப்போட்டி அரசியல் பதட்டங்களைத் தான் அதிகரிக்க செய்யும் என்பதுடன், எதிர்கால பிரச்சனைகளுக்கும் மேடை அமைத்துக் கொடுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved