World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்French "left" parties trail in European election campaign ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் பிரெஞ்சு "இடது" கட்சிகள் பின்னடைவு By Kumaran Ira and Alex Lantier ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான ஜூன் 2009 தேர்தல் பிரச்சாரம் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏனெனில் கடந்த செப்டம்பரில் உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்ததற்கு பின் பிரான்சில் வரும் முதல் தேர்தல் பிரச்சாரம் ஆகும். வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மதிப்பிழந்துள்ளபோதிலும், தற்போதைய கருத்துக் கணிப்புக்கள் பழைமைவாத கட்சிகள் வரவிருக்கும் தேர்தலில் முன்னணியில் இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. இரு புதிய கட்சிகளும் ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடுகின்றன. சோசலிஸ்ட் கட்சியை (PS) விட்டு விலகிய பின் Jean-Luc-Melenchon ஜனவரி மாதம் நிறுவிய இடது கட்சி (Parti de Gauche, PG) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (Nouveau Parti Anti-capitaliste, NPA) என்ற பெப்ருவரி மாதம், அதன் மிக முக்கியமாக அறியப்பட்டுள்ள பகுதிநேர தபால் ஊழியரும் செய்தி ஊடகத்தால் போற்றப்படுபவருமான பெசன்ஸநோவால் நிறுவப்பட்டது. சோசலிஸ்ட் கட்சி என்னும் பிரான்ஸின் மிகப் பெரிய முதலாளித்துவ இடது கட்சி ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் கூட்டு கட்சியின் (PES-Party of European Socialists Coalition) ஒரு பகுதியாக பிரச்சாரம் செய்வது, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மிகப் பெரிய ஒற்றைக் கட்சியாக வரும் நோக்கத்தை கொண்டுள்ளது. தற்பொழுது PES ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 217 இடங்களை கொண்டுள்ளது. ஐரோப்பிய மக்கள் கட்சி எனப்படும் (EPP-European Popular Party) பழைமைவாதிகளின் கட்சிகளுடைய கூட்டணி 288 இடங்களை கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தன் கொள்களைகளின் மூலம் தீர்வு காணலாம் என்பதை மக்களுக்கு நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய தேர்தல்களை தாங்கள் காண்பதாக சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இன்னும் கூடுதலான முறையில் இராணுவ விஷயங்களில் ஐரோப்பா சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது. பெப்ருவரிக் கடைசியால் தன்னுடைய ஐரோப்பிய தேர்தல் பட்டியலை முடிவு செய்ய சோசலிஸ்ட் கட்சி தொடங்கியவுடன் சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் Martine Aubry தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி ஒன்றாகச் சேரவேண்டும் என்றும், "இப்பொழுது நம் நாட்டை எதிர்நோக்கியுள்ள பொருளாதார, சமூக நிலைமையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மாறுவதில் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்ற நிலையில்" இது கவனிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரும் முன்னாள் போர்த்துக்கல் பிரதம மந்திரியும் ஐரோப்பிய மக்கள் கட்சி உறுப்பினருமான ஜோஸ் மானுவல் பரோசா ஆகியோர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள விதத்தை சோசலிஸ்ட் கட்சி தன்னுடைய குறைகூறலில் குவிப்புக்காட்டியுள்ளது. அதன் தேர்தல் வலைத் தளத்தில் "தலையீடு செய்யாத" தன்மைக்காகவும், "வேலைகளை காப்பதில் முன்வந்து இயற்றாத கொள்கைகளுக்கும்", ஐரோப்பாவில் கார்த்தயாரிப்பு தொழிலின் வருங்காலத் தன்மை பற்றி விவாதங்களை நடத்தாதற்காகவும் பரோசோவை சோசலிஸ்ட் கட்சி தாக்கி எழுதியுள்ளது. சார்க்கோசியின் ஆளும் பழைமைவாத UMP (Union pour ue Majority Populaire) அதன் ஐரோப்பிய தேர்தல் பட்டியலை அறிவிக்காததற்கு ஆண்-பெண் சமத்துவ தேவையை திருப்திகரமாக முடிப்பதில் உள்ள கஷ்டங்கள் காரணம் என்று கூறப்படுகின்றன. இதைத்தவிர சார்க்கோசிக்கும் பலம்வாய்ந்த Bordeaux நகர மேயரும் முன்னாள் பிரதமருமான அலன் யூப்பேக்கும் இடையே உள்ள அரசியல் அழுத்தங்களும் காரணம் எனப்படுகின்றன. இதன் விளைவாக சார்க்கோசி வேட்பாளர்களுக்கு பதிலாக UMP இற்காக ஐரோப்பிய கருத்துக்களை பற்றிய தன்னுடைய உரைகளில் பிரச்சாரம் செய்வதாக இருக்கிறார். சமீபத்தில் வலதுசாரி கொள்கையை அவர் வலியுறுத்தும் விதத்தில், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள், ஆர்பாட்டங்களில் ski முகமூடிகள் அணிதல் சட்டவிரோதமாக்கப்படுதல், இளைஞர்கள் "குண்டர்கள் குழுக்களாக செயல்படுவதை தடுத்தல்", ஆகியவற்றைத் தவிர அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி பங்கு பெறுவதற்கு எதிர்ப்பு வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைமை சுழற்சி முறையில் பிரான்ஸ் 2008 கடைசிப் பகுதியில் கொண்டிருந்தபோது ரஷ்யர்களுக்கும் ஜோர்ஜியர்களுக்கும் தெற்கு ஒசேஷியா ஒட்டிய பூசலின் போது நடத்திய தன்னுடைய நிர்வாகச் சிறப்பையும் புகழ்ந்துள்ளார். கருத்துக் கணிப்புக்கள் தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள், கிட்டத்தட்ட 49 அல்லது அதற்கும் மேலான சதவிகிதம் பங்கு பெற மாட்டார்கள் எனக் கூறுகின்றன. பிரான்ஸில் ஐரோப்பிய அமைப்புக்களுககான ஆதரவு 1987ம் ஆண்டு மிக உயர்ந்த அளவில் இருந்த 74 சதவிகிதத்தில் இருந்து இன்று 49க்கு குறைந்துவிட்டன. இதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் இல்லை என்பது ஒரு காரணம் ஆகும்; ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்தை அது கட்டுப்படுத்துவதும் இல்லை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிர்வாக அதிகாரிகள் மீதும் கட்டுப்பாட்டைக் கொள்ளவில்லை. இன்னும் பரந்த அளவில் ஐரோப்பிய முதலாளித்துவ நிறுவன அமைப்புக்கள் பற்றி மக்ளுடைய பெரும் ஏமாற்றத்தைத்தான் நிலைமை பிரதிபலிக்கிறது. அவை சமூக நலச் செலவினங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் எதிரான வணிகத்தின் நலன்களைத்தான் செயல்படுத்துகின்றன (குறிப்பான 2006ம் ஆண்டு Bolkestein உத்தரவுகள் ஒற்றை ஐரோப்பிய சந்தையை பணிகளுக்காக ஏற்படுத்தியது); அதேபோல் 1990களில் யூகோஸ்லேவியா அனுபவமும் உள்ளது; இது ஐரோப்பிய கண்டத்தில் போர் புதுப்பிக்கப்படுவதை தடுக்க இயலாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இருந்ததைக் காட்டுவதாக மக்கள் நினைக்கின்றனர். Le Parisien, Aujourd'hui en France ஆகியவற்றிற்காக CSA நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பழைமைவாத UMP அரசாங்கம் 27 சதவிகிதத்தில் முன்னிலையில் உள்ளது, அடுத்து சோசலிஸ்ட் கட்சி 25 சதவிகிதத்தில் உள்ளது. பிரான்சுவா பேய்ரூவின் பழைமைவாத MoDem (Democratic Movement) 12% வாக்குகளையும், Daniel Cohn-Bendit, Jose Bove தலைமையில் உள்ள ஐரோப்பிய சுற்றுச்சூழல் பட்டியல் 10 சதவிகித ஆதரவையும் கொண்டுள்ளது.ஜூன் தேர்தலில் NPA 7 சதவிகித வாக்குகளை பெறக்கூடும். இது 3 சதவிகிதம் பெறக்கூடிய இடது முன்னணி (PG, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி PCF), 2 சதவிகிதம் பெறக்கூடிய தொழிலாளர்கள் போராட்டம் (Lutte Ouvriere- LO) ஆகியவற்றைவிட அதிகமாக இருந்து "தீவிர இடதிற்கு" மொத்தம் 12 சதவிகிதத்தை கொடுக்கும். இந்த வாக்கு மொத்தங்கள் இக்கட்சிகள் பெப்ருவரி நடுப்பகுதியின் பெற்றவிளைவுகளில் இருந்து சரிவைக் காட்டுகிறது; அப்பொழுது இது 18 சதவிகிதம் பெற்றது. NPA 9 சதவிகிதம், PG 6 சதவிகிதம் மற்றும் LO 3 சதவிகிதம் என்று பெற்றிருந்தன. இவ்விதத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் நெருக்கடி என பரவலாக நோக்கப்படுகையில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற பிரான்ஸில் உள்ள "இடது" கட்சிகளுக்கு ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். உத்தியோகபூர்வமாக கணிப்புக்கள் பிரான்ஸில் வேலையின்மை அடுத்த ஆண்டு 10 சதவிகிதத்தையும் விட அதிகரிக்கும் என்று OFCE என்னும் பிரெஞ்சு பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 சதவிகிதத்தினர் வேலையில் இல்லை. வங்கிகளை காப்பாற்ற நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை சார்க்கோசி தருவதாக உறுதி கொடுத்துள்ளார். இவற்றின் நிர்வாகிகள் பல மில்லியன்களை மேலதிக கொடுப்பனவாக பெறுகின்றனர். இது பல்லாயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் ஒவ்வொரு மாதமும் இழக்கப்படும் நேரத்தில், தொழிலாளர்களிடையே பரந்த சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய வாரங்களில் பல பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு ஆலைகளின் வேலை இழப்புக்கள், கூடுதல் தொழிலாளகள் நிலவரம் பற்றி வன்முறையான பூசல்கள் கடுமையாக ஏற்பட்டுள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக சந்தேகிக்கப்படும் "நிர்வாகிகளை பிடித்து வைத்தல்" என்பதும் அடங்கும் இத்தகைய நெருக்கடியும் தொழிலாளர்களின் போர்க்குணத்தின் எழுச்சியும் இடது முதலாளித்துவக் கட்சிகளுக்கு தேர்தல் ஆதரவில் ஒரு ஏற்றத்தைக் கொடுக்காமல் சரிவைக் கொடுத்திருப்பது இக்கட்சிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் உள்ள சமூகப் பிளவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 1997-2002 ஆண்டுகளில் இருந்த பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் உடைய பன்முக இடது அரசாங்கம் (PS, PCF, பசுமைக் கட்சி ஆகியவை அடங்கியது) பல சிக்கன நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செயல்படுத்தியது. இதில் பாரிய வேலை இழப்புக்கள் மற்றும் பல பொது நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படலும் இருந்தன. இறுதி விளைவு ஜோஸ்பனுக்கு ஜனாதிபதி தேர்தல் 2002 முதல் சுற்றில் அவமானகரமான தோல்வி ஏற்பட்டது. இடது வாக்காளர்கள் சோசலிஸ்ட் கட்சியை கைவிட்டு தங்கள் வாக்குகளை பல கட்சிகளுக்கு கொடுத்து "தீவிர இடதிற்கு" மிக அதிக எண்ணிக்கை கிடைத்ததால், ஜோஸ்பனுக்கு இரண்டாம் சுற்றுக்குச் செல்லப் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தோன்றும் வரை, அதன் ஏப்ரல் 2008 கொள்கைகள் அறிக்கையின்படி, சோசலிஸ்ட் கட்சி அதிக அளவில் "ஒரு சமூக மற்றும் சுற்றுசூழல் சார்புடைய சந்தைப் பொருளாதாரத்தை" பாதுகாக்கும் கட்சியாக தன்னை மறு சீரமைக்கமுடியும் என்ற உள் விவாதத்தில் இருந்தது. 2002ல் இருந்து வலதுசாரி அரசாங்கங்கள் தொடர்ந்து பல சமூகச் செலவினக் குறைப்புக்களை செய்ததற்கு அதிக எதிர்ப்பு வெளிப்படுத்தப்படாததும் அடங்கும். இதே கசப்பான அனுபவங்கள்தான் ஐரோப்பா முழுவதும் பழைமைவாதிகளுக்கு ஆதரவாக ஒரு பரந்த போக்கு இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏப்ரல் 20 அன்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "எந்த பெரிய ஐரோப்பிய நாட்டிலும் முக்கிய இடது கட்சி அரசாங்கத்தில் இல்லை எதிர்க்கட்சியாகவும் எழுச்சியுறவில்லை. ஐரோப்பிய ஜூன் தேர்தல்கள் பற்றிய Burson-Marsteller கணிப்பு பிரிட்டிஷ் பழைமைவாதிகள் மற்றும் செக் ODS இரண்டும் ஐரோப்பிய மக்கள் கட்சியை விட்டு நீங்கும் நோக்கத்தை நிறைவேற்றினாலும்கூட வலது மத்தியான ஐரோப்பிய மக்கள் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அதிக இடம் பெற்றுள்ள கட்சியாக வரும் என்று கூறுகிறது." பிரிட்டனின் மத்திய இடது கொள்கை இணைய தளத்தின் இயக்குனரான Olaf Cramme என்பவரை மேற்கோளிட்டு பைனான்ஸியல் டைம்ஸ் கூறுகிறது: "நவ-தாராளவாதத்தின் நெருக்கடியின் அளவின் காரணமாக, எப்படி முதலாளித்துவத்தை மறு சீரமைப்பது என்னும் இடதுசாரி முன்மொழிவுகள் நல்ல வரவேற்பை பெறவில்லை. மத்திய-இடது சொத்து, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் நம்பகமான மாற்றீட்டைக் கொடுப்பதில் இடர்பாட்டைக் கொண்டுள்ளது. உண்மையில் பல நாடுகளிலும் பழைமைவாத கட்சிகள் நிதிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி பற்றி அதிக ஆர்வம் காட்டவில்லை; அதேபோல் இடதை விட நிதிய பிரிவைக் கட்டுப்படுத்த கடினமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றன." ஐரோப்பிய அரசியலில் வலதுசாரி மாற்றத்திற்கான பொறுப்பு "தீவிர இடது" என அழைக்கப்படுபவற்றின் மீதுதான் விழும்; குறிப்பாக புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) மீது. முதலாளித்துவ இடது கட்சிகளுக்கு குறிப்பாக PS, PCF க்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டின் உருவகம் என்று தன்னை காட்டிக்கொண்ட பின்னர், இது நடைமுறையில் முதலாளித்துவ இடதுகளின் முன்னோக்குடன் அடிப்படை உடன்பாட்டைத்தான் நிரூபணம் செய்து வருகிறது. இது வாக்காளர்களுக்கு பன்முக இடது கட்சிகள் தொடர்ந்திருந்த கொள்கைகளுக்கு போர்க்குணமிக்க விரோதத்தை காட்டும் வழிவகை இல்லாமல் செய்துவிட்டது. போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களுக்கு அவை விடுக்கும் அழைப்புக்கள் தேசிய கட்டுப்பாட்டிற்கான அழைப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மூலம் அரசாங்கத்தின் மேற்பார்வையில் சமூக ஒற்றுமையில் ஒரு புதிய சகாப்தம் வரும் என்ற வரையறையை கொண்டுள்ளன. வர்க்கப் போராட்டம் தீவிரப்படுகையில், சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு குன்றிவருகையில், இந்த முன்னோக்கின் நம்பகத்தன்மையும் பெரிதும் சரிந்து கொண்டிருக்கிறது. "தீவிர இடது" மற்றும் நடைமுறை இடதுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் பற்றி NPA, PCF, PG ஆகியவற்றிற்கு இடையே நடக்கும் விந்தையான பேச்சு வார்த்தைகளைத் தவிர வேறு ஏந்த தெளிவான அடையாளமும் தேவையில்லை. சோசலிஸ்ட் கட்சியினுள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இருந்தும் மற்றும் ஜோஸ்பன் இன் கீழ் மந்திரிப் பதவிகளை வகித்த Melenchon PG ஐ தோற்றுவித்து இடது தன்னைச் சீர்திருத்திக் கொள்ளும் என்ற தோற்றத்தை பிரெஞ்சு ஆளும்வர்க்கத்திற்கு காட்ட முற்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் தோற்றுவிக்கப்பட்ட பின் PG ஐரோப்பியத் தேர்தலில் PCF இன்னும் பல சிறிய குட்டி முதலாளித்துவ கட்சிகள் இணைந்த "இடது முன்னணி" என்பதை முன்வைத்தது. PG யின் நிறுவன நெறியும் NPA நிறுவன மாநாட்டிற்கு முன் அதன் மீது செல்வாக்கையும் அழுத்தத்தையும் செலுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. NPA இடது முன்னணியுடன் சேரவேண்டும் என்று Melenchon கூறினார். இந்த முன்மொழிவு NPA ஐ ஒரு சிக்கலான நிலையில் வைத்ததுள்ளது. ஒருபுறம், அதன் வளர்ச்சி ஒரு முற்போக்குத் தோற்றத்தை காட்டி சோசலிஸ்ட் கட்சியில் இருந்து அமைப்பு முறை சுதந்திரம் என்ற அடிப்படை தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மறு புறமோ, அதன் உறுப்பினர் முறை "ஒற்றைப் போராட்டம்" என்ற விதத்தில் பழைமைவாத கட்சிகளுக்கு எதிராக 7 இடது கட்சிகள் நடைமுறையில் இணைந்து இருக்க வேண்டிய நிலையும் இருந்தது. அந்நிலையில் அதன் தலைமை PS, PCF தலைமையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை நாட வேண்டியுள்ளது. இந்த இடர்பாட்டை இழிந்த முறையில் தீர்க்கும் வகையில் இடது முன்னணிக் கட்சிகளிடம் இருந்து தான் சுதந்திரமாக இருப்பதாக அறிவித்த வகையில் NPA காட்டியது; அதே நேரத்தில் அவற்றுடன் பணியாற்றியும் வருகிறது. இதுதான் பெசன்ஸநோ மற்றும் நீண்ட நாளாக NPA அமைப்பின் முன்னோடியாக இருந்த LCR ல் இருந்த கிறிஸ்டியான் பிக்கேயும் வேலைப் பகிர்வின் மூலம் சாதித்து ஆகும். ஜனவரி 20ம் தேதி பெசன்ஸநோ NPA இன் மாற்றீட்டு திட்டத்தை கூறினார்: இடது முன்னணியுடன் NPA உடன்பாடு கொள்ளும், ஆனால் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரம் மட்டும் இல்லாமல் 2010 வட்டார தேர்தல் பிரச்சாரத்திற்கும் உடன்பாடு இருக்க வேண்டும் என்பதை அது ஒப்புக்கொண்டால். அவர் இதற்கு கொடுத்த விளக்கம்: "ஐரோப்பிய தேர்தல்களுக்கு ஒன்றாக வருவது நியாயம் என்றால், அப்படியானால் 2010 பிராந்திய தேர்தல்களுக்கும் அது சரிதான்; சோசலிஸ்ட் கட்சியுடன் பாதி முன்னணி சென்றுவிட்டால், நோக்கம் நிறைவேறாது." இடது முன்னணிக் கட்சிகளுடன் ஒன்றாகச் செயல்பட கொள்கையளவில் தனக்கு வேறுபாடு ஏதும் இல்லை என்று பெசன்ஸநோ தெளிவாக்கிவிட்டார். ஆனால் சோசலிஸ்ட் கட்சியிடம் இருந்து ஒருவித சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது போல் இவ்விஷயத்தை செய்கிறார். பெப்ருவரி 1ம் தேதி France 5 க்கு இதை மீண்டும் பெசன்ஸநோ கூறி, அந்த முகாமில் எனக்கு விரோதிகள் கிடையாது. இது நீடித்திருக்கும் முன்னணி" என்று வலியுறுத்தினார். சோசலிஸ்ட் கட்சியிலிருந்து சுதந்திரம் என்னும் அடிப்படைப் பிரச்சினை ஒரு நீடித்த முறையில் தீர்க்கப்பட வேண்டும்." மார்ச் 2ம் தேதி NPA, PG மற்றும் PCF பிரதிநிதிகளை சந்தித்து கூட்டணிக்கான வாய்ப்பை விவாதித்தது. PG, PCF இரண்டும் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து தனித்த பிராந்திய தேர்தல் பட்டியல்களை தயாரிக்க உறுதியளிக்க மறுத்துவிட்டன. மார்ச் 9ம் தேதி NRA உத்தியோகபூர்வமாக தான் இடது முன்னணியில் இருந்து தனித்து போட்டியிடும் என்றும் "இடது முன்னணி வரவிருக்கும் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியிடம் உறுதியாக கூட்டு இல்லை என்று ஒதுக்காததாலும் குறிப்பாக பிராந்திய தேர்தல்களில் இந்நிலை பற்றியும், இந்த முடிவு வந்துள்ளது" என்று கூறியது. மார்ச் 8ம் தேதி NPA யில் சிறுபான்மை பிரிவின் தலைவரான Christian Picquet தான் ஐரோப்பிய தேர்தலை பொறுத்தவரையில் இடது முன்னணியில் சேர்ந்திருப்பதாகவும் அதே நேரத்தில் NPA இல் தன் உறுப்பினர் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். இப்பேச்சு வார்த்தைகளின்போது, Picquet உடைய பிரிவு, இடது முன்னணியில் சேரும் தன் அக்கறை பற்றி பல முறை அடையாளம் காட்டி NPA தலைமையையும் அவ்வாறு செய்யுமாறு வலியுறுத்தியது. "கருத்துக் கணிப்புக்கள் மற்றும் பெசன்ஸநோவின் புகழ் இடதிற்கு ஒரு நம்பகத்தன்மை உடைய மாற்றீட்டைக் கொடுக்க போதாதவை" என்று விளக்கினார். தன்னுடைய முடிவை நியாயப்படுத்தும் வகையில் Picquet "இடது மக்களின் பொது நலன்களை மீறி கட்சி நலன்கள் நிலைக்கும் என்று கூறுவதை ஏற்பது முடியாத காரியம்" என்றார். "என்னுடைய நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி முழு உணர்வையும் பொறுப்பையும் நான் கொண்டுள்ளேன்" என்று கூறிய அவர் NPA இல் தன் பிரிவு இடது முன்னணியில் "தீவிரமாக, உரிமையுடன் கோரும் பங்காளியாக" செயல்படும் என்றும் உறுதியளித்தார். NPA தலைமையின் மறைமுகமான ஆதரவுடன் Picquet செயல்படுகிறார்; ஆனால் இடது முன்னணி பங்கு குறித்து கட்சியின் முடிவை வெளிப்படையாக மீறுவது போல் தோன்றினாலும், அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவும் இல்லை, அவர் மீது கட்டுப்பாடு நடவடிக்கை ஏதும் வரவும் இல்லை. |