World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Inadequate schooling in Sri Lanka's plantations

இலங்கையின் பெருந்தோட்டப் பாடசாலை கல்வியின் பற்றாக்குறைகள்

By Panini Wijesiriwardane and Sujeewa Amaranath
17 April 2009

Back to screen version

இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில், பொதுக் கல்வியின் வறுமைநிலை, பிரதானமாக தமிழ் பேசும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் மோசமான சமூக நிலமைக்கு ஓர் உதாரணமாகும். தொழிலாளர் வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்படும் தட்டினர் தோட்டத் தொழிலாளர்களே.

இலங்கையின் மக்கள் தொகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 5 வீதமாக இருப்பதுடன் அவர்கள் தீவின் மத்திய மலையக மாவட்டங்களில் நெருக்கமாக வாழ்கின்றனர். இவர்களில் அதி பெரும்பான்மையானவர்கள், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் தேயிலைத் தோட்டங்களை விஸ்தரிப்பதற்காக ஒப்பந்த தொழிலாளர்களாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிந்திய அரைப்பகுதியில் தென் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழர் வம்சாவழியைச் சேர்ந்தவர்களாவர்.

கூடுதலான தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் லயன் அறைகள் என்றழைக்கப்படும் குறுகலான வீட்டுத் தொகுதியிலேயே வசிக்கின்றனர். இவற்றில் பல பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டவையாகும். ஒரு தொழிலாளியின் ஒரு மாத வேதனம் சுமார் 6,000 ரூபாவாக இருப்பதோடு (55 அமெரிக்க டொலர்) இது உற்பத்தியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வீதிகள், சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளும் உட்கட்டமைப்பும் தோட்டப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன. அளவுக்கு மிஞ்சிய வேலையின்மை காணப்படுகிறது.

ஒரு அரச-சார்பற்ற அமைப்பான சஹாய நிறுவனத்தினால் 2007ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் பொதுக் கல்வியின் நிலமை வெளிக்காட்டப்பட்டுள்ளது: "பெருந் தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளில் 58 வீதமானவர்களே ஆரம்பக் கல்வியை நிறைவு செய்யும் வரை பாடசாலைக்கு வருகைதருகின்றனர். 7 வீதமானவர்கள் மட்டுமே சாதரண தரத்தில் சித்தியடைந்து (10ம் வகுப்பு) உயர்தரக் கல்விக்காகச் செல்கிறார்கள். ஒரு சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே, உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்து பல்கலைக் கழகம் செல்கிறார்கள். (ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைவு)"

பாடசாலைக் கல்வியில் இருந்து இடைவிலகல் உச்சமடைவதற்கான காரணங்கள் உச்சகட்ட வறுமை, கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் பெற்றாரின் ஊக்குவிப்பின்மையும் ஆகும். மேலும் பிரச்சினைக்குரிய பாடசாலைகளில் வரவை உறுதிப்படுத்துவதற்கு போதுமான வளங்கள் கிடையாது," என அந்த அறிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கின்றது.

உலக வங்கியின் 2007 மதிப்பீட்டின் படி, 2003-2004 இல் நாட்டின் உத்தியோக பூர்வ எழுத்தறிவு வீதம் 92.5 வீதமாக இருந்த போதிலும் பெருந்தோட்டப் பகுதிகளில் 81.3 வீதமாகவே இருந்தது. பெண்களைப் பொறுத்தளவில், தீவு பூராவும் கல்வியறிவு வீதம் 90.6 வீதமாக இருந்த போதிலும் பெருந்தோட்டப் பகுதிகளில் 74.7 வீதமாகவே இருந்தது.

வெறும் 1.4 வீதமான முழு நாட்டினதும் கல்வியில் இருந்து இடை விலகல் வீதத்துடன் ஒப்பிடும் போது, பெருந்தோட்டப் பகுதியில் இது உயர்ந்த அளவான 8.4 வீதமாக உள்ளது. கல்வியமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, ஆரம்பக் கல்வியில் இருந்து இரண்டாம் நிலைக் கல்விக்கு மாறும் ஆண்களின் வீதத்தை வேறு மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, நுவரெலியா மாவட்டம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருக்கின்றது. பல இளம் வாலிபர்கள் உழைப்புப் படையில் இணையத் தள்ளப்படுகிறார்கள்.

கொழும்பு உட்பட நாடுமுழுவதும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் வளப் பற்றாக்குறை உள்ளது. தகமையுடைய ஆசிரியர்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள், பொருத்தமான கட்டிடங்கள் மற்றும் மைதானங்களும் பற்றாக்குறையாக உள்ளன. ஆனால் கொழும்பு மற்றும் பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் முகம் கொடுக்கும் நிலமைகள் உலகில் தனித்தன்மையுடையன.

பெருந்தோட்டப் பிரதேசங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகம் காணப்படுகிறது. 2007 அறிக்கைகளின் படி, முழுத் தீவிலும் காணப்படும் 1:22 என்ற ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான வீதத்துடன் ஒப்பிட்டால், இது தோட்டப் பகுதியில் 1:45 வீதமாக உள்ளது. இதனால், வகுப்பின் அளவு பிரமாண்டமாகவும், நிலைமைகள் குறுகலாகவும் இருக்கும் அதே வேளை, ஆசிரியர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கின்றது.

2005 தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ வழங்கிய எண்ணற்ற வாக்குறுதிகளில் ஒன்று, பெருந்தோட்ட இளைஞர்களை ஆசிரியர்களாக கல்வியூட்டுவதற்காக, சிறீபாத கல்வியியற் கல்லூரியை முற்றிலும் பூரணப்படுத்தப்பட்ட பயிற்சி நிறுவனமாக்குவதாகும். வாக்குறுதிகளும் மீறப்பட்டன. இந்த வகையிலான கல்லூரிகளில் சிறீபாத மட்டுமே நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது.

மூன்று வருட காலத்துக்குப் பின்னரும், எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை. கல்லூரியில் உள்ள 20 கணினிகளில் ஒனறுக்கு மட்டுமே இணைய வசதி உள்ளது. ஏழு துறைகளுக்கான வகுப்புகளை மட்டுமே அங்கு நடத்த முடியும. நடனம் மற்றும் இசை என்பன தமிழ் கலாச்சாரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன -பாரத (இந்தியா) நடனம் மற்றும் கர்நாடக சங்கீதம் (தென்னிந்தியா). கல்லூரி 262 மாணவர்களுக்கு மட்டுமே இடமுள்ளது.

மாணவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும் அதில் 1,800 ரூபா உணவுக்காகவும் மீதியான தொகை நலன்புரித் தேவைக்கும் கழிக்கப்படுகிறது. தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் அடிக்கடி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

2007ல் இராஜபக்ஷ அரசாங்கம், சாதாரண தர சித்தியுடன் 3,000 இளைஞர்களை ஆசிரியர்களாக புதிதாக சேர்த்துக்கொள்வதாக அறிவித்திருந்தது. பெருந்தோட்டத்தை தளமாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தலைவர் பெ.சந்திரசேகரனும், இந்த நடவடிக்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கல்வியில் முன்னேற்றத்தையும் கொடுக்கும் என தற்பெருமை பேசிக் கொண்டனர். எவ்வாறாயினும், இரண்டு வருடங்களுக்குப் பின்னரும், இந்த புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் எந்தவொரு திட்டமும் ஸ்தாபிக்கப்படவில்லை.

பெருந்தோட்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அதிகமாக சர்வதேச உதவிகளிலேயே தங்கியுள்ளன. சுவிடிஸ் நிறுவனமான சிடாவினால் 1986 ஜூலையில் பெருந்தோட்டப் பாடசாலைக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1986 க்கும் 1991க்கும் இடையில் 2,052 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்பட்டார்கள். எவ்வாறாயினும், அந்த உதவிகள் பெற்ற பாடசாலைகள் தரக்குறைவாக பராமரிக்கப்பட்டமையால், "ஒரு தொகை அபிவருத்தி செய்யப்பட்ட பாடசாலைகள் சீரழிந்துள்ளன" என்பதை தனது ஆய்வின் மூலம் சிடா நிறுவனம் பின்னர் கண்டு பிடித்தது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ், பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்கள், தமது தொழிலாளர் படையை கங்காணி என்றழைக்கப்பட்ட உயர் சாதி மேற்பார்வயாளர்களின் கண்டிப்பான கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் மகன்மார் மற்றும் மகள்மார்களுக்கு கல்வி வசதிகள் வழங்கப்படவில்லை.

இலவசக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாகும் என இந்தியப் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின்( ல.ச.ச.க.) கீழ் ட்ரொட்ஸ்கிச இயக்கம் போராடியது. ல.ச.ச.க. தலைவர் என்.எம். பெரேரா 1944ல் இலவசக் கல்விக்கான பிரச்சினை என்ற நூலை எழுதினார். பெருந்தோட்ட மாவட்டங்களில் பாடசாலைகளின் எண்ணிக்கை 1904ம் ஆண்டு 43 இல் இருந்து 1948 இல் 968 ஆக விரிவாக்கப்பட்ட போதிலும் நிலமைகள் பண்டைய முறையிலேயே இருந்தன.

1948 சுதந்திரத்துக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியி (யூ.என்.பி.) அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கைகளில் ஒன்று தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்ததாகும். இந்தக் கொடுமையான பாரபட்ச நடவடிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்தை பிரித்தாளும் உபாயத்தை கொண்டு பலவீனமாக்குவதை இலக்காகக் கொண்டதாகும். இதை அவர்கள் பிரித்தானிய காலனித்துவ எஜமானர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.

1950 கள் மற்றும் 1960 களில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், சில தனியார் பாடசாலைகளை பொறுப்பேற்று பொதுக் கல்வியை விரிவாக்கின. ஆனால் தோட்டப் பாடசாலைகளை நடத்துவதை அரசாங்கம் பொறுப்பெடுக்கும் வேலை நத்தை வேகத்திலேயே நகர்ந்தது. தோட்டத் தொழிலாளர்களின் தமிழ் பேசும் பிள்ளைகள் அருகில் உள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு செல்லத் தள்ளப்பட்டனர். அங்கே சிங்களத்திலேயே பாடம் போதிக்கப்பட்டது.

ல.ச.ச.க. அதன் சோசலிசக் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்து 1964ல் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டதன் பின்னர், பெருந்தோட்டங்களின் நிலமைகள் நாடக பாணியில் மோசமடைந்து விட்டன. அந்த குறுகிய கால அரசாங்கம் எடுத்த ஒரே ஒரு நடவடிக்கை தோட்டத் தொழிலாளர்களை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றிணை இந்தியாவுடன் கையொப்பமிட்டதாகும்.

1970 முதல் 1977 வரை இருந்த இரண்டாவது கூட்டரசாங்கம், தோட்டங்களை "தேசியமயப்படுத்தியது". இந்த நடவடிக்கை சிங்கள முகாமையாளர்களுக்கு வேலை வழங்கிய போதிலும் தொழிலாளர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறை நிலைமைகளை மாற்ற எதுவும் செய்யவில்லை. வெளிப்படையான பட்டினி உட்பட பொருளாதார தேவைகளின் கீழ் தொழிலை இழந்த பலர் இந்தியாவுக்கு திரும்பினர். தோட்டங்களைப் பொறுப்பெடுத்த அரசாங்கம், தோட்டப் பாடசாலையின் பொறுப்பையும் முழுமையாக ஏற்கத் தள்ளப்பட்டது.

1970களின் பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சார்பில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கோரிய சுதந்திர சந்தை வேலைத் திட்டத்தின் பாதையில், ஏனைய அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் போலவே, கல்வியும் வெட்டுக்களை சந்தித்தது. மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கான செலவு 1948ல் 2.9 வீதத்தில் இருந்து 1956 மற்றும் 1973க்கும் இடையில் 4 வீதமாக அதிகரித்திருந்தது. அதில் இருந்து, கடந்த ஆண்டு வரை 2.95 வீதமாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

1997க்குப் பிந்திய தசாப்தத்தில், மாணவர்கள் வருகை வீழ்ச்சி என்ற சாக்குப் போக்கில் 664 பாடசாலைகள் மூடப்பட்டன. அவற்றில் பல சிறிய பாடசாலைகள் பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கிராமப்புற வறியவர்களுக்கு சேவையாற்றியவையாகும்.

1983ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காரணத்தாலும், சமூக சேவைகளுகளுக்கான நிதி இராணுவச் செலவுக்கு திருப்பப்பட்டது. இந்த முன்னெடுப்பை 2006ல் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய போது இராஜபக்ஷ அரசாங்கம் மோசமாக துரிதப்படுத்தியது. 2009 வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்புக்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட அதே வேளை, கல்விக்காக வெறும் 48 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டன.

பாடசாலைகளுக்கான செலவு 2008ல் 5.3 பில்லியன் ரூபாயில் இருந்து 2009ல் 4.6 பில்லியன் ரூபா வரை வெட்டப்பட்டது. 2008ல் இருந்து 2009க்கு பல்கலைக்கழக செலவு 829 மில்லியன் ரூபாய்களால் வெட்டப்பட்டுள்ளன. 1.9 பில்லியனுக்கும் அதிகமான கடன் பெற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற நிலையில், பொதுச் செலவில் மேலும் வெட்டுக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் கல்வி, நலன்புரி சேவை மற்றும் சுகாதாரமும் அடங்கும்.

தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்கள் உள்ளடங்கிய சமுதாயத்தின் மிகவும் வறிய தட்டினருக்கு சேவை செய்யும் பாடசாலைகளே மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved