World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைArmy's war crimes continue in northern Sri Lanka வட இலங்கையில் இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்கின்றன By Wije Dias இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் மீது தனது தாக்குதலை உக்கிரமாக்கிய நிலையில், நேற்று மேலும் நடந்த அட்டூழியங்களுக்கு அது பொறுப்பாகும். தீவின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள பாதுகாப்பு வலயம் என்றழைக்கப்படும் பிரதேசத்தில் எஞ்சியிருந்த ஒரே ஆஸ்பத்திரி மீது ஷெல் விழுந்ததில் குறைந்தபட்சம் 49 பேர் கொல்லப்பட்டதோடு 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள சிறிய பிராந்தியத்தில், போதுமானளவு உணவு மற்றும் மருந்து விநியோகங்கள் இன்றி ஐம்பதினாயிரத்துக்கும் ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. இந்த தற்காலிக மருத்துவமனை முள்ளிவாய்க்கால் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்ததோடு அங்கு அரசாங்க வைத்தியர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சேவையாற்றினர். ஷெல் தாக்கியபோது தான் சத்திரசிகிச்சை அறையில் இருந்ததாகத் தெரிவித்த டாக்டர். வி. சன்முகராஜா, அந்த ஷெல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்தே வந்ததாகத் தெரிவதாக மேலும் கூறினார். "சாட்சிகள் அற்ற யுத்தம்" என்ற குழுவின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், மருத்துவமனைக்கு பாதுகாப்பு பங்கர் எதுவும் கிடையாது என்றும் நோயாளர்களும் அவர்களது உதவியாளர்களும் வெளியில் தார் சீட்டுகளுக்கடியில் தூங்கிக்கொண்டிருந்தனர் என்றும் அவர் விளக்கினார். "அந்த ஆட்டிலறி நேரடியாக ஆஸ்பத்திரி மீது விழுந்து இந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷெல் தாக்கிய போது, அனைவரும் தமது உயிரைக் காக்க ஓடினர்... பெரும் குழப்பமாக இருந்தது... ஏனைய ஊழியர்களை நின்று வேலை செய்யுமாறு கேட்க எனக்கு சிரமமாக இருக்கிறது" என சன்முகராஜா தெரிவித்தார். சிரேஷ்ட அரசாங்க அதிகாரியான டாக்டர் துரைராஜா வரதராஜா ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: "இன்றைய ஷெல் வீச்சில் ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது." காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தலையிலும் வயிற்றிலும் காயமேற்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியும் இரு தொண்டு ஊழியர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். தற்காலிக தங்குமிடத்திற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரி அனுமதி வார்ட்டில் இருந்த நோயாளர்கள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர் என பெயர் குறிப்பிடாத ஒரு ஆஸ்பத்திரி ஊழியர் தெரிவித்தார். "இப்போதும் இந்த பிரதேசத்தில் கடுமையான ஷெல் தாக்குதல்களும் கடும் மோதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து நோயாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிட்டதால் இன்றைய நிலைமை மிகவும் மோசமானது," என அவர் தெரிவித்தார். ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, கடந்த வாரம் பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்த பட்சம் 430 பேர் கொல்லப்பட்டு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஒரு "இரத்தக் களரி" என ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் விவரித்திருந்தார். நேற்று இழைக்கப்பட்ட புதிய யுத்தக் குற்றமானது சிவிலியன்களின் உயிரை அலட்சியம் செய்து தமது தாக்குதலை தொடர்வதற்கு இலங்கை அரசாங்கமும் இராணுவமும் முயற்சிப்பதையே தெளிவாக்குகின்றது. இராணுவத்தின் கொடுமைகள் பற்றிய புதிய ஆதாரங்களை முழுமையாக நிராகரித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, "நாங்கள் கனரக ஆட்டிலறிகளையோ கனரக ஆயுதங்களையோ பயன்படுத்துவதில்லை," என்றார். இது போலவே கொழும்பு அரசாங்கமும் கடந்த வாரக் கடைசியில் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளை புலிகளின் பிரச்சாரம் என நிராகரித்ததோடு பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதாக புலிகள் மீது குற்றஞ்சாட்டியது. தமது பிராந்தியதில் இருந்து சிவிலியன்கள் வெளியேறுவதை புலிகள் தடுப்பது சம்பந்தமான ஆதாரங்களை சில மனித உரிமைகள் அமைப்புக்கள் வழங்கும் அதே வேளை, இராணுவத்தால் இழைக்கப்பட்டுவரும் அட்டூழியங்களுக்கு இலங்கை அரசாங்கமே முழு பொறுப்பாகும். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என இராணுவம் விடுக்கும் அறிக்கைகள், அதன் முந்தைய பொய்களைப் போலவே நம்பகத்தன்மையற்றது. நேற்றைய ஷெல் தாக்குதல்கள் மருத்துவமனையை தாக்கியது முதல் தடவையல்ல. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையொன்று, "யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரமாக" கடந்த டிசம்பரில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட 30 தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது. "கூட்டம் நிறைந்த வசதிகளற்ற மருத்துவமனைகளில் உயிர்களை காக்க வைத்தியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே வேளை, இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் அடுத்தடுத்து மருத்துவமனைகளை சேதமாக்குகின்றன," என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிரட் அடம்ஸ் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் முன்னேறுகின்ற நிலையில், "மருத்துவமனை ஊழியர்கள் மேலும் மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிரந்தர மருத்துவமனைகளை விட்டு இடைத்தங்கல் மருத்துவமனைகளை அமைக்கத் தள்ளப்படுகிறார்கள். ஒரு புதிய பிரதேசத்தில் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த இடம் இராணுவத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, வைத்தியர்கள் அந்த இடம்பற்றி பூகோள இருப்பிட அறிவித்தல் முறையைப் பயன்படுத்தி இலங்கை அராசங்கத்திற்கு அறிவித்துள்ளதாக பல சுயாதீன தகவல்கள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கு அறிவித்துள்ளன. இந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு மறுநாளே பல தடவைகள் அத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்," என கண்காணிப்பகம் விளக்கியுள்ளது. ஏப்பிரல் 2 அன்று பாதுகாப்பு வலயத்தில் வலயன்மடம் மருத்துவமனை மீது தாக்குல் நடத்தப்பட்டது பற்றி ஒரு தொண்டு ஊழியர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்குத் தெரிவித்தார்: "நான் மருத்துவமனையில் இருந்தேன். சரியாக பி.ப. 12.30 க்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் உளவு விமானமொன்று மருத்துவமனைக்கு மேல் வேவுப்பணியில் ஈடுபடுவதை பார்த்தேன். நிச்சயமாக தாக்குதல் நடக்கும் என மக்கள் சந்தேகித்ததால் அவர்கள் தரையில் படுத்தனர். அதன் பின்னர் குறுகிய நேரத்தில், வானத்தில் ஒரு பெரிய வெடிச் சத்தத்தை அடுத்து, தரையில் பல சிறிய வெடிச் சத்தங்கள் எங்களுக்குக் கேட்டன... எனக்கு அருகில் படுத்திருந்த ஒரு வைத்தியரின் தலையை ஒரு வெடிகுண்டுத் துணுக்குத் தாக்கியதால் அவர் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலில் நான்கு அல்லது ஐந்துபேர் கொல்லப்பட்டதோடு 30 பேர் காயமடைந்தனர்." மருத்துவமனைகள் மற்றும் ஏனைய சிவிலியன் இலக்குகள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. மாறாக, அது புலிகளின் பிராந்தியத்தில் எஞ்சியுள்ள பொதுஜனங்களை அச்சுறுத்தும் மூலோபாயத்தின் ஒரு பாகமாகும். அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்களை விரட்டியடித்துவிட்டால் அந்தப் பிரதேசத்தின் மீது சுதந்திரமாக தாக்குதல் தொடுக்கலாம் என்பதே அதன் இலக்காகும். "பொதுமக்கள் இல்லையெனில், புலிகளை தோற்கடிக்க சுமார் 72 மணித்தியாலங்களே ஆகும்" என பிரிகேடியர் உதய நாணயக்கார ஒழிவுமறைவின்றி ஊடகங்களுக்கு தெரிவித்தார். பெப்பிரவரி நடுப்பகுதியில் இருந்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 14,000 பேரையும் அவர்களுக்கு துணையிருப்பவர்களையும் யுத்தப் பிராந்தியத்தில் இருந்து கடல் வழியாக அப்புறப்படுத்திய போதிலும், அவ்வாறு செய்வதற்கு அதற்குள்ள திறன் மேலும் மேலும் இடரார்ந்ததாகி வருகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் தனியுரிமை பெற்ற கப்பல் முழு நாளும் கடற்கரைக்கு அப்பால் நிற்கத் தள்ளப்பட்டதோடு, இடைவிடாத மோதல்கள் தரையிறங்குவதை ஆபத்தானதாக்கியதை அடுத்து, நேற்று கொழும்பில் இருக்கும் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான போல் காஸ்டெல்லா, பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய வசதியேற்படுத்துமாறு மேலுமொரு அவசர வேண்டுகோளை விடுத்தார். சுகவீனமுற்றவர்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்துவதற்கு மட்டுமன்றி, மிகவும் இன்றியமையாத உணவு மற்றும் மருந்து விநியோகத்துக்குமான ஒரே வழி இந்தக் கப்பலே ஆகும். அது கடைசியாக மே 9 அன்று கரையை அடைந்த போதிலும், உக்கிரமான மோதல்கள் காரணமாக அதனால் மே 8 அன்று கரையை அடைய முடியாமல் போனது. "மோதல் பிரதேசத்தில் எஞ்சியுள்ள மக்களின் தலைவிதி அவநம்பிக்கையானது. உயிர்களை காப்பதற்காக எங்களுக்கு தடையற்ற நுழைவு வசதி வேண்டும்," என காஸ்டெல்லா தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தை சென்றடைந்த உணவு போதுமானதல்ல என இந்த வாரம் உலக உணவுத் திட்டத்தின் பேச்சாளர் எமிலியா கசெல்லா கவலை தெரிவித்தார். "மோதல் பிரதேசத்தில் சிக்கியுள்ளவர்களின் மனிதாபிமான நிலைமை தெளிவாகவே அவநம்பிக்கையானது, மற்றும், இடம்பெயரும் அகதிகள் பல நாட்களாக தக்க உணவு உட்கொள்ளவில்லை என செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன. வந்துசேர்ந்துள்ள அகதிகளில், ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களையும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் முதியவர்களும் இருப்பதையும், அவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பயணித்ததாலும், அவர்களுக்கு மோதல் வலையத்தில் போதுமான உணவு கிடைக்காததாலும் குறிப்பிடத்தக்களவு போசாக்கின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுவதையுமே நாம் காண்கின்றோம்," என அவர் தெரிவித்தார். யுத்த நிறுத்தத்துக்காக விடுத்த சகல அழைப்புக்களையும் நிராகரித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றிய எந்தவொரு விமர்சனத்துக்கும் வெளிப்படையான அலட்சியத்துடன் பிரதிபலிக்கின்றார். கடந்த வாரக் கடைசியில் நடந்த ஷெல் வீச்சு ஒரு "இரத்தக் களரி" என விவரித்த ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ்சை வெளியுறவுச் செயாலாளர் பாலித கோஹன திட்டியதோடு, "முறையான அரசாங்கங்கள் பற்றி திகைப்பூட்டும் அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதல்ல ஐ.நா. வின் கடமை, மற்றும் இதன் போது, இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படும் சேதத்தை பற்றி அக்கறை செலுத்தாமல் திரு. கோர்டன் தனக்கு கிடைத்ததை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்," என பிரகடனம் செய்தார். எவ்வாறெனினும், இராஜபக்ஷ அரசாங்கம், ஐ.நா. ஊடாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை அறிந்து பாதுகாப்பாக இருக்கின்றது. திங்கள் கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிலைமைகள் தொடர்பாக எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெறுவதை தடுத்ததன் மூலம், சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் வியட்னாமும் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் யுத்தக் குற்றங்களுக்கும் இரகசியமாக ஆதரவளித்தன. மனிதாபிமான நெருக்கடிகள் பற்றி அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் பாசாங்குத்தனமாக கவலை வெளியிட்ட போதிலும், இந்த சகல சக்திகளும் 2006 நடுப்பகுதியில் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ள இராஜபக்ஷ எடுத்த முடிவை இரகசியமாக ஆதரித்தன. அவர்கள் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பது சிக்கிக்கொணடுள்ள சிவிலியன்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக, அவர்களது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களில் யுத்தத்தின் பாதிப்பை சமாளிப்பதற்கேயாகும். இலங்கை அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கும் அது இழைக்கும் யுத்தக் குற்றங்களுக்கும் இந்த சகல சக்திகளும் தமது அரசியல் பொறுப்பை பங்கிட்டுக்கொள்கின்றன. |