World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைWar crime in Sri Lanka: Civilians slaughtered by army shelling இலங்கையில் யுத்தக் குற்றங்கள்: இராணுவ ஷெல் வீச்சில் பொதுமக்கள் படுகொலை By Bill Van Auken இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான யுத்தக் குற்றம் என சொல்லக்கூடிய, இராணுவத்தின் இரக்கமற்ற குண்டுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர். இந்த வாரக் கடைசியில், பாதுகாப்பு வலயம் என சொல்லப்படும், நாட்டின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள ஒரு சிறிய நிலத்துண்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் கடைசியாக எஞ்சியுள்ள பிரதேசத்துக்குள் உள்ள முள்ளிவாய்க்கால் இடைத்தங்கல் ஆஸ்பத்திரியில் சேவையாற்றும் அரசாங்க வைத்தியரின்படி, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணியளவில் இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 ஆக இருக்கும் அதே வேளை, மருத்துவ சிகிச்சையை எதிர்பார்த்து 1,122 காயமடைந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியும் இந்த எண்ணிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். "முரண்பாடுகளுக்கு அப்பால், நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த மிகச் சிறிய பிரதேசத்துக்குள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி ஐ.நா. கவலையடைந்துள்ளது," என ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 400 க்கு நெருக்கமாக இருந்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். புலிகளுக்கு சார்பான இணையமான தமிழ்நெட்.கொம், மனிதாபிமான ஊழியர்கள் ஞாயிரன்று 1,200 சடலங்களை எண்ணியதாகவும், கொத்துக் குண்டுகள், பல்குழல் ஏவுகனைகள் மற்றும் கனரக ஆட்டிலறிகளையும் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தால் சுமார் 2,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. பாய்கள் மற்றும் வெறும் தரை மீது சிதைவடைந்த சடலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இந்த இணையம் வெளியிட்டுள்ளது. பல சடலங்கள் தாக்குதலின் பின்னர் அவர்களது குடும்பங்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக, ஞாயிற்றுக் கிழமை இந்தப் பிரதேசத்தின் மீது இலங்கை விமானப்படை ஜெட்கள் இருமுறை தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெட்.கொம் தெரிவித்துள்ளது. அசோசியேடட் பிரஸ்சுக்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க வைத்திய நிபுணர் டாக்டர் வி. சன்முகராஜா, இலங்கை இராணுவத்தின் குண்டுத் தாக்குதல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் படுகொலைகள், இதுவரை தான் கண்டவற்றில் மிக மோசமானது என்றும் அவரது ஆஸ்பத்திரி நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார். "நாங்கள் எங்களால் முடிந்தவரை முதலுதவிகளையும் சில சத்திர சிகிச்சைகளையும் விரைவாக செய்கின்றோம். எங்களால் சாத்தியமானதை நாங்கள் செய்கின்றோம். நிலைமை மட்டுமீறிப் போய்விட்டது; எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை," என அந்த வைத்தியர் சொன்னார். தமது சொந்த வீடுகளே ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளானதால் ஆஸ்பத்திரியின் பல ஊழியர்களால் வேலைக்கு வர முடியவில்லை. காயமடைந்த சிவிலியன்களை அப்புறப்படுத்தும் செஞ்சிலுவைச் சங்க கப்பல் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில், சனிக்கிழமை இரவு இந்த பிரதேசத்தின் மீது முதலாவதாக ஆட்டிலறி குண்டுகள் விழத் தொடங்கின. இரவு பூராவும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு, ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக ஓடிச் சென்று தற்காலிக பங்கர்களுக்குள் ஒழிந்துகொள்ளத் தள்ளப்பட்டனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், இராணுவம் தமிழர்களை படுகொலை செய்வதை "மனிதாபிமான நடவடிக்கை" என்றும் "பணையக் கைதிகளை விடுவிக்கும் உலகின் மாபெரும் நடவடிக்கை" என்றும் அழைக்கின்றது. சுயாதீனமான கணக்கெடுப்புகள் மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களுக்கு எதிராக, புலிகளே அரசாங்கத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சர்வதேச அனுதாபத்தை வெல்லவும் தமிழ் பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களைத் திருப்பியுள்ளனர் என அரசாங்கம், கூறிக்கொள்கின்றது. "புலிகள் செய்வது இதுதான்; அவர்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு குற்றத்தை இராணுவத்தின் மீது போடுகின்றனர்," என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். எவ்வாறெனினும், சனிக்கிழமை இராணுவம் தாக்குதலொன்றை முன்னெடுத்ததாக பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. "ஏயார் மொபைல் படையணியைச் சேர்ந்த துருப்புக்கள் 'பாதுகாப்பு வலயத்துக்குள்' மேலும் முன்னேறி, நேற்று கறியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றியது," என ஞாயிற்றுக்கிழமை அரசாங்க இணையம் செய்தி வெளியிட்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருசில கிலோமீட்டர்களைக் கொண்ட ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் 10,000 முதல் 20,000 வரையான பொதுமக்கள் மட்டுமே உளளனர் என அரசாங்கம் கூறிக்கொள்ளும் அதே வேளை, தொண்டு நிறுவன ஊழியர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்த எண்ணிக்கையை 120,000 ஆகக் கூறுகின்றனர். ஐ.நா. அதிகாரிகள் 50,000 க்கும் அதிகம் என மதிப்பிட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மரணத் தாக்குதல்களுக்கும் மேலதிகமாக, அவர்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்து பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் கூடாரங்களிலேயே வசிக்கின்றனர். புலிகளை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இன்னமும் எஞ்சியுள்ள சிறு நிலத்துண்டையும் கைப்பற்றும் தனது முயற்சியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கின்றது. அந்தப் பிரதேசத்தின் மீது இராணுவம் ஆட்டிலறித் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையும் வாஷிங்டனும் குற்றஞ்சாட்டுவதன் மூலம், அரசாங்கத்தின் கூற்றுகள் பொய் என்பது மீண்டும் மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. மனித உரிமை குழுவான மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை இராணுவம் ஆஸ்பத்திரிகள் மீது தொடர்ந்தும் ஷெல் தாக்குதல் நடத்துவதாக ஆவணப்படுத்தி சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "2008 டிம்பரில் இருந்து மோதல் பிரதேசத்தில் உள்ள நிரந்தர மற்றும் இடைத்தங்கல் ஆஸ்பத்திரிகள் மீது 30 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக" அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. "அதிக சாவுகளை ஏற்படுத்திய தாக்குதல் ஒன்று மே 2 அன்று நடத்தப்பட்டது. அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட 'பாதுகாப்பு வலயத்தில்' உள்ள முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரி மீது ஆட்டிலறிக் குண்டுகள் வீழ்ந்ததில் 68 பேர் கொல்லப்பட்டதோடு 87 பேர காயமடைந்தனர்," என அது மேலும் தெரிவிக்கின்றது. இந்த மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்களின் திட்டமிடப்பட்ட தன்மையை சுட்டிக் காட்டும் அந்த அறிக்கை, தாக்குதலுக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்காக, புதிய கள ஆஸ்பத்திரிகளை ஸ்தாபிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் அந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியர்கள் இலங்கை இராணுவத்துடன் பூகோள இருப்பிட அறிவித்தல் அமைப்புமுறையின் (ஜீ.பி.எஸ்.) இணைப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றது. ஆயினும், "இந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு மறுநாளே பல தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்." மருத்துவ நிலையங்கள் என்பதை காட்டும் பிரமாண்டமான செஞ்சிலுவை அடையாளம் தெளிவாக இடப்பட்டிருந்த போதிலும், ஆஸ்பத்திரிகள் இலக்கு வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிகள் ஜெனீவா தீர்மானங்களின் கீழ் திட்டவட்டமாகப் பாதுகாக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. "ஆஸ்பத்திரிகள் என்று தெரிந்தும் அவற்றின் மீது இலங்கை மீண்டும் மீண்டும் ஆட்டிலறித் தாக்குதல் தொடுத்தமை யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரமாகும்," என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார். அதே சமயம், தனது குற்றங்களை மறைக்கும் முயற்சியில், இராஜபக்ஷ அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்திக் குழுவொன்றை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த உடனடியான நாடுகடத்தும் நடவடிக்கை, மே 5 அன்று ஐ.டி.வி. யின் செனல் 4ல் ஒளிபரப்பப்பட்ட செய்தித் தொகுப்புக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாகும். அந்தச் செய்தித் தொகுப்பு, வடக்கு நகரமான வவுனியாவில் முற் கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களின் துண்பகரமான நிலைமையை அம்பலப்படுத்தியிருந்தது. "பலநாட்கள் கைவிடப்பட்ட சடலங்கள்; உணவுக்காக முண்டியடித்து சிறுவர்கள் நசுங்குப்படும் சம்பவங்கள்; பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள்; காணாமல் போகும் சம்பவங்கள் போன்றவை முகாம்களில் இடம்பெறுவதாக" செனல் 4ன் செய்தியாளர் நிக் படொன் வொல்ஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலைமைகளை கண்டனம் செய்யும் தொண்டு நிறுவன ஊழியர்களின் பேட்டிகளையும் இந்த தொலைக்காட்சி செய்தித் தொகுப்பில் அடங்கியிருந்தது. இலங்கை அரசாங்கம், இந்தச் செய்தியறிக்கையின் "தெளிவான குறிக்கோள் பாதுகாப்புப் படையினரை அவமானப்படுத்துவதும் மற்றும் எவ்வழியிலாவது முன்செல்வதை தடுப்பதுமாகும்" என கூறிக்கொண்டது. அமெரிக்க அரசாங்கம், சிவிலியன்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த அதே சமயம், புலிகள் தமிழ் மக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதாக கண்டனம் செய்தது. கடந்த மாதம் அமெரிக்க இராஜாங்கச் திணைக்களம், "சமாதானத்தை நிலைநிறுத்தி சமரசத்தை எட்டக் கூடிய அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை" பரிந்துரைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, வாஷிங்டன் வெளியிடும் கவலையும் முற்றிலும் பாசாங்கானதாகும். இரு தரப்பினரும் புலிகளை "பயங்கரவாத அமைப்பாக" வகைப்படுத்தியுள்ளதோடு "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பெயரில் நேரடியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்க கொழும்புக்கு ஊக்குவிப்பையும் நேரடியான உதவிகளையும் வழங்கிவருகிறது. 2006 தொடக்கத்தில் யுத்தத்தை புதுப்பித்த இராஜபக்ஷ அரசாங்கம், எத்தனை மனித விலை கொடுத்தேனும் புலிகளை துடைத்துக் கட்டி, நிபந்தனையற்ற சரணடைவுக்கு நெருக்கும் வரை தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது. இந்த யுத்தத்தின் பின்னால் உள்ள உண்மையான அரசியல் நோக்கம், தமிழ் சிறுபான்மையினரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இலங்கை தொழிலாள வர்க்கத்தையும் நசுக்குவதன் ஊடாக தனது அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ள உறுதிபூண்டுள்ள சிங்கள ஆளும் கும்பலின் நோக்கமேயாகும். பல தசாப்த காலங்களாலான தமிழர் விரோத பாரபட்சங்களின் விளைவாகவே 26 ஆண்டுகளுக்கு முன் இந்த இனவாத மோதல் வெடித்தது, குறிப்பாக 1983ல் நடந்த தமிழர் விரோத படுகொலைகளால் வெடித்தது. ஒரு சுயாதீனமான முதலாளித்துவ அரசை உருவாக்குவதற்காக ஆயுதப் போராட்டத்தையும் மற்றும் எதாவதொரு ஏகாதிபத்திய சக்தியின் ஆதரவை வெற்றிகொள்வதையும் அடிப்படையாகக் கொண்ட புலிகளின் தேசிய பிரிவினைவாத வேலைத் திட்டம், இந்த மோதல்களை ஆழப்படுத்த சேவை செய்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கிடையில் ஒரு அரசியல் தீர்வுக்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொடுக்கும் அழுத்தத்தின் பின்னால் இருப்பது, முழு வெற்றியடையும் வரை யுத்தம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை, இலங்கையில் மட்டுமன்றி, பிரமாண்டமான தமிழ் ஜனத்தொகையைக் கொண்ட இந்தியாவிலும் தமது சொந்த பூகோள மூலோபாய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்திவிடும் என்ற பீதியே ஆகும். ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பல இடங்களிலும் தமது சொந்த யுத்தத்தை முன்னெடுத்துவரும் இந்தப் பெரும் வல்லரசுகள், இராஜபக்ஷ அரசாங்கத்தால் இழைக்கப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விளைவுகளால் அபூர்வமாக தூண்டப்பட்டுள்ளார்கள். |