WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Media sensationalism, corporate power and
the swine flu outbreak
செய்தி ஊடக பரபரப்பு, பெருநிறுவன ஆதிக்கம் மற்றும் பன்றிக்
காய்ச்சல் தொற்று நோய் பரவல்
By Alex Lantier
4 May 2009
Back to screen version
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மருத்துவ அறிவியலை பெருநிறுவன நலன்கள் மற்றும்
அவற்றிற்கு கட்டுப்பட்டுள்ள அரசாங்கங்களின் அரசியல் செயல்திட்டங்களில் இருந்து பிரிப்பதில் உள்ள கஷ்டங்களை, பன்றிக்
காய்ச்சல் தொற்றுதலை கையாள்வது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த விஷயம் பரபரப்பிற்கு உட்படுத்தப்பட்டு, புதிராக்கப்பட்டுவிட்டதுடன்,
இந்த பன்றிக் காய்ச்சலினால் உருவான சுகாதாரப் பாதுகாப்பின் மீதான அச்சுறுத்தலை பகுத்தறிவார்ந்தமுறையில் எதிர்கொள்வதற்கும்
இடையூறாக உள்ளது.
செய்தி ஊடகமும் பொது அதிகாரிகளும், குறிப்பாக அமெரிக்காவில், இப்பொழுது மக்களை
இடைவிடா, பரபரப்பான பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் பற்றிய தகவல்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக
மூழ்கடித்துள்ளன. ஆனால் பல மணிநேர தொலைக்காட்சி செய்திகள் மற்றும் செய்தி ஊடகத்தின் ஒருதொகை அறிக்கைகளின்
மத்தியிலும், விஷக்கிருமியின் தன்மை பற்றியோ, உலகளாவிய தொற்று நோயாக மாறக்கூடிய இத்தகைய நோய் வெளிப்பாடு
இந்த அளவிற்கு பெரும் மனித இறப்புக்களை கொடுக்கக் கூடிய திறன் பெற்றிருப்பதற்கான மோசமான சமூகக் கட்டமைப்பு,
வறுமையான நிலைகள் ஆகியவற்றின் தாக்கம் பற்றியோ அதிகம் கூறப்படவில்லை.
ஏப்ரல் 30ம் தேதி உலக சுகாதார அமைப்பு (WHO)
விரைவில் பன்றிக் காய்ச்சலை ஒரு முழுத்தொற்றுநோயாக, அதன் ஆறு தர அளவுகோலில், ஆறாம் தரத்தில் உள்ளது என
குறிக்கப் போவதாக செய்தி ஊடகங்கள் தகவல் கொடுத்தன. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர்
மார்கரெட் சான் "இத்தகைய தொற்று நோய் மனித குலம் பரந்த முறையில் பெறக்கூடிய ஓர் அச்சுறுத்தல் ஆகும்."
என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு "புதிய விஷக்கிருமி முக்கியமான குறைந்த
அறிகுறிகளைத்தான் கொண்டிருக்கிறது என்றாலும்" அதனை "படர்ந்து, பரந்திருக்கும் தன்மை உடையது" என வரையறுக்கும்
என்று கூறியுள்ளது.
ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவல் அனைத்து மனித குலத்தையும் அச்சுறுத்தலுக்கு
தவிர்க்க முடியாமல் உட்படுத்திவிடும் என்ற விதத்தில் அடையாளங்களை காட்டவில்லை. உலக சுகாதார அமைப்பு நேற்று
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதில் பன்றிக் காய்ச்சல் மூலம் 787 உறுதிபடுத்தப்பட்ட மனித இறப்புக்கள்
நிகழ்ந்துள்ளதாகவும் அவற்றுள் முதல் அது தோன்றிய மெக்சிக்கோவில் 506 எனவும் தெரியவருகிறது.
மெக்சிக்கோ அரசாங்கம் பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு
எண்ணிக்கையை 176ல் இருந்து 100 என்று குறைத்துள்ளது; இவற்றுள் 19 "உறுதிபடுத்தப்பட்டவை". மெக்ஸிகோவிற்கு
வெளியே பன்றிக் காய்ச்சல் இதுகாறும் வந்திருப்பது ஒரு மெக்சிகோ குழந்தைக்கு ஆகும். இது மெக்சிக்கோவில் இருந்து
அமெரிக்காவிற்கு வந்த பின்னர் இறந்தது.
அச்சொல்லின் விஞ்ஞானபூர்வமான விளங்கம் பற்றி தீவிரமாக விளக்காமல்
பரந்துவிரிவடையக்கூடிய தொற்று நோய் பற்றிய குறிப்புக்களை கூறுவது, மக்களிடையே அச்சம் என்ற சூழ்நிலையை
உருவாக்கிவிட்டன. 9/11 க்குப் பின்னரே அமெரிக்க செய்தி ஊடகமும் அரசாங்கமும் குறிப்பாக, அச்சத்தை
பரப்புவதையும் அச்சத்தை தூண்டுவதையும் ஒரு வாடிக்கையான உத்தியாகவும், மக்களிடையே அரசியல் ரீதியாக
குழப்பத்தை ஏற்படுத்தி பின்னர் அத்தகைய உணர்வுகளை பயன்படுத்தி ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்,
இராணுவவாதம் நிறைந்த வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்ததல் ஆகியவற்றை செய்கின்றன.
14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை
அழித்த கறுப்புக் கொள்ளை நோய் (Black Death
Plague), அல்லது 1918 ல் உலகம் முழுவதும் 30 முதல் 50
மில்லியன் மக்களைக் கொன்ற பரவியிருந்த விஷக் காய்ச்சலுடன் (Flu
Epidemic) ஒப்பிட்டு பரந்த தன்மையின் முக்கியத்துவத்தை செய்தி
ஊடக அறிக்கைகள் விளக்குகின்றன. உண்மையில் பன்றிக் காய்ச்சல் இதுவரை சாதாரண பருவ கால விஷக் காய்ச்சல்
கொடுக்கும் இறப்புக்களைவிடக் குறைவான இறப்புக்களைத்தான் கொடுத்துள்ளது.
ஒரு பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் அதிகமாக பரவக்கூடும் என கருத்தை உதறித்
தள்ளுவதற்கில்லை. ஆனால் அது பரவுதல் இப்பொழுது குறைந்து கொண்டிருக்கிறது. புதிதாக தொற்றியுள்ளவர்கள் குறைந்த
நோய் அடையாளங்களைத்தான் கொண்டிருக்கின்றனர். பன்றிகளிடத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவுதல், மனிதர்களுக்கு
இடையே பரவுதல் என்பன விஞ்ஞானிகளிடேயே ஒரு மேலதிக மாற்றத்தினூடாக (Mutation)
ஒரு பெரிய பரந்த தொற்றுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய மரபியல் கட்டமைப்பை கொண்டிருக்கலாம் என்ற கவலையைக்
கொடுத்துள்ளது. கூடுதலான மக்கள் மூலம் பரவினால் இது புது வகை மாறுதல்களை உள்ளடக்கும். இதையொட்டி விஷக்
காய்ச்சல் மனிதர்களுக்கு ஆபத்தைக் கொடுக்கும்.
உயிரியல் வல்லுனர்கள் 1918 தொற்றுநோய் அதிக ஆபத்தில்லாத முதல் அலையைத்தான்
கொண்டிருந்தது, அது வாடிக்கையான விஷக் காய்சச்சல் பருவத்துவக்கத்தில், இலையுதிர்காலத்தில் மிக கடுமையான,
உயிரிழப்பை கொடுக்கக்கூடிய விதத்தில் தீமை நிறைந்ததாயிற்று எனச் சுட்டிக்காட்டுகின்றனர்
எவ்வாறாயினும், தக்க வரலாற்றுப் பின்னணியைக் கூறாமல் 1918 தொற்றுநோயை பற்றிய
செய்தி ஊடகங்களின் கண்டுபிடிப்புகள் குழப்பத்தைத்தான் தருகிறது. காய்ச்சல் பரவலுக்கு எதிராக தற்காலத்தில் இருக்கும்
முக்கிய கருவிகளான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், மரபணு (DNA)
பகுப்பாய்வுகள், இணையதள கண்காணிப்பு முறைகள் ஆகியவை 1918ல் இருந்ததில்லை. மேலும் தற்காலத்தில் இருக்கும் பல
சுகாதார வசதிகள் அப்பொழுது இல்லை. செல்வம் படைந்த நாடுகளில்கூட சாதாரண மக்களுக்கு அப்பொழுது அவை
இருந்ததில்லை. பின்னர் வந்த தொற்று நோய்கள் 1957ல் 2 மில்லியன், 1968ல் உலகெங்கிலும் 1 முதல் 3 மில்லியன்
என குறைந்த அளவு இறப்புக்களைத்தான் கொண்டுவந்தன. ஆனால் சராசரியான ஒரு விஷக் காய்ச்சல் பருவத்தில்
250,000 முதல் 500,000 வரையிலான இறப்பு எண்ணிக்கை உள்ளது.
சாதாரண விஷக்காய்ச்சல் (Influenza)
குறித்த நேரத்தில் மருத்துவ வசதிகள், ஆட்கள் போன்றவற்றை பயன்படுத்தி தொடக்க வெடிப்பிற்கு பின்னர் அது ஒரு
உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு, தனிமைப்படுத்திவிட முடியும்
இதற்கு மிகப் பெரிய தடைகள் தொழில்நுட்பம் சார்ந்தவை அல்ல. மாறாக உலக
முதலாளித்துவத்தின் சமூக முரண்பாடுகள் ஆகும்: உலகின் அதிக பகுதிகளில் இருக்கும் வறுமை, சுகாதார வசதிகளின்மை,
பெரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளடங்கலான பெருநிறுவனங்களின் அரசியல் செல்வாக்கு, உலகை போட்டி
தேசிய அரசுகளாக பிரித்திருப்பது மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன செயற்கொள்கைகள்
ஆகியவை இவற்றில் அடங்கும்.
தொழிலாள வர்க்கத்தின் அன்றாட உடல் நிலையே ஒரு பெரிய பிரச்சினை ஆகும். பல
மில்லியன் தொழிலாளிகளுக்கு சுகாதாரமான உணவு, பாதுகாப்பான உறைவிடம், போதுமான உறக்கம் ஆகியவை
கிடையாது. இவை அனைத்தும் உடலிலுள்ள சுகாதாரமான நோய்த்தடுப்பு கட்டமைப்பை நிலைநிறுத்தத் தேவையாகும்.
ஆனால் இப்பிரச்சினைகள் அநேகமாக செய்தி ஊடக வர்ணனையாளர்களாலும் அரசாங்க அறிக்கைகளாலும் எடுத்துக்
கூறப்படுவதில்லை.
தற்போதைய தொற்றுக் காய்ச்சல் மார்ச் கடைசியில் ஒரு சிறிய மெக்சிகோ நகரமான
La Gloria
வில் தொடங்கியது. அங்கு ஒரு அமெரிக்க நிறுவனமான
Smithfield Foods
என்பது மிக அதிக உரிமையை ஒரு தொழில்துறை பன்றிப் பண்ணையான
Granjas Carroll
மீது கொண்டுள்ளது. தொற்றுக் காய்ச்சல் தொடங்கிய பின்பும்கூட, பண்ணையின் பன்றிக் கழிவுகள், நச்சு இராசயனப்
பொருட்கள் நிறைந்த திறந்த ஏரிகள் தங்கள் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கின்றன என்று கூறிய அப்பகுதி மக்களை
மெக்சிக்கோ அதிகாரிகள் அச்சுறுத்தி கைது செய்தனர்.
நோய்வாய்ப்பட்ட பலரும் மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற வசதி இல்லாதவர்கள்.
அப்பகுதியில் இவ்வசதி குறைவு என்பதை மெக்சிக்கோ அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனாலும், மருத்துவ மனைக்கு
நோயாளிகள் வந்தபோதே கடுமையான சுவாசப்பை தொற்றுநோய்க்கு உட்பட்டிருந்ததால் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள்
பயனற்றுப் போயின.
நேற்றைய NBC
யின் Meet the Press
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சுகாதார, மனித பணிகள் மந்திரி கத்லீன் சீபலுஸ், உள்நாட்டுப் பாதுகாப்பு மந்திரி
ஜேனட் நேபோலிடனோ மற்றும் அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் இடைக்கால இயக்குனர் டாக்டர்
ரிச்சர்ட் பெசர் ஆகியோர் அமெரிக்காவை விட மெக்சிகோவில் இறப்பு விகிதம் ஏன் அதிகம் என்று வினவப்பட்டனர்.
அதிகாரிகள் எவரும் வறுமை அல்லது சுகாதாரப் பாதுகாப்பு பெறுவதற்கு வாய்ப்பு இல்லாதுதான் மெக்சிகோவில் பன்றிக்
காய்ச்சல் இறப்பிற்கு காரணிகள் என்று கூறவில்லை.
பெறுநிறுவன சக்தியின் அழிவுகரமான பங்கின் மற்றொரு அடையாளமாக, பன்றி இறைச்சி
தொழில்துறையினரின் உலக சுகாதார சபையிடமும், அமெரிக்க அரசாங்கத்திடமும் செல்வாக்கை செலுத்தி இந்நோயை
"பன்றிக் காய்ச்சல்" என்று குறிப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். இந்த அதிகாரிகள் அதை எதிர்கொண்டுள்ளவிதம் (கிட்டத்தட்ட
ஆணை போல் அது இருந்தது) எவ்வாறு அனைத்து சமூக விடயங்களும் தனியார் இலாபத்திற்கான பெருநிறுவனக்
கோரிக்கையை அடுத்து அடிபணியச் செய்யப்படுகின்றது என்பதை காட்டுகின்றது.
அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை எதிர்கொண்டுள்ள விதம் சமூக நிலைமைகளில் ஏற்பட்டுள்ள
வீழ்ச்சி ஒரு தீவிர தொற்றுவியாதி பரவினால் எவ்வாறு அது முக்கிய ஆபத்துக்களை உருவாக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அரசாங்க அதிகாரிகள் அமெரிக்கர்களை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தங்கள் டாக்டர்களிடம் ஆலோசனை
கேட்குமாறு கூறியுள்ளனர். இவர்கள் 47 மில்லியன் மக்களை கொண்ட "உலகின் மிகப் பணக்கார நாட்டில்" மொத்தத்தில்
ஆறில் ஒரு பகுதியினருக்கு எந்தவித சுகாதார பாதுகாப்பும் இல்லை என்பதை மறந்து கூறுகின்றனர்.
இச்சூழ்நிலையில், சில அமெரிக்க நகரங்கள் தங்கள் மருத்துவமனையில் அவசர நோய் பிரிவு
அறைகள் (Emergency Room)
ஏராளமான மக்களைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் பன்றிக் காய்ச்சலில் அவதியுறுகின்றனர் என்றும், அவசர அறையை
அவர்கள் கேட்பதற்குக் காரணம் தனி டாக்டரை அணுகுவதற்கான வாய்ப்புக்கள் அவர்களிடம் இல்லை என்றும் தெரிவிக்கின்றன.
சில உள்ளூர் அதிகாரிகள் பொது மக்களுடைய கவலையை அதிகரித்து, பெரு மந்த
நிலைக்கும் பின் வந்துள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் பாதிப்பில் ஏற்கனவே உழன்று பொருளாதார இடர்பாடுகளைக்
கொண்டிருக்கும் மக்களை தேவையின்றி அதிக அல்லலுக்கு உட்படுத்துகின்றனர்.
Fort Worth பகுதியில்
எல்லாப் பள்ளிகளும் மூடப்பட்டு, 80,000 சிறுவர், சிறுமியர் வீடுகளில் உள்ளனர்; டெக்ஸாஸ் ஆளுனர் ரிக் பெரி பன்றிக்
காய்ச்சல் பற்றி "செய்தி ஊடகம் கணிசமான பரபரப்பை" ஏற்படுத்தியுள்ளது பற்றி குறை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் தொடர்ச்சியான பள்ளி மூடல்களை எதிர்நோக்க வீடுகளில் உரிய
ஏற்பாடுகளை செய்யுமாறு குடும்பங்களுக்கு உபதேசம் செய்கின்றனர். இதுவும் குடும்ப சுகாதார நெருக்கடிகளுக்கு
ஊதியத்துடன் விடுமுறை கொடுக்காத நாட்டில் நடக்கிறது.
அமெரிக்க அரசாங்கம் பன்றிக் காய்ச்சலை எதிர்கொண்டுள்ள விதம் இராணுவ-தேசியப்
பாதுகாப்பு அமைப்புகள் அரசியல் செல்வாக்கை மகத்தான முறையில் பெற்றுள்ளதை பிரதிபலிப்பதுடன், அந்த
செல்வாக்கை இன்னும் கூடுதலாக அதிகப்படுத்தியுள்ளது. காய்ச்சல் வெடிப்பு உட்பட எந்த நெருக்கடியையும் ஒரு
"தேசியப் பாதுகாப்பு" அச்சுறுத்தல் எனக் காணும் விதத்தில் பொதுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. உட்குறிப்பாக
இது ஏதேனும் ஒரு விதத்தில் "பயங்கரவாதத்தின் மீதான போருடன்" தொடர்புபடுத்தப்படும்.
இவ்விதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் சுகாதாரம் பற்றி அனுபவம் இல்லாத ஒரு வக்கீலான
நேபோலிடனோ ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இந்த நெருக்கடி பற்றி
முன்வைக்கப்படுகிறார். புஷ் நிர்வாகத்தின் எங்கும் பரவும் நோய் பற்றிய திட்டங்களை ஒபாமா நிர்வாகமும் அப்படியே
ஏற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் அமெரிக்காவில் ஒரு முழுப்பகுதிகூட தடுப்பு நிலையங்களில் வைப்பது
கூட இராணுவத்தின்மூலம் செயல்படுத்தப்பட முடியும்.
அமெரிக்க அரசியல் வாதிகள் மற்றும் செய்தி ஊடகம் பலமுறையும் அமெரிக்க-மெக்சிக்கோ
எல்லையை மூடும் பிற்போக்குத்தன திட்டங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் சுகாதார அதிகாரிகள் பல முறையும்
அத்தகைய நடவடிக்கைகள் வியாதிகள் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாது என்று கூறிவந்துள்ளனர். இத்தகைய
திட்டங்கள் மெக்சிக்-எதிர்ப்பு உணர்வுகளையும், இனவெறியையும்தான் தூண்ட பயன்படும்.
மனிதகுலத்தில் சுகாதார நெருக்கடியை அகற்றும் தொழில்நுட்பத் திறனுக்கும் முதலாளித்துவ
முறையின்கீழ் ஆதிக்கம் கொண்டுள்ள சமூக முன்னுரிமைகள், வர்க்க நலன்கள் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள பாரிய
முரண்பாட்டைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |