:
இலங்கை
Imperialist hypocrisy over the Sri Lankan war
இலங்கை யுத்தம் தொடர்பான ஏகாதிபத்தியத்தின் பாசாங்கு
By Peter Symonds
30 April 2009
Use this version
to print | Send
feedback
வட இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனித அவலம், இராணுவத்துக்கும் பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள, ஒரு மதிப்பீட்டின்படி 50,000 பொது
மக்களின் துன்பம் தொடர்பாக பெரும் வல்லரசுகள் தம் பங்குக்கு பாசாங்குத்தனமாக கவலை தெரிவிப்பதற்கான
ஒரு சந்தர்ப்பமாகியுள்ளது.
கடந்த வாரம் பூராவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா.
பாதுகாப்புச் சபையும், ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கை தலைவர் ஜோன் ஹொம்ஸ், பிரிட்டிஷ் வெளிவிவகார
செயலாளர் டேவிட் மிலிபன்ட் மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குஷ்னர் போன்ற தமது
தூதுவர்களை கொழும்புக்கு அனுப்பி, கொழும்பு அரசாங்கத்தை யுத்த நிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
மோதல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் யுத்த வலயத்துக்கு ஐ.நா. மனிதாபிமான
குழுவை அனுப்புவதற்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஒரு குட்டி
பிரதேசத்துக்குள் இப்போது முடக்கப்பட்டுள்ள புலிகள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட
வேண்டும் என வலியுறுத்தினார். கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியும்
கூட, அது அறிவிக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள் மீறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான
ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடு யுத்தத்தை நிறுத்தும் என எவரும்
நம்பிக்கைகொள்ளக் கூடாது. அவர்களது போக்கு கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபை
தலைமையகத்தின் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தை அதன் யுத்தக் குற்றங்களுக்காக கண்டனம்
செய்வதற்கு மாறாக, அல்லது மோதலை நிறுத்தத் தவறினால் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு
மாறாக, புலிகள் ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் என அந்தப் பிரகடனம் கோருகின்றது.
இலங்கை சமாதான முன்னெடுப்பின் சர்வதேச இணைத்தலைமை நாடுகள் என
சொல்லப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே போன்ற நாடுகள், 2006ல்
இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்தே எடுத்த நிலைப்பாட்டுடன் இந்த அறிக்கையும்
உடன்படுகின்றது. இராணுவம் மோசமான முறையில் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவது பற்றி அவ்வப்போது கண்டனங்கள்
தெரிவித்த அதே வேளை, இந்த இணைத் தலைமை நாடுகள் அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை மீறி மீண்டும்
மீண்டும் தாக்குதலை நடத்திய போது அமைதியாக இருந்தன. இராணுவப் பயிற்சியையும் உதவியையும் தொடர்ந்தும்
வழங்கிய அமெரிக்கா, அதன் பங்காளிகளான இஸ்ரேலும் பாகிஸ்தானும் ஆயுதங்களை விநியோகிக்கவும் அனுமதித்தது.
வாஷிங்டனின் சொந்த போலித்தனமான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின்"
பாணியில் தமது ஆக்கிரமிப்பையும் இராஜபக்ஷ வடிவமைத்துக்கொண்டுள்ளார். புலிகளை பயங்கரவாதிகள் என
கண்டனம் செய்து, பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்துவதே அவர்கள் உயிரிழப்பதற்கு காரணம்
என புலிகள் மீது குற்றஞ்சாட்டும் அவர், ஏதேச்சதிகாரமான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப்
புறம்பான கொலை நடவடிக்கைகளையும் நாடியுள்ளார். புலிகளை தனது "பயங்கரவாத பட்டியலில்" வைத்துள்ளதன்
மூலம் அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கும் அமெரிக்கா, அதையே பின்பற்றுவதற்கு ஐரோப்பிய
ஒன்றியத்தையும் கனடாவையும் நெருக்கியது.
யதார்த்தத்தில் 26 ஆண்டுகால மோதல்கள் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்"
அல்ல. மாறாக, இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தசாப்த காலங்களாக முன்னெடுத்த தமிழர்
விரோத பாரபட்சங்களால் உருவாக்கப்பட்ட ஒரு இனவாத யுத்தமாகும். தமிழ் சிறுபான்மையினரது செலவில்
மட்டுமன்றி, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் செலவிலும் சிங்கள ஆளும் கும்பலின் அதிகாரத்தையும்
சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்வதே அதன் குறிக்கோளாகும்.
கடந்த செப்டெம்பரில் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா,
இந்த சிங்கள மேலாதிக்கவாத போக்கை சுருக்கிக் கூறினார். "இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என
நான் உறுதியாக நம்புகிறேன்... அவர்களால் [சிறுபான்மையினர்] எங்களுடன் வாழ முடியும். ஆனால்,
சிறுபான்மையினர் என்ற சாக்குப் போக்கின் கீழ் ஒவ்வாத விடயங்களை அவர்கள் கோர முயற்சிக்கக் கூடாது,"
என அவர் பிரகடனம் செய்தார்.
கொழும்பில் நிலவும் நச்சுத்தனமான இனவாத சூழ்நிலையில், யுத்த நிறுத்தத்துக்காக
விடுக்கும் எந்தவொரு அழைப்பும் "புலி பயங்கரவாதிகளுக்கு சேவை செய்வதாகவே" காட்டப்படும். சர்வதேச
ரீதியில் வெளியிடப்பட்ட அக்கறைகளுக்கு இலங்கை ஸ்தாபனம் வெளிப்படையாக மறைத்து வைத்துள்ள அலட்சியத்தின்
மூலம் பதிலளித்தது. உதாரணமாக, கடந்த வாரத்தில் வலதுசாரி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு
ஆசிரியர் தலயைங்கம், தமிழ் பொதுமக்களின் அவலத்தை நிராகரித்தது. "யுத்தம் என்றால் துன்பம் என்ற
இன்னொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்பது யாருக்குத் தெரியாது?" என அது பிரகடனம் செய்திருந்தது.
பெரும் வல்லரசுகளின் "மனிதாபிமான" அக்கறையின் பின்னல், நிச்சயமான
பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் உள்ளன. ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும்
பொதுமக்களை அமெரிக்க குண்டுகள் மற்றும் ரொக்கட்களால் படுகொலை செய்கின்ற நிலையில், அது இலங்கை
இராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதையிட்டு கவலைப்படப் போவதில்லை. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும்
பிரான்சும், சீனா, இந்தியா மற்றும் ஏனைய சிறிய சக்திகளுடன் சேர்ந்து, புலிகளின் தோல்வியில் தோன்றும் புதிய
சூழ்நிலையில் தமது பங்கை எடுத்துக்கொள்வதற்காக இலங்கையைச் சூழ வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
வாஷிங்டன் ஒரு "அரசியல் தீர்வுக்காக" நெருக்கிக்கொண்டிருப்பது புலிகளை
பாதுகாக்க அல்ல. மாறாக, தீவின் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையில் ஒரு உடன்பாடு
ஏற்படுத்தப்படவில்லை எனில், தொடரும் இனவாத பதட்டங்கள் நாற்றமெடுத்து, தற்போது நிலவும் ஸ்திரமின்மையை
தொடரச் செய்யும் என அது பீதி கொண்டுள்ளது. வட இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக
ஏற்கனவே தமிழர்கள் மத்தியில் சீற்றம் விரிவடைந்து வருகின்ற தென்னிந்தியாவினுள்ளும் இலங்கையிலான அமைதியின்மை
ஊடுருவ அச்சுறுத்துகிறது. கடந்த தசாப்தம் பூராவும், வாஷிங்டன் புது டில்லியுடன் நெருக்கமான பொருளாதார
மற்றும் மூலோபாய உறவுகளை ஸ்தாபித்து வருகின்றது.
அமெரிக்கா இலங்கையிலும் தனது நலன்களை அபிவிருத்தி செய்துகொள்ள விரும்புகிறது.
கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த ஒரு வர்த்தக கூட்டத்தில், அமெரிக்க துணை வர்த்தகப் பிரதிநிதியான மைக்கல்
டெலானி, யுத்தம் முடிவடைந்தவுடன் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் பற்றி பேசியதோடு இந்த ஆண்டு கடைப்
பகுதியில் அமெரிக்க தொழிலதிபர்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றும் அறிவித்தார். ஆதாயம் மற்றும்
சேவை கைமாற்று உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்குள் நுழைவதற்கு பெண்டகன் ஏற்கனவே வழி வைத்துள்ள
போதிலும், மேலும் நெருக்கமான உறவுகளை அது எதிர்பார்க்கிறது. அண்மைய ஆண்டுகளாக, உயர் மட்ட
அமெரிக்க இராணுவக் குழுக்கள் இலங்கையில் உள்ள தமது சமதரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியது மட்டுமன்றி,
பிராந்தியத்தில் பிரதான ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக பரந்தளவில் கருதப்படும் கிழக்கில் திருகோணமலை
துறைமுகத்துக்கும் வந்து சென்றனர்.
இலங்கை, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து ஆசியாவுக்கான பிரதான
கப்பல் பாதைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலையில் அமைந்திருப்பதால், அது சர்வதேச பகைமையின்
குவிமையமாகியுள்ளது. இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்து நிதி உதவியும் ஆயுதமும் வழங்குகின்ற
சீனாவின் வளர்ச்சி கண்டுவரும் செல்வாக்கை தடுப்பதில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது. இதற்கு பிரதியுபகாரமாக,
தனது வர்த்தகப் பாதையை காப்பதன் பேரில் சீனாவின் கடற்படை மூலோபாயத்தின் ஒரு பாகமாக, தென்
நகரமான அம்பாந்தொட்டையில் ஒரு பிரதான துறைமுகத்தை கட்டுவிக்க கொழும்பு பீஜிங்கிற்கு பச்சைக் கொடி
காட்டியுள்ளது. இலங்கையை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் ஒரு பகுதியாக கருதும் இந்தியாவும்,
சீனா மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கீழறுக்க முயற்சிக்கின்றது.
இந்த சூழ்ச்சி வேலைகளும் சதி நடவடிக்கைகளும், யுத்தத்தை நிறுத்துமாறு "சர்வதேச
சமூகத்துக்கு" புலிகள் விடுக்கும் வேண்டுகோளின் பயனற்ற நிலையை கோடிட்டுக் காட்டுகிறது. புலிகள் தற்போது
நெருங்கியுள்ள முட்டுச் சந்து, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுயாதீனமான முதலாளித்துவ ஈழம் அரசுக்கு
ஆதரவாக ஏதாவதொரு பெரும் வல்லரசுக்கு அழைப்பு விடுப்பதை அடிப்படையாகக் கொண்ட புலிகளின் அரசியல்
முன்நோக்கின் விளைவேயாகும். இன ரீதியிலான பிளவுக்கு சேவை செய்யும் இந்த பிரிவினைவாத வேலைத் திட்டம்,
தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது, தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அல்ல.
தனது சொந்த சுயாதீனாமன முன்நோக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே,
தொழிலாள வர்க்கத்தால் ஒரு முற்போக்கான அடிப்படையில் யுத்தத்துக்கு முடிவு கட்ட முடியும். சோசலிச
கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில்
தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் முதற் படியாக, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை
துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க தொழிலாளர்கள் போராட வேண்டும் என சோசலிச
சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.
தமிழ் மற்றும் சிங்களம் உட்பட இலங்கை தொழிலாளர்களின் பங்காளிகள்,
பிராந்தியத்திலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களே, ஏகாதிபத்திய சக்திகள் அல்ல. இதன்
காரணமாகவே, தெற்காசிய மற்றும் உலகம் பூராவுமான சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துக்கான
போராட்டத்தின் பாகமாகவே ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டம் இருக்க முடியும் என
சோ.ச.க. வலியுறுத்துகிறது. |