World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe Chrysler bankruptcy கிறைஸ்லர் திவால் Tom Eley and Barry Grey 2 May 2009 வியாழனன்று ஜனாதிபதி ஒபாமா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்காவின் மூன்றாம் பெரிய கார்த் தயாரிப்பு நிறுவனமான கிறைஸ்லர் அத்தியாயம் 11 ன் கீழ் திவால் பதிவு செய்யும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை "வேலைகளைக் காப்பாற்றும்" மற்றும் விரைவான, வேதனையில்லாத வழிகையாக இருக்கும் என்றும் கூறினார். ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே இச்சொற்கள் பொய் என அம்பலமாயின. திவால் நடவடிக்கைக் காலத்தின் அனைத்து கிறைஸ்லர் ஆலைகளும் முடப்படும்; குறைந்தது இவற்றில் ஆறு ஆலைகளாவது மறுபடியும் திறக்கப்படமாட்டாது. இதற்கிடையில், கிறைஸ்லர் திவால் வழக்கு நீதிமன்றத்தில் சிக்கிக் கொண்டுவிடும் என்றும் நிறுவனம் அழிவை எதிர்நோக்கும் என்றும் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். பல கிறைஸ்லர் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் ஆலைகளில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள். வியாழனன்று தெரிவித்த கருத்துக்களில், ஒபாமா ஒரு சில ஹெட்ஜ் நிதி மற்றும் பத்திரங்கள் வைத்திருப்போர், கிறைஸ்லரை அது கொடுக்க வேண்டிய கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்தவர்கள் என்று பலிகடா ஆக்க முற்பட்டார். உண்மையில் இது ஒரு மூடிமறைத்தல் ஆகும். உண்மையில் ஒபாமா நிர்வாகம்தான் கிறைஸ்லரை திவாலுக்கு தள்ளியுள்ளது. ஒபாமா நிர்வாகம் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் (UAW), கிறைஸ்லர் மற்றும் பியட்டுடன் சேர்ந்து கார்த் தொழிலாளர்கள் பெரும் சலுகைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி திவால் அச்சுறுத்தலை எழுப்பியது, இதுவே மறுநாள் கிறைஸ்லரை அத்தியாயம் 11 ஐ தேடிச் செல்ல வைத்துவிட்டது. UAW தொழிலாளர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராமால் பார்த்து இந்தச் சதியில் முக்கிய பங்கை ஆற்றியது.செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிவிப்பில், UAW இன் நிர்வாகிகள் தொழிலாளர்கள் புதிய முழு இழப்புக்களுக்கு "வேண்டும்" என்ற வாக்குகளை அளித்தால் திவால் இருக்காது, வேலைகள் காப்பாற்றப்படும் என்று கூறிய உறுதிமொழி தோல்வியுற்றதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. UAW திவால் நீதிமன்றத்தை பயன்படுத்தி தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுள்ள புதிய சலுகைகளை உத்தியோகபூர்வமாக்கும் என்று அது அறிவித்துள்ளது. "அமெரிக்க அரசாங்கம், கிறைஸ்லர் மற்றும் பியட்டுடன் UAW இணைந்து, அமெரிக்க திவால் நீதிமன்றத்தை UAW உறுப்பினர்கள் ஒப்புக் கொண்ட தொழில்முறை உடன்பாடுகளுக்கு உடனடி ஒப்புதல் கொடுக்க வலியுறுத்தும்." கிறைஸ்லர் திவால் தன்மையில் இருந்து ஒருவேளை மீண்டால், UAW பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கும். இது விரைவில் ஜெனரல் மோட்டார்ஸிலும் 40 சதவிகித உரிமையைப் பெறும்; அதுவும் திவால்தன்மையை எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் UAW பெயரளவில்தான் ஒரு சங்கம் என்பதை நிரூபிக்கின்றன. அது ஒரு வணிகமாகிவிட்டது; அதன் உந்துதல் அதன் வருமானத்தில் அதிக பகுதியை அதற்குள் இன்னும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் குறைந்து வரும் எண்ணிக்கையுடைய உறுப்பினர்கள் கொடுக்கும் கட்டணத்திற்கு அப்பால், அதன் "உறுப்பினர்களை" பெருகிய அளவில் சுரண்டுவதில் இருந்து பெறும். UAW ஒரு பெருநிறுவன வணிக அமைப்பாக மாறியுள்ளது பல தசாப்தங்களாக நடைபெற்றுவரும் வரலாற்று நிகழ்வுப்போக்கின் விளைவு ஆகும். இதன் மாற்றம் அது கொண்டுள்ள அதே போல் உத்தியோகபூர்வ பிற தொழில் சங்க இயக்கம் அடிப்படையாகக் கொண்டுள்ள வலது சாரி முன்னோக்கில் வேரூன்றியுள்ளது.கார்த் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், பணி நிலைமைகள் ஆகியவை அழிவதைக் காக்க முற்படுகையில், அவர்களுக்கு UAW வைத் தவிர கடுமையான எதிரி கிடையாது. இப்போராட்டங்கள் --UAWஇல் இருந்து சுயாதீனமாக கீழ்மட்ட தொழிலாளர்கள் குழுக்களை அமைப்பதில் இப்பொழுது தொடங்க வேண்டும்-- தற்போதைய பேரழிவை ஏற்படுத்திய முழு அனுபவத்தின் அரசியல் படிப்பினைகளையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். UAW சரிவிற்கும் அது தொழிலாளர்களை சுரண்டும் ஒரு கருவியாக மாறியதற்கும் வழிவகுத்த அரசியல் முன்னோக்கின் இடைத் தொடர்புடைய கூறுபாடுகள் சில உள்ளன.* முதலாளித்துவ முறை பாதுகாப்பு மற்றும் சோசலிசத்திற்கு எதிர்ப்பு: 1930èOTM UAW வை நிறுவிய வெகுஜன போராட்டங்களில் மிகவும் போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட தொழிலாளர்கள் சோசலிச சிந்தனைகளால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் தொழிற்சங்கத் தலைமை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் புரட்சிகர மாற்றம் ஒரு புறம் இருக்க, அமெரிக்கப் பொருளாதார வாழ்வில் ஜனநாயக வகை சீர்திருத்தம் அல்லது தீவிரப்போக்குடைய மறு கட்டமைப்பு என்பவற்றை முதலிலேயே நிராகரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட முதலாளித்துவ சக்தியாக வெளிப்பட்டபோது, UAW உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உந்ததுதலுக்கு ஆதரவு கொடுத்து நின்றது. இது வெளிநாட்டுக் கொள்கையில் குளிர் யுத்த கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த வகையிலும், உள்நாட்டில் கம்யூனிச சூனிய வேட்டை வடிவமைப்பையும் கொண்டது. சங்கம் நிறுவப்பட்ட நேரத்தில் முக்கிய பங்கை ஆற்றிய சோசலிச மற்றும் தீவிர கூறுபாடுகளை தன் இடத்திலிருந்த UAW அகற்றியது.இத்தகைய பிற்போக்குத்தன அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவம் மூன்று பெரும் அமெரிக்கக் கார்த் தயாரிப்பு நிறுவனங்களின் இலாப நலன்களுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. இதன் பொருள் தொழிலாளர்களுடைய வேலைகள், பணிநிலைமைகள் ஆகியவை முற்றிலும் சர்வதேச பொருளாதார, தொழில்துறையில் அமெரிக்கா கொண்டிருந்த சவாலுக்கு உட்படாத மேலாதிக்கத்தை நம்பியிருந்தது. அந்த நிலைமை அரிக்க ஆர்ம்பித்ததும், UAW நிறுவனங்களுடன் முந்தைய போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தொழிலாளர்களால் அடையப்பட்ட நலன்களை திரும்பக் கொடுப்பதற்கு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கலாயிற்று. * தேசியவாதம்: தொழிலாளர்களுடைய நலன்களை முதலாளிகளுடைய நலன்களுடன் அடையாளம் காண்பது தேசியவாதத்துடன் பிணைந்தது ஆகும். அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் பொதுப் போராட்டத்தில் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை UAW நிராகரித்தது; அதேபோல் தொழிலாளர்களுடைய நலன்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபடுவதின் மூலமே காக்கப்பட முடியும் என்பதையும் நிராகரித்தது. உலகப் பொருளாதாரம் பெருகிய முறையில் ஒருங்கிணைந்து உலகளவில் செயல்பட்ட சர்வதேச நிறுவனங்களின் மேலாதிக்கத்தில் வந்த நிலையில், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கு உலகெங்கும் அது தேடிய நிலையில், UAW இன் தேசிய நோக்குநிலை தொழிலாளர்களை பொறுத்த வரையில் முன்னே செல்ல முடியாத ஒரு பாதையாகப் போய்விட்டது. கார்த் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களுக்கு சலுகைகள் பெறுவதற்கு பதிலாக, UAW தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுக்குமாறு செய்யத் தலைப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களை கனடா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக மோதச்செய்ய முற்பட்டது; அவர்கள் குறைந்த ஊதியங்களையும் வேலைக்குறைப்புக்களையும் ஏற்றால்தான் "அவர்களுடைய" அமெரிக்க நிறுவனங்கள் கூடுதலான போட்டித் தன்மை பெறும் என்று வலியுறுத்தியது. இதன் விளைவாக ஏற்பட்ட வேலைகள் வாழ்க்கைத் தர சரிவுகள் தற்போதைய பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. * ஜனநாயகக் கட்சியுடன் உடன்பாடு: வர்க்கப் பூசல்களுக்கு இடையே UAW வை நிறுவியது--பிளின்ட்டிலும் மற்ற நகரங்களிலும் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டங்கள் போன்றவற்றை--UAW தலைமை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அமைப்புக்காக போராட வேண்டும் என்ற கருத்தை நிராகரித்து, மாறாக தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சியுடன் பிணைத்தது. இது முதலாளித்துவத்தை பாதுகாப்பதன் அரசியல் வெளிப்பாடு ஆகும்.இது தொழிலாளர்களுக்கு 1979-1980 ம் ஆண்டு தொடங்கிய கிறைஸ்லர் பிணை எடுப்பில் இருந்து துவங்கி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடுக்கப்பட்ட வர்க்கத் தாக்குதலை திறமையுடன் எதிர்ப்பதற்கு எவ்வித வழிவகையும் தொழிலாளர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டது. அது ஜனநாயகக் கட்சி ஆட்சி புரிந்தாலும், குடியரசுக் கட்சி நிர்வாகமாக இருந்தாலும், நிலைமை அவ்வாறாயிற்று. இக்கொள்கை ஒபாமா தேர்தலின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது; UAW அவருக்கு முழு ஆதரவைக் கொடுத்தது; இதையொட்டி வோல் ஸ்ட்ரீட்டின் நேரடிக் கருவியாக இயங்கும் ஒரு நிர்வாகம் பதவியில் இருத்தப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியுடன் UAW கொண்டுள்ள உடன்பாடு, 1930 களின் திறந்த கடைகள் நாட்களுக்குப் பின்னர் மோசமான வறுமை நிலை ஊதியங்கள் மற்றும் கடுமையான பணிநிலைமைகளையும் தொழிலாளர்கள் மீது சுமத்த இப்பொழுது ஒபாமா நிர்வாகம் UAW வின் ஐக்கிய முன்னணி வடிவமைப்பைப் பெற்றுள்ளது. கிறைஸ்லர் திவாலில் முடிந்துள்ள நிகழ்வுகள் பற்றிய முழு அனுபவம் மற்றும் வரவிருக்கும் GM திவால் பற்றியஅனுபவத்தில் இருந்து தேவையான முடிவுரைகளைத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளுவது அவசரத் தேவையாகும். தொழிலாளர்கள் கடந்த தலைமுறையின் போர்க்குண மரபுகளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். UAW தலைவர்களை ஆலைகளில் இருந்து விரட்டியடிக்கப் போராடவேண்டும்; தொழில்துறை சர்வாதிகாரத்தையும் கடும் பணி நிலைமைகளை எதிர்க்கவும் தொழில்துறை சங்கங்களின் முன்னோடி தலைவர்கள் AFL உடன் முறித்துக் கொண்டு 1930களில் முனைப்புடன் நின்றது போல், பணி நீக்கங்கள், ஆலை மூடல்கள், விற்றுவிடும் UAW ஒப்பந்தங்கள் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் ஆலை மற்றும் பணியிடக் குழுக்களைத் தேர்ந்தெடுத்து, ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றைச் செய்தல் வேண்டும். ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றுபடுமாறு அமெரிக்க, கனேடிய, மெக்சிக, ஐரோப்பிய, ஆசியத் தொழிலாளர்கள் என்று அனைத்து கார்த் தொழில் தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு அரசியல் போராட்டம். இதற்கு வழிகாட்ட ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவை. தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் இரு கட்சி முறையில் இருந்து முறித்துக் கொண்டு வெகுஜன சோசலிசக் கட்சி ஒன்றை கட்டியமைக்கப் போராடவேண்டும். தொழிலாளர்கள் அரசாங்கத்திற்காக போராடும் தன்னுடைய சொந்த கட்சி மூலம்தான், தொழிலாளர் வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கு அதன் தீர்வை முன்னெடுக்க முடியும். தொழிலாளர்களின் நலன்களை முன்வைக்கும் கொள்கையின் இதயத்தானத்தில் --பாதுகாப்பான, கெளரவ ஊதியம் உள்ள வேலைகள், சுகாதாரப் பாதுகாப்பிற்கு, ஓய்வூதியங்களுக்கு தொழில்துறை ஜனநாயகத்திற்கு மற்றும் கெளரவ பணி நிலைமை ஆகியவற்றிற்கு-- கார்த் தொழில் மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தேவை; அவை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும். இந்த சோசலிசக் கொள்கைக்காக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் போராட வேண்டும். நிதிய தன்னலக் குழுக்களிடம் இருந்து தொழில்துறையின் மீதான கட்டுப்பாட்டை அகற்றி தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூக தேவைக்காக இதை சர்வதேச அளவில் அமைத்தல் இன்றியமையாதது ஆகும். |