World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Chrysler declares bankruptcy

கிறைஸ்லர் திவாலாகிவிட்டதாக அறிவிப்பு

By Jerry White
1 May 2009

Back to screen version

அமெரிக்காவின் மூன்றாம் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கிறைஸ்லர் வியாழனன்று நியூ யோர்க்கில் திவாலடைந்ததற்காக மனு செய்தது; அத்தியாயம் 11 ன் படி மறு சீரமைத்து வெளிவரும் வரை அது தன்னுடைய உற்பத்தி நிலையங்களை மூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை 54,000 மணிநேர ஒப்பந்தம் மற்றும் ஊதியம் பெறும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் தொழிலாளர்களை பாதிப்பதுடன், நூறாயிரக்கணக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலாளர்கள், உதிரிபாகம் தயாரிப்பவர்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மிச்சிகன், ஓகையோ, இல்லிநோய் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அதுதொடர்பான ஏனைய நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.

மூடப்பட இருக்கும் ஆலைகளில் ஒருவேளை திறக்கப்பட்டால், மீண்டும் எத்தனை திறக்கப்படும் என்று கூறுவது கடினம். திவால் விதிமுறைகளின் 363 வது பிரிவின்படி பெரிய முதலீட்டாளர்கள் எந்த ஆலைகளையும் சொத்துக்களையும் வாங்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும்; அதே போல் பிறவற்றை நிராகரிக்கவும் இயலும். குறைக்கப்பட்ட கிறைஸ்லரில் வேலைபார்ககும் தொழிலாளிகள் கிட்டத்தட்ட வறுமையைக் கொடுக்கும் ஊதியங்களைப் பெறவும் முதுகு ஒடிய வேலைசெய்யும் நிலைமைகளுக்கும் ஆளாக்கும், மற்றும் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தினால், புதனன்று தொழிலாளர்கள் தொண்டை வழியே உட்செலுத்தப்பட்ட, கையெழுத்திடப்பட்டுள்ள உடன்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த விளைவு அரசாங்கத்தின் கார்த் தொழில் "பிணை எடுப்பில்" தொடக்கத்தில் இருந்து இருந்த நோக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. ஒபாமா நிர்வாகமும் UAW உம் சதிசெய்து நிதிய மூலதனத்தின் ஆணைகளுக்கு ஏற்ப கார்த் தொழிலை மறு வடிவு கொடுக்க முற்பட்டுள்ளன.

UAW கிறைஸ்லர் தொழிலாளர்களை தீவிரமாகச் சுரண்டுவதின் மூலம் இலாபத்தை நிறையப் பெற விரும்பும் பெருநிறுவன அமைப்புக்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. இதற்குப் பதிலாக UAW க்கு "புதிய" கிறைஸ்லரில் 55 சதவிகித பங்குகளுக்கு உரிமை கொடுக்கப்படும்; அதுவும் நிறுவனம் திவால் வழிவகைக்கு பின்னர் அதன் முந்தைய நிலையின் நிழல் போல் வெளிப்பட்டு, அதன் தொழிலாளர் தொகுப்பில் பெரும் குறைப்புக்கள் ஏற்பட்டபின் இருக்கும் தன்மையில் ஆகும்; அதேபோல் முந்தைய தலைமுறை கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தில் பெற்ற நலன்கள் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருக்குமா என்பதும் ஐயத்திற்கு உரியதுதான்.

ஆரம்பத்தில் இருந்தே பல மில்லியன்களுக்கு உரிமையாளர், வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர், Steven Rattner தலைமையிலான ஒபாமாவின் கார்ப்பிரிவு பணிக்குழு, 84 ஆண்டுகள் நிரம்பிய நிறுவனத்தை திவால் நீதிமன்றத்தின்மூலம் உடைக்கத்தான் ஆதரவு கொடுத்தார்; இதையொட்டி அதன் இலாபகரமான சொத்துக்கள் தனியே பிரிக்கப்பட்டு தனி முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டுவிடும்.

"363 விற்பனை முறை" என்று அழைக்கப்படும் முறையின்படி, நிதிய வட்டங்களில் வட்டமிடும் குதிரை எனப் பெயர்பெற்ற ஒரு புதிய வாங்குபவர், மிக அதிக இலாபம் தரும் ஆலைகள் மற்றும் சொத்துக்களை வாங்க முடியும்; அதே நேரத்தில் நிறுவனத்தின் விரும்பத்தகா பிரிவுகளை, பல பில்லியன்கள் ஓய்வூதியம், சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்கள் போன்றவற்றை வாங்காமல் தள்ளிவிட முடியும். இச்செலவினங்கள் கிறைஸ்லர் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற 125,000 ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களை திவால் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் காத்திருக்கச் செய்யும்.

நேற்று நண்பகல் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா கிறைஸ்லர் திவால் தன்மை பற்றி அவநம்பிக்கையுடன் சித்தரித்து அது எப்படி பியட்டுடன் "ஒரு புதிய வாழ்வை" காணக்கூடிய வகையில் இணையக்கூடும் என்றார்; அது பல ஆயிரக்கணக்கான வேலைகளை "காக்கக்கூடும்" என்றும் கூறினார். இந்த திவால் வழிவகை, ஜனாதிபதியின் கூற்றின்படி, "விரைவாகவும், திறமையுடனும்" இருக்கும்; 30 முதல் 60 நாட்கள்தான் பிடிக்கும் என்றும் "கிறைஸ்லரில் வேலைபார்க்கும் மக்கள் அல்லது அதை நம்பியிருக்கும் சமூகங்களின் மக்களையும் பாதிக்காத வகையில் இருக்கும்" என்றார்.

கிறைஸ்லர் ஒரு செய்தி ஊடக அறிக்கையில் அதன் உற்பத்தி நிலையங்கள் அடுத்த திங்கள் தொடங்கி மூடப்படும் என்று அறிவித்த வகையில், இது சில மணி நேரத்திற்குள்ளேயே பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 28ம் தேதி தான் மறுசீரமைப்புத் திட்டத்தை வெளியிடுவதாக கிறைஸ்லர் கூறியுள்ளது--இப்பொழுதில் இருந்து நான்கு மாதங்களில் ஆகும், இது ஜனாதிபதி கூறியபடி "அறுவை சிகிச்சைக்கு" பின்னர் மீண்டுவிடமுடியும் என நிறுவனம் எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.

ஒரு தயக்கத்துடன் நடத்தப்படும் செயல் என்றுதான் திவால் மனுச்செய்தலை ஒபாமா விளக்க முற்பட்டார்; இதற்குக் காரணம், கிறைஸ்லருக்கு கொடுத்த கடன் குறைவாகத் திரும்பி வருவதை ஏற்காத "ஒரு சிறிய ஊகவணிகக் குழுவினர்" மற்றும் ஏனைய பெரிய பத்திரக்காரர்களும் அவ்வாறு நடந்து கொண்டதால் என்றார். இந்த நிதிய நலன்கள்--ராய்ட்டரால் Oppenheim Funds, Perella Weinberg Partners, Stairway Capital என்று அடையாளம் காட்டப்பட்டவை-- ஒரு நல்ல உடன்பாடு வருமெனக் காத்திருந்தன. ஒரு திவால் நடைமுறையின் கீழ் அவர்களுடைய முழுக் கடன் தொகையைத் திரும்பப் பெறும் வகையில் தக்க பாதுகாப்பை பெற்றிருந்ததாகவும் பரவலாகக் கூறப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட்டின் இந்த குறிப்பிட்ட பிணம்தின்னும் கழுகுகளின் குழுவை பலிகடாவாக ஆக்க ஒபாமா முற்பட்டு, இன்னும் பெரிய நிதிய நலன்களுக்குத் தான் முக்கிய எடுபிடியாக இருந்து செயல்படுவதைத் திசை திருப்பப் பார்த்துள்ளார். "நான் ஊழியர்களுக்கு ஆதரவாக, அவர்கள் குடும்பங்கள், சமூகங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். பிறர் தியாகங்கள் செய்யும்போது தாம் மட்டும் கீழ்ப்படியாது மறுப்பவர்களுடன் நான் பிணைந்திருக்கவில்லை" என்று அவர் கூறினார்.

இக்கூற்றுக்கள் இகழ்வுக்குரியவை. Automotive News ல் ஒரு கட்டுரையாளர் எழுதியது போல், "நாம் நேர்மையாக இருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் பல தர்க்க ரீதியான காரணங்கள் திவால் பதிவுக்கு உண்டு; எல்லா பத்திரக்காரர்களும் ஒப்புக் கொண்டாலும். ஒரு திவால்மன்ற நீதிபதி தொழிலாளர் ஒப்பந்தங்களை முறிக்கலாம், விற்பனையாளர் உடன்பாடுகளை, வருங்காலத்தில் கொடுக்க வேண்டியவைகளை மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதை முறித்து விட முடியும்."

நியூ யோர்க் டைம்ஸ் மேலும் கூறியது: "நீதிமன்றங்கள் கார்த் தயாரிப்பாளர்களை இழப்புக்கள், தேவையற்ற ஒப்பந்தங்களை, விற்பனையாளர் உடன்பாடுகள், அஸ்பெஸ்டோஸ் வழக்கு கோரிக்கைகள் போன்றவற்றை மிக எளிதான கைவிட அனுமதிக்கும். எனவே நிறுத்தி வைக்கும் கடன் கொடுத்தவர்களுடனான அரசாங்கத்தின் பூசல், ஒரு வியத்தகு நடவடிக்கை எடுப்பதற்கு --திவால்தன்மைக்கு-- போலிக்காரணம் ஆகும்; அதாவது எப்படிப் பார்த்தாலும் இந்நிலை அவசியமானதாக கருதப்படும்."

1925 ல் நிறுவப்பட்டு ஹைட்ராலிக் தடைகள் மற்றும் ஒற்றை அமைப்பு கட்டுமுறை போன்ற நவீனங்களுடன் அடையாளம் காணப்பட்ட கிறைஸ்லர் நிறுவனம் திவால் என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் பல தசாப்த சரிவு, மற்றும் உலகப் பொருளாதார மேலாதிக்கத்தை அது இழந்துவிட்டதின் அடையாளம் ஆகும். 1950 களில் டிட்ரோயிட்டின் "பெரிய மூன்று" கார் நிறுவனங்கள் --ஜேனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறைஸ்லர் ஆகியவை உலகில் ஐந்து கார்களில் மூன்றை உற்பத்தி செய்தன. இன்று அவை அமெரிக்கச் சந்தையில்கூட 40 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டில் கொள்ளவில்லை; ஆசிய, ஐரோப்பிய உற்பத்தி நிறுவனங்கள்தான் மீதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன.

கிறைஸ்லருக்கு ஏற்பட்டுள்ள கதி ஜேனரல் மோட்டார்ஸுக்கும் நடக்கக்கடிய தயாரிப்பு பற்றிய எச்சரிக்கை ஆகும்; அதுவும்தான் ஒரு UAW ஆதரவிற்கு உட்பட்ட அரசாங்க "பிணை எடுப்பின்" நடுவில் உள்ளது.

கிறைஸ்லரின் திவால்தன்மை அமெரிக்க ஆளும் வர்க்கம் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவின் தொழில்தளத்தின் பெரும்பகுதியை தகர்த்துக் கொண்டிருப்பதின் விளைவு ஆகும். இந்த வழிவகை அதன் ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது; மேலும் இது நிதிய ஊகமுறை, ஒட்டுண்ணித்தனம் ஆகியவற்றுடனும் இணைந்துள்ளது; இவற்றில் நிதிய உயரடுக்கு செல்வம் குவிப்பது உண்மையான மதிப்பைத் தோற்றுவிப்பதில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த வழிகவகைதான் நிதியச் சரிவு மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைந்தது; இப்பொழுது அது தொழிலாளர் வர்க்கத்தின்மீது இன்னும் தாக்குதலை நடத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் கிறைஸ்லருக்கு பிணை எடுப்புடன் தொடங்கியது; அதிலும் UAW ஆலைகள் மூடப்படல், ஊதியம், மற்ற நலன்கள் குறைப்பு இவற்றை "வேலைகளை காப்பாற்றுதல்" என்ற பெயரில் நிர்வாகம் சுமத்த உதவியது. அந்த நேரத்தில் அரசாங்கம் அமெரிக்கத் தொழிலின் ஒரு பெருமிதச் சின்னம் திவால் ஆகக்கூடாது என்று உறுதியாக இருந்தது. அதற்குப் பின்னர் அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு எப்படி போய்விட்டது என்பதற்கு தற்போதைய நிலைமை உதாரணம் ஆகும்.

ஒபாமா நிர்வாகத்தில் வோல் ஸ்ட்ரீட் அதற்கு வளைந்து கொடுக்கும், இரக்கமற்ற கருவி ஒன்றைக் கொண்டுள்ளது. அது இரட்டை தரத்தில் திமிர்த்தனமாக செயல்படுகிறது. வங்கிகளுக்கு வரிப்பணத்தை பல டிரில்லியன் டாலர்கள் என நிபந்தனை இன்றி பிணை எடுப்பிற்கு வாரிக் கொடுத்துள்ளது; அதே நேரத்தில் வோல்ஸ்ட்ரீட் கொண்டுவந்த நெருக்கடியைப் பயன்படுத்தி தொழில்துறையை நூறாயிரக்கணக்கான வேலை இழப்புக்களில் மறு சீரமைக்கப் பார்க்கிறது; இதையொட்டி நிதிய உயரடுக்கிற்கு இலாபகரமான முதலீட்டு ஆதாரம் கிடைக்கும்.

கிறைஸ்லர் திவாலாகியுள்ளது ஒரு மைல்கல்லாகும். அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அமெரிக்காவில் வர்க்க உறவுகள் ஆகியவற்றில் ஒரு அடிப்படை மறுசீரமைப்பிற்கு இது அடையாளம் காட்டுகிறது. கார்த் தொழிலாளர்கள்மீது தாக்குதல், வரலாற்றளவில் நிறைய ஊதியம் பெறும் தொழில்துறை தொழிலாளர்களிடையே, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஊதியங்கள், நலன்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றின்மீது தொடர்தாக்குதல் நடத்த அரங்கு அமைக்க பயன்படும். இதுதான் ஒபாமா நிர்வாகம் கொண்டுவர முற்படும் பொருளாதார "மீட்பு" எனப்படுவதின் சாராம்சம் ஆகும்.

இத்தாக்குதலை செயல்படுத்துகையில் ஒபாமா நிர்வாகம் அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பு அனைத்தையும் அடக்குவதற்கு UAW வைப் பெரிதும் நம்பியுள்ளது. UAW அதிகாரிகள் திவால் பதிவு அச்சுறுத்தலை பயன்படுத்தி கிறைஸ்லரின் புதிய இழப்புக்களை ஏற்கும் ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். அந்த ஒப்பந்தம் புதனன்று உறுதி செய்யப்பட்டது; ஆனால் மறுநாளே கிறைஸ்லர் திவால் தன்மையைப் பதிவதற்கு சென்று, ஊதியங்களை முடக்கி குறைவூதிய தொழிலாளர்கள் விரிவாக்கப்படலாம் என்று கூறி தொழிலாளர்களை செலவு உயர்வினால் கிடைக்கும் படிகள், போனஸ்கள், விடுமுறைநாட்கள் இவற்றை இல்லாமல் செய்ததுடன், உணவு இடைவேளை நேரத்தையும் குறைத்துள்ளது. ஓய்வு பெற்றவர்கள் பார்க்க முடியாமலும், பற்கள் பாதுகாப்பு இல்லாமலும் செய்திருப்பதுடன் மற்ற சுகாதார நலன்களும் தகர்க்கப்பட்டுவிட்டன; இதைத்தவிர ஓய்வூதியங்கள்மீதும் தாக்குதல்கள் வரவுள்ளன.

இதற்கு ஈடாக UAW மறுசீரமைக்கப்பட்ட கிறைஸ்லரின் பெரும்பான்மை உரிமையைப் பெறும்; மேலும் பெருநிறுவன இயக்குனர் குழுவில் ஓர் இடத்தையும் பெறும். UAW என அறியப்படும் வணிக நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கார்த் தொழிலாளர்களைச் சுரண்டுவதின் மூலமும் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பை உயர்த்துவதின் மூலமும் செல்வக் கொழிப்பை அடைய முற்படுகின்றனர்.

UAW ஐ விட கடுமையான விரோதியை கார்த் தொழிலாளர்கள் எதிர்கொள்ளவில்லை. வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றைக் காக்கும் எந்தப் போராட்டத்திற்கும் இந்த தொழிலாளர்-விரோத அமைப்பை ஆலைகளில் இருந்து வெளியே துரத்துவது மிகவும் முக்கியமாகும்; அதன் பின் அடிமட்டத் தொழிலாளர் குழுக்களை சுயாதீனமாக அமைத்து கூட்டு நடவடிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும்.

இப்பொழுதே கிறைஸ்லர், GM, ்்்போர்ட் ஆகியவை கொண்டிருக்கும் ஒப்பந்தங்களை மாற்றுவதற்கான போராட்டங்கள் தொடக்கப்பட்டு, ஆலைகள் மூடல், பணிநீக்கங்கள் அனைத்தையும் எதிர்க்க தயாரிப்புக்கள் தேவை. கார்த்தொழிலின் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் தொழிலாளர்கள், கார் உதிரி பாகங்கள் ஆகியவற்றையும் தயாரிப்பவர்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் காப்பாற்றப்படுவதற்கு பொதுப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். கார்த் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வர்க்கப் போராட்ட மரபுகள் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றைக் கையாண்டு, புதுப்பிக்கப்பட வேண்டும்

UAW இன் "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்பது நிராகரிக்கப்பட வேண்டும் கனடா, மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், GM ன் ஐரோப்பாவில் உள்ள ஓப்பல் பிரிவு மற்றும் இத்தாலியில் உள்ள பியட் தொழிலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை தேவை. வேலைகளைக்காத்தல், வாழ்க்கைத் தரங்களைக் காத்தல் என்பது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கார்த் தயாரிப்பு தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ளது. தங்கள் நடவடிக்கைகளை உலகந்தழுவிய கார் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பது போல், சர்வதேச தொழிலாள வர்க்கமும் அதன் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

போர்க்குணமிக்க போராட்டம் ஒரு புதிய அரசியல் தத்துவம் மற்றும் மூலோபாயத்தால் வழிகாட்டப்பட வேண்டும்; தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களும் உரிமைகளும் முதலாளித்துவத்துடன் பொருந்தாதவை என்பதைக் கண்டுணர்வதிலிருந்து ஒருவர் ஆரம்பிக்க வேண்டும்; முதலாளித்துவ முறை அனைத்து சமூக தேவைகளையும் பெருநிறுவன இலாப முறை மற்றும் ஒரு நிதிய உயரடுக்கின் செல்வச் சேமிப்பிற்கு தாழ்த்துகிறது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தைக் கட்டமைத்தல் முக்கியமானதாகும்.

நிதியப் பிரபுத்துவத்தின் பிடி முறிக்கப்பட வேண்டும்; பெரிய வங்கிகள், கார்த் தொழில் உட்பட பெரிய தொழில்கள் பொது உடைமைக்குள் கொண்டுவரப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும். இவ்விதத்தில் பலதலைமுறை தொழிலாளர்களின் உழைப்பில் கட்டமைக்கப்பட்ட பரந்த தொழில்நுட்ப, மனித மற்றும் நிதிய வளங்கள், தனியார் இலாபத்திற்கு என்று அல்லாமல் சமுதாயத்தின் பொது நலனுக்குப் பயன்படுத்தப்பட முடியும்.

இது ஒபாமா நிர்வாகம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இரு கட்சிகளுக்கும் எதிரான அரசியல் போராட்டம் ஆகும். இதற்கு சோசலிச சமத்துவக் கட்சியை வெகுஜன அரசியல் மற்றும் புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சியாக கட்டியமைப்பது மிகவும் முக்கியமானதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved