World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Torture and Washington's policy of aggressive war

சித்திரவதையும் வாஷிங்டனின் ஆக்கிரமிப்புப் போரும்

By Alex Lantier
27 April 2009

Back to screen version

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் புஷ் நிர்வாகம் சித்திரவதை பயன்படுத்தியது பற்றிய ஆழ்ந்த நெருக்கடியை ஒட்டி பிளவுகள் எழுந்துள்ளன.

நீரில் மூழ்கடித்தில் உட்பட தவறான விசாரணை முறைகளை விவரித்து ஒப்புதல் கொடுத்த நான்கு புஷ் நீதித்துறை குறிப்புக்களை வெளியிடுதல் பற்றி ஒபாமா நிர்வாகமே உட்பிளவை சந்தித்துள்ளது. தன்னுடைய CIA இயக்குநர் லியோன் பனேட்டா கருத்தை நிராகரித்து ஒபாமா ஏப்ரல் 16ம் தேதி குறிப்புக்களை வெளியிட்டார். அதே நேரத்தில் காவலில் இருந்தவர்களை சித்திரவதை செய்ததில் தொடர்புடைய CIA அதிகாரிகள்மீது குற்றச்சாட்டுக்களோ, விசாரணையோ இருக்காது என்றும் அறிவித்தார்.

இவ்வாறு ஒபாமா செய்ததற்குக் காரணம் குறிப்புக்களை வெளியீடுமாறு ஒரு நீதிமன்றம் சுமத்திய காலக்கெடுவின் அழுத்தத்தினால்தான். குற்றச் சாட்டுக்கள் இருக்காது என்று கூறி குறிப்புக்களை வெளியிட்டால், தன்னுடைய தாராளவாத ஆதரவாளர்கள் மற்றும் உலகக் கருத்தை சமாதானம் செய்து, அதே நேரத்தில் புஷ் நிர்வாகத்தில் இருந்து "மாறுதல்" என்ற தோற்றத்தையும் காட்டலாம் என்று அவர் நம்பியிருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர் CIA, இராணுவ மற்றும் முன்னாள் புஷ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவர்களுடைய சட்டவிரோத நடவடிக்கைகளினால் பாதிப்பு இருக்காது என்ற உறுதியையும் கொடுத்தார்.

ஆனால் சித்திரவதை குறிப்புக்கள் வெளியிடப்பட்டது பூசலைத் தீவிரமாக்கி அரசாங்கத்திற்குள் பிளவுகளை அதிகமாக்கியுள்ளது. புஷ்ஷின் CIA இயக்குனர் மைக்கேல் ஹேடனும் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் சென்னியும் தேசிய பாதுகாப்புப் பிரிவிற்குள் இருக்கும் அதிருப்தியடைந்த பிரிவுககளுக்காக வெளிப்படையான அழைப்புவிட்டு மிருகத்தனமான விசாரணை வழிவகைகளைக் பாதுகாத்து குறிப்புக்களை வெளியிடுவது அமெரிக்க தேசிய பாதுகாப்பு முறைக்கு ஆபத்து என்றும் கண்டித்துள்ளனர். வெளிப்படையாக நிலை குலைந்த தன்மையில் ஒபாமா அதிகாரிகள் முதலில் குறிப்புக்களை தயாரித்த நீதித்துறை வக்கீல்களோ அல்லது அவற்றைக் கோரிய புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளோ விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்று முதலில் அறிவித்தார்கள்.

இதன்பின் இந்த நிலைப்பாட்டில் இருந்து ஒபாமா பின்வாங்கியது போல் தோன்றினார். தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர் வக்கீல்கள் மீது குற்றச்சாட்டு விசாரணைகள் தொடக்குவது பற்றி முடிவு எடுக்கலாம் என்றும், காங்கிரஸ் "இரு கட்சி, அரசியல் தன்மை இல்லாத" ஒரு விசாரணைக்கு 9/11 குழு விசாரணை போல் நடத்தலாம் என்றும் கருத்துக் கூறினார். அக்குழு செப்டம்பர் 2001ல் பயங்ரவாதிகள் தாக்குதல் சூழ்நிலை பற்றிய நிகழ்வுகளில் அரசாங்கத்தின் பங்கு பற்றி மூடிமறைத்தலைத்தான் செய்தது. இது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் குழு, இன்னும் பிற குடியரசுக்கட்சி வலதுசாரி அமைப்புக்களில் இருந்து சீற்றமான கண்டனங்களையும் அரசியல் பதிலடி என்ற அச்சுறுத்தலைகளையும் தூண்டியது. இதையொட்டி ஒபாமா மீண்டும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ஜனநாயக காங்கிரஸ் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து 9/11 மாதிரியான குழுவைக் கூட தான் எதிர்ப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

இப்பொழுது அவர் செனட் உளவுத்துறை குழு நடத்திவரும் விசாரணைக்கு ஆதரவு தருவது என்ற கொள்கையை கடைப்பிடிக்க விரும்புவதாகத் தோன்றுகிறது. சனிக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான கலிபோர்னியா செனட்டர் Dianne Feinstein புஷ் நிர்வாகத்தின் சித்திரவதை பற்றிய எந்த விசாரணையும் தன்னுடைய குழுவிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டார். செனட் விசாரணைக்குழு தேசியப் பாதுகாப்புக் அமைப்பு அல்லது புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் எவருக்கும் அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெளிவாக்கினார்.

இதன் நடவடிக்கைகளை "ஒரு இரகசியச் சூழ்நிலையில் நடத்தப்படும்" என்று அவர் எழுதினார். "அதன் முடிவு முழுக்குழுவிற்கு அதன் பரிசீலனைக்கு கொண்டுவரப்படும். அதன் பின் குழு ஒரு முடிவை கண்டறிதல், பரிந்துரைகள் பற்றி எடுக்கும்" என்றார். வேறுவிதமாகக் கூறினால், விசாரணை முடிவு பகிரங்கமாக்கப்படுவது சந்தேகம்தான்.

இதன்பின் இவ்வம்மையார் விசாரணை "மூடிய கதவுகளுக்குப் பின்னே" நடத்தப்படும் என்று வலியுறுத்தினார்; அது "போலி விசாரணையாகவோ", "சூனிய வேட்டையாகவோ" இருக்காது என்றும் கூறினார். குழுவின் நம்பகத்தன்மைக்கு நிரூபணமாக அவர் 2004 ம் ஆண்டு ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் கூற்றைப் பற்றிய போருக்கு முந்தைய விசாரணையை மேற்கோளிட்டார். அந்த விசாரணையும் புஷ் நிர்வாகத்தின் பொய்களைப் பற்றி மூடிமறைக்கும் தன்மையைத்தான் கொண்டிருந்தது.

இதுவும்கூட அமெரிக்க தேசிய பாதுகாப்பு நடைமுறை மற்றும் குடியரசுக் கட்சிக்கு திருப்தி கொடுக்கவில்லை. அவர்கள் மேலும் எதிர்த்து, ஜனநாயகக் கட்சியினர் சித்திரவதைக்கு கொடுக்கும் ஆதரவுடன் ஆழமாக சமரசப்படுத்தியுள்ள நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர்.

CIA வின் முன்னாள் தலைவர் போர்டர் கோஸ் ஏப்ரல் 25 வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த "அரசியலை விட பாதுகாப்பு முன்னுரிமை பெறும்" என்ற கட்டுரையில் விசாரணைக்கான முறையீடுகளை கண்டித்துள்ளார். குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி என்ற காங்கிரஸில் இருந்தவர்கள், "CIA யினால் அதிபயங்கரவாதிகள் எவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டனர். நாம் CIA க்கு இரு கட்சி ஆதரவையும் வழங்கினோம். CIA விற்கு அதன் செயற்பாடுகளை நடத்த நிதி கொடுத்தோம்.... ஒரு சக ஊழியரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததாக எனக்கு நினைவு இல்லை." என்று அவர் கூறினார்.

இத்தகைய குற்றங்களை பற்றி தகவல் கொடுக்கப்பட்டவர்கள் மன்றத்தின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தலைவரான நான்ஸி பெலோசி மற்றும் பிற உயர்மட்ட ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவர்.

இதன் விளைவு வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸின் இரு பிரிவுகளும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலையில் அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கம் தன்னுடைய சட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாத ஆச்சரியமான தன்மைதான். அதுவும் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் சட்டமீறல்களுக்கான ஒப்புதல்கள் கொடுக்கப்பட்டதற்கு பகிரங்க ஆதாரங்கள் இருக்கும் நிலையில்.

சித்திரவதை பயன்பாடே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் சட்டவிரோத, ஆக்கிரமிப்புப் போரைத் தொடக்கியதில் இருந்து அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்ட மத்திய குற்ற செயலில் இருந்து பிரிக்கப்பட முடியாதது ஆகும். இந்த முடிவு நீண்டகால விளைவு மற்றும் பெரும் சோக முடிவுகளைத்தான் கொடுத்தது. அவற்றில் ஒன்றுதான் சித்திரவதைப் பயன்பாடு. இந்த ஆக்கிரமிப்புப் போர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இறப்புக்கள், உடல் உறுப்புக்கள் இழத்தல் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம் பெயர்தல் போன்றவற்றை ஏற்படுத்தியதுடன், மேலும் ஆயிரக்கணக்காண அமெரிக்க படையினரின் உயிரிழப்பு, உறுப்புக்கள் இழப்பு, உளரீதியான பாதிப்பு ஆகியவற்றிற்கும் உட்பட்டனர்.

ஒரு தற்செயல் நிகழ்வு அல்லது மிகையான துணை விளைபொருள் இன்று இல்லாமல் சித்திரவதை என்பது இப்போருக்கள் நடத்தக் காரணமாக இருந்த பொய்கள், தவறான செய்திகள் என்ற வலையைத் தோற்றுவிப்பதல் முக்கிய கூறுபாடாக இருந்தது. டைம்ஸின் கட்டுரையாளர் பிராங் ரிச் ஞாயிறன்று வெளியிட்ட கருத்து ஒன்றில் மிகச் சரியாக 2002 முடிவில் முக்கிய காரணி சிறைபிடிக்கப்பட்ட அல்குவைடா உறுப்பினரான அபு ஜுபைதாவை சித்திரவதை செய்தல் என்பது புஷ் நிர்வாகத்திற்கு தேவையான அல்குவைடா-ஈராக் பிணைப்பு பற்றிய பொய்த் தகவல் பற்றிய சான்று தயாரிக்க பயன்பட்டது என்று சரியாகக் கூறியுள்ளார்.

புஷ் நிர்வாகம் "ஈராக் போர் பற்றி கருத்துத்திரட்ட குறிப்பிட்ட காலகெடுவை" கொண்டிருந்தது என்று ரிச் குறிப்பிடுகிறார். செனட்டின் இராணுவக் குழு அறிக்கை ஒன்று கடந்த வாரம் வெளிவந்தது பற்றி அவர் மேற்கோளிட்டுள்ளார்: அதில் குவாண்டநாமோ வளைகுடாவில் விசாரணைகளை மேற்பார்வையிட்ட இராணுவ மனநோய் நிபுணர் மேஜர் பால் பர்னி குறிப்பிட்டதாவது: "அதிக நேரம் நாங்கள் அல் குவைடா மற்றும் ஈராக்கிற்கும் இடையே உள்ள பிணைப்பு நிறுவுவதில் முக்கியத்துவம் காட்டினோம். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை." இந்த நிலைமை பற்றிய உயர்மட்ட அதிகாரிகள் பெரும் "திகைப்பிற்கு உட்பட்டனர்" என்றும் சித்திரவதைக்காரர்கள் "இன்னும் அதிக அழுத்தத்தையும் நடவடிக்கைகளையும் எடுத்து" தேவைப்பட்ட சான்றுகளை தயாரிக்கவேண்டும் என்று நினைத்தனர்.

ஸ்பெயின் நாட்டு கொடும் விசாரணைக் காலத்திலும் ஸ்ராலினுடைய கையாட்களின் காலத்திலும் இருந்ததைப் போல், இந்த சித்திரவதையின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களை அரசியலுக்கு தேவையான பொய்யைக் கூற வைப்பது ஆகும். இவ்விதத்தில் புஷ், சென்னி மற்றும் ரம்ஸ்பெல்ட் ஆகியோர் அல் குவைடாவிற்கு ஈராக் பேரழிவு ஆயுதங்கள் கொடுக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதைக் கூற விரும்பினர். அதுதான் அவர்கள் ஈராக்மீது சட்டவிரோத படையெடுப்பு நடத்தியதை நியாயப்படுத்த உதவும்.

எண்ணெய் வளம் உடைய ஈராக்மீது படையெடுக்க நியாயப்படுத்ததலுக்கான காரணங்களை பெரிதும் கொள்ள விரும்பிய புஷ் நிர்வாகத்திற்கு சித்திரவதையை இது ஒரு அரசியல் தேவையாக ஆக்கியது. Vanity Fair சமீபத்திய கட்டுரை ஒன்றில், அல் குவைடாவின் முக்கிய நபரான சுபைதா சித்தரவதையின் கீழ் ஈராக்கிய வலுவான மனிதர் சதாம் ஹுசைனுடன் பின் லேடன் ஒத்துழைத்து வடக்கு ஈராக்கில் உள்ள தன்னாட்சி குர்டிஷ் பகுதிகளின் உறுதித்தன்மையைக் குலைக்க விரும்பினார் என்று கூறியதாக எழுதியுள்ளது. இக்கூற்று ஈராக் போருக்கு வக்காலத்து வாங்கியோர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது. அதுவும் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் வில்லியம் சபைருக்கு அவருடைய போருக்கு ஆதரவு கட்டுரைகளில் மேற்கோளிடுவதற்கு.

சித்திரவதை பயன்பாடு ஒரு பரந்த வடிவமைப்பின் பகுதியாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பில் இருந்து தோன்றியது. தாக்குதல்கள் பற்றித் தீவிர விசாரணையை அது தள்ளிவிட்டது--அதில் சந்தேகத்திற்கு உரிய FBI கடத்தல்காரர்கள் பற்றிய உயர்மட்ட அதிகாரிகள் தாக்குதலுக்கு முன்பு நடத்திய விசாரணையும் இருந்தது. மேலும் பின் லேடனுக்கும் உயர்மட்ட அமெரிக்க அரசியல் நபர்களுக்கும் --ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் --இடையே இருந்த வணிக உறவும் அடங்கியிருந்தது. மாறாக இது தாக்குதல்களை ஒரு போலிக் காரணமாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானத்தில் குண்டு வீசித் தாக்கி ஆக்கிரமிக்க உதவியது.

அமெரிக்கச் செய்தி ஊடகம் மற்றும் அரசாங்கம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த தோற்றுவித்திருந்த தீவிர வெறி சூழ்நிலை ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க போர்க்குற்றங்களின் பின்னணியை ஏற்படுத்தியது--அவற்றில் Qula-i-Janghi கோட்டையில் தலிபான் கைதிகள் படுகொலை செய்யப்பட்டது போன்றவை இருந்தன. இது அமெரிக்க மேற்பார்வையில் ஆப்கானிய போர்ப்பிரபு ரஷிட் டோஸ்டமின் துருப்புக்களால் நிகழ்த்தப்பட்டது. இதைத்தவிர சித்தரவதைகளும் நடத்தப்பட்டன. பெப்ருவரி 2002ல் ஜனாதிபதி புஷ் கைதிகளை நடத்துவது பற்றிய ஜெனீவா மரபுகளை அமெரிக்கா ஏற்காது என்று கூறிவிட்டார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பிடித்த கைதிகள் குவாண்டநாமோ வளைகுடா சிறை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களுக்கு முறையீடு செய்ய முடியாமலும் வைக்கப்பட்டனர்.

புஷ் நிர்வாகம் சித்திரவதை மூலம் அது பெற்ற பொய்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. சுபைதா அல் குவேடாவை ஈராக்கிற்கு தொடர்பு படுத்தியதைத் தவிர, அவரும் பின்யெம் முகம்மதும் சித்திரவதைக்குட்பட்ட நிலையில் அமெரிக்கக் குடிமகன் Jose Padilla அமெரிக்க நகரங்கள் மீது "கறைபடிந்த குண்டு" தாக்குதலை திட்டமிட்டதாகவும் கூறினர்.

அமெரிக்க அரசாங்கம் பின்னர் இந்தக் கூற்றைக் கைவிட்டமை அது தவறு என்பதை அது உட்குறிப்பாக ஒப்புதல் கொடுத்தது போல் ஆயிற்று. ஆனால் முதல் செய்தி தன் நோக்கத்தை அதற்குள் நிறைவேற்றிவிட்டது. பாடில்லாவைப் பிடித்து ஒரு மாத காலத்திற்கு பின்னர்தான் புஷ் நிர்வாகம் அவர் கூறியிருந்த "கறைபடிந்த குண்டு" திட்டம் பற்றி மக்களிடம் அறிவித்தது. பின்னர் அதைப் பயன்படுத்தி FBI முகவர் Coleen Rowley தன்னுடைய 9/11 கடத்தல்காரர்கள் பற்றிய விசாரணை FBI மேல் அதிகாரிகளால் மூடிமறைக்கப்பட்டுவிட்டது என்று கூறியதை அடுத்து எழுந்த பெருகிய விவாதத்தை நான்கு நாட்களில் மூழ்கடித்துவிட்டது.

ஈராக் படையெடுப்பு, வாஷிங்டனுக்கு ஈராக்கிய மக்களுக்கு எதிராக சித்திரவதைப் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்கம் கொடுத்து, அதனால் அது ஈராக்கிய எதிர்ப்பு பற்றிய தகவல்களை அறிவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சித்திரவதை பற்றி அமெரிக்க மக்களுக்கு நியாயப்படுத்தப்பட்டது. குவாண்டநாமோ வளைகுடா சிறைத் தளபதி ஜெப்ரி மில்லர் ஈராக்கை "குவாண்டநாமோ " ஆக்க ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார்--அதாவது குவாண்டநாமோ விசாரணை முறைகளை ஈராக்கிய கைதிகளுக்கு மாற்றும் வழிவகையை செயல்படுத்த. இதன் விளைவு அபு கிரைப் ஊழல் ஆகும். 2004 மிகப் பெரிய அளவில் ஈராக்கிய கைதிகள் அமெரிக்க சித்திரவதை முறையில் வாடியதை காட்டிய படங்கள் வெளிப்பட்டன.

சித்திரவதைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான பிணைப்பு சர்வதேச இராணுவ மன்றம் (International Military Tribunal) என்று நூரெம்பேர்க்கில் நாசித் தலைமை மீது குற்றச்சாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட அமைப்பின் கருத்தை உறுதிப்படுத்துகிறது. "ஆக்கிரமிப்புப் போரைத் தொடக்குதல் .... ஒரு சர்வதேசக் குற்றம் மட்டும் அல்ல, அது தலையாய சர்வதேசக் குற்றமும் ஆகும்; மற்ற போர்க் குற்றங்களைவிட இது வேறுபட்டிருக்கும் தன்மை அதற்குள்ளேயே முழுமையான தீமையின் குவிப்பைக் கொண்டிருப்பதாகும்."

உலக சோசலிச வலைத் தளம் ஜனநாயகக் கட்சி அல்லது ஒபாமா நிர்வாகத்தின்மீது புஷ் நிர்வாகத்தின் சித்திரவதைப் பயன்பாடு பற்றிய விசாரணையில் எந்த நம்பிக்கையையும் வைக்கவில்லை. அது மூடப்படவில்லை என்றாலும், இத்தகைய சக்திகளால் நடத்தப்பட்டும் எந்த விசாரணையும் அரசியல் கருத்துக்களான புஷ்ஷின் சித்திரவதைத் திட்டத்தில் ஜனநாயகக் கட்சியின் உடந்தை மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் ஒபாமா போர்களை தொடர்வதை நியாயப்படுத்துவது ஆகியவற்றின் தேவையை ஒட்டி ஆழ்ந்த சமரசத்திற்கு உட்பட்டுவிடும். புஷ் நிர்வாகத்தால் நடாத்தப்பட்ட குற்றங்களுக்கு முழு அரசியல் ஆளும்வர்க்கத்தையும் பொறுப்பு எனக்கூறும் ஒரு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் ஒன்றினூடாகத்தான் உண்மையான கணக்கு தீர்க்கப்படமுடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved