World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Politics and economics dominate response to swine flu epidemic

அரசியலும் பொருளாதாரமும் பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் எதிர்கொள்ளலில் ஆதிக்கம் செலுத்துகின்றன

By David Walsh and Sean South
30 April 2009

Back to screen version

உலகம் முழுவதும் பரவும் அபாயத்தை கொண்டுள்ள பன்றிக் காய்ச்சல்தொற்று நோய் சமூக வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளையும் முதலாளித்துவ சந்தை மற்றும் தேசிய அடித்தளம் கொண்ட போட்டி பெருநிறுவன உயரடுக்குகளுக்கு அடிபணிய வைப்பதின் பேரழிவு தரும் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளது. நோய், இறப்பு மற்றும் வறுமையையும், சமூக சமத்துவமின்மையும் மற்றும் உலகில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உள்கட்டுமானம் இன்மையும் பொருளாதார குழப்பத்தினால் சூழப்பட்டுள்ளன.

தேசிய எல்லைகள் மற்றும் தேசியரீதியான அடித்தளத்தைகொண்ட பிரதிபலிப்புக்களால் ஒவ்வொரு முனையிலும் திகைப்பிற்கு உட்படுத்தப்படும் உலக அச்சுறுத்தல் ஒரு தற்கால மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆதாரங்களை பகுத்தறிவார்ந்த, ஒருங்கிணைத்த முறையில் செயல்படுத்தி சமாளிக்கப்பட வேண்டும்.

தொழில்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில், எல்லாவற்றிகும் மேலாக அமெரிக்காவில், தொற்றுநோய் பரவுவதால் மனித குலத்தின் இழப்பின் சாத்தியம் பல தசாப்தங்கள் பொது சுகாதாரத்தை தொடர்ந்து அரசாங்கங்கள் புறக்கணித்ததின் விளைவாக மிகப் பெரியதாக ஆகியுள்ளது. அரசாங்கங்கள் நிதிய நலன்களுக்கு கட்டுப்பட்டு, சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டுமானத்திற்கு போதிய இருப்புக்கள் இல்லாமல் செய்துவிட்டன.

பன்றிக் காய்ச்சல் பரவுதலை எதிர்கொள்ளுவதற்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) புதனன்று எச்சரிக்கை கட்டத்தை 5 என்று அதை உயர்த்தியது. இந்தத் தரம் மிகப் பரந்த முறையில் மனிதர்களுக்கு தொற்று நோய் வருவது மற்றும் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதைக் குறிப்பது ஆகும். உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தலைவர் Margaret Chan அனைத்து நாடுகளையும் தங்கள் "தொற்று நோய் சமாளிப்புத் திட்டங்களை" துரிதப்படுத்தும்படியும் அரசாங்கங்களும் தடுப்பு ஊசி, காய்ச்சல் மருந்து உற்பத்தியாளர்களும் நெருக்கடியை எதிர்கொள்ள இருப்புக்களை திரட்டும்படியும் வலியுறுத்தியுள்ளது.

ஒன்பது நாடுகள் உத்தியோகபூர்வமாக பன்றிக் காய்ச்சல் பற்றி தகவல் கொடுத்துள்ளதாகவும், பல நாடுகளில் சந்தேகத்திற்குரிய பாதிப்புக்கள் இருப்பதாகவும் அமைப்பு அறிவித்துள்ளது. பரிசோதனைக் கூடத்தில் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பற்றி மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், நியூஜிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் இங்கிலாந்தில் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

பிரேசில், ஆஸ்திரேயிலியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நோய் இருப்பதின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ள போதிலும் இது உத்தியோகபூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்பட்டியல் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக்கூடும்.

சாதாரணமாக அவ்வப்பொழுது வரும் விஷக்காய்ச்சல் உலகெங்கும் 250,000 முதல் 500,000 மக்கள் உயிர்களை குடிக்கிறது என்றால், தற்போதைய நிலைமையில் சிறப்புக் கவலைக்கான காரணம், ஜோர்ஜியாவின்அட்லான்டாவில் இருக்கும் Emory University School of Meidcine இன் Dr.Carlos del Rion கருத்துப்படி, "வாடிக்கையாக வரும் காய்ச்சலை எதிர்கொள்ள தடுப்பூசி நம்மிடம் உள்ளது. இந்த பன்றிக் காய்ச்சல் ஒரு முற்றிலும் புதிய வகை காய்ச்சல் ஆகும்.... தடுப்பூசி போடக்கூடிய விதம் இல்லாத ஒரு விஷக் காய்ச்சல் இது. இதை எதிர்க்க போதுமான முன் தடுப்பு முறை இல்லை. எனவே இறப்பு விகிதம் சாதாரண காய்ச்சல் கிருமி நோய்களைவிட அதிகமாக இருக்கும்." என்று அவர் CNN இடம் கூறினார்.

முதலில் இக்காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவில், சுகாதார அதிகாரிகள் புதன்கிழமையன்று இதையொட்டி ஒருவேளை இறந்திருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை 152 என்பதில் இருந்து 159க்கு உயர்த்தினர். மெக்சிகன் நாட்டு மருத்துவமனைகளில் மொத்தம் 1,311 பேர் பன்றிக் காய்ச்சல் அடையாளங்களை கொண்ட விதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உறுதிபடுத்தப்பட்ட காய்ச்சல் பாதிப்பாளர்கள் ஏற்கனவே இந்த விஷக்கிருமியின் தாக்குதலுக்கு உட்பட்டவர்களில் ஒரு சிறிய விகிதத்தில்தான் இருக்கக்கூடும். செய்தி ஊடகத் தகவல்கள் குறைந்தது 2,400 மெக்சிகன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளன. வேலையின்மை, வறுமை மற்றும் ஊட்டமின்மை ஆகியவை மிகப் பெரிய காரணிகளாக இருந்து நோயைப் பரப்பி அதன் கடுமையையும் அதிகரித்துள்ளன. (See: "Mexico: Epidemic deepens the social crisis")

தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கும் தடுப்புக்குமான அமெரிக்க நிலையம் (CDC) புதனன்று காலை அமெரிக்கா முழுவதும் 91 உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இருப்பதாகக் கூறினார். அவை 10 மாநிலங்களில் உள்ளன (அரிசோனா, கலிபோர்னியா, இந்தியானா, கன்சாஸ், மாசச்சுசட்ஸ், மிச்சிகன், நெவடா, நியூயோர்க், ஓகையோ, மற்றும் டெக்சாஸ்). ஆனால் CDC உடைய இடைக்கால இயக்குனரான Dr.Richard Besser செய்தி ஊடகத்திடம் புதனன்று, "இந்த எண்ணிக்கைகள் நான் அவற்றை கூறுவதற்குள் காலங்கடந்ததாகி விடும்" என்றார்.

ஒரு 23 மாத சிறுவன் திங்களன்று இரவு நோயில் இறந்த முதல் நோயாளியானான். இச்சிறுவன் தன்னுடைய பெற்றோர்களுடன் மெக்சிகோவில் இருக்கும் மாடமோராஸில் இருந்து டெக்சாஸில் உள்ள பிரெளன்வில்லேக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் உறவினர்களை காண்பதற்கு பயணித்தான். டெக்சாஸில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட சிறுவன் இறுதியில் ஹூஸ்டனில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அவன் இறந்து போனான்.

நியூ யோர்க் நகரத்தில் மிகத் தீவிர தொற்று ஏற்பட்டது; 45 நோயாளிகள் க்வீன்ஸ் பள்ளி ஒன்றில் இருந்து குவிந்து வந்திருந்தனர். செவ்வாயன்று நகர அதிகாரிகள் இன்னும் ஆறு நோயாளிகள் பற்றி, மன்ஹாட்டனில் இருக்கும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் பற்றி விசாரித்தனர். இன்னும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் பிரான்சிலும், புரூக்லினில் ஒரு பெண்மணியும் பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனரோ என நிர்ணயிக்க நகரம் முயல்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கூடுதல் நோயாளிகளும் விசாரணைக்கு உட்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளுக்கு விடையிறுக்கும் வகையில் CDC, "இன்னும் கூடுதலான நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதும், அதிக இறப்புக்களும் வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று எச்சரித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல், இலாப அமைப்புமுறை எப்படி அடிப்படை மனித சுகாதாரம், பொதுநலம் ஆகியவற்றுடன் இயைந்து இருக்க முடியாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆபத்து அல்லது வணிகத்திற்கு பெரும் ஆதாயம் மற்றும் இந்தநிலையில் இருந்து எத்தகைய பிற்போக்குத்தன அரசியல் ஆதாயங்களை ஈட்டலாம் என்பதுதான் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகளுடைய மனத்தில் மேலோங்கி நிற்கிறது.

விவசாயத் துறை மந்திரி டோம் வில்சாக் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள் இந்த நோய் "பன்றிக் காய்ச்சல்" என அழைக்கப்படக்கூடாது என்றும் அப்பெயர் "பன்றி இறைச்சிப் பொருட்களில்" சிக்கல் என்பது போல் காட்டுகிறது என்றும் காட்டுவதற்கு வலிந்து முன்னிற்கின்றனர். ஜனாதிபதி பாரக் ஒபாமா தகவலை நன்கு உணர்ந்தது போல் செவ்வாயன்று நெருக்கடியை "H1N1" தொற்றுநோய் என்று குறிப்பிட்டார்; முதல் நாள்தான் அவர் அதை "பன்றிக் காய்ச்சல்" என்று கூறியிருந்தார். "சில விவசாயத் தொழில்களின் பிரதிநிதிகள் ஒபாமா நிர்வாகத்திடம் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்" என்று ABC News குறிப்பிடுகிறது.

இப்பிரச்சினை பற்றி வினவப்பட்டபோது, உலக சுகாதார அமைப்பின் புகுடா "பன்றிக் காய்ச்சல்" என்ற பெயரை மாற்றும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் துவக்கவில்லை... இந்த விஷ நோய் பன்றி தொற்று நோய் என்பதுடன்தான் அடையாளம் காணப்படுகிறது." எனக்கூறினார்.

அமெரிக்காவில் உள்ள பல தன்னல அரசியல்வாதிகள் காய்ச்சல் நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மெக்சிகோ எதிர்ப்பு உணர்வைத் தூண்டியுள்ளனர். செனட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு குழு விசாரணை ஒன்றில் புதனன்று செனட்டர்கள் ஜோசப் லிபர்மன், ஜோன் மக்கெயின், சூசன் கோலின்ஸ் ஆகியோர் ஏன் அரசாங்கம் அமெரிக்க மெக்சிகோவின் எல்லையை மூடவில்லை என்று உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜேனட் நேபோலிடானோவையும் CDC யின் துணை அட்மிரல் ஆனி ஷுக்காட்டையும் கேட்டனர்.

அமெரிக்காவிற்குள் காய்ச்சல் இருக்கும் தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது அத்தகைய நடவடிக்கை பலன் ஏதும் தராது என்று நேபோலிடானோவும் ஷுக்காடும் சுட்டிக்காட்டினர். ஆனால் செனட்டர்கள் தொடர்ந்து இப்பிரச்சினையை எழுப்பினர். CTC யின் இடைக்கால அறிவியல், பொது சுகாதார துணை இயக்குனரான ஷுக்காட் இது தேவயற்ற திசைதிருப்பல் என்று அப்பட்டமாக கூறியதுடன், "முன்னோக்கி செல்கையில் எல்லையை மூடுவதால் எந்த சூழ்நிலையும் சிறந்து விடப் போவதில்லை" என்றும் கூறினார்.

இந்த வாரத் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு செய்தித் தொடர்பாளர் Gregory Hartl, செய்தியாளர்களிடம் உலக சுகாதார அமைப்பு பல நாடுகளையும் நோயாளிகளுக்கு Tamiflu போன்ற சிகிச்சை கொடுக்குமாறும் அதிக தொற்றின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தேசிய திட்டங்களை செயல்படுத்துமாறும் கோரியிருப்பதாகக் கூறினார்.

"அரசாங்கங்கள் குறிப்பிட்ட நோய்க்காக விபத்துக்கால, நெருக்கடி வைத்தியசாலை இருப்பிட வசதிகள் பற்றி அதிகளவு கவனத்தை கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான உள்கட்டுமானத்தை அவை கொண்டிருக்கின்றனவா? அவற்றிடம் தக்க கருவிகள் உள்ளனவா? மருந்துகளை வைத்துக் கொண்டிருக்கின்றனவா? இது தயாரிப்பிற்கு உகந்த நேரம்" என்றார்.

அமெரிக்கா அத்தகைய நெருக்கடிக்குத் தயாராக இல்லை என்பது பெருநிறுவன நலன்களுக்கு ஏற்பத்தான் ஒவ்வொரு முடிவும் இருக்க வேண்டும் என்ற உண்மையில் இருந்து தெரிய வரும். உதாரணமாக MSNBC கூறுகிறது: அமெரிக்க காய்ச்சல் தடுப்பூசி உற்பத்திமுறை மத்திய அரசாங்கத்திற்கும் மற்றும் பல மருந்து தயாரிப்பாளர்களான GlaxoSmithKline, Novartis, Sasnofi Pasteur, MedImmune ஆகியவற்றிற்கும் இடையிலான பங்காளித்தனமான முறையில் உள்ளது." போதுமான அளவு தடுப்பூசி உள்ளதா என்பது இறுதி ஆய்வில், உற்பத்தி இலாப முறையின் அடிப்படையை நம்பியுள்ளது. அதைத்தான் 2004-05 தொற்றுநோய் தடுப்பூசி தட்டுப்பாடு காட்டுகிறது.

47 மில்லியன் மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு இல்லாத ஒரு நாட்டில் உண்மையான, ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை இச்சூழ்நிலையில் இயலாது. பொது அதிகாரிகள் சந்தேகத்திற்கு உரிய அடையாளங்கள் இருப்பவர்களிடம் "உங்கள் டாக்டரைப் பாருங்கள்" என்று ஆலோசனை கூறுகின்றனர். பலருக்கும் டாக்டரைப் பார்ப்பது என்பது நிதிச் சுமை ஆகும்; ஒரு தீவிர நோய்வாய்ப்படுதல் என்பது அவர்களுக்கு ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆகும்.

அமெரிக்காவில் ஏற்கனவே பேரழிவுகரமான பற்றாக்குறையான சுகாதாரக் காப்பு உள்கட்டுமானம் இப்பொழுது பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கூடுதலான அழிவிற்கு உட்பட்டுள்ளது. ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கங்கள் செலவுகளைக் குறைத்து மக்களுடைய உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நியூயோர்க் டைம்ஸ் புதனன்று மந்த நிலை "நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அரசாங்க, உள்ளூர் சுகாதாரப் பிரிவுகளில் இருந்து அகற்றிவிட்டது; அவைதான் இப்பொழுது நாட்டில் காய்ச்சல் தொற்றுக்கு எதிராக முன்னணியில் இருக்கும் அமைப்புக்கள் ஆகும்." என்று எழுதியுள்ளது.

செய்தித்தாள் பல கவலை தரும் கருத்துக்கள் பொது சுகாதார அதிகாரிகள் வெளியிட்டதை மேற்கோளிட்டுள்ளது. நாட்டினதும் நகரங்களினதும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான தேசிய அமைப்பின் நிர்வாக இயக்குனர் Robert M. Pestronk, டைம்ஸிடம் "உள்ளூர் சுகாதாரத் துறைகள் அன்றாடம் செய்ய வேண்டிய பணிக்குக் கூட போதுமான அளவு ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. மிக அதிக அளவு வேலைப்பளு என்றால் இப்பொழுது செய்யப்படும் மற்ற வேலைகள் செய்யப்பட மாட்டாது என்று பொருள் ஆகும். தொற்றின் பரப்பைப் பொறுத்து, திறன் அதிகப்படுத்தப்படலாம்." எனக்கூறினார்.

Pestronk உடைய அமைப்பு உள்ளூர் சுகாதாரப் பிரிவு கிட்டத்தட்ட $300 மில்லியனை 2008ம் ஆண்டு நிதிக்கும் 7,000 ஊழியர்களுக்கு கொடுக்கும் வகையிலும் வரவுசெலவுத்திட்டத்தில் குறைப்புக்களால் இழந்தது. இந்த ஆண்டும் 7,000 வேலைக் குறைப்புக்கள் இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அரசாங்க பொது சுகாதார நிறுவனங்கள் இன்னும் ஒரு 1,500 கூடுதலான வேலைகளைக் குறைத்துள்ளன. 2009ம் ஆண்டில் மற்றும் ஒரு 2,500 வேலைகள் தகர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயோர்க் நகரத்தில் சுகாதரப் பிரிவு அவசரக் காலத் தயாரிப்புச் செலவை ஓராண்டிற்கு முன் $5 மில்லியனை குறைத்தது. கலிபோர்னியாவின் பொது சுகாதாரத் துறை சமீபத்தில் 10 சதவிகித வரவுசெலவுத்திட்ட குறைப்பிற்கு உட்பட்டது. காங்கிரஸ் பல தொற்றுக் காய்ச்சல்கள் தடுப்புத் தயாரிப்பிற்கு வைத்திருந்த கிட்டத்தட்ட $900 மில்லியனை அகற்றியமுறையில் சமீபத்தில் ஊக்க சட்டவரைவு ஒன்றை இயற்றியது.

அரச மற்றும் பிராந்திய சுகாதார உத்தியோகர்களுக்கான அமைப்பில் உள்ள Dr.Paul E. Jarris டைம்ஸிடம் "மிக அதிக அளவில் நாம் அவற்றை நாடும் நிலையில் இருக்கையில் முழு அமைப்பும் தமது இருப்புக்கள் குறைப்பதில் வரிசையில் நிற்கின்றன." என்றார்.

திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் CDC உடைய இடைக்கால இயக்குனர் Besser ஒரு நேரடியான, மறைவற்ற அறிக்கையை கொடுக்கும் விதத்தில், "பொருளாதார உண்மை நிலைமை மாநில மற்றும் உள்ளூர் பொதுச் சுகாதரத்தை தாக்கியுள்ளது". நாடு கூடுதலாக "மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் இத்தகைய தொற்று நோய்கள் வெளிப்பாட்டை விரைவில் அடையாளம் கண்டு கொள்ளுவதற்கு, பொது சுகாதாரப் பணியாளர்களை நம்பியுள்ளது" என்றார்.

அவர் மேலும் "அந்த உள்கட்டுமானம் நாங்கள் அடையாளம் கண்டு பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான முதுகெலும்புகளில் ஒன்று என்று நாங்கள் நம்பியிருக்கிறோம்." எனக் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved