World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : தொழிலாளர் போராட்டங்கள்

May Day 2009: Reports on rising class struggle from around the world

மே தினம் 2009: உலகெங்கிலும் எழுச்சியுறும் வர்க்க போராட்டம் குறித்த செய்தி அறிக்கைகள்

By our reporters
1 May 2009

Back to screen version

உலகப் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டு மரபுகளை கொண்டாடும் தொழிலாளர் விடுமுறைத் தினமான மே தினம் இந்த ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடி உலக தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியை சமூக போராட்டத்திற்குள் தள்ளும் ஒரு நிலையில் குறிப்பிடப்படுவதாய் அமைந்திருக்கிறது.

அமெரிக்காவில் சமூக கோபம் பெருமளவில் அதிகரித்து வருகிறது, அரசாங்க நிதியங்களில் இருந்து டிரில்லியன்கணக்கான டாலர்கள் வங்கிகளுக்குள் இறைக்கப்பட, நிலுவை செலுத்த முடியாது இருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் வேலை இழப்புக்கு முகம்கொடுக்கின்ற அல்லது நிதிச்சிக்கல்களை எதிர்கொள்கின்ற தொழிலாளர்களுக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. சிகாகோவில் மூடப்பட இருந்த குடியரசு சன்னல்கள் & கதவுகள் ஆலையை சென்ற ஆண்டு தொழிலாளர்கள் ஆக்கிரமித்து போராடியபோது இது நனவான வடிவத்தை எடுத்தது.

அதிகரிக்கும் வர்க்க பதட்டங்களின் மற்றுமொரு அடையாளமாக, சமீபத்திய ராஸ்முசன் (Rasmussen) கருத்துக்கணிப்பு ஒன்றில் அமெரிக்காவில், அதாவது கம்யூனிச விரோதம் என்பது ஏறக்குறைய ஒரு தேசிய மதமாக பரப்பப்படுகிற ஒரு நாட்டில், சோசலிசம் அல்லது தொழிலாள வர்க்க இயக்கம் என்பதற்கான ஒரு நேர்மறையான குறிப்பு கூட வெகுஜன ஊடகங்களில் தடைசெய்யப்படுகிற ஒரு நாட்டில், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேரும், இளைஞர்களில் 30 சதவீதம் பேரும் முதலாளித்துவத்தை விட தாங்கள் சோசலிசத்தை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள் என்பது வெளியாகி இருக்கிறது.

கனடாவில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரிப்பதன் அடையாளங்கள் தென்படுகின்றன, வின்ட்சரில் வாகனத் தயாரிப்பு நிறுவனமான அரட்கோவில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பு போராட்டமும் இதில் அடங்கும். கனடா வாகனத்துறை தொழிலாளர் சங்கமானது (CAW) கிரைஸ்லரில் திணித்திருப்பதும், விரைவில் GM மற்றும் போர்ட் தொழிலாளர்களிடையேயும் "நியாயம்" "போட்டித்திறன்" என்ற பெயரில் விரிவுபடுத்த இருப்பதுமான விட்டுக்கொடுப்புகள் குறித்து பாரிய கோபம் எழுந்துள்ளது.

நெருக்கடி ஐரோப்பாவுக்கு பரவுகின்ற நிலையில், தொழிலாள வர்க்க போராட்டங்கள் தொழில்துறைகளை மேலும் மேலும் பாதிக்கிறது என்பதல்லாமல், பூகோளரீதியாக பரவி கூடுதலான அரசியல் வடிவத்தையும் எடுக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சமீப மாதங்களில் கிழக்கு ஐரோப்பாவில், பொருளாதார நெருக்கடியை கையாளும் விதத்திற்கு அல்லது சர்வதேச நாணய நிதிய மீட்பு நிதிகளை அணுகும் பொருட்டு பிரதியுபகாரமாக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கும் முயற்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில், பல அரசாங்கங்கள் பொறிவு கண்டிருக்கின்றன. லாத்வியாவின் தலைநகரான ரிகாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் லாத்விய அரசாங்கத்தை வெளியேற்றியிருக்கின்றன, ஆர்ப்பாட்டங்கள் உக்ரைனை உலுக்கியிருக்கின்றன.

செக் குடியரசின் மிரெக் டோபோலேனெக் அரசாங்கமும் ஹங்கேரியின் பெரெங்க் கியுர்க்சானியின் அரசாங்கமும் கூட வீழ்ச்சி கண்டிருக்கின்றன. இரகசியமாக பதிவு செய்யப்பட்டு பின் பத்திரிகைகளுக்கு 2006ல் கசிந்த அவரது கருத்து ஒன்றில் கியுர்க்சானி, தனது தேர்தல் குழு நாட்டின் நிலை குறித்து 'காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் பொய்யுரைத்தது', நாடு பிழைத்திருந்தது என்றால் "தெய்வ அனுக்கிரகம், உலக பொருளாதாரத்தில் குவிந்திருந்த எண்ணிலடங்கா பணம், மற்றும் நூற்றுக்கணக்கான தந்திரங்கள்" தான் காரணம் என்று தெரிவித்து பிரபலமாகி இருந்தார்.

பிரான்சில் மே தின ஆர்ப்பாட்டங்களில் மில்லியன்கணக்கானோர் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஜனவரி மற்றும் மார்ச்சில் நிகழ்ந்த பாரிய அளவிலான, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு போராட்டங்களில் இதே அளவில் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். வாகனத்துறை, எரிசக்திதுறை, போக்குவரத்து துறை மற்றும் அரசு நிர்வாகத் துறைகளை வேலைநிறுத்தங்கள் உலுக்கி வருகின்றன. ஆலை மூடல்களையும் வேலை இழப்புகளையும் நிறுத்தும் ஒரு முயற்சியாக, நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமிப்பதையும் நிறுவன நிர்வாகத்தை சிறைவைப்பதையும் மேற்கொண்டு வருகிறார்கள். வேலைவாய்ப்பின்மை வருடத்திற்கு 1 மில்லியன் என்கிற விகிதத்தில் அதிகரித்து வருகிறது, இந்த ஆண்டும் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை சிறைவைப்பதற்கு பிரெஞ்சு மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது.

டயர் தயாரிப்பு கொன்டினென்டல் நிறுவனத்தின் மூடப்பட இருக்கும் கிளெய்ராய்க்ஸ் ஆலையில் பணிபுரியும் பிரான்சு தொழிலாளர்கள் ஜேர்மனியின் ஹனோவரில் இருக்கும் கொன்டினென்டல் ஆலைக்கு பயணம் செய்து அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து இரண்டு ஆலைகளும் மூடப்படுவதற்கு எதிராக கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஜேர்மன் சகாக்கள் கார்ல் மார்க்ஸ் படத்தையும், மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ்பெற்ற அழைப்பான, "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்" என்பதையும் தாங்கியிருந்த பதாகைகள் கொண்டு அவர்களை வரவேற்றனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சமீபத்திய ஜேர்மன் அரசாங்க கணிப்புகளின் படி, ஜேர்மனியின் பொருளாதார சரிவானது 6-7 சதவீதத்தை எட்டவிருக்கிறது, அமெரிக்காவிற்கான கணிப்பை விட இது அதிகமானதாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், எந்த பொருளாதார சரிவு காலத்திலும் ஜேர்மன் பொருளாதாரமானது 1 சதவீதத்திற்கும் அதிகமாய் சரிவடைந்ததில்லை.

வேலையில்லா திண்டாட்டம் ஜேர்மனியில் அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்க தலைப்பட்டிருக்கிறது, சமூக மற்றும் பொருளாதார பின்விளைவுகள் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் வெளிப்படையாக கவலை தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. "வரும் மாதங்களில் நெருக்கடி தனது மூன்றாவது கட்டத்தை எட்டும்: சமூக பாதுகாப்பு அமைப்பு நொருங்கத் தொடங்கும்" என்பதால் "அமைதிக் காலம் விரைவில் முடியவிருக்கிறது" என்று Süddeutsche Zeitung பத்திரிகை சமீபத்தில் தனது தலையங்கத்தில் எச்சரித்திருந்தது. அரசாங்கத்திடம் இருந்து வேலையின்மை நிதியுதவி அளவிலான சம்பளத்தை ஏறக்குறைய பெற்றுக் கொண்டிருப்பவர்களான குறைந்த வேலைநேர பணியாளர்களுக்கு குறிப்பாக இது சீரழிவான விளைவைக் கொண்டிருக்கும்.

பிரிட்டனில், வேலையிழந்த தொழிலாளர்கள் என்பீல்ட், பாசில்டன் மற்றும் பெல்ஃபாஸ்டில் விஸ்டியான் ஆலைகளை ஆக்கிரமித்துள்ளனர். தொழிற்சங்க அதிகாரியான கெய்த் ஃபிளெட் குறிப்பிடும்போது, "[விஸ்டியன் தொழிலாளர்கள்] உண்மையில் வெல்வார்களேயானால், இந்த வகையானது விரைவில் பெருமளவில் பரவும் என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

வேலைகள், சம்பளங்கள் மற்றும் வேலைநேரங்கள் மீது உலகப் பொருளாதார நெருக்கடி கொண்டுவந்துள்ள தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் கடந்த பன்னிரண்டு மாதங்களில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் அதிகரிக்கும் விலையும் பரந்துபட்ட வேலைநிறுத்தங்களுக்கு காரணமாகியுள்ளது.

சீனாவில் கடந்த செப்டம்பர் முதல் இந்த மார்ச் வரையான தொழிலாளர் சச்சரவுகளின் எண்ணிக்கை 546,470 என்று ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் டிரெண்ட் இதழின் மார்ச் மாத பதிப்பு தெரிவித்துள்ளது. இது 2007ம் ஆண்டின் இறுதியில் இருந்ததான அளவில் இருந்து ஏழு மடங்கு அதிகரிப்பாகும். ஏற்றுமதி சார்ந்த கடல்புற மாகாணங்களான குவாங்டாங், புஜியான் மற்றும் ஜியாங்க்சுவில் இந்த அதிகரிப்புகள் 10 மடங்காக இருப்பதோடு, உலக பொருளாதார நெருக்கடியின் ஒரு நேரடி விளைவாக வேலையிழப்புகளும் சம்பளக் குறைப்புகளும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை பாதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சம்பளம் கொடுக்காதது அல்லது சம்பளம் குறைத்தது அல்லது தொழிலாளர்களை ஏசியது ஆகிய காரணங்களின் பொருட்டு 500 க்கும் அதிகமான தனியார் தொழிலதிபர்கள் மற்றும் மூத்த நிறுவன அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த இதழ் குறிப்பிடுகிறது.

சீனாவில் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கோரிக்கை வலியுறுத்த கூட்டங்களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டில் 127,467 ஐ எட்டியிருக்கிறது, இதில் 12 மில்லியன் மக்கள் பங்கேற்றிருந்தனர் என்று ஹாங்காங்கின் செங் மிங் இதழின் பிப்ரவரி பதிப்பு தெரிவித்தது. 2005 இல் இந்த அளவு 87,000ஆக இருந்தது. இந்த சம்பவங்களில், 467ல் உள்ளூர் அரசாங்க துறைகள் முற்றுகையிடப்பட்டன, 615ல் போலிசார் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நிகழ்ந்தது, 110ல் அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நிகழ்ந்தது.

இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் 12 தேசிய அளவிலான வேலைநிறுத்தங்களும் மற்றும் ஏராளமான தொழிற்சாலை வாரியான வெளிநடப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தேறியுள்ளன. சம்பள உயர்வுகள், முழுநேர வேலை கோரியும் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தனியார்மயமாக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டிரக் டிரைவர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் பொது ஊழியர்கள் என பல தரப்பினரும் போராட்டம் நடத்தினர். ஜனவரி மாதத்தில், 50,000 எண்ணெய் மற்றும் எரிவாயு பொறியாளர்கள் நடத்திய தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நிகழ்ந்தது. மற்றும் சம்பள விஷயம் தொடர்பாக பீகாரில் 300,000 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 45,000 பேரும், கிழக்கு சிங்புமில் 250,000 பேரும், ஜம்மு காஷ்மீரில் 450,000 பேரும், உகர்லில் 400 பேரும் உள்ளிட ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். பிப்ரவரி மாதத்தில், சம்பள உயர்வு கோரி அருணாச்சலப் பிரதேசத்தில் 5,000 அரசு ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியட்நாமில் பணவீக்கம் அதிகரிப்பின் மீது வெகுஜன அதிருப்தி எழுந்திருக்கிறது. கடந்த வருடத்தில் சம்பள உயர்வுகள் மற்றும் மேம்பட்ட வேலை சூழ்நிலைகளுக்காக நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன, இவற்றில் பெரும்பாலானவை அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் நடைபெற்றன. சென்ற ஆண்டு பிப்ரவரியில் ஜப்பானிய வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Yazaky Eds Viet Nam Ltd நிறுவனத்தில் ஊதிய உயர்வுகள், கூடுதல் படிகள் மற்றும் வேலை நேரம் குறைக்கக் கோரி 5,000க்கும் கூடுதலான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அடுத்த மாதத்தில் தென் கொரிய நிறுவனமான Tae Kwang Vina பாதணி தயாரிப்பு தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரி 10,000க்கும் கூடுதலானோர் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். உத்தியோகபூர்வ எண்ணிக்கையின் படி, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் 2003 இல் 139 இல் இருந்து, 2005 இல் 147 ஆகவும், 2007 இல் 541 ஆகவும், 2008 இன் முதல் எட்டு மாதங்களில் 649 ஆகவும் அதிகரித்துள்ளன.

ஆசியாவின் பிற பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த போராட்டங்களில், பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசியாவின் பல தளபாட தயாரிப்பு நிறுவனங்களில் 2,000 க்கும் கூடுதலான வேலையிழந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளைக் கோரி நடத்திய போராட்டங்களும் அடக்கம். பிற இந்தோனேசிய ஆலைகளிலும் வேலையிழந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வமான உரிமைகளைக் கோரி தங்களது வேலையிடங்களில் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. பிலிப்பைன்ஸில், வேலைநீக்கம் செய்யப்பட்ட 250 தொழிலாளர்கள் அந்த ஆலையை முற்றுகையிட்டு தங்களின் உத்தரவாதமளிக்கப்பட்ட தொகைகளும் நஷ்ட ஈட்டுத்தொகையும் கிட்டும் வரை இரண்டு வாரங்களுக்கு ஆலையைத் திறக்கவிடாமல் செய்தனர்.

மார்ச் மாதத்தில், 200 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தின் சரக்கேற்ற இடத்தை பல நாட்களுக்கு ஆக்கிரமித்துக் கொண்டனர், 400 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவிருக்கும் திட்டத்தை எதிர்த்து. இந்தியாவில், ரெவெரியில் ஹீரோ ஹோண்டாவில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட 600 தொழிலாளர்கள் 1,800 ஹோண்டா ஊழியர்கள் வேலையிழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து ஆறு நாள் தொடர் பேரணி நடத்தினார்கள். அதே மாதத்தில் பங்களாதேஷில் 4,000 க்கும் அதிகமான சணல் ஆலை தொழிலாளர்கள் தங்களது ஆலை மூடப்பட்டதையும் தங்களுக்கு துண்டிப்பு தொகை மற்றும் பிற உரிமைகள் வழங்கப்படாததையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்களைத் துவக்கினர்.

ஏப்ரல் மாதத்தில், மிசெலின் தாய்லாந்து டயர் ஆலையில் 13 சதவீத சம்பள வெட்டை ஏற்க மறுத்த 380 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர், கொரியாவில் சாங்யாங் மோட்டார் ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்து, 2,600 வேலைகளுக்கும் அதிகமாக அல்லது நிறுவனத்தின் 7,100 ஊழியர்களில் 37 சதவீதத்தை அழிப்பதற்கு எதிராக நான்கு நாள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

லத்தீன் அமெரிக்காவில், 'நிதி நெருக்கடி அமெரிக்காவின் பிரச்சினை மட்டுமே' என்று பிரேசிலின் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லுலா டி சில்வா போன்றோர் முன்னர் பெருமையடித்திருந்தனர் என்றாலும், நிதி நெருக்கடியின் தாக்கமானது சரியும் ஏற்றுமதிகளிலும், பொருள் விலைகளிலும், கடன் வரத்து குறைவதிலும் வேலைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதிலும் உணரப்படுகிறது.

கண்டம் முழுவதிலும் தொழிலாளர்கள் பாரிய வேலையிழப்புகள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராக போராடத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆர்ஜென்டினாவில், வேலையிழப்புகளையும் ஆலை மூடல்களையும் நிறுத்தும் பொருட்டு தொழிலாளர்கள் ஆலை ஆக்கிரமிப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜேர்மனியின் வாகன உதிரிப்பாக தயாரிப்பு நிறுவனமான மெஹ்லே ரோசரியோ நகரில் இருக்கும் தனது ஆலையை மூடவிருப்பதாக அறிவித்ததை அடுத்து, சுமார் 500 தொழிலாளர்கள் தங்களது வேலையை பாதுகாக்கும் பொருட்டு அந்த ஆலையை கடந்த வாரம் முழுவதிலும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலியில், "தொழிலாளர்கள் இந்த நெருக்கடிக்கு சுமையேற்க கூடாது!" என்னும் முழக்கத்தின் கீழ் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 7.1 சதவீதம் சுருங்கி விட்டது, உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

வெனிசூலாவில் மே தினத்தை முன்னிட்டு, மாகாணத்தின் சுமார் 27,000 தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு முன்தயாரிப்பாக போன்டிவர்தே மாகாணத்தின் 2,000 உலோக தொழிலாளர்கள் தெருவில் இறங்கி, சாலை தடைகள் ஏற்படுத்தி டயர்களைக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

டொமினிகன் குடியரசில், வடக்கு மாகாணமான டுவார்டேவில் சமூக வாழ்க்கை நிலைகளில் மேம்பாடு கோரி வெகுஜன அமைப்புகள் இந்த வாரம் அழைப்பு விடுத்திருந்த ஒரு பொது வேலைநிறுத்தத்தில் ஆயுதமேந்திய போலிசாரும் இராணுவத் துருப்பினரும் வன்முறையை பிரயோகப்படுத்தினர். 13 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர், ஏராளமானோர் காயமுற்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved