World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Europe faces ever deepening recession

ஐரோப்பா மேலும் ஆழ்ந்த மந்த நிலையை எதிர்கொள்கிறது

By Chris Marsden
28 April 2009

Back to screen version

கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையான World Economic Outlook இல் ஐரோப்பிய பொருளாதாரங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ள அதன் மதிப்பீடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவை உலகப் பொருளாதார நெருக்கடியின் மையத்தினுள் உள்ளது என்று விளக்கியுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் கணித்துக் கூறியுள்ளது. யூரோ பகுதியின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.2 சதவிகிதம் சுருக்கம் அடையும் என்று அது மதிப்பிட்டுள்ளது. இது ஜனவரி மாத கணிப்பான 2 சதவீத குறைப்பைவிட முக்கியமான முறையில் மோசமாகும்.

ஐரோப்பிய ஒன்றியநாடுகள் வங்கிப் பிணை எடுப்புக்களினாலும் ஊக்கப் பொதிகளிலும் பாரிய கடன்களைப் பெற்றுள்ளன. மொத்தத்தில் 2.3 டிரில்லியன் யூரோக்கள் நிதிய உத்தரவாதங்களிலும், 300 பில்லியன் யூரோக்கள் மறு மூலதனக் கட்டமைப்பு திட்டங்களிலும், மற்றும் ஒரு 400 பில்லியன் யூரோக்கள் பலவித மீட்பு, மறுகட்டமைப்பு திட்டங்களிலும் செலவழிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு நடுவில் இருப்பதாகவும், தொழில்துறை உற்பத்தி அழைப்பாணைகள் 34.5 சதவீதம் வருடாந்தம் சரிந்துவிட்டது என்றும் புள்ளிவிவர அமைப்பான Eurostat குறிப்பிட்டுள்ளது. யூரோப் பகுதியின் வெளி நடப்புக் செலுத்துமதி பற்றாக்குறை 57.3 பில்லியன் யூரோக்கள் என்று 2008 இறுதி காலாண்டு முடிவு காலத்தில் அடைந்தது. இது 2007ம் ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட மூன்று பங்கு அதிகம் ஆகும். உலகச் சரிவை ஒட்டி ஏற்றுமதிகள் மட்டும் குறைந்துவிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்பது 2008ன் கடைசி மூன்று மாதங்களில் வெறும் 29.3 பில்லியன் யூரோக்களாகத்தான் இருந்தது. இது 2007 இன் நான்காம் காலண்டுப் பகுதியில் 171.9 பில்லியன் என்று இருந்தது. வெளி முதலீட்டாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் மூலதனத்தை எடுத்துக் கொண்டு விட்டனர்.

பிணை எடுப்புக்களின் செலவுகளும், அதையொட்டி சரியும் வரிப்பண வருமானங்களும் அரசாங்கப் பற்றாக்குறைகளை மிக அதிகமாகச் செய்துள்ளன. மொத்தத்தில் இவை 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதத்தை தொட்டு விட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கு அரசாங்கக் கடன் யூரோப் பகுதியில் 2007ன் இறுதியில் 66 சதவீதம் என்பதில் இருந்து இப்பொழுது 69.3 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினது 58.7 சதவீதத்தில் இருந்து 61.5 சதவீதம் என்று உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 சதவீதம் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் 2 சதவீதம் சுருக்கம் அடையும் என்றும் ஐரோப்பியப் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

வேலையின்மை 8 சதவிகித சராசரி என உயரக்கூடும்.

யூரோப்பகுதி அமெரிக்காவைவிட மோசமான மந்த நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கி வரவிருக்கும் மந்தநிலையை எதிர்கொள்வதில் மிகவும் தாமதப்படுத்துகிறது என்று புகாரையும் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய நிதியக் கொள்கைகள் "போதுமான அளவிற்கு விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும்" செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

ஐரோப்பாவின் வங்கிமுறை நிலை பற்றி குறிப்பிடத்தக்க வகையில் கவலை உள்ளது. அமெரிக்க வங்கிகள் தங்கள் நஷ்டங்களில் பாதிக்கு மேலானவற்றிற்கு உத்தரவாதம் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய வங்கிகளை ஐந்தில் ஒரு பங்கிற்குத்தான் அத்தகைய உதவியைக் கொண்டுள்ளன. இருண்ட எச்சரிக்கை ஒன்றில் சர்வதேச நாணய நிதியம் நஷ்ட இழப்புக்கள் மொத்தம் என்பது உலகத்தின் வங்கி சந்தைப்பெறுமதிகளையே தகர்த்துவிடக்கூடிய அளவிற்கு இருப்பாகக் கூறியுள்ளது.

Independent Credit View என்னும் சுவிஸ் தளத்தைக் கொண்ட ஆபத்து நிறைந்த செயற்பாடுகள் ஆலோசனை கூறும் நிறுவனம் ஒரு "இரண்டாம் அலை" கடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஐரோப்பாவைத் தாக்கும் என்றும் அமெரிக்க வங்கிகள் பெற்ற இருப்புப் பாதுகாப்போடு ஒப்பிடும்போது ஐரோப்பிய வங்கிகளுக்கு அதிர்ச்சியை தாங்கக்கூடிய தரம் இல்லா நிலைதான் இருக்கும் எனக் கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.

Credit View உடைய நிறுவனரான Peter Jeggli கூறுவது: "ஐரோப்பாவில்தான் மிகப் பெரிய ஆபத்து உள்ளது.... அமெரிக்கர்கள் வளைகோட்டில் மேலே உள்ளனர். ஐரோப்பிய வங்கிகள் அமெரிக்க வணிக, சொத்து சந்தை நிலையை எதிர்கொள்ள நேரிடும், மேலும் கிழக்கு ஐரோப்பா, ஸ்பெயின் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும். அங்கு நிலைமை மிகவும்மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ஸ்பெயினின் சேமிப்பு வங்கிகள் அடிப்படையில் சிதைந்துவிட்டதால் அரசாங்கப் பிணை எடுப்பு தேவை என்று நாங்கள் நினைக்கிறோம்."

பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது; "ஐரோப்பிய வங்கிகள் பல தரப்பட்ட சிக்கல்களை கொண்ட குமிழிகளின் ஆபத்துக்களுக்கு உட்பட்டுள்ளன. அமெரிக்கச் சொத்துக்கள் மூலம் பெரும் இழப்புக்களை எதிர்கொள்ளுவது மட்டும் இல்லாமல், தங்கள் கொல்லைப் புறத்திலேயே கடன் ஏற்றத்திலான விளைவுகளையும் எதிர்கொள்ளுகின்றன. மேலும் யூரோப் பகுதியில் பெருநிறுவனங்களின் உயர்கடன் நிலைமையினாலும் ஆபத்தை எதிர்கொள்ளுகின்றன. ஐரோப்பாவில் மரபார்ந்த வங்கிக் கடன்களை பொறுத்த வரையில் சேதம் வெளிப்பட கூடுதல் கால அவகாசம் ஏற்படும். சுழற்சியில் செலுத்தா கட்டணங்கள் பின் உயர்கையில் அவை பெரும் அவதிக்கு உள்ளாகும். ஐரோப்பிய மந்த நிலையின் சீற்றம் இழப்புக்கள் இம்முறை மிக அதிகமாக இருக்கும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிவிக்கின்றன."

ஐரோப்பிய வங்கி முறை கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களின் சரிவால் குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தை எதிர்கொள்ளுகிறது

பல நாடுகளும் ஏற்கனவே கையில் தொப்பியுடன் சர்வதே நாணய நிதியத்தை அணுகியுள்ளன. இதில் ஹங்கேரி, சேர்பியா, ருமேனியா, லாட்வியா, உக்ரைன் ஆகியவை உள்ளன. இதைத்தவிர ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவையும் 24.5 பில்லியன் யூரோக்களை கிழக்கு ஐரோப்பிய வங்கிகளுக்கு ஆதரவுப பொதியாக கொடுத்துள்ளன.

அப்படி இருந்தும்கூட, ஐரோப்பியப் பொருளாதாரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரிவு இருக்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர் விளைவுகளை ஏற்படுத்தி அண்டை நாடுகளிலும் மேற்கு ஐரோப்பிய வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தக்கூடும்.

Handelsblad பத்திரிகை தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இத்தாலியின் தேசியக்கடன் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடக் கூடுதலாகிவிட்டது. கிரேக்கம் இந்த எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, போர்த்துகல் மற்றும் ஆஸ்திரியா அனைத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் மேலான தேசியக் கடனை கொண்டுள்ளன.

ஜேர்மனி

பல அறிக்கைகள் ஜேர்மனி குறிப்பாக உலக மந்திநிலையின் பாதிப்பிற்கு உட்படும் என்று அடையாளம் காட்டுகின்றன. இதற்குக் காரணம் அது ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ளது. அது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாக உள்ளதுடன், மேலும் இது கிழக்கு ஐரோப்பிய கடனையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஜேர்மனிய பொருளாதாரம் இந்த ஆண்டு 5.6 சதவீதம் சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. ஜேர்மனிய நிதிய அமைப்புக்களின் குழு ஒன்று 6 சதவீத சரிவு இருக்கும் என்று கணித்துள்ளது.

"குறிப்பிடத்தக்க வகையில் நீடிக்கும்" மந்தநிலையை ஜேர்மனி எதிர்கொள்ளக்கூடும் என்றும் ஏற்றமதியில் 23 சதவிகிதச் சரிவையும் அது எதிர்கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலையின்மையை 11 சதவீதமாக்கும். ஜேர்மனியின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 132.5 பில்லியன் யூரோக்கள் என அதிகரிக்கும். இது 2010ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு அது 3.7 சதவீதம் என்று உள்ளது.

ஐரோப்பிய வங்கி இழப்புக்களில் கால் பகுதிக்கும் மேலாக கடந்த ஆண்டில் ஜேர்மனி அடைந்தது. கிழக்கு ஐரோப்பாவில் இதன் முதலீடுகள் ($450 பில்லியன், ஜேர்மனிய வங்கி சொத்துக்களில் 4 சதவீதம்) என்பது இன்னும் அதிக ஆபத்துக்களை உயர்த்தும். இது ஜேர்மனியோடு நின்றுவிடாது.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் இயந்திரமாக ஜேர்மனி உள்ளது. இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கும் மந்தநிலை இங்கு ஏற்படும்போது அது கண்டத்தின் மற்ற பகுதிகளை தொடர்ந்து இழுத்துவிடும்.

பிரிட்டன்

இங்கிலாந்து பொருளாதாரத்தின் ஆபத்து நிறைந்த தன்மை கவலைக்கு இரண்டாம் மிகப் பெரிய காரணம் ஆகும். இதற்கு லண்டன் ஒரு நிதிய மையமாக இருக்கும் பங்கு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

பிரிட்டனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதம் இந்த ஆண்டு சுருக்கம் அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதை விட மிக அதிமாகும். பிரிட்டனும் நடக்கும் மந்த நிலையில் கஷ்டத்தைத்தான் கொள்ளும்.

கடந்த வார வரவுசெலவுத் திட்டத்தில், சான்ஸ்லர் ஆலிஸ்டர் டார்லிங் இந்த ஆண்டு 3.5 சதவீதம் குறைவு இருக்கும் என்றும் 2010 ல் வளர்ச்சிப் பாதையில் மீட்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த வேறுபாட்டை பற்றிக் குறிப்படுகையில், சர்வதேச நாணய நிதிய தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் "மீட்பின் ஒரு பகுதி நம்பிக்கையில் தங்கியுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் நம்பிக்கையை மறுகட்டமைக்க முயலவேண்டும், மீட்பின் மேற்பகுதியை காணவேண்டுமே அன்றி சரிவின் கீழ்ப்பகுதியிலேயே உழலக்கூடாது." என கூறினார்.

"பல அரசாங்கங்கள் கூறியுள்ளதைவிட அதிகமான அவநம்பிக்கை கணிப்புக்களைத்தான் நான் கொடுக்க முடியும். கடந்த ஆண்டு நாங்கள் கூறியது சரியென்று ஆகிவிட்டது." என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

ஏப்ரல் 25ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரிட்டனுடைய வருங்கால நிலைபற்றி ஆழ்ந்த அவநம்பிக்கையை தெரிவித்துக் கூறியது: "உலகின் முக்கிய நிதியச் செய்லகளில் ஒன்றாக செயல்படும் தலைநகரை கொண்ட இங்கிலாந்து, ஐந்தில் ஒரு வேலைக்கு நிதிய பணிகளை நம்பியுள்ளதுடன், அதன் வரிமூல வருமானங்களில் கால் பகுதிக்கும் இதை நம்பியுள்ளது.... மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதல் காலாண்டில் ஏற்பட்ட சரிவான 1.9% (1979ல் 2.4 சதவீதம் அதிகமானதாக இருந்த நிலைக்கு பின்னர் மிக அதிகமானது) -இங்கிலாந்து அரசாங்கத்திற்கு சவாலைக் கொடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த அளவு கடன் எடுக்கவேண்டியிருந்ததில்லை. அதுவோ பணத்தை சரிவின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் அதன் வங்கி முறையை மீட்கவும் செலவழிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் நிகர கடன் தேவை 488 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் ($718 பில்லியன்)."

பிரிட்டனில் அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 80 சதவீதத்தைவிட அதிகமாக கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சரிவின் தன்மை பற்றிய அளவு வேலையின்மை ஏற்றத்தின் மூலம் நன்கு தெரியவருகிறது; அது 2 மில்லியனுக்கும் மேலாகப் போய்விட்டது. 2010 ல் இது மூன்று மில்லியினை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர சமீபத்திய பிரித்தானிய வர்த்தக சம்மேளனத்தின் மாதாந்திர வணிக அளவை 70 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டு ஊதிய முடக்கம் அல்லது குறைப்பை திட்டமிட்டுள்ளன என்றும் அவற்றில் பாதிக்கு மேல் அடுத்த ஆறு மாதங்களில் நிறைய ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதைத்தவிர, சர்வதேச நாணய நிதியம் பிரிட்டனின் வீடுகள் சந்தை இன்னும் சரிவைக் காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. வீடுகள் விலைகள் ஏற்கவே 20 சதவீதம் குறைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போலவே இங்கும் "இன்னும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியின் பின்புதான்" நிலைமை சீராகும் என்று கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள எதிர்க் கட்சியான பழைமைவாத கட்சியின் தலைவரான டேவிட் காமிரோன் ஒரு புதிய "சிக்கன சகாப்தத்தை" தோற்றுவிப்பது பற்றி பேசியுள்ளார். தொழிற்கட்சி அரசாங்கம் உறுதி கூறியதைவிட ஆழ்ந்த செலவினக் குறைப்புக்கள் வரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஸ்பெயின்

மந்த நிலையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் உள்ளது.

ஒரு நீடித்த கால சரிவு ஸ்பெயினின் பொருளாதாரத்தில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வீடுகள் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் விளைவு இது என்றும் அது கூறுகிறது. 2009ல் பொருளாதாரம் 3 சதவீதம் சுருக்கம் அடையும் என்றும் அது எதிர்பார்க்கிறது; அரசாங்க கணிப்போ 1.6 சதவீதம் என்று உள்ளது. இந்த மாதம் வேலையின்மை மிக அதிகமாக நான்கு மில்லியன் என்று கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இப்பொழுது அது 17.4 சதவீதம் என்று உள்ளதுடன், விரைவில் இது 20 சதவீதத்தை தாண்டும் என்றும் பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமான ஜோசே லூயிஸ் ரொட்ரிகஸ் ஸபடேரோ இதற்கு விடையிறுக்கும் வகையில் 70 பில்லியன் நிதிய ஊக்கத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது; இன்னும் கூடுதல் நிதியும் வரவுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இத்தகைய மோசமான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம் என்று உயர்வது பொருளாதார சரிவின் ஆபத்துக்களை உயர்த்தும் என்று எச்சரித்துள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸில் சார்க்கோசி அரசாங்கம் பொருளாதாரம் 2.5 சதவீதம் இந்த ஆண்டு சுருங்கும் என்று மதிப்பிட்டுள்ளது. பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் "2009ல் உறுதியானது இது ஒரு கடுமையான மந்த நிலை ஆண்டாக இருக்கும் என்பதுதான்." எனக் கூறினார்.

இந்த மதிப்பீடு பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் மதிப்பீட்டிற்கு (OECD) முரண்பாடாக உள்ளது. அது 3.3 சதவீத சுருக்கம் இருக்கும் என்று கூறுகிறது. பிரான்சின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை இப்பொழுது 6 சதவீதத்தில் உள்ளது.

கடந்த மாதம் வேலையின்மை 60,000த்திற்கும் 70,000க்கும் இடையே உயர்ந்தது. பெப்ருவரி மாதம் 79,900 வேலைகள் பிரான்சில் இழக்கப்பட்டுவிட்டன. வேலையின்மை விகிதம் இப்பொழுது 8.2 சதவீதம் என்று உள்ளது. ஆனால் இது 10 சதவீதத்தையும் விட இந்த ஆண்டு இறுதிக்குள் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையின்மை என்பது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் 21.2 சதவீதம் என்று இருப்பதுடன் பிரான்ஸில் 25 வயதிற்குக் கீழ் இருப்பவர்களிடம் அதிகமாக ஆகிவருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved