WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Top-level talks continue on US-led military
intervention in Sri Lanka
இலங்கையில் அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீட்டுக்கான உயர் மட்ட
பேச்சுவார்த்தை தொடர்கிறது
By Peter Symonds
10 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
தீவின் உள்நாடடு யுத்தத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும் சாக்குப்
போக்கில், வட இலங்கையினுள் அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீடொன்றுக்காக வாஷிங்டன்,
கொழும்பு மற்றும் புது டில்லிக்கிடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதை உறுதிப்படுத்தும் வகையில்
மேலும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர்
ரிச்சர்ட் பெளச்சர் கடந்த வாரக் கடைசியில் தெற்காசிய பத்திரிகையாளர்கள் குழுவொன்றின் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த
போது, பசுபிக் கமாண்டைச் சேர்ந்த (PACOM)
வெளிநாட்டுக்கு சென்று செயற்படும் மரைன் படையணி ஒன்றை இலங்கைக்கு அனுப்பும் திட்டங்களை வெளிப்படுத்தி
கொழும்பில் வெளியாகும் ஊடகச் செய்திகளைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
வேண்டுமென்றே விபரங்களை வெளிப்படுத்தாத அதேவேளை, பேச்சுவாரத்தைகள்
இடம்பெறுவதை பெளச்சர் உறுதிப்படுத்தினார். "சாத்தியங்களை கண்டுகொள்வதன் பேரில் நிலைமையை அவதானிக்க
சிலர் அங்கு இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எங்களால் செய்யக்கூடிய எதையும் நாம் செய்வோம்," என அவர்
தெரிவித்தார்.
கல்கத்தாவை தளமாகக் கொண்ட டெலிகிராப் ஊடகத்தின் வாஷிங்டன் நிருபரான
கே.பி. நாயர், மட்டுமே விபரமான செய்தியை வழங்கினார். "படையெடுப்பு நிகழுமெனில், அமெரிக்க சக்தியை
வெளிப்படுத்தும் புதிய காட்சியொன்றில் ஒபாமா நிர்வாகம் முதற்தடவையாக வெளிநாட்டில் தலையிடுவதாக
அமையும்," என நாயர் எழுதியிருந்த போதும் கூட, அமெரிக்க ஊடகங்களில் எந்தவொரு மதிப்பீடும் வெளியிடப்படவில்லை.
டெலிகிராப்பின் படி, இந்த பிரேரணை தொடர்பாக இலங்கை இராணுவத்துடன்
கலந்துரையாடுவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னரே பசுபிக் கமாண்டின் குழு கொழும்புக்கு வந்துசேர்ந்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகக் குழுவின் உப தலைவரான ஜேம்ஸ் மூர், ஒரு சுயாதீன மதிப்பீட்டை
செய்வதற்காக வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சென்றிருந்தார். "தமிழர்களை அமெரிக்கத் தலைமையில்
அப்புறப்படுத்தும் திட்டத்தின் பின்னால் அணிதிரளுமாறு ஹிலாரி கிளின்டன் தலைமையிலான இராஜாங்கத் திணைக்களத்தை
மூரின் அறிக்கை தூண்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது," என அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
சுருங்கிவரும் புலிகளின் கட்டுப்பாட்டிலான குறுகிய பிரதேசத்திற்குள் உணவு, தங்குமிடம்
மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி 200,000 மக்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் கண்மூடித்தனமான
குண்டுவீச்சுகளுக்கு இலக்காகவதாகவும் ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மதிப்பிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கமும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளும் சிக்கிக்கொண்டுள்ள
தமிழ் சிவிலியன்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றன. ஒரு ஒட்டுமொத்த இறுதித் தாக்குதலுக்கு
பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நோக்கில், இராணுவம் அங்குள்ள பொதுமக்களை விரட்டி அவர்களை பிரமாண்டமான
தடுப்பு முகாம்களுக்குள் அடக்கிவைக்க முயற்சிக்கின்றது. புலிகள் யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த்தைகளும் இன்றி
பொதுமக்களை வெளியேற அனுமதிக்க மறுக்கின்றனர். புலிகளின் பிரேரணையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து
வருகின்றது.
அமெரிக்க மரைன்கள் வட இலங்கைக்கு அனுப்பப்பட்டால் புலி போராளிகளுடன்
மோதல்கள் வெடிக்கக் கூடும். இந்த வெளிநாட்டில் தலையிடும் படையணிக்கு அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்
படையின் ஆதரவு இருக்கும். இந்த இராணுவ நடவடிக்கையில் சம்பந்தப்பட பிரான்சும் விரும்புவதாக செய்திகள்
சுட்டிக்காட்டியுள்ளன.
மக்களை அப்புறப்படுத்துதல் என்ற போர்வையில் அமெரிக்கத் தலையீடு
திட்டமிடப்படும் அதே வேளை, அது தமிழ் பொதுமக்கள் மீதான அக்கறையினால் தோன்றியதல்ல. 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2006
ஜூலையில் முதலாவது தாக்குதலைத் தொடுத்ததில் இருந்தே, கொழும்பு முன்னெடுக்கும் குற்றவியல் யுத்தத்துக்கு
வாஷிங்டன் இராஜதந்திர மற்றும் இராணுவ உதவிகளை வழங்கிவருகின்றது. படு மோசமான மனித உரிமை மீறல்கள்
பற்றி அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் எப்போதாவது முணுமுணுப்பதற்கு மேல் வெறெதையும் செய்யாத
நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஒபாமா நிர்வாகத்தின் ஆர்வம், புலிகளின் இராணுவ தோல்வியின்
அரசியல் விளைவுகள் சம்பந்தமான அக்கறையினாலேயே இயக்கப்படுகின்றது. 25 ஆண்டுகால யுத்தத்தை
தோன்றுவித்த, தசாப்த காலங்கள் நீண்ட உத்தியோகபூர்வ தமிழர் விரோத பாரபட்சங்களை தீர்ப்பதற்கு
மாறாக, புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் முன்னேற்றமானது இலங்கையிலும் அயலில் இந்தியாவிலும் இனவாத
பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கியுள்ளது. இலங்கை இராணுவத்தின் இரத்தக்களரி பற்றிய செய்தி சாத்தியமானளவு
வெடித்துச் சிதறும் விளைவுகளைக் கொண்டிருக்கும்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க தூதர் ரொபட்
பிளேக், "சகல சமூகத்தவர்களதும் அபிலாஷைகளை பாதுகாக்கும், மேம்படுத்தும் மற்றும் பேணிக்காக்கும் வகையில்
இந்த மோதல்களுக்கு ஒரு அரசியல் தீர்வு காணுமாறு" கோரும் வாஷிங்டனின் வேண்டுகோளை வலியுறுத்தினார்.
எவ்வாறெனினும், சிங்கள மேலாதிக்கவாதத்தின் அடிப்படையில் ஒரு அரசை உருவாக்கிவிட்டுள்ள ஆட்சியில் இருந்து
இலங்கை அரசாங்கங்கள், தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளைக் கூட
வழங்குவதற்கு முற்றிலும் இலாயக்கற்றவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
தீவில் அமெரிக்க இராணுவ இருப்பை ஸ்தாபிப்பதானது ஒரு நிரந்தரமான இராணுவப்
படை என்ற நிலையில் இருந்து புலிகள் அழிக்கப்படும் ஒரு சம்பவத்தில், தனது நலன்கள் பாதுகாக்கப்படுவதை
உறுதிப்படுத்திக்கொள்ள வாஷிங்டனுக்கு நிச்சயமாக பெரும் உந்துதலை வழங்கும். குறுகிய காலத்தில், ஏற்கனவே
அரசியல் ரீதியில் களன்றுகொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் மேலும் ஸ்திரமின்மை ஏற்படுவதை தடுக்க அமெரிக்கா
முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாக, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு
ஆசியாவுக்கான பரந்த பிரதான கப்பல் போக்குவரத்து பாதைக்கு அண்மையில் மூலோபாய முக்கியத்துவம்
வாய்ந்தவாறு அமைந்துள்ள இலங்கையில், தனது நிலையை விரிவுபடுத்திக்கொள்ள வாஷிங்டன் முயற்சிக்கின்றது.
பிராந்தியத்தில் தனது செல்வாக்கிலான பகுதியின் ஒரு பாகமாக இலங்கையையும்
கருதும் இந்தியாவின் மனோபாவம் தீவின் அமெரிக்கத் தலைமையிலான எந்தவொரு தலையீட்டுக்குமான பிரதான
மூலமாக கருதப்படுகிறது. புது டில்லி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நேர்த்தியான சமநிலைப்படுத்தும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை இராணுவத்துக்கு விநியோகங்களை மேற்கொள்ளும் பாகிஸ்தான்,
சீனா போன்ற எதிரிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதற்காகவே, பெரும்பகுதி இந்திய அரசாங்கம் இராணுவ
ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரிக்கின்றது. அதே சமயம், இலங்கையில் நடக்கும்
யுத்தம் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் சீற்றத்தை தூண்டிவிட்டுள்ள நிலையில், அது விழிப்புடன்
நகரவேண்டியுள்ளது.
கடந்த தசாப்தம் பூராவும், வாஷிங்டனும் புது டில்லியும், குறிப்பாக சீனாவின்
செல்வாக்கு வளர்ச்சியடைவது தொடர்பான இரு தரப்பினரதும் அக்கறையின் அடிப்படையில் ஒரு நெருக்கமான
மூலோபாய கூட்டை ஏற்படுத்திக்கொண்டன. ஆயினும், இரு நாடுகளதும் நலன்கள் முற்றிலும்
ஒருங்கிணையாதவையாகும். வட இலங்கையில் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அமெரிக்க தலையீடானது
அமெரிக்கா இந்திய செல்வாக்குக்கு குழிபறிக்கின்றது என்ற பீதியை புது டில்லியில் உள்ள அரசியல் ஸ்தாபனத்திற்கு
ஏற்படுத்தும்.
யுத்த அகதிகளை அப்புறப்படுத்துவதில் தனது சொந்த உதவியை இந்தியா ஏற்கனவே
வழங்கியுள்ளது. நேற்று இந்திய மருத்துவ குழு இலங்கையை வந்தடைந்தது. அதே சமயம், 1980களின்
கடைப்பகுதியில் வட இலங்கையில் தனது "அமைதிப்படை" நடவடிக்கைகள் அழிவில் முடிவடைந்ததை அடுத்து, புது
டில்லி முழுமையான இராணுவ தலையீட்டுக்கு தயக்கம் காட்டுகிறது.
டெலிகிராப்பின் படி, வாஷிங்டனில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷிவ் சங்கர்
மேனன் உடனான இந்த வாரம் நடக்கவுள்ள கலந்துரையாடலின் போது, இராணுவத் தலையீடு சம்பந்தமாக புது
டில்லியிடம் கருத்துக் கேட்க ஒபாமா நிர்வாகம் எண்ணியுள்ளது. தென்பகுதியில் உள்ள நெருக்கடி தொடர்பாகவும்
சுட்டிக்காட்டியுள்ள அந்தக் கட்டுரை, "தென் பகுதியில் குவிந்துவரும் நெருக்கடிகளை அணுகுவது எப்படி என்பது
தொடர்பாக இந்திய அரசாங்கத்தில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன" என விவரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஏற்கனவே இராணுவ
நடவடிக்கைக்கு எந்தவொரு ஆதரவும் வழங்குவதை எதிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "புலிகளின்
வெளிப்படையான அங்கீகாரமும் தமிழர்கள் இரத்தம் சிந்துவதால் ஏற்படும் விளைவுகளும் இன்றி அப்புறப்படுத்தும்
நடவடிக்கையை மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகளால், லோக் சபா தேர்தலில் தோல்விகாணக்கூடிய
சாத்தியத்தைப் பற்றியே நாராயணன் பிரதானமாக கவலைகொண்டுள்ளார்," என அந்த செய்தித்தாள்
தெரிவித்துள்ளது.
ஏப்பிரல் 16 மற்றும் மே 13ம் திகதிகளுக்கு இடையில் இந்திய பாராளுமன்ற
தேர்தல்கள் நடக்கவுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது தமிழ் கட்சிகளும் அடங்கிய ஒரு
ஒட்டுப்போடப்பட்ட கூட்டணியிலேயே தங்கியிருக்கின்றது. இலங்கை யுத்தம் தொடர்பான எதிர்ப்புக்களை சந்தித்த
தென்மாநிலமான தமிழ் நாட்டில் உள் அரசாங்கத்தின் பங்காளிகள், மோதல்களை நிறுத்த நடவடிக்கை
எடுக்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் இருந்து விலகுவதாக ஒரு முறை அச்சுறுத்தியுள்ளனர்.
அதே சமயம், "இந்தியா வகிபாகங்கள் இன்றி பார்வையாளராக இருக்க,
அமெரிக்கத் தலைமையில் தமிழ் பொதுமக்களை அப்புறப்படுத்துவது இடம்பெறுமெனில், இந்தியா ஒரு பிராந்திய
வல்லரசு மற்றும் வளர்ந்துவரும் ஒரு பூகோள வல்லரசு என்ற தனிச்சிறப்பில் பெரும் பாதிப்பை புது டில்லி சந்திக்க
நேரும்" என்பதையிட்டு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி விழிப்புடன் இருப்பதாக டெலிகிராப்
தெரிவிக்கின்றது.
இந்தியாவின் கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் மேனன் உடன் வாஷிங்டனில் நடக்கும்
பேச்சுவார்த்தைகளின் விளைவுகள் என்னவாக இருந்தாலும், எந்தவொரு அமெரிக்கத் தலைமையிலான தலையீடும்,
பூகோள அரசியல் நலன்களால் இயக்கபடுவதே அன்றி, வட இலங்கையில் தமிழ் சிவிலியன்கள் எதிர்கொள்ளும்
அவநம்பிக்கையான நிலைமையினால் இயக்கபடுவது அல்ல.
|