World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Billions for Wall Street, budget cuts for working people

Obama press conference reveals right-wing consensus in Washington

வோல் ஸ்ட்ரீட்டிற்கு பில்லியன்கள், தொழிலாளர்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் குறைப்புக்கள்

வாஷிங்டனில் வலது சாரி ஒருமித்த உணர்வு உள்ளதை ஒபாமாவின் செய்தியாளர் கூட்டம் வெளிப்படுத்துகிறது

By Patrick Martin
25 March 2009

Back to screen version

வெள்ளை மாளிகையில் இருந்து நாடு முழுவதும் ஒளிபரப்பப்பெற்ற செவ்வாய் இரவு நடைபெற்ற ஜனாதிபதியின் செய்தியாளர் கூட்டம், அமெரிக்காவின் நிதிய, அரசியல் நடைமுறைக்கும் -மிக அதிக ஊதியம் பெறும் பெருநிறுவனக் கட்டுப்பாடு செய்தி ஊடகத்தின் பிரதிநிதிகள் உட்பட--மக்களில் பெரும்பாலனவர்களாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் பெரும் சமூகப் பிளவிற்கு நிரூபணமாக இருந்தது.

ஒபாமா கொடுத்த ஆரம்ப அறிக்கை மற்றும் அநேகமாக அனைத்து வினாக்களும் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை சுற்றித்தான் இருந்தன; அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஆழ்ந்துள்ள இரட்டை முன்னீடுபாடுகளைப் பற்றித்தான் விவாதங்களிருந்தன, அதாவது வோல் ஸ்ட்ரீட்டிற்கு செல்வம், இலாபங்களை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும், இதற்காக அமெரிக்க மக்கள் மீது போதுமான தியாகங்கள் திணிக்கப்பட வேண்டும்.

செய்தியாளர் கூட்டத்திற்கு முந்தைய வாரம் முழுவதும், AIG நிர்வாகிகளுக்கு போனஸ் கொடுப்பதற்கு மக்கள் வரிப்பணத்தில் 165 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்பட்டது பற்றிய மக்கள் சீற்றத்தின் வெடிப்பு மேலாதிக்கம் செய்திருந்தது; அப்பெரிய நிறுவனத்தின் ஊக நடவடிக்கைகள்தான் உலகந்தழுவிய நெருக்கடியை தூண்ட உதவியது. கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் கூட்டாட்சி நிதியங்களில் இருந்து திவால் தன்மையை தவிர்ப்பதற்கு 170 பில்லியன் டாலருக்கும் மேலாக வாங்கியுள்ளது.

பிரதிநிதிகள் மன்றத்தில் வியாழனன்று போனஸ் மீது தண்டனை வரிகள் சுமத்தும் சட்டம் இயற்றப்பட்டபின், ஒபாமா நிர்வாகம், சட்டமன்ற குடியரசு மற்றும் ஜனநாயகப் பிரதிநதிகள் மற்றும் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதியினர் AIG மீதான தாக்குதல்களை பயனற்றவை, முறையற்றவை என கூறிய விதத்தில், ஆளும் உயரடுக்குகளில் கடுமையான மோதல்கள் இருந்தன.

அத்தகைய வழிவகையை தொடர்ந்த வகையில் ஒபாமா செய்தி ஊடகத்தில் தன் ஆரம்ப அறிக்கையை கொடுத்தார்; அதில் அவருடைய நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றிய சுருக்கம் இருந்தது; அதில் "நாம் அனைவரும் இதில் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்தான் நம் பொருளாதாரம் செயல்படும்" (நெருக்கடிக்கு காரணமான நிதிய ஊகக்காரர்களைக் குறைகூறும் முயற்சிகள் உட்குறிப்பாக நிராகரித்தல்), என்று இருந்தது; மேலும் வெளிப்படையான முறையில் "வோல் ஸ்ட்ரீட்டின் வங்கியாளர்களும் நிர்வாகிகளும்" மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் பாதுகாக்கப்பட்டிருந்தது.

"இலாபம் காண முற்பட்டதற்காக ஒவ்வொரு முதலீட்டாளரையும் தொழில்முயலுவோரையும், மற்ற அனைவரும் அரக்கத்தனமாக சித்தரிக்கக்கூடாது." என்றார் அவர். "அந்த உந்துதல்தான் நம்முடைய செல்வச்செழிப்பிற்கு ஊக்கமூட்டியது; அதுதான் இறுதியில் இந்த வங்கிகள் கடன்களை கொடுக்க வைக்கும் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் நகர வைக்கும்."

இத்தகைய முன்கருத்து பெருவணிகச் செய்தி ஊடகத்தின் பிரதிநிதிகளால் சவாலுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதற்கில்லை; அவர்களுள் சிலர் பல மில்லியனுக்கு உரிமையாளர்கள் ஆவர். வினா எழுப்பிய வடிவமைப்பில் இருந்தே, இரு புறத்திலும் --ஜனாதிபதி மற்றும் செய்தியாளர் கூட்டம்-- AIG ஊழல் பற்றி அதிகம் பேச வேண்டாம், அது முழு வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு பற்றி அமெரிக்க மக்களிடையே மீண்டும் பரந்த எதிர்ப்பைத் தூண்டும், அத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று மறைமுகமான உடன்பாடு இருந்தது போலும்.

AIG பற்றி ஒரு கேள்விதான் இருந்தது; நிதிமந்திரி டிமோதி கீத்னர் முதல் நாள் வங்கிகள் நலிந்த சொத்துக்களை விற்பதற்கு உதவித் தொகையாக நூற்றுக்கணக்கான பில்லியன்கள் இன்னமும் வரிப்பணத்தில் இருந்து பெறும் என்று அறிவித்தது பற்றியும் எந்த வினாவும் இல்லை. ஒதுக்க நிதிகள் மற்றும் பிற நிதிய ஊகக்காரர்கள் ஏற்கனவே தங்கள் முதலீடுகளில் வரவிருக்கும் இரட்டை இலக்க வருமானம் பற்றி ஆர்வத்துடன் உள்ளனர்; அவர்கள் குறைந்த ரொக்கம்தான் கட்டியிருந்தனர்; ஆனால் இழப்புக்களுக்கு கூட்டாட்சியின் உத்தரவாதத்தை அனுபவித்தனர்.

சமீபத்திய வங்கிப் பிணை எடுப்பு பற்றி ஒரு கேள்விகூட எழுப்பப்படாது அசாதாரணமாகும்; பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் மக்கள் உணர்வை இன்னும் தூண்டும் வகையில் எதையும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற முடிவில் நனவுடன் இருந்திருக்க வேண்டும் என்பதின்மூலம்தான் விளக்கப்பட முடியும்.

மாறாக ஒபாமா மற்றும் அவருடைய செய்தி ஊடக வினா எழுப்புபவர்கள் காங்கிரசிலுள்ள புதிய நிர்வாகத்தின் வரவு-செலவுத் திட்டம் பற்றிய பூசல் விஷயத்திற்கு மாற்றாகப் பேச முற்பட்டனர்; ஒபாமா பலமுறையும் பெரிய, பெருகிய வரக்கூடிய பற்றாக்குறைகள் இருக்கும் நிலையில் இன்னும் அதிக தொகையை சுகாதாரப் பாதுகாப்பு, விசை சேமிப்பு மற்றும் கல்வி இவற்றிற்கு செலவழிக்க இருக்கிறார் என்பதை விளக்க திரும்பத்திரும்ப கடுமையாக விழைந்தார் (பெரியதாகக் கூறப்படும் இந்நிதிகள் வோல் ஸ்ட்ரீட்டிற்கு கொடுக்கப்பட்ட பணத்தைப் பார்க்கும்போது மிகவும் குன்றியது போல் தோன்றியது.)

அனைத்து செய்தி ஊடக நிதியக் கொள்கை பற்றிய வினாக்களும் நிர்வாகத்தின் வலதுசாரி குடியரசு, ஜனநாயகக் கட்சி விமர்சகர்களின் கருத்துக்களை எதிரொலித்தன; இதற்கு விடையிறுக்கையில் ஒபாமா நிதியப் பொறுப்பு அவருடைய மைய இலக்கு என்றும் ஒரு கட்டத்தில் சமூக வேலைத்திட்டங்கள் மீதான கூட்டாட்சி விருப்புரிமைச் செலவுகளைக் கூட குறைப்பதாக பெருமை அடித்துக் கொண்டார்--இந்த பணத்திற்கு சட்டபூர்வ திட்ட நடவடிக்கைகளான சமூகப் பாதுகாப்பு மருத்துவப் பாதுகாப்பு என்று தேவையில்லை; இவை 1960 களுக்கு பின்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த சதவிகிதத்தில் உள்ளன.

அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஒபாமா சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம் பற்றி பேசியது இருந்தது; அவருடைய ஆரம்ப அறிக்கையில் அவருடைய முக்கிய முன்னுரிமைகள் பட்டியலில் இது கடைசியாக இருந்தது. இதை அவர் கீழ்க்கண்டவாறு விளக்கினார்: "குடும்பங்களுக்கான சுகாதாரச் செலவினங்கள், வணிகங்கள் மற்றும் நம் அரசாங்கத்திற்கான செலவினங்களைக் குறைக்கும் சீர்திருத்தத்திற்கு நாம் அதிகாரம் அளிக்கிறோம்."

மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் ஒபாமாவிற்கு வாக்களித்தனர்; ஒரு ஜனநாயக கட்சி நிர்வாகம் சுகாதாரப் பாதுகாப்பு விரிவடைய வழிசெய்யும் என்று அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது; மேலும் 50 மில்லியன் மக்கள் சுகாதார காப்பீடு இல்லாமல் உள்ளனர், பல மில்லியன் மக்கள் குறைந்த தொகைக்கே காப்பீடு செய்துள்ளனர் என்ற ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர். ஆனால் புதிய நிர்வாகமோ சுகாதாரப் பாதுகாப்பை ஒரு அடிப்படை மனித உரிமை என்றோ தற்கால வாழ்வின் ஒரு தேவை என்றோ கருதாமல் செலவைக் குறைக்கக் கூடியதில் குவிப்பு கொண்ட ஒரு நிதிப் பிரச்சினையாகத்தான் கருதுகிறது.

வரவு-செலவு திட்டச் சட்டத்தில் கையெழுத்திட அவருக்கு எது தேவைப்படும் என்ற வினாவிற்கு விடையிறுக்கையில் ஒபாமா கூறினார்: "சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம் பற்றி தீவிர முயற்சிகளை எதிர்பார்க்கிறேன், குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் செலவினங்களைக் குறைக்கும் விதம் தேவை, கூட்டாட்சி, மாநில அரசாங்கங்கள் நமது தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இறுதியில் திவால் ஆகிவிடும்."

பின்பு சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களை குறைத்தல் ஒரு பொருளாதார மற்றும் நிதி வகை கட்டாயம் ஆகும் என்று அவர் அறிவித்தார். "சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களை குறைக்காவிடில், நம்மால் 2.6 சதவிகித வளர்ச்சி அடையப்பட முடியாது, 2.2 சதவிகித வளர்ச்சி கூட முடியாது. நாம் வளரவே முடியாது."

இதேபோல் பலமுறை ஒபாமா சமூகப் பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு என்னும் முறையான திட்டங்களின் உயர் செலவினங்களை கட்டுப்படுத்துவது பற்றிய தேவையையும் குறிப்பிட்டார்; இத்தகைய நடவடிக்கைகளை ஒரு பொருளாதார நெருக்கடிக்கு நடுவே (வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பிற்கு நடுவே) பகிரங்கமாக முன்கூட்டியே விவாதிப்பது உகந்தது அல்ல என்றும் கூறினார்.

செய்தி ஊடகத்தில் இருந்து வேலையின்மை மற்றும் வேலைகள் தகர்ப்பு பற்றி ஒரு வினாக் கூட எழுப்பப்படவில்லை. இவை ஒபாமாவின் ஊக்கத் திட்டத்தின் கீழ் வேலைகள் தோற்றுவிக்கப்படும் என்று கூறப்படுவதைவிட மிக விரைவில் தகர்ந்துதான் போயுள்ளன. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்கள் ஒவ்வொன்றிலும் 600,000 க்கும் மேல் சென்றுவிட்டது; இன்னும் அதிகமாக மார்ச் புள்ளிவிவரங்கள் அடுத்த வாரத்தில் வரும்போது பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருகிய சமூக நெருக்கடி பற்றி ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்பட்டது; ஆபிரிக்க-அமெரிக்க ஏட்டின் எழுத்தாளரான எபோனி, அமெரிக்க குழந்தைகளில் இரு சதவிகிதத்தினர் இப்பொழுது வீடு இல்லாத நிலை பற்றிய சமீபத்திய அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒபாமாவைக் கேட்டார். அது பற்றி பரிவுணர்வை மேம்போக்காக காட்டிய ஒபாமா, பின் தன் வரவு-செலவு திட்டம் பற்றி தொடர்ந்து பேசினார்.

வோல் ஸ்ட்ரீட்டின் நல்ல நிலை பற்றிய ஒருமனத்தான குவிப்பு ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சீனா, ரஷ்யாவுடன் அமெரிக்க உறவுகள் ஆகியவை பற்றி ஒரு கேள்விகூட எழுப்பப்படாததில் இருந்து நன்கு புலனாயிற்று. கூட்டம் கிட்டத்தட்ட முடிவிற்கு வரவிருக்கும் வரை, அமெரிக்காவில் மெக்சிகோவுடனான எல்லை நெருக்கடியைத் தவிர வெளியுறவுக் கொள்கை பற்றி ஒரு வினா கூட எழுப்பப்படவில்லை.

செய்தி ஊடகத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கும் இடையே இருக்கும் பிளவு மிக துல்லியமாக NBC யின் வெள்ளை மாளிகை நிருபர் Chuck Todd ன் வினாவில் நன்கு வெளியாயிற்று. அவர் ஒபாமாவைக் கேட்டார்: "நீங்கள் எப்பொழுதும் கேட்கும் புதிய பொறுப்பு கொண்ட சகாப்தத்தை எடுத்துக் கொண்டால், ஏன் இப்பொருளாதார மீட்பில் பங்கு கொள்வதற்கு பொதுமக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பது பற்றி குறிப்பாக கேட்க வேண்டியவற்றை கேட்காமல் இருக்கிறீர்கள்?'

இதற்கு விடையிறுக்கும் வகையில் தொழிலாளர்கள் ஏற்கனவே கடுமையான இடர்பாடுகளை பொருளாதார நெருக்கடியின் பாதிப்பால் எதிர்கொண்டுள்ளனர் என்றும், வேலைத் தகர்ப்புக்கள், ஊதிய வெட்டுக்கள், மற்றும் அவர்கள், அவர்களுடைய குழந்தைகள் இழந்துவிட்ட வாய்ப்புக்கள் என்ற பலவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறவேண்டிய கட்டாயம் ஒபாமாவிற்கு ஏற்பட்டது. ஆனால் ஜனாதிபதி, பொதுமக்கள் தியாகம் பற்றி இன்னும் வெளிப்படையாக பேச வேண்டும் என்று டோட் கூறினார்.

(அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலெக்ட்ரிக்கிற்கு சொந்தமான) NBC உடைய பிரதிநிதி தொழிலாளர்களுக்கு இன்னும் அதிக வெட்டுக்கள் தேவை என்றும் அதே நேரத்தில் வங்கியாளர்க்கும் ஊகவணிகத்தினருக்கும் ஹெட்ஜ் நிதி பில்லியனர்களுக்கும் டிரில்லியன் டாலர்கள் கொடுக்கப்படுதல் என்ற இரட்டை நிலை சம்பந்தப்பட்டிருந்தது பற்றி, வெளிப்படையாக பொருட்படுத்தாத தன்மையைத்தான் கொண்டிருந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved