WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Six years of Washington's war in Iraq
ஆறு ஆண்டுகளாக ஈராக்கில் வாஷிங்டன் நடத்தும் போர்
Bill Van Auken
20 March 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
இன்றைய தினம் வாஷிங்டன் அதன் "அதிர்ச்சி, அச்சுறுத்தல்" போரை ஈராக்கிற்கு
எதிராக நடத்த ஆரம்பித்து குண்டுகளையும் ஏவுகணைகளையும் பாக்தாத் மீது வீசத் தொடங்கி 6 ஆண்டுகள் முடிவைக்
குறிக்கிறது. இப்போருக்கு அமெரிக்க மக்களின் பாரிய எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, புஷ்ஷிடம் இருந்து ஒபாமாவிற்கு
நிர்வாகம் மாறியும்கூட, ஈராக்கில் அமெரிக்கப் போர் தொடர்வதுடன் இதற்கு முடிவும் தெரியவில்லை.
இந்த ஆண்டுதினம் பெரும் சோகத்தைக் கொடுப்பதுடன் இழிவு நிறைந்ததும் ஆகும்.
பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு போரை இது எடுத்துக்காட்டுகிறது. ஈராக்கிய
மக்களை "விடுதலை செய்தல்" என்ற பெயரில் தொடங்கி இப்போர் உலக வரலாற்று ரீதியாக அந்நாட்டின்மீது பேரழிவைச்
சுமந்தியுள்ளதுடன் 21ம் நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு எதிரான மிகப் பெரிய குற்றமாகவும் உள்ளது.
ஆறு ஆண்டுகளில் ஈராக்கிய போர் மிகவும் நம்பகமான மதிப்பீடுகளில் ஒரு மில்லியனுக்கும்
மேலான ஈராக்கியர்களின் உயிரைப் பலி வாங்கியுள்ளதுடன், கணக்கிலடங்கா மற்றும் பலரைக் காயப்படுத்தியும்,
உறுப்புக்களை இழக்கவும் வைத்துள்ளது. கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு,
அமெரிக்க அடக்குமுறையாலும், குறுங்குழுவாத பூசல்களாலும் வெளிநாட்டிற்கு குடியேற அல்லது உள்நாட்டிலேயே எங்கோ
அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கமும் செய்தி ஊடகமும் ஈராக்கில் நிலவும் "முன்னேற்றமடைந்துள்ள
பாதுகாப்பு", "இயல்புநிலைக்கு மீட்பு" போன்றவற்றின் சிறப்புக்களைக் கூறுகின்றன. அத்தகைய கூற்றுக்கள் முன்னதாக
நடத்தப்பட்ட இரத்தம் சிந்துதலுடன் ஒப்பிடப்படும்போதுதான் அவ்வாறு கூறப்படலாம்.
கடந்த வாரத்திற்குள் கீழ்க்கண்ட நிகழ்வுகள் கவனத்திற்கு வந்துள்ளன:
* மார்ச் 16ம் தேதி ஒரு 12
வயது ஈராக்கியப் பெண் தன்னுடைய தகப்பனாருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்க துருப்புக்கள்
வாகனத்தின்மீது சுடப்பட்டபோது இறந்துவிட்டாள். வாகனம் வடக்கு நகரமான மோசூலுக்கு அருகில் துருப்புக்கள்
இருக்குமிடத்தைத் தாண்டிச் செல்ல முற்பட்டபோது இது நடந்தது.
* மார்ச் 15ம் தேதி அமெரிக்கத்
துருப்புக்கள் மேற்கு மோசூலில் ஹம்டன் பகுதியில் ஒரு சோதனையின்போது ஒரு பெண்மணியைச் சுட்டுக் கொன்றனர்.
*மார்ச் 13ம் தேதி அமெரிக்கத் துருப்புக்கள் சலடின் மானிலத்தில்
சமாராப்பகுதியில் ஜல்லம் மாவட்டத்தில் இரு விவசாயிகளைக் கொன்றனர். சாட்சியங்கள் ஈராக்கியச் செய்தி
ஊடகத்திடம் துருப்புக்கள் எந்தவித ஆத்திரமூட்டலுத் இன்றி இவர்களைக் கொன்றதாகக் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவீச்சுக்கள், துப்பாக்கிச் சூடுகளில்
நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தனர். அவர்களுள் பலரும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவினாலும் மற்றும் வாஷிங்டன்
பிரித்து ஆளும் தந்திரத்தை கையாண்டு நாட்டில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாலும் ஏற்பட்ட மிகத் தரங்குறைந்த
குறுங்குழுவாத பூசலில் அழிந்தனர்.
மார்ச் 16 அன்று ஓக்லஹோமாவை சேர்ந்த 25 வயது இராணுவ சிறப்புப் பயிற்சி
பெறும் ஹரி எல். மூர் என்பவர் அவருடைய வாகனத்தை வெடிமருத்து ஒன்று தாக்கியதில் ஏற்பட்ட காயங்களால்
இறந்தார். இவருடைய இறப்பு இந்த இழிந்த குடியேற்றப் போரில் உயிரிழந்த அமெரிக்கத் துருப்புக்களின்
எண்ணிக்கையை 4,259 ஆக ஆக்கியுள்ளது.
ஈராக்கிய மகளிரிடையே
Oxfam உதவிக்குழு நடத்திய ஒரு சமீபத்திய கணிப்பெடுப்பு எந்த
அளவிற்கு அமெரிக்கப் போர் ஒரு முழு சமூகத்தையும் மிருகத்தனமான முறையில் பின்னடைவிற்கு கொண்டு சென்றுள்ளது
என்பதைக் காட்டுகிறது.
* 55 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட
மகளிர் தாங்கள் 2003ல் இருந்து வன்முறையினால் பாதிப்பிற்கு உட்பட்டதாகவும், 30 சதவிகிதத்தனர்
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வன்முறை மரணத்தை சந்தித்தாகவும் கூறியுள்ளனர். மேலும் 55 சதவிகிதத்தினர்
தங்கள் வீடுகளில் இருந்து குறைந்தது ஒருமுறையேனும் 2003ல் இருந்து வெளியேற நேர்ந்தது என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.
* கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தினர்
குடிநீர் பெறுவதற்கு அவர்களுக்கு அன்றாடம் வாய்ப்பு இல்லை என்றும் அதில் பாதிப் பேர் நீர் கிடைத்தாலும் அது
குடிப்பதற்கு பயனற்றது என்றும் கூறினர்.
* கணிப்பெடுப்பிற்கு
உட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாள் ஒன்றுக்கு மின்வசதி மூன்று மணி நேரம் அல்லது அதற்கும்
குறைவாகத்தான் அவர்களுக்கு கிடைக்கிறது என்றும், மூன்றில் இரு பகுதியினர் 6 மணி அல்லது அதற்கும் குறைவாகப்
பெறுவதாகவும் கூறினர். 80 சதவிகிதத்தினர் கடந்த ஆண்டை விட இவ்வசதி இந்த ஆண்டு மோசமாகிவிட்டது அல்லது
அதேபோல் இருந்தது என்றனர்.
* 40 சதவிகிதத்தினர்
அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறினர்.
அமெரிக்காவின் மறுகட்டமைப்பு முயற்சிகள் ஈராக்கியர்களுக்கு அதிகம் ஏதும்
செய்யவில்லை; மாறாக ஊழல் அரங்கு ஒன்றை பரந்த அளவில் ஏற்படுத்தி அரசியலில் தொடர்புடைய
ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மோசடிக்காரர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை அளித்துள்ளன. ஈராக்கிய
மறுகட்டமைப்பு தலைமை ஆய்வாளரான Stuart
Bowen ஒரு சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியில்
குறித்துள்ளபடி, "32 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டும், பணம் என்ன ஆயிற்று என்பதைப் பற்றி நமக்குத்த
தெரியவில்லை." என்றார்.
இதற்கிடையில் கிட்டத்தட்ட 30,000 ஈராக்கியர்கள் தடுப்புக்காவலில் தொடர்ந்து
உள்ளனர்; அவர்களில் பலர்மீது குற்றச் சாட்டு கிடையாது. இவர்கள் சித்திரவதைகள் தொடர்கின்ற அமெரிக்க,
ஈராக்கிய சிறைகளில் உள்ளனர்.
பெரும்பாலான அமெரிக்க மக்கள் இப்போரை எதிர்க்கின்றனர். அரசாங்கம் மற்றும்
செய்தி ஊடகம் இடைவிடாமல் பிரச்சாரம் செய்தபோதும், மக்கள் இது ஒரு கொள்ளைச் செயல்தான்,
பொய்களின் அடிப்படையில் நடக்கிறது என்றுதான் முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் பலமுறையும் வாக்குப் பெட்டி
மூலம் இதை மாற்ற மேற்கொண்ட அவர்களுடைய முயற்சிகள் பயனற்றுப் போயின. கடந்த நவம்பர் பராக்
ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் கூட இந்நிலைமைதான் தொடர்கிறது.
பிரச்சாரத்தின்போது ஒபாமா தான் போரின் விரோதி எனக் காட்டிக் கொண்டு
அவருடைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியான ஹில்லாரி கிளின்டனை அவர் படையெடுப்பிற்கு ஒப்புதல்
கொடுத்தற்கு குறைகூறினார். ஆனால் பதவிக்கு வந்தபின்னர் அவர் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், மத்திய
கட்டுப்பாட்டுத் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஈராக்கிய ஆக்கிரமிப்பு தளபதி ரேமண் ஒடீமோ போன்ற
போரை இயக்கிய அனைவரையும் தொடர்ந்து -பதவியில் வைத்திருப்பதுடன், அதேநேரத்தில் கிளின்டனையும்
தன்னுடைய வெளிவிவகார செயலாளராக நியமித்துள்ளார்.
படைகளை திரும்பப்பெறும் திட்டம் என ஒபாமாவால் அழைக்கப்படுபவை இன்னும் பல
ஆண்டுகளுக்கு ஈராக்கில் பல ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு
இருக்கக்கூடியதைத்தான் காட்டுகின்றன; மேலும் அதிகரித்துவரும் குறிப்புக்கள் பாக்தாத்தில் இருக்கும் கைப்பாவை
மாலிகி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் பெற்ற குறைந்த திரும்பப் பெறும் திட்டங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது
என்றுதான் காட்டுகின்றன. இந்த வாரம் மாலிகியே அமெரிக்கப் போர்த்துருப்புக்கள் ஈராக்கிய நகரங்களில்
இருந்து ஜூன் மாதம் திரும்பிவிடும் என்ற கெடு இருந்தபோதிலும் அவை எதுவும் மோதலுக்கான சாத்தியப்பாடுகள்
உள்ள எந்த நகரத்தில் இருந்தும் அகற்றப்பட மாட்டாது என்றும் கூறினார்.
ஈராக்கில் இருந்து திரும்பும் படைகள், ஆப்கானிஸ்தானத்திற்குத்தான் அனுப்பப்படுகின்றன;
அங்கு ஒபாமா நிர்வாகம் பெரிய போர் விரிவாக்கத்திற்கு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
போலிக் காரணமான "பயங்கரவாதத்தின் மீதான போர் என்று தொடக்கப்பட்ட
இந்த இரு போர்களும் உலகின் எண்ணெய், எரிவாயு செழிப்பு நிறைந்த பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும்
நோக்கம் கொண்டவையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு எதிராக தமது
நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக நடத்தப்படுபவை. அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான
வீழ்ச்சியில் இவை மூலவேர்களை கொண்டுள்ளன. அது இப்பொழுது 1930களுக்கு பின்னர் மோசமான பொருளாதார
நெருக்கடியாக வெளிப்பட்டுள்ளது. உலகின் உற்பத்தி மையம் என்ற உயர்ந்த இடத்தை அமெரிக்கா இழந்துள்ள நிலையில்,
அமெரிக்க ஆளும் உயருடுக்கு பெருகிய முறையில் நிதிய ஒட்டுண்ணித்தனத்திற்கு ஒருபுறமும், மற்றொருபுறம் இராணுவவாதத்திற்கும்
திரும்பி தன் மேலாதிக்க நிலையை தக்க வைத்துக் கொள்ள முற்பட்டுள்ளது.
பதவியில் வந்த இரு மாதங்களுக்குள் இராணுவம் மற்றும் வோல்ஸ்ட்ரீட்டில் முக்கிய
நபராக ஒபாமா வெளிப்பட்டுள்ளதுடன், வாக்குச் சாவடிக்கு போருக்கு எதிராக வாக்களித்த மில்லியன் கணக்கான
மக்களின் விருப்புகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதுதான் அமெரிக்க முதலாளித்துவ இரு கட்சி முறையில் இழிந்த
நிலைமையாகும்.
போரை முடிவிற்குக் கொண்டுவரும் போராட்டம் ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும்;
இது தவிர்க்க முடியாமல் இராணுவவாதத்திற்கு எழுச்சி கொடுத்துள்ள முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான
போராட்டத்துடன் பிணைந்துள்ளது. இதற்கு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக் கொண்ட
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரளல் தேவைப்படுகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில்
இருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரப்பட வேண்டும். இந்த
ஆக்கிரமிப்பு போர்களை தொடர சதி செய்தவர்கள் தங்கள் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட
வேண்டும். |