WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government
seeks IMF bailout
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிணையை எதிர்பார்க்கிறது
By Thusitha Silva and Saman Gunadasa
17 March 2009
Back to screen version
மோசமடைந்துவரும் அந்நிய செலாவனி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம்,
நாட்டை பிணையெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்பார்க்கிறது.
ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியதோடு ரூபாய் மதிப்பிறங்குவதை
தடுப்பதற்காக மத்திய வங்கி மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்ட நிலையில், தீவின் வெளிநாட்டு நாணய இருப்பானது
கடந்த ஜூலையில் 3.5 பில்லியன் டொலரில் இருந்து டிசம்பரில் 1.7 பில்லியன் டொலர்வரை வற்றிப்போனது.
டிசம்பரில் இருந்த தொகை 1.5 மாதத்துக்கான இறக்குமதியை சமாளிக்கவே
போதுமானது. வளர்ச்சியடைந்துவரும் பொருளாதராத்தில் இது மிக மிக மோசமான நிலைமைகளில் ஒன்றாகும். கடந்த
மாதம், தனது நோக்கில் இலங்கையை எதிர்மாறான நிலையில் தரங்குறைத்த ஃபிட்ஸ் ரேட்டிங் என்ற தரப்படுத்தல்
நிறுவனம், இறக்குமதியை குறைக்காவிடில் அல்லது ரூபாயை மதிப்பிறக்கம் செய்யாவிடில், தற்போதைய கணக்குப் பற்றாக்குறையை
சமாளிக்க இலங்கைக்கு பணம் இன்றி போகலாம் என எச்சரித்தது.
அரசாங்கமும் மத்திய வங்கி அதிகாரிகளும், நாட்டின் ஆபத்தான நிதி நிலைமையை
அவநம்பிக்கையுடன் மூடி மறைக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடுவதற்கு மாறாக, அதுவே கடன்
வழங்க விரும்பி இலங்கையை அணுகியதாகவும் கூறிக்கொண்ட மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால், குறிப்பிடத்தக்க நிபந்தனைகள்
எதையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் நேற்று வெளியான ஒரு
பேட்டியில், கப்ரால் விமர்சகர்களை சீற்றத்துடன் தாக்கினார். "ஸ்திரமற்ற ஒரு நாட்டையும் ஆட்டங்கண்டு போன
பொருளாதரத்தையும் காண விரும்பும் சில கும்பல்களாலேயே இத்தகைய பொருளாதார நெருக்கடி கதைகள் உருவாக்கப்படுகின்றன,
மற்றும் அவர்கள் எமது நாட்டை ஸ்திரமின்மைக்குள் தள்ள தங்களால் முடிந்ததை செய்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்படும் மற்றும் படுகொலை செய்யப்படும் ஒரு
நாட்டில் இத்தகைய அச்சுறுத்தல்கள் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல.
சர்வதேச நாணய நிதியத்துக்கு பணிந்து புதிய கடுமையான வயிற்றைக் கட்டும்
நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டிவரும் என்ற எந்தவொரு கருத்து தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
குறிப்பாக தன்னுணர்வு கொண்டுள்ளார். அரசாங்கம் ஏற்கனவே அதன் பிரமாண்டமான இராணுவச் செலவாலும் மற்றும்
பூகோள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தாலும் வாழ்க்கைத் தரம் சீரழிக்கப்படுவது தொடர்பாக
வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்டுள்ள கடனின் அளவு முன்னெப்போதும் இல்லாத
அளவாகும். அது சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒதுக்கியுள்ள தொகையை விட மூன்று மடங்காகும். மார்ச்
முற்பகுதியில் சர்வதேச நாணய நிதிய குழுவொன்று மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு மாதக்
கடைசியில் ஒரு முடிவுடன் மீண்டும் கொழும்பு வரவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு இந்தக் கடன் இன்றியமையாத தேவையாகும். 2008ம் ஆண்டின்
இரண்டாவது அரைப் பகுதியில் மத்திய வங்கியின் பிணைப் பத்திரங்களை வாங்குவதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
பின்வாங்கிய நிலையில், 600 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் ஒரு பிரமாண்டமான வெளியேற்றம் ஏற்பட்டது
என, அரசாங்க நிதியில் இயங்கும் கொள்கை கற்கை மையத்தின் சிரேஷ்ட பொருளியலாளரான துஷானி வீரக்கோன்
ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாணயத்தின் திடீர் வீழ்ச்சியை தடுப்பதற்காக, "ஒரு நிலையில் நிற்காத நாணய மாற்றுக்
கொள்கையை" காப்பதன் பேரில் மத்திய வங்கி (செப்டெம்பர் மற்றும் நவம்பருக்கு இடையில்) மாதம் 200 மில்லியன்
டொலர்களை உட்செலுத்தியது. இத்தகைய முயற்சிகளின் மத்தியிலும், ரூபாய் கடந்த அக்டோபரில் இருந்து 6 வீதத்துக்கும்
அதிகமான அளவால் மதிப்பிறங்கியது.
நாட்டின் நடைமுறைக் கணக்கு துண்டுவிழும் தொகை, 2007ல் 1.5 பில்லியன் டொலரில்
இருந்து 2008ல் 3.6 பில்லியன் டொலர்களாக அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 8.8 வீதமாக விரிவடைந்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கான பிரதான காரணம், ஏற்றுமதி வருமான வீச்சியால் இரட்டிப்பான, 14 பில்லியன் டொலர்
பிரமாண்டமான இறக்குமதி செலவேயாகும். புள்ளி விபரங்களில் மூடி மறைக்கப்பட்டாலும், அரசாங்கம் பாகிஸ்தான்,
இஸ்ரேல், சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்தமை இந்த இறக்குமதி செலவின்
குறிப்பிடத்தக்க பகுதியாகும். 2006 ஜூலையில் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கிய பின்னர், 2006ல் 96
பில்லியன் ரூபாய்களாக (840 மில்லியன் அமெரிக்க டொலர்) இருந்த பாதுகாப்புச் செலவு, 2008ம் ஆண்டில் 200
பில்லியன்களாக அதிகரித்தது.
2008ல் எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சிடைந்து எண்ணெய் இறக்குமதி செலவை
குறைத்தது. எவ்வாறெனினும், பெப்பிரவரியில் ஃபிட்ச் ரேட்டிங் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தது: "அண்மைய
மாதங்களில் சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததுடன் இலங்கையின் வர்த்தக பற்றாக்குறையிலும் முன்னேற்றம்
ஏற்பட்டது. ஆனால் இது, வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை மற்றும் ஏனைய தேறிய மூலதன வெளியேற்றத்தின்
விளைவாக உத்தியோகபூர்வ ஒதுக்கீடுகள் நிலையாக வீழ்ச்சியடைவது தடுக்கவில்லை." இந்த தரப்படுத்தும் ஏஜன்சி
2009ல் வெறும் 3.2 வீத வளர்ச்சி வீதத்தையே முன்னறிவித்தது. இது 5.5 வீதம் என்ற உத்தியோகபூர்வ மதிப்பீடுகளை
விட கணிசமானளவு குறைவாகும்.
முன்னர் யுத்தத்துக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நிதிச் சந்தையில் கடன்
பெற்றது. பெப்பிரவரியில், இராஜபக்ஷ பணம் திரட்டுவதற்கு இரு வழிகளை அறிவித்தார். யுத்தத்துக்காக பிணைப்
பத்திரங்களை 500 மில்லியன் டொலர்கள் வரை சிங்களப் புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதும், ஏனைய மத்திய
வங்கிகளுடன் கைமாறு பெறுதலும் இதல் அடங்கும். ஆனால், எதுவும் போதுமானதாக இருக்கவில்லை. ஏசியா டைம்ஸ்
ஊடகத்திற்கு துஷினி வீரக்கோன் தெரிவித்ததாவது: "எமக்கு உள்நாட்டு சந்தைகளிலும் சர்வதேச சந்தைகளிலும் கடன்பெற
இருந்த வாய்ப்பு முடிந்துவிட்டது."
சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளின்றி கடன் வழங்கும் என்ற அரசாங்கத்தின் கூற்றை
ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். உதாரணமாக சண்டே டைம்ஸ் பத்திரிகை நேற்று எழுதியதாவது: "இட்டுநிரப்பப்பட
வேண்டிய நிச்சயமான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும். இவை நாணய மாற்று, குறிப்பிட்ட சில
தேவைகளுக்கான செலவு, ஒட்டுமொத்த அரசாங்க செலவு மற்றும் வரி பற்றாக்குறை போன்றவையோடு சம்பந்தப்பட்டதாக
இருக்கும். இந்த நிபந்தனைகள் சிறந்த நிர்வாகம், மறுசீரமைப்பை அமுல்படுத்துதல் மற்றும் சில அரச நிறுவனங்களை
தனியார்மயப்படுத்துதல் வரை மேலும் விரிவாக்கப்படக் கூடும்."
பாகிஸ்தான் கடந்த ஆண்டு கடைசியில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன்
ஒன்றை வாங்கியது. அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், ஊக்குவிப்பு, பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் உரங்களுக்கான
மானியங்களை நிறுத்துதல், இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கான அரசாங்கத்தின் செலவை குறைத்தல், மற்றும் வரிகளை
அதிகரித்தல் போன்றவையும் அடங்கும். முன்னதாக, சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை அரசாங்கத்துக்கு
அதன் வரி பற்றாக்குறையை குறைக்குமாறும், அரசாங்க ஊழியர்கள் படையை வெட்டிக் குறைக்குமாறும் விலை மானியங்களை
குறைக்குமாறும் மற்றும் தனியார்மயத்தை அமுல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டன.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு தலைகுனிவதற்கான அறிகுறிகள்
ஏற்கனவே தென்படுகின்றன. அரசாங்கத்தால் சம்பளம் வழங்க முடியாததால் புதிதாக வேலை வழங்க வேண்டாம் என
மாகாண சபைகளுக்கு திறைசேரி கடந்த வியாழக்கிழமை கட்டளையிட்டுள்ளது. அரசாங்கத்தின் நெல் விற்பனைச் சபையின்
விற்பனையுடன் இணைக்கப்பட்டே இனிமேல் உர மானியங்கள் வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பல
வறிய விவசாயிகளுக்கு தமது அரிசி உற்பத்தியை தனியார் வர்த்தகர்களுக்கு விற்பதைத் தவிர வேறு தேர்வு கிடையாது.
இந்த மாத முற்பகுதியில், மின்சார் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை தனியார்மயப்படுத்துவதற்கு வழி
திறப்பதன் பேரில் அரசாங்கம் சட்டமொன்றை நிறைவேற்றிக்கொண்டது.
ஏற்றுமதியாளர்கள் ரூபாயை மதிப்பிறக்கம் செய்வது உட்பட, ஏற்றுமதியில் அடுத்தவருக்கு
போட்டியாக தமது நிலையை உயர்த்தும் வகையிலான ஒரு தொகை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
நெருக்குகின்றனர். ஏற்றுமதி வளர்ச்சி 2007ம் ஆண்டில் 11 வீதத்தில் இருந்து 2008ல் 6.5 வீதமாக மந்தமடைந்துள்ள
அதே வேளை, கடந்த ஆண்டின் கடைப்பகுதியில் துரிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆடை மற்றும் தேயிலை ஆகிய நாட்டின்
இரு பிரதான ஏற்றுமதிகள், 2007ல் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2008 டிசம்பரில் முறையே 6.3 வீதத்தாலும்
22.5 வீதத்தாலும் வீழ்ச்சிகண்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 24 ஆடைத் தொழிற்சாலைகள்
மூடப்பட்டுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
"தொழிலாளர்களை குறுகிய காலத்தில் வேலை நீக்கம் செய்யவும்" ஐந்தரை நாட்கள்
வேலை வாரத்தை ஐந்து நாட்களாக குறைக்கவும் அனுமதிக்கும் வகையில் "தொழிலாளர் சட்டத்தில் பெரும்
வளைந்துகொடுக்கும் தன்மையை" ஏற்படுத்துமாறு அரசாங்கத்துடன் முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே
கலந்துரையாடல்களை தொடக்கியுள்ளது. மேலதிக நேர கொடுப்பனவு இன்றி வேலை நேரத்தை 9 மணித்தியாலங்களாக
அதிகரிக்கவும் முதலாளிமார் சம்மேளனம் விரும்புகிறது.
யுத்தத்தின் பொருளாதார சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியுள்ள இராஜபக்ஷ
அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதன் மூலம் பெரும் வர்த்தகர்களையும் தீவின் நிதி
முறைமையையும் தூக்கி நிறுத்த தயங்கப் போவதில்லை. இது வறுமையும் வேலையின்மையும அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். |