World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds final meetings of election campaign

இலங்கை சோ.ச.க. இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது

By our reporters
14 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), பெப்ரவரி 14 அன்று நடைபெற்ற இலங்கை மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கடந்த வாரம் நடத்தியது. மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாட்டத்தில் ஹட்டன் நகரில் செவ்வாய்க் கிழமை ஒரு கூட்டமும் மற்றும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் தொடுவாவ பிரதேசத்தில் புதன் கிழமை ஒரு கூட்டமும் நடத்தப்பட்டன. பொலிஸ் மற்றும் அரசியல் எதிரிகளும் ஆதரவாளர்களை அச்சுறுத்தவும் மற்றும் கூட்டங்ஙகளை தடுக்கவும் முயற்சித்த போதிலும், இரண்டு கூட்டங்களும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் முக்கியமான தட்டுக்களை உள்ளீர்த்திருந்தது.

தொடுவாவை கூட்டம் முதலில் பெப்ரவரி 7 அன்றே நடைபெறவிருந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.), நாட்டின் தேர்தல் சட்டத்தை மீறி, அதே நாளில் சோ.ச.க. வின் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தது. சோ.ச.க ஏற்கனவே அங்கு திறந்த வெளிக் கூட்டத்தை நடத்துவதற்கு பொலிசாரிடம் அனுமயைப் பெற்றிருந்ததுடன் அதை விளம்பரப்படுத்தி அப் பிரதேசம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

கடைசி நிமிடத்திலேயே ஐ.ம.சு.மு. கூட்டம் பற்றி சோ.ச.க. க்கு தெரியவந்தது. மாரவிலவில் உள்ள உள்ளூர் பொலிசாரிடம் கேட்டபோது, தொழிலமைச்சர் மேர்வின் சில்வா உட்பட "பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்" உரையாற்றவுள்ளதால் தாங்கள் ஐ.ம.சு.மு. கூட்டத்துக்கு அனுமதியளிக்கத் தள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தபோது, அவர் ஐ.ம.சு.மு. க்கு அனுமதி வழங்கியதை மறுத்தார்.

ஐ.ம.சு.மு. பொலிஸ் அனுமதியை பொருட்படுத்தாமலும் பொலிசார் அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என எண்ணியும் தமது கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளமை வெளிப்படையானதாகும். தெளிவாக சோ.ச.க. க்கு எதிரான அரசியல் ஆத்திரமூட்டலுக்காக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்ததுடன், வன்முறையில் ஈடுபடும் முழு சாத்தியமும் இருந்தது. தொழில் அமைச்சர் சில்வா, முன்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர். அமைச்சரின் உரைகளில் ஒன்றை ஒளிபரப்பாதது தொடர்பாக, 2007 டிசம்பரில் அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் சில்வா நுழைந்த போது, அவரது குண்டர்கள் செய்தி ஆசிரியரை சரீர ரீதீயில் தாக்கியமை ஒரு சான்றாகும்.

இந்தச் சூழ்நிலையில், சோ.ச.க தனது கூட்டத்தை ஒத்திவைக்கத் தள்ளப்பட்டது. தொடுவாவ மீனவர் கிராமம் மற்றும் இரணவில பிரதேசத்திலும் மேற்கொண்ட பிரச்சாரங்களின் பின்னர் மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்ட திறந்தவெளி கூட்டத்திற்கு சுமார் 30 பேர் வருகைதந்திருந்தனர். நீண்டகால சோ.ச.க அங்கத்தவரும் வேட்பாளருமான ஐவன் பெர்னான்டோ கூட்டத்திற்கு தலமை தாங்கினார். ஐ.ம.சு.மு. யின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை, அரசாங்கத்தின் பலத்தை அன்றி அதன் பலவீனத்தையே காட்டுகிறது என தெளிவுபடுத்திய அவர், அனைத்து பிரதான கட்சிகளால் மீறப்பட்ட வாக்குறுகளின் நீண்ட பட்டியலை சுட்டிக்காட்டினார். வாக்குறுதிகள் மீறப்பட்டதனால் பரந்தளவு வெறுப்பும் வளர்ச்சிகண்டுள்ளது.

சோ.ச.க வேட்பாளரும், சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பின் இலங்கை செயலாளருமான கபில பெர்னான்டோ, சோ.ச.க. மட்டுமே, அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணிதிரட்ட பிரச்சாரம் செய்கின்றது எனத் தெரிவித்தார். "இந்த இரண்டு மாகாணங்களிலும், தீவு பூராவும் மற்றும் உலகம் பூராகவும் உள்ள உழைக்கும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் முதலாளித்துவ அமைப்பின் உற்பத்தியேயாகும்."

இளைஞர்களை ஐ.எஸ்.எஸ்.ஈ யில் இணையுமாறு அழைப்பு விடுத்த அவர், "இந்த நாட்டில் கூடுதலான இளைஞர்கள் யுத்த பயங்கரம் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலேயே பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வேலையின்மை மட்டுமீறிப் போயுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் சிங்கள இளைஞர்கள் யுத்தம் காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தத்துக்கு நிதியளிப்பதன் பேரில், அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான செலவுகளை வெட்டித் தள்ளுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கும் பங்களிப்பு செய்துள்ளது" எனக் கூறினார்.

சோ.ச.க. யின் புத்தளம் மாவட்ட தலமை வேட்பாளர் நிகால் கிகீயனகே, உள்நாட்டு யுத்தமானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக ஒரு பொருளாதார அழிவுடன் கைக்கு கை மாற்றப்பட்டு வந்துள்ளது என விளக்கினார். "யூ.என்.பி. [ஐக்கிய தேசியக் கட்சி] 1983ல் யுத்தத்தை ஆரம்பித்தது. அது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் வளர்ச்சிகண்டு வந்த அமைதியின்மையுடன் ஒருசேர இடம்பெற்றது. அரசாங்கம், அரச துறையில் நூறாயிரக்கணக்கான தொழில்களை அழித்தது. தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை, தென் இலங்கையில் தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்கு எதிரான யுத்தமாக பின்தொடர்ந்தது."

கீகியனகே, 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி தீவையும் தாக்கியுள்ள நிலையில், தொழிலாள வர்க்கம் தமது வாழ்க்கைத் தரங்கள் மீதான புதிய தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேரும் என எச்சரித்தார். இலங்கையில் தேயிலை, இறப்பர், இரத்தினக்கல் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற சகல பிரதான கைத்தொழில்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக நூறாயிரக் கணக்கான தொழில் இழப்புக்கள் ஏற்படப் போகின்றன. சகல "இடதுசாரிக்" கட்சிகள் மற்றும் தொழிற் சங்கத் தலமைகளும், தொழிலாளர்கள் தமது சம்பளம் மற்றும் நிலைமைகளை காக்க எடுக்கும் முயற்சிகளுக்கு குழிபறிப்பதில் ஒத்துழைக்கின்றன.

சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், இரண்டு கூட்டங்களிலும் பிரதான உரையை ஆற்றினார். அவர் தனது உரையில் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டினார்: "25 வருடகால இனவாத யுத்தம் காரணமாக நாடு பூராகவும் உள்ள உழைக்கும் மக்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் ஏற்கனவே சகிக்கமுடியாத சுமைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த நாம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தம், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வெகுஜனங்களுக்கு எதிராக இராணுவப் பொலிஸ் சர்வாதிகாரத்துக்கு தளம் அமைக்கும் என எப்போதும் எச்சரித்து வந்துள்ளோம்."

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலமையிலான ஆளும் சதிக் கூட்டம் மேலும் மேலும் இராணுவத்தில் தங்கியுள்ளது என டயஸ் விளக்கினார். எந்தவொரு விமர்சகரும் அல்லது எதிர்ப்பாளரும், கைது மற்றும் தடுத்துவைக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார், அல்லது பாதுகாப்பு படைகளின் உடந்தையுடன் இயங்கும் கொலைப் படைகளின் கடத்தல் மற்றும் படுகொலையை சந்திப்பார்.

தமது சம்பளம், வேலை, சமூக நலத்திட்டங்களை காக்க உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்தையும் 'பயங்கரவாதத்துக்கு உதவுதல்' மற்றும் இராஜதுரோகம் என்று இராஜபக்ஷ வெளிப்படையாகக் கண்டனம் செய்வது, சகல தொழிலாளர் வர்க்கத்துக்கும் எதிரான அடக்குமுறை அலையை கட்டவிழ்த்து விடுவதற்கான தயாரிப்பேயாகும்."

"இலங்கையின் இனப் படுகொலையின் வரலாற்று வேர்களை, 1948ல் இந்தியப் பெரு நிலப்பரப்பில் இருந்து தீவை வெட்டிப் பிரித்து ஒரு தனியான அரசு ஸ்தாபிக்கப்பட்டதில் காணமுடியும். அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உள்ளூர் முதலாளித்துவத்தின் துணையுடன் இந்தியத் துணைக்கண்டத்தை துண்டாடியதன் ஒரு பாகமேயாகும். இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு சிறிய குடியரசுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, ட்ரொட்கிச போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் போராட்டத்திலேயே எமது வராலாற்றறு மரபுரிமை நங்கூரமிட்டுள்ளது, என டயஸ் சுட்டிக்காட்டினார்.

டசின் கணக்கான இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கைப் படைகளால் தடுத்து வைக்கப்படுவதும், பிராந்தியத்தில் முதலாளித்துவ அரச அமைப்பின் ஒவ்வாத்தன்மையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். இது தெற்காசிய சோசலிசக் குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக சிறிலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிசக் குடியரசுக்கான போராட்டத்துக்கான வாதத்துக்கு இன்னுமொரு காரணியாகும். பூகோளமயமான உற்பத்தி, சந்தை அராஜகத்தில் இருந்தும் காலங்கடந்து போன தேசிய அரசு முறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, தனியார் இலாபத்துக்காக அன்றி சமூகத் தேவைகளை அடையக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்..

பொலிசாரின் தொல்லைகள் மற்றும் அச்சுறுதலுக்கு மத்தியிலேயே ஹட்டன் சக்தி மண்டபத்தில் சோ.ச.க. தனது கூட்டத்தை நடத்தியது. கட்சி ஹட்டன், சாமிமலை மற்றும் தலவாக்கலையிலும் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியிருந்ததுடன் அதன் கொள்கை விளக்க அறிக்கையின் சுமார் 10,000 பிரதிகளை தமிழும் சிங்களத்திலும் விநியோகித்திருந்தது. சோ.ச.க. பிரச்சாரம், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) போன்ற தமது பாரம்பரிய கட்சிகளை எதிர்த்தார்கள்.

கட்சியின் பிரச்சாரத்தில் அக்கறை காட்டியவர்களை பொலிசார் சந்திப்பதாக சோ.ச.க. க்கு தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சோ.ச.க.யின் முதலாவது கூட்டம் ஹட்டனில் நடந்து சில நாட்களின் பின்பு, பொலிசார் டிக்கோயா நகருக்கு அருகில் இருந்து கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஒரு பெண்ணிடம், அவர் கூட்டத்தில் பங்குபற்றியது பற்றி விசாரித்துள்ளனர். மறு நாள் சோ.ச.க. வேட்பாளர் தேவபதி சவரிமுத்துவின் வீட்டுக்குச் சென்ற பொலிசார், அவரின் இருப்பிடம் மற்றும் அவரின் வருமானம் பற்றிக் கேட்டனர்.

தேர்தல் கூட்டத்தின் போதும் கூட, முன்னர் வீடுகளுக்கு சென்றிருந்த பொலிசார் உட்பட, சீருடையணியாத பொலிஸ் அலுவலர்களை கூட்ட மண்டபத்தைச் சுற்றி காணக் கூடியதாய் இருந்தது. ஒரு இனந்தெரியாத தனிநபர் மண்டபத்தின் முகாமையாளர் அறையில் உட்கார்ந்திருந்தார். அவர் யார் அல்லது ஏன் அவர் அங்கு இருந்தார் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்று அந்த முகாமையாளர் சோ.ச.க. வுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். கூட்ட அமைப்பாளர்கள் அந்த நபரை வெளியேறுமாறு கேட்டபோது, முதலில் அவர் மறுத்தார். ஹட்டன் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த பின்பே அவர் வெளியேறினார். பத்திரிகையாளராக பாசாங்கு செய்து கொண்டு இருவர் வீடியோக் கமராக்களுடன் மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களிடம் கேள்வியெழுப்பியபோது அவர்களால் அவர்களுடைய அடையாள அட்டையை காண்பிக்கவோ அல்லது தொழிலை உறுதிப்படுத்தவோ முடியவில்லை. அத்துடன் அவர்கள் அவசரமாகப் பின்வாங்கினார்கள்.

கூட்டத்தைத் தொடர்ந்து, அதில் பங்கெடுத்தவர்களை பின்தொடர்ந்த பொலிசார், அவர்களுடைய அடையாள அட்டை மற்றும் விலாசத்தை கோரியதோடு, குறைந்தது ஒரு சம்பவத்திலேனும் சோ.ச.க. யின் பிரச்சார அறிக்கையை அபகரித்திருந்தனர். மறுநாள் கூட்டத்தில் பங்கு கொண்ட ஒருவரை சந்தித்த பொலிசார், அவரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்து, அங்கு அவரின் விபரத்தை மீண்டும் எழுதிக் கொண்டனர். கட்சியின் ஜனநாயக உரிமை மீறப்பட்டது பற்றியும் பொலிஸ் அடக்குமுறை சம்பந்தமாகவும் தேர்தல் வன்முறைகள் கண்காணிப்புப் பிரிவுக்கு சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தது. இப் பிரிவு ஹட்டன் பொலிஸ் நிலையத்தைத் தளமாகக் கொண்டுள்ளது.

பொலிஸ் அச்சுறுத்தலின் மத்தியிலும் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 50 பேர் வரை ஹட்டன் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தனர். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் WSWS நிருபர்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலருடன் பேசினார்கள்.

புத்தளம் வடக்கில் தொழில் பார்க்கும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது: "இந்த உலகத்தில் பிரமாண்டமான சமூக சமத்துவமின்மை உள்ளதை நான் அறிவேன். அது தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கான தீர்வு சோசலிசம் மட்டுமே என்று நான் நினைக்கின்றேன். சோ.ச.க. யின் கூட்டத்துக்கும் ஏனையவர்களின் கூட்டத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருப்பதை நான் காண்கின்றேன். இலங்கையின் யுத்தத்தின் வேர்கள் போன்று பல அர்த்தமுள்ள விடயங்களை அது விளக்கியது. ஆனால் யுத்தத்துக்கு சோ.ச.க. முன்வைக்கும் தீர்வுபற்றி நான் மேலும் படிக்க வேண்டியுள்ளது.

"தேசத்துக்கான இராணுவ வெற்றி பற்றி பாரிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. சில வேளை எனது சக ஊழியர்கள் 'நாங்கள் எமது தேசத்தை காக்க வேண்டும்' என கூறுவதுண்டு. இவ்வாறு தான் ஆளும் தரப்புக்கள் இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. புத்தளம் வடக்கு மிகவும் கிராமப்புற பிரதேசம். அந்தப் பிரதேசத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தில் இருக்கிறார்கள். அங்கு வேறு வேலைகள் இல்லை. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் சித்தியடைந்த மாணவர்கள் 'ஐயா எனக்கு ஒரு வேலை தேடித் தரமுடியுமா?' என கேட்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்.?"

குமுது என்ற குடும்பத் தலைவி தான் சோ.ச.க. க்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக் கூறினார். "வேறு அரசியல் தலைவர்கள் எமது வாக்குகளுடன் அதிகாரத்துக்கு வந்த பின்பு எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மீனவர்கள் அநீதிக்கு முகம் கொடுப்பதைப் பாருங்கள். மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள. உலகில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்த நிலையிலும் இங்கு விலைகள் குறையவில்லை. கடைசி நேரத்தில் ஜே.வி.பி. யின் ஆதரவுடன் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. இப்போது அது யுத்தத்தை பயன்படுத்துகின்றது. யுத்தமே அவர்களின் இருப்புக்கு வழியாகியுள்ளது.

ஹட்டன் கூட்டத்துக்குப் பின்னர், நாவலப்பிட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து வந்த P என்ற ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: "நான் மஸ்கெலியாவுக்குப் போகும் வழியில் இங்கு வந்தேன். நாங்கள் இ.தொ.கா. வின் நீண்டகால அங்கத்தவர்கள். பேச்சாளர்களின் பேச்சுக்கள் வித்தியாசமாக இருந்ததை கண்டு அமர்ந்துகொண்டேன். இந்த வகையான கூட்டத்துக்கு நான் வந்தது இதுதான் முதல் தடவை."

மணிமாறன் என்பவர் தெரிவித்ததாவது: "யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். யுத்தத்தினால் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் பாருங்கள். இது தொடர்ந்தால் யாரை அவர்கள் ஆளப் போகின்றார்கள்? மக்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்தா? விலைவாசியை பாருங்கள், சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றார்கள். அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவதில்லை. இந்தக் கட்சியை போல் வேறுயாரும் எங்களைத் தூண்டுவதில்லை. வேறு அரசியல்வாதிகள் இதையும் அதையும் விமர்சிக்கிறார்கள், ஆனால் யாரும் எமக்கு முன்னேற்றப் பாதையைக் காட்டுவதில்லை. எங்களுடைய கண்கள் மூடப்பட்டிருந்தன, ஆனால் இப்போது அவைகள் விழித்துக்கொண்டுள்ளன."