WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
SEP media
conference in Sri Lanka announces election campaign
தேர்தல் பிரச்சாரத்தை அறிவிக்க சோ.ச.க. இலங்கையில் ஊடகவியலாளர்
மாநாட்டை நடத்தியது
By our correspondents
11 March 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஏப்ரல் 25ம் திகதி
நடைபெறவுள்ள மேல்மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை அறிவிப்பதற்காக,
மார்ச் 9ம் திகதி நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.
கொழும்பில் உள்ள அச்சு ஊடகங்கள் மாநாட்டை பகிஷ்கரித்திருந்த அதே வேளை,
சியத/றியல் ரேடியோ, சிரச டி.வி., தீபம் டி.வி., ஹரு எஃப்.எம் மற்றும் டி.வி லங்கா உட்பட பல்வேறு
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். திங்கட்கிழமை
உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட சோ.ச.க. யின் தேர்தல் அறிவிப்பின் பிரதிகளும்
விநியோகிக்கப்பட்டன.
சோ.ச.க.
பொதுச் செயலாளர் விஜே டயஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். 46 வேட்பாளர்களுக்கும் தலைமை வகிக்கும்
விலானி பீரீஸ் உடன், அவருடன் சேர்ந்து போட்டியிடும் நந்த விக்கிரமசிங்க, அ. சாந்தகுமார் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய டயஸ், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அரசாங்கத்தின்
யுத்தம், ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்கள் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையையும்
எதிர்ப்பது சோ.ச.க. மட்டுமே என விளக்கினார்.
"முன்னைய தேர்தலில் இருந்து மூன்று வாரங்களுக்குள்ளேயே, வடக்கில் தமிழர்
விரோத யுத்தத்தின் கொடூரமும், அதேபோல் தெற்கில் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில்
யுத்தத்தின் தாக்கமும் மேலும் வெளிப்படையாகியுள்ளன. ஒரு புறம், நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வட-கிழக்கு
கரையோரப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய பகுதியில் உணவு, தங்குமிடம் அல்லது மருந்துகளும் இன்றி
சிக்கியுள்ளதோடு, அவர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது. மறுபுறம், அரசாங்கம்
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடத்தப்படும் போராட்டங்களை அதேவிதமான கொடூரத்துடன்
நசுக்கிக்கொண்டிருக்கின்றது".
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு பொலிஸ் பாய்ச்சலை டயஸ்
சுட்டிக்காட்டினார். முதலாவது, களனிப் பல்கலைக் கழகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் நடைபெற்ற
மோதல்களைத் தொடர்ந்து அங்கு அழைக்கப்பட்ட பொலிசார், மாணவர்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கையை
மேற்கொண்டனர். இரண்டாவதாக, மின்சார சபையைத் தனியார் மயப்படுத்துவதற்கு எதிரான மின்சார சபை
ஊழியர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தடுக்க 600 பொலிசார் அணிதிரட்டப்பட்டிருந்தனர்.
'' தொழிலாளர் வர்க்கம் புதிய
அரசியல் சவால்களை எதிர்கொள்கிறது.
கூர்மையான பொருளாதார நெருக்கடி நிலமையின் கீழ், உழைக்கும் மக்களும்
இளைஞர்களும் தங்களுடைய சமூக நிலமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு வர்க்கப்
போராட்டத்தை நாடத் தள்ளப்படுவர்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டமும்
அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியும் வேண்டும்'' என டயஸ் விளக்கினார்.
சோ.ச.க. இந்தத் தேர்தலில் சகல கட்சிகளுக்கும் எதிராக ஒரு சோசலிசப்
பதிலீட்டுக்காகப் போராடுகின்றது, என விலானி பீரீஸ் கூறினார். யுத்தத்தின் மீது தனது கருத்துக்களை
குவிமையப்படுத்திய அவர், சோ.ச.க. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனைகள்
இன்றி உடனடியாக திருப்பியழைக்கக் கோருகிறது என தெளிவுபடுத்தினார். அதே நேரம், சோ.ச.க.
எந்தவிதமான அரசியல் ஆதரவையும் புலிகளுக்கு வழங்கவில்லை, ஆனால் கொழும்பு அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும்
எதிராக தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச முன்நோக்குக்காகப்
போராடுகிறது.
கடந்த மாதம் நடந்த மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் பெற்ற வெற்றி
யுத்தத்துக்கான வெகுஜன ஆதரவை வெளிப்படுத்துகிறது என அது கூறிக்கொள்வதை பீரிஸ் சவால் செய்தார். ஆளும்
கூட்டணி எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பையும் சந்திக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதான எதிர்க் கட்சிகள் யுத்தத்தையும் மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது
சுமத்தும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றன.
சிக்கிக்கொண்டுள்ள தமிழ் பொதுமக்களை அப்புறப்படுத்தும் சாக்குப் போக்கில்
இலங்கையின் வடக்குக்கு அமெரிக்க தலைமையிலான இராணுவக் குழுவை அனுப்புவது தொடர்பாக உயர் மட்ட
பேச்சுவார்த்தைகள் நடப்பது பற்றி இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களை வெளிப்படுத்தியிருப்பதை பீரிஸ்
மேற்கோள் காட்டினார். "அமெரிக்க தலையீடு மனிதாபிமான நடவடிக்கை அல்ல. மாறாக அது தீவிலும்
தெற்காசியா பூராவும் அதனது நிலையை பலப்படுத்துவதற்கான திட்டத்தின் பாகமே" என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானும் அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தை ஆதரிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி பற்றி பீரிஸ் தெரிவித்தாவது: "பொருளாதாரம் பாரிய
பிரச்சினையை எதிர்கொள்வதாக அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பூகோள நெருக்கடி முதலில் அமெரிக்காவில்
வெளித்தோன்றிய போது, அது இலங்கை பொருளாதாரத்தை பாதிக்கும் சாத்தியம் இல்லை என இலங்கை
அரசாங்கம், குறிப்பாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால் தீவிரமாக மறுத்தார். இப்போது நாட்டின்
வெளிநாட்டு நாணய இருப்பு வற்றிப் போயுள்ளதையும் வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்திருப்பதையும் கப்ராலே
ஏற்றுக்கொண்டுள்ளார்.
"அரசாங்கம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தில் 1.9 பில்லியன் டொலர்கள்
கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது. இது மிகப் பிரமாண்டமான தொகையாகும். அதாவது
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒதுக்கியுள்ள தொகையையும் விட மூன்று மடங்கு அதிகமாகும்.
தொழிலாளர்களும் வறியவர்களும் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் இந்த
கடனைப் பெற முயற்சிக்கவில்லை. மாறாக, பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள வர்த்தகத்துக்கு பிணை வழங்கவும்
தனது சொந்த வரவு செலவுக்கு பயன்படுத்தவுமே கடன் பெற முயற்சிக்கின்றது."
உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரிச்சினையையும் தீர்க்காத
வங்கிகளை காப்பாற்றுதவற்காக கடந்த ஆண்டு 750 பில்லியன் டொலர்களை அமெரிக்க அரசாங்கம்
செலவிட்டுள்ளதாக பீரிஸ் சுட்டிக்காட்டினார். பெப்பிரவரி மாதத்தில் மாத்திரம் அமெரிக்காவில் சுமார்
700,000 பேர் வேலை இழந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
"சகல நலன்புரி சேவைகளையும் இல்லாமல் ஆக்குவது மற்றும் வரவுசெலவு
பற்றாக்குறையை கடுமையாக குறைப்பது உட்பட நிபந்தனைகள் நிறைந்த நீண்ட பட்டியல் ஒன்றை முன்வைத்தே
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குகிறது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்
வழங்கினால் இதே போன்ற நிபந்தனைகள் திணிக்கப்படும்."
இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் தொழிலாளர்களை
ஐக்கியப்படுத்த போராடும் ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் மட்டுமே தொழிலாளர்களால் தமது
நலன்களை பாதுகாக்க முடியும் என பீரிஸ் தெரிவித்தார். "முதலாளித்துவ அபிவிருத்தி காலங் கடந்துபோன
நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் எந்தவொரு ஜனநாயகப் பணியையும் தீர்க்க இலாயக்கற்றது, எனவே
சோசலிசத்தை ஸ்தாபிக்கவும் விவசாயிகள் பிரச்சினை மற்றும் தேசியப் பிரச்சினை உட்பட அனைத்து ஜனநாயகக்
கடமைகளையும் இட்டு நிரப்ப தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும், என 1905ல் லியோன் ட்ரொட்ஸ்கி தனது
நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் சுட்டிக் காட்டியுள்ளார்.
"இன்று அந்த வேலைத்திட்டம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா நெருக்கடியில் உள்ளது.
தேசிய முதலாளித்துவம் வெகுஜனங்களுக்கு எதையுமே செய்யவில்லை. பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இலங்கையும்
நெருக்கடியில் உள்ளன. இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரண்டு தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்காக விவசாயிகளையும் தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள
வேண்டும். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பாகமாக
ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை
ஸ்தாபிப்பதற்கான ஒரே வழி இதுவேயாகும்."
"இந்த வேலைத் திட்டத்தை தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள், மீனவர் கிராமங்கள்
மற்றும் கிராமப்புற பிரதேசங்களில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் அதே போல் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும்
குடும்பத் தலைவிகளுக்கும் முன்வைப்பதே எமது தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான நோக்கமாகும். சாத்தியமானளவு
பரந்த அரசியல் கலந்துரையாடலை நாம் தொடக்கிவைக்க விரும்புகிறோம்," எனத் தெரிவித்து பீரிஸ் தனது
உரையை முடித்தார்.
சோ.ச.க. தனது பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என்ற கேள்வியுடன்
ஊடகவியலாளர் மாநாடு முடிவடைந்தது. சோ.ச.க. உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக இலங்கையிலும்
மற்றும் பிராந்தியம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரத்தை கொண்டு
செல்வதோடு கொழும்பு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நேரடியாக பிரச்சாரத்தில்
ஈடுபடும் என டயஸ் விளக்கினார். கட்சி பல பொதுக் கூட்டங்களை நடத்தும் என அவர் அறிவித்தார். மார்க் 24
அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பிரதான கூட்டம் ஒன்று நடத்தப்படும்.
வருகைதந்திருந்த அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளும் பத்திரிகையாளர்
மாநாட்டின் ஒரு பகுதியை ஒலிபரப்பு செய்தன. அதிக பார்வையாளர்களைக் கொண்ட சிரச டி.வி., ஏனைய
சகல கட்சிகளுக்கும் எதிராக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பீரிஸின் உரையில் ஒரு பகுதியை பல வினாடிகள்
ஒளிபரப்பு செய்தது. டி.வி. லங்கா, ஹிரு எஃப்.எம். மற்றும் சியத/ரியல் ரேடியோவும் அவ்வாறே ஒலி ஒளி
பரப்பின. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேயாவில் பரவலாக பார்க்கப்படும் தமிழ் தொலைக்காட்சி
சேவையான தீபம் டீ.வி, ஐரோப்பாவில் ஒளிபரப்பு செய்த அதன் செய்தித் தொகுப்பில் சோ.ச.க. ஊடகவியலாளர்
மாநாட்டின் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. |