WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
The war in Sri Lanka: the political and class issues
இலங்கை யுத்தம்: அரசியல் மற்றும் வர்க்கப் பிரச்சினைகள்
By the Socialist Equality Party (Sri Lanka)
11 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு
எதிராக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் யுத்தத்துக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும் தீவின்
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் நிபந்தனையின்றி திருப்பியழைக்குமாறும்
கோருகின்றது. தீவு பூராவும் உள்ள தமிழ் மக்களுக்கும் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் பேரழிவை உருவாக்கிவிட்டுள்ள
இந்த 25 ஆண்டுகால மோதலுக்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள முழு அரசியல்
ஆளும்வர்க்கமுமே (ஸ்தாபனமுமே) பொறுப்பாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல், இலங்கை ஆளும்
தட்டு சாதாரண உழைக்கும் மக்களின் உயிரை அலட்சியம் செய்வதை கோடிட்டுக் காட்டுகிறது. அடிப்படை தேவைகள்
கூட இன்றி யுத்த வலயத்தில் சிக்கியுள்ள தமிழ் பொதுமக்களின் தலைவிதியை பற்றிய கவலையின்றி புலிகளிடம்
எஞ்சியுள்ள பிரதேசங்களை ஆட்டிலறி மற்றும் விமானம் மூலம் இராணுவம் தவிடுபொடியாக்குகின்றது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள்
கொல்லப்பட்டுள்ளதோடு, பெருந்தொகையானவர்கள் காயமடைந்துள்ளனர். அதே சமயம், பொருளாதாரத் தேவையின்
நெருக்குதலால் இராணுவத்தில் சேரத் தள்ளப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள், புலிகளின் நிலைகள்
மீது அடுத்தடுத்து நடத்தப்படும் முன்னரங்கு பகுதி தாக்குதல்களில் தம்மை அர்ப்பணித்துவருகின்றனர்.
பெப்பிரவரி 4 அன்று 61வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ,
வடக்கு "பயங்கரவாதத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட" உடன் "புதிய ஜனநாயக யுகம்" ஒன்று வரும் என வாக்குறுதியளித்தார்.
ஒவ்வொரு சொல்லும் பொய்யானதாகும். இது திட்டமிடப்பட்ட இனவாத யுத்தமே அன்றி, அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு
எதிராக நடத்திவரும் விடுதலை யுத்தம் அல்ல. இந்த யுத்தம் தசாப்த காலங்களாக முன்னெடுக்கப்பட்ட தமிழர்
விரோத பாரபட்சத்தின் உற்பத்தியாகும். இதன் குறிக்கோள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பது அல்ல. மாறாக, சிங்கள
மேலாதிக்க அரசை பலப்படுத்துவதும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கு எதிராக சிங்கள ஆளும்
தட்டின் முன்னுரிமைகளை பாதுகாப்பதுமாகும்.
இராஜபக்ஷ தனது "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" முன்னெடுப்பதில் வாஷிங்டனை
அப்படியே பின்பற்றுவதோடு, அமெரிக்காவின் ஆதரவுக்கு பிரதியுபகாரமாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன்
போர் குற்றங்களையும் ஆதரிக்கின்றார். அமெரிக்கா தனது பங்குக்கு, பிராந்தியத்தில் தனது பொருளாதார
மூலோபாய நலன்களை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு வழிமுறையாக புலிகள் மீதான கொழும்பின் தாக்குதலுக்கு
ஆதரவளித்தது. காஸா மீது அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போல் இலங்கையில் நடக்கும் மோதல்கள்,
பூகோள பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துவரும் நிலையிலும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமை உக்கிரமடைகின்ற
நிலையிலும், ஏகாதிபத்தியம் பரந்தளவில் பயன்படுத்தவுள்ள வழிமுறைகளையே வெளிக்காட்டுகிறது.
கொழும்பு முன்னெடுக்கும் படையெடுப்பின் பயங்கரமான விளைவுகளுக்கான அரசியல்
பொறுப்பில் புலிகளுக்கும் பங்குண்டு. புலிகளின் நோக்குநிலை தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக இருந்ததே
கிடையாது. அதன் வேலைத் திட்டம் ஒரு தனியான முதலாளித்துவ அரசை ஸ்தாபித்துக்கொள்வதன் மூலம் தமது
சொந்த சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே
பிரதிநிதித்துவம் செய்கின்றது. தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டம், கொழும்பு ஸ்தாபனத்தின் சிங்கள
மேலாதிக்கவாதத்தின் மறு உருவமாக இருப்பதோடு இனவாத பிளவுகளையும் பாதுகாப்பதாக உள்ளது. தமிழர்
விரோத வேறுபாடுகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக, புலிகள் "சிங்கள
இனத்தை" குற்றஞ்சாட்டுகின்றனர். சிங்கள பொதுமக்கள் மீதான புலிகளின் வன்முறைத் தாக்குதல்கள் அரசாங்கத்தின்
கைகளில் நேரடியாக பயன்பட்டதோடு, அவர்களின் பிரிவினைவாத முன்நோக்கே தற்போது அரசியல் ரீதியில்
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு வழிவகுத்தது. இராணுவ தோல்வியை எதிர்கொள்கையில் அவர்கள்
இராஷபக்ஷவின் யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் அதே சக்திகளிடம் பயனற்ற கோரிக்கைகளை முன்வைக்குமளவிற்கு
வந்துள்ளனர்.
புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் முன்னேற்றமானது தொழிலாள வர்க்கத்தின் மீதான
கொடுமையான தாக்குதல்களுக்கு களம் அமைத்துக்கொண்டிருக்கின்றது என சோ.ச.க. எச்சரிக்கின்றது. ஒவ்வொரு
கட்டத்திலும் தமிழ் வெகுஜன மக்கள் மீதான தாக்குதல் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும்
வாழ்க்கைத் தரங்களின் மீதான தாக்குதல்களுடன் கைகோர்த்து வருவதாகவே இருக்கிறது. உழைக்கும் மக்கள்
யுத்தத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும் என இராஜபக்ஷ மீண்டும் மீண்டும் கோருகின்றார். அதற்கு செலவிடுவதற்காக
நாட்டை அடகுவைத்துள்ள அவர், இப்போது 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார
பின்னடைவை எதிர்கொள்கின்றார். மீண்டும் உழைக்கும் மக்கள் சுமைகளைத் தாங்கத் தள்ளப்படுவர்.
முழு அரசியல் அமைப்புமுறையும் இராஜபக்ஷவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளது.
பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), புலிகளுடன் அது 2002ல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த
நிறுத்த உடன்படிக்கையை நிராகரித்துள்ளதோடு அரசாங்கம் பெற்ற இராணுவ வெற்றிகளுக்காக அதை
பாராட்டுகிறது. தமது சமாதானப் பேச்சுவார்த்தைகள், இராணுவத்தை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் மீண்டும்
கட்டியெழுப்புவதற்கும் அனுமதிக்கும் ஒரு சாதுரியமான சூழ்ச்சித் திட்டமே என கூறுவதன் மூலம் யூ.என்.பி.
தலைவர்கள் யுத்தத்தில் கொஞ்சம் உரிமையும் கோருகின்றார்கள். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.),
யுத்தத்தை மீண்டும் தொடங்க இராஜபக்ஷவை நெருக்கியதற்கு பொறுப்புக் கோருகிறது. யுத்த நிறுத்தத்தை
தொடர்ந்து புலிகளின் அரசியல் ஊதுகுழலாக இயங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, இப்போது சந்தர்ப்பவாத
முறையில் புலிகளின் தலைமைத்துவத்தில் இருந்து தம்மை தூர விலக்கிக்கொண்டுள்ளது.
புலிகளின் இராணுவத் தோல்வியானது கொழும்பு ஆளும்வர்க்கத்தில் உள்ள அதி
வலதுசாரி, இராணுவவாத தட்டுக்களை மட்டுமே பலப்படுத்தும். இராஜபக்ஷவின் அரசாங்கம் ஏற்கனவே
பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் சட்டத்தையும் அவமதித்து ஒரு இராணுவ-அரசியல் கூட்டாகவே
இயங்கிவருகின்றது. புலிகள் தோல்வியடையும் ஒரு சந்தர்ப்பத்தில் துருப்புக்களை கலைப்பதற்கு தயாராவதற்கு
மாறாக, அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை 150,000 முதல் 200,000 வரை விரிவாக்குவதற்கு
அதிகாரமளித்துள்ளது. "விடுவிக்கப்பட்ட" வடக்கு மற்றும் கிழக்கைப் போல், முழு தீவும் பரந்த இராணுவ
முகாமாக மாற்றப்பட்டு வருகின்றது. ஒருமுகப்படுத்தப்பட்ட முகாம்கள் மற்றும் கொலைப் படைகள் உட்பட, இந்த
அரச ஒடுக்குமுறை இயந்திரங்கள், தமது ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காக்கப்
போராடும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக விரைவில் திருப்பப்படும்.
தேசியவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக ஐக்கியப்படுவதன் மூலமும் ஆளும்
கும்பலின் அனைத்து கோஷ்டிகளில் இருந்து தூர விலகுவதன் மூலமும் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் யுத்தத்துக்கு
முடிவுகட்ட முடியும் என சோ.ச.க. வலியுறுத்துகிறது. சகல சூழ்நிலைகளிலும் வாழும் தொழிலாளர்களுக்கு ஒரு
பொது வர்க்க எதிரி உண்டு -அது இராஜபக்ஷ அரசாங்கமும் மற்றும் அது பாதுகாத்துவரும் இலாப அமைப்புமாகும்.
தொழிலாளர்கள் ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில், தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கம்
ஒன்றுக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களை தம்பக்கம் வெற்றிகொள்வதோடு தமது
சொந்த பலத்தில் தங்கியிருக்கத் தொடங்க வேண்டும்.
வரலாற்று வேர்கள்
யுத்தம் ஒரு முழு தலைமுறையின் உயிர்களை அழித்துள்ளது. ஒரு வரலாற்று இருப்பு
நிலை ஏட்டை கணிக்காமல், அவசியமான அரசியல் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளாமல், தொழிலாள வர்க்கம்
ஒரு அடியேனும் முன்நகர்வது சாத்தியமற்றதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான
நாடுகளில் உள்ள முதலாளித்துவம் அடிப்படை ஜனநாயக பணிகளை முன்னெடுக்க இயல்பாகவே இலாயக்கற்றது, எனவே,
பாட்டாளி வர்க்கம் சோசலிச அனைத்துலக வாதத்தின் அடிப்படையில் தனது சொந்த வேலைத்திட்டத்தை அபிவிருத்தி
செய்வது அத்தியாவசியமானதாகும், என விளக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை
இந்த வரலாறு சிறப்பாக உறுதிப்படுத்துகிறது.
யுத்தம் 1983ல் வெடித்திருந்த போதிலும், அதன் வேர்கள் தெற்காசியாவில்
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முடிவுகட்டிய 1947-48 கொடுக்கல் வாங்கல்களில் பரந்துள்ளன. இந்தியத்
துணைக் கண்டம் பூராவும் புரட்சிகர எழுச்சிக்கான வாய்ப்புகளைக் கண்டு திகிலடைந்து போன, புதிதாக
முளைவிட்டிருந்த தேசிய முதலாளித்துவம், காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை கருச்சிதைக்கவும், உழைக்கும் மக்களின்
செலவில் தமது நலன்களை அடைய ஒரு தீர்வை அமுல்படுத்தவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன்
கைகோர்த்துக்கொண்டு செயற்பட்டது. இந்த வளைந்துகொடுத்தலின் விளைவு, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை முஸ்லிம்
பாகிஸ்தானாகவும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்து இந்தியாவாகவும் பிரிப்பதற்கு வழிவகுத்தது. இந்த
பிளவு மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொண்ட இனவாத வன்முறை அலைகளுக்கு தூண்டுகோலாகியது.
சிலோன் என்றழைக்கப்பட்ட ஒரு சுதந்திர இலங்கையின் ஸ்தாபிதமும், ஒரு அரசியல்
கருச்சிதைப்பாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கட்டுப்படுத்தப்பட்ட வெகுஜன எதிர்ப்பு ஒன்றை முன்னெடுத்த
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்களுடன் ஒப்பிட்டால் கூட, இலங்கையை ஸ்தாபித்தவர்கள் குறிப்பாக ஒரு
விலைபோகக்கூடிய பங்கினையே வகித்தனர். துணைக்கண்டம் பூராவும் பரவிய புரட்சிகர கிளர்ச்சி, தனியான
அரசுக்கான தமது சொந்த திட்டத்துக்கு குழிபறிக்கும் என அஞ்சிய உள்ளூர் முதலாளித்துவ அரசியல்வாதிகள்,
சிலோனில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை பகைத்ததோடு, சுதந்திரத்தை கோருவதற்கு மாறாக லண்டனுடனான
பிணைப்பை தொடரும் ஒரு மேலாதிக்க நிலையையே கோரினர். அவர்களின் குறுகிய, தன்னல நோக்கங்கள்,
ஸ்திரமற்ற தெற்காசியாவில் ஒரு நடவடிக்கை தளமாக தீவை தக்கவைத்துக்கொள்ள விரும்பிய பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுடன் பொருந்தியது.
பிரிட்டிஷ் இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் தலைமைத்துவம்
நான்காம் அகிலத்துக்கும் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சிக்கும் (பி.எல்.பீ.ஐ.) கிடைத்தது. இலங்கையில்
மட்டுமன்றி இந்திய துணைக்கண்டம் பூராவும் சோசலிச அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு
கட்சியை கட்டியெழுப்பும் முன்நோக்கை பி.எல்.பீ.ஐ. அத்திவாரமாக கொண்டிருந்தது. அவப்பேறு நிறைந்த
1948 சுதந்திர உடன்படிக்கையை எதிர்த்த பி.எல்.பீ.ஐ., "லஞ்சம் பெற்ற மற்றும் கெஞ்சிப் பிழைக்கும்"
சிலோன் முதலாளித்துவம், "நீண்டகாலமாக கனிந்துபோயிருந்த இந்தியப் புரட்சிக்கு எதிராக, ஒரு ஆசிய
பாதுகாப்புகூட்டாக, அதாவது ஏகாதிபத்தியத்திற்கான ஒரு அரணாக" இலங்கைத் தீவை மாற்றுவதன் பேரில்
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்கின்றது, என எச்சரித்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு தேசிய எல்லையை வரைந்ததன் உடனடி
விளைவு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவில் இருந்து
கொண்டுவரப்பட்ட தீவின் ஜனத்தொகையில் பத்தில் ஒரு பங்கினராக இருந்த ஒரு மில்லியன் தமிழ் பேசும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. கிளர்ச்சியடைந்திருந்த தொழிலாள
வர்க்கத்தை எதிர்கொண்டிருந்த மற்றும் தனது ஆட்சியை பலப்படுத்துவதில் அவநம்பிக்கை கொண்டிருந்த ஐக்கிய
தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம்
பற்றிய இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு அவர்களது பிரஜா உரிமையை பறிப்பதாகும்.
தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவினர் இதை ஏற்றுக்கொண்ட அதே வேளை, அடிப்படை ஜனநாயக உரிமை மீதான
இந்த வெளிப்படையான தாக்குதலை பி.எல்.பீ.ஐ. எதிர்த்ததோடு, "அரசு தேசத்துக்கு ஒத்ததாக இருக்க
வேண்டும், மற்றும் தேசம் இனத்துக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்" என்ற இனவாத கொள்கையை யூ.என்.பி.
பயன்படுத்துவதாகவும் எச்சரித்தது.
அடுத்து வந்த தசாப்தங்களில், சிங்கள மேலாதிக்கம் இலங்கை முதலாளித்துவத்தின்
அரசியல் படைக் களஞ்சியத்தில் மிகவும் வலிமை மிக்க ஆயுதமாகியது. அரசியல் நெருக்கடிகளுக்கு, எல்லாவற்றுக்கும்
மேலாக, தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக, கொழும்பு அரசியல்வாதிகள் இனவாத பதட்டங்களை
எரியச் செய்ததோடு சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிரானவர்களாக்கினர். முதலாளித்துவ ஆட்சியின் அத்திவாரத்தையே
ஆட்டுவித்த 1953 ஹர்த்தாலை (பொது வேலை நிறுத்தம்) அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.)
அதன்தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் இடது ஒலியெழுப்பும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் பிரச்சாரகர்களாயினர்.
அவர்கள் கடந்தகால பிரித்தானிய காலனித்துவத்தின் மீதான கண்டனங்களையும் சோசலிச வாய்வீச்சுக்களையும், தமிழ்
மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் செலவில் தீவை சிங்கள பெளத்த அரசாக மாற்றிமைக்கும் பிற்போக்குவாத
முன்நோக்குடன் கலந்தனர். பண்டாரநாயக்க 1956ல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, சிங்களத்தை மட்டும் அரச
மொழியாக்கி, தமிழ் பேசும் மக்களை இரண்டாந்தர பிரஜைகள் என்ற நிலைக்கு கொண்டுவரும் தனது கொள்கையை
அமுல்படுத்தினார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு
1950ல் லங்கா சமசமாஜக் கட்சியுடன் (ல.ச.ச.க.) ஒன்று சேர்க்கப்பட்ட
பி.எல்.பீ.ஐ. இன் அடுத்துவந்த வரலாற்றின் நீண்டகால விளைவுகளை பரீட்சிக்காமல் இலங்கையின் அடுத்த
வரலாற்றை முழுவதுமாகப் புரிந்துகொள் முடியாது. "சிங்களம் மட்டும்" கொள்கையை உத்தியோகபூர்வமாக
எதிர்த்த அதேவேளை, ல.ச.ச.க. தலைவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடது ஜனரஞ்சகவாதத்துக்கு
மேலும் மேலும் அடிபணிந்து போனதோடு 1964ல் விதவையான பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க.
அரசாங்கத்தில் இணைந்துகொண்டனர். சோசலிசத்துக்காக போராடுவதற்கு வர்க்க அடிப்படையில்
சிங்களவர்களையும் தமிழர்களையும் ஐக்கியப்படுத்தும் கொள்கை ரீதியான போராட்டத்தை ல.ச.ச.க.
கைவிட்டமை இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெரும் குழப்ப நிலையை உருவாக்கிவிட்டதோடு, இனவாத
அரசியலின் வளர்ச்சிக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. சிங்கள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பி. மற்றும்
தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத குட்டி முதலாளித்துவ போக்குகளின்
தோற்றத்திற்கான காரணங்களை, சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளை ல.ச.ச.க.
காட்டிக்கொடுத்ததிலேயே நேரடியாக காணமுடியும்.
1970-77 காலத்தின் ஸ்ரீ.ல.சு.க.-சமசமாஜ கூட்டணி அரசாங்கத்தில் 1964
காட்டிக்கொடுப்பின் கசப்பான விளைவுகளை கண்டுகொள்ள முடியும். 1971ல் ஜே.வி.பி. யினால்
முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியை கொடூரமாக நசுக்கிய பின்னர், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான
பாரபட்சங்களை வெளிப்படையாக அமுல்படுத்துவதன் மூலம் ஸ்ரீ.ல.சு.க. தனது அரசியல் தளத்தை பலப்படுத்த
முயற்சித்தது. ல.ச.ச.க. தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவால் வரையப்பட்ட இலங்கை ஜனநாயக
சோசலிச குடியரசின் புதிய அரசியல் யாப்பு, பெளத்த மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்தது. தனியார்
உரிமையாளர்களுக்கு பதிலாக சிங்கள முகாமையாளர்களை பதிலீடு செய்யப்பட்ட, பெருந்தோட்டங்களை
"தேசியமயமாக்கும்" நடவடிக்கையையும் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு மீண்டும் திருப்பி
அனுப்பும் திட்டத்தையும் டி சில்வா மேற்பார்வை செய்தார். சிங்கள மாணவர்களுக்கு சாதகமாக கடுமையான
பாரபட்சங்களை ஏற்படுத்திய பல்கலைக்கழக நுழைவு "தரப்படுத்தலின்" பிரதிபலனாக, தமிழ் இளைஞர்கள்
தீவிரமடைந்தனர். இதன் விளைவாக, தனியான தமிழ் அரசுக்காக ஆயுதப் போராட்டத்தை பரிந்துரைத்த
விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் தோன்றின.
1975-76 பூகோள பொருளாதார பின்னடைவின் மத்தியில், "சோசலிசம்" என
காட்டப்பட்ட பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தேசியமயமாக்கும் பொருளாதார கொள்கைகள் பேரழிவை ஏற்படுத்தியதோடு,
அதை சுரண்டிக்கொண்ட யூ.என்.பி. 1977ல் மாபெரும் வெற்றியை பெற்றது. வெளிநாட்டு மூலதனத்துக்காக தீவை
ஒரு மலிவு உழைப்பு களமாக மாற்றும் முயற்சியில், திறந்த பொருளாதார கொள்கைகளை முதலாவதாக அமுல்படுத்திய
அரசாங்கங்களில் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கமும் ஒன்றாகும். பொதுத்துறை சேவைகள், தொழில் மற்றும்
நிலைமைகளில் அவர் ஏற்படுத்திய கடுமையான வெட்டுக்கள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து எதிர்ப்பைத்
தூண்டிவிட்டதோடு அது 1980 பொது வேலை நிறுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தொடர்ச்சியான சமூக
அமைதியின்மையையும் பூகோள பொருளாதார பின்னடைவையும் எதிர்கொண்ட ஜயவர்தன, செய்துபார்க்கப்பட்ட
மற்றும் பரீட்சிக்கப்பட்ட இனவாத அரசியல் வழிமுறைகளுக்குத் திரும்பினார். தமிழ் பிரிவினைவாதிகளால் ஆங்காங்கே
நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல்கள் தமிழர் விரோத அடக்குமுறைகளுக்கும் ஆத்திரமூட்டல்களுக்கும் சாக்குப்
போக்காக சுரண்டிக்கொள்ளப்பட்டதோடு, 1983ல் தீவு பூராவும் நடத்தப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகள்
ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுக்க ஜயவர்தனவுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.
அடுத்து வந்த 25 ஆண்டுகள் பூராவும், மலிவு உழைப்பு களமாக தீவை பூகோள
முதலாளித்துவத்துக்குள் முழுமையாக ஒன்றிணைத்தல், யுத்தம் ஆகிய இரு அடிப்படை கொள்கையை நோக்கி இலங்கை
முதலாளித்துவம் திரும்பியது. இது ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இக்கட்டுநிலையை ஏற்படுத்தியது: இந்த மோதல்கள்
பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒரு தடையாக இருந்த அதே வேளை, அதற்கு முடிவுகட்ட எடுத்த எந்தவொரு
முயற்சியும், முதலாளித்துவ ஆட்சிக்கு மிகவும் அத்தியாவசியமான முண்டுகோலாகியுள்ள சிங்கள மேலாதிக்கவாதத்துக்கு
எதிராக நின்றது. கால் நூற்றாண்டுகால இனவாத மோதலானது இராணுவம், அரச அதிகாரத்துவம், பெளத்த
உயர்பீடம் மற்றும் வர்த்தகர்களின் சில பகுதியினருக்கும் சக்திவாய்ந்த நிலையான நலன்களையும் உருவாக்கிக்
கொடுத்துள்ளதோடு புலிகளுடன் சமரசம் காண முயற்சித்த ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களின் நச்சுத்தனமான
எதிர்ப்பை எதிர்கொண்டன.
ஆறு தசாப்தங்களின் பின்னர், சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் எதிர்ப்போக்கு தர்க்கத்தைப்
பற்றி, அதன் மிகவும் "தீவிரமான" வடிவத்தை பற்றிக் கூட எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. 1960களில்
மாவோ சேதுங் மற்றும் சே குவேராவின் "ஆயுதப் போராட்டத்தின்" செயல் வடிவத்தை பின்பற்றிய ஜே.வி.பி,
1980களின் கடைப் பகுதியில் இனவாத யுத்தத்துக்கு தீவிரமாக வக்காலத்து வாங்கத் தொடங்கியது. 1987 இந்திய-இலங்கை
உடன்படிக்கையின் ஊடாக மோதல்களுக்கு முடிவுகட்ட ஜயவர்தன எடுத்த முயற்சியை அது கசப்புடன் எதிர்த்தது. தனது
பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க மறுத்த, தனது கட்டளைகளை பின்பற்ற மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்,
தொழிற்சங்க போராளிகள் மற்றும் அரசியல் எதிரிகளையும் அதன் துப்பாக்கி கும்பல்கள் சுட்டுத் தள்ளியதில் இருந்து
தொழிலாள வர்க்கம் தொடர்பான ஜே.வி.பி. யின் ஆழமான பகைமை வெளிப்படையாக அம்பலத்துக்கு வந்தது.
1990களில் முன்னாள் ஜே.வி.பி கெரில்லாக்கள் கொழும்பு அரசியல் அமைப்புமுறையின் பங்காளிகளானதோடு
2004-05ல் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தில் சேர்ந்து, அதன் சுதந்திர சந்தை நிகழ்ச்சித்
திட்டத்தை அமுல்படுத்த உதவினர். இப்போது உத்தியோகபூர்வமாக எதிர்க் கட்சியில் இருந்தாலும், ஜே.வி.பி.
இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரிப்பதுடன், அவரது இராணுவ வரவுசெலவுத் திட்டத்துக்கும் வாக்களித்ததோடு அவரது
அரசாங்கத்தை சவால் செய்ய அச்சுறுத்திய எந்தவொரு தொழிற்சங்க போராட்டத்துக்கும் மீண்டும் மீண்டும் குழி
பறித்தது.
தமிழ் பிரிவினைவாதம்
தமிழ் மக்களைப் பொறுத்தளவில், தமிழ் பிரிவினைவாத வடிவிலான இனவாதமும் ஒரு
அரசியல் மரணப் பொறி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புலிகளின் பிரதான ஆலோசகரான காலஞ்சென்ற அன்டன்
பாலசிங்கம், "சுயநிர்ணய உரிமை" மார்க்சிசத்தால் ஒப்புவிக்கப்பட்ட ஒரு மீறக்கூடாத கொள்கை" என போலியாக
கூறிக்கொண்டார். எவ்வாறெனினும், தனியான தமிழ் அரசுக்கான அழைப்பில் இயல்பான முற்போக்கு பண்பு எதுவும்
கிடையாது. சுதந்திர ஈழம் ஒன்றுக்கான கோரிக்கை, முதலாவதாக 1970களில் முதலாளித்துவ தமிழர் ஐக்கிய
விடுதலை கூட்டணியே (டி.யூ.எல்.எஃப்.) பரிந்துரைத்தது. இது, தசாப்த காலங்களாக தமது சிங்கள
சமதரப்பினருக்கு இரண்டாந்தரமாக இருந்து ஒத்து ஊத தள்ளப்பட்ட தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் அதிருப்தியை
பிரதிபலித்தது. பண்டாரநாயக்கவால் உக்கிரமாக்கப்பட்ட தமிழர் விரோத வேறுபாடுகளுக்கு தமிழ் முதலாளித்துவம்
எடுத்த எதிர்நடவடிக்கை, தமது சொந்த தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான தனது சொந்த முதலாளித்துவ
அரசை ஸ்தாபிக்க அழைப்பு விடுப்பதாகும்.
சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு கொழும்பு அரசாங்கத்துக்கு எதிராக, ஒரு
சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஒரு பொதுப் போராட்டத்தில் சகல தொழிலாளர்களையும்
ஐக்கியப்படுத்தும் ஒரு சுயாதீனமான மாற்றீட்டை விரிவுபடுத்துவதில் இருந்து தொழிலாள வர்க்கத்தை தடுத்தது.
பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் சமசமாஜ கட்சி நுழைந்துகொண்டதை பற்றிக்கொண்ட புலிகளின் ஸ்தாபக
இளைஞர்கள், அதை மார்க்சிசமும் ட்ரொட்ஸ்கிசமும் தோல்விகண்டுவிட்டதற்கான ஆதாரமாக காட்டினர். புலிகள்
சோசலிசத்தை பற்றி பேசினாலும், அவர்களின் வேலைத்திட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ
வேலைத்திட்டத்தின் சிறப்பியல்புகளையே கொண்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி உடனான புலிகளின்
வேறுபாடுகள், வெறும் தந்திரோபாயம் பற்றியதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோல்விகண்ட தேர்தல்
ஏமாற்றுகளில் அதிருப்திகண்ட புலிகள், ஒரு தனி அரசுக்காக போராட ஆயுதங்களை ஏந்தினர்.
புலிகள் இயக்கத்தின் வர்க்க நோக்குநிலை மற்றும் அரசியல் முன்நோக்கின் விளைவே
அவர்களின் இராணுவத் தோல்வியாகும். புலிகளின் ஆயுதப் போராட்ட கொள்கையின் பின்னணியில், தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் அதை சோசலிச அடிப்படையில் சுயாதீனமாக
அணிதிரட்டுவதற்கும் எதிரான ஆழமான வர்க்கப் பகைமை இருந்துகொண்டுள்ளது. புலி போராளிகள், இலங்கை
பாதுகாப்பு படையினரையும் அரசியல் தலைவர்களையும் மட்டுமன்றி சாதாரண சிங்கள தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தவர்களையும்
குறிவைக்கின்றனர். இது வேண்டுமென்றே இனப் பகைமைகளுக்கு எரியூட்டுவதாக இருப்பதோடு அரசாங்கத்தின் பிரச்சார
இயந்திரத்துக்கும் எண்ணெய் வார்க்கின்றது. புலிகள் இயக்கம் தமது அரசியல் எதிரிகள் மீதான அடக்குமுறை மற்றும்
படுகொலைகள் ஊடாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற உரிமை கோரலை இரக்கமின்றி அமுல்படுத்துகின்றது.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில், கருத்து வேறுபாடுகளை நசுக்கும், கனமான வரிகளை திணிக்கும்,
இளைஞர்களை பலாத்காரமாக படையில் சேர்க்கும் மற்றும் ஒவ்வொரு அமைப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்
அடிமைப்படுத்தும் ஒரு ஜனநாயக விரோத அரசாங்கத்தை அமுல்படுத்துவதன் மூலம் வெகுஜனங்கள் மீதான தமது அலட்சியத்தை
புலிகள் எடுத்துக்காட்டுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகள் அச்சம், சீற்றம் மற்றும் பகைமையையே உருவாக்குமே
தவிர அரசியல் மதிப்பையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தாது.
போர்க்குணம் மிக்க வாய்வீச்சுக்கள் ஒருபுறம் இருக்க, இறுதி ஆய்வுகளில், ஒரு தனி
அரசுக்கான புலிகளின் திட்டங்கள், பலவித பெரிய மற்றும் சிறிய அரசுகளின் சர்வதேச ஆதரவை
தக்கவைத்துக்கொள்வதிலேயே தங்கியிருக்கின்றது. ஏதாவதொரு வல்லரசுடனான புலிகளின் நடைமுறைவாத
தந்திரோபாயங்கள் அடிக்கடி, மீண்டும் மீண்டும் அழிவிலேயே முடிவுற்றுள்ளது. இந்தியாவின் ஆதரவைப் பெற
சகலதையும் பணயமாக வைத்த புலிகள், 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் வடக்கில்
இந்தியத் துருப்புக்கள் நுழைவதை ஏற்றுக்கொண்டது. இதன் போது தமது சொந்த குறிக்கோள்களுடன் புது டில்லியின்
குறிக்கோள்கள் பொருந்தவில்லை என்பதை மட்டுமே புலிகளால் கண்டுகொள்ள முடிந்தது. இந்தியத் துருப்புக்கள்
தனது சொந்த போராளிகளை நிராயுபாணிகளாக்க தொடங்கியவுடன் வெடித்த மோதல்களால் கசப்படைந்த
புலிகள், எதிர்த் தாக்குதல் நடத்தியதோடு 1991ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை
செய்தனர். இந்த செயல், சர்வதேச அரங்கில் புலிகளின் நிலைமையை மேலும் பலவீனப்படுத்தியது.
குளிர் யுத்தத்தின் முடிவின் பின்னர் சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட துரிதமான
மாற்றங்களில் முற்றிலும் திகைப்பூட்டும் விதத்தில் புலிகள் சிக்கிக்கொண்டனர். மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை
இயக்கத்தைப் போல் மற்றும் தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸைப் போல், புலிகள் திறந்த
பொருளாதார கருத்தை வெளிப்படையாக அணைத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துடனான தமது ஒத்துழைப்பையும்
வெளிக்காட்டினர். 11 செப்டெம்பர் 2001ன் பின்னர், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான
யுத்தத்துக்கு" இலக்காகாமல் தப்புவதற்காக அவநம்பிக்கையுடன் திட்டங்களைக் கையாண்ட புலிகள், 2002ல் யுத்த
நிறுத்தமொன்றில் கைச்சாத்திட்டு, சுதந்திர ஈழம் என்ற தமது கோரிக்கையையும் கைவிட்டதோடு அதிகாரப்
பரவலாக்கல் ஏற்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றினர். இலங்கை அரசியலில் இரண்டாந்தர
பாகத்துக்கும் மேலாக எதையும் புலிகளுக்கு வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் அக்கறைகாட்டவில்லை என்பது
தெளிவான நிலையில் பேச்சுவார்த்தைகள் துரிதமாக கவிழ்ந்தன.
2006ல் இராஜபக்ஷ தீவை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிய நிலையில், அவரது
அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறியதையும் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம்
செய்வதையும் முழு "சர்வதேச சமூகமும்" கண்டுகொள்ளவில்லை. இராணுவ உதவிகளையும் அரசியல் ஆதரவையும்
கொடுத்து புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா, புலிகளை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தையும்
கனடாவையும் நெருக்க இராஜதந்திர அழுத்தத்தையும் கொடுத்தது. இலங்கை இராணுவத்துக்கு தேவையான
பெரும்பகுதி ஆயுதங்களை அமெரிக்க பங்காளிகளான இஸ்ரேலும் பாக்கிஸ்தானும் விற்றன. தமது நாட்டிலுள்ள தமிழ்
மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படும் சாத்தியம் இருந்த போதிலும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா போன்ற
தனது எதிரிகளை முன்கூட்டியே தடுப்பதன் பேரில், இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் மற்றும் இராணுவ
ஆதரவையும் வழங்கியது. எந்தக் கேள்வியும் இன்றி பெய்ஜிங் பணமும் ஆயுதங்களும் வழங்கியது.
சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட புலிகள், சுடு திறனிலும் எண்ணிக்கையிலும்
மிகப் பெருமளவில் பலப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை எதிர்கொண்டனர். 2002 யுத்த நிறுத்தத்தில்
வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை கொண்டுவரத் தவறியதாலும் மற்றும் தமது சொந்த ஒடுக்குமுறை
வழிமுறைகளாலும் உள்ளூரில் புலிகளின் அரசியல் அடித்தளம் சரிந்து போனது. எதிர் கோஷ்டிகள் தமது ஆதரவை
பெருக்க முயற்சித்த நிலையில், 2004ல் புலிகள் இயக்கத்தை பலவீனமாக்கும் ஒரு பிளவு வெடித்தது. வடக்கில்
உள்ள தலைமைத்துவம் அதிகாரத்தில் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக குற்றஞ்சாட்டி கிழக்கு மாகாணத்தில்
கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இராணுவத்தின் திறனுக்கு இந்த உடைவு(முறிவு) குறிப்பிடத்தக்க
காரணியாக விளங்கியது. கருணா குழுவின் உதவியுடன் 2007 நடுப் பகுதியில் புலிகளை கிழக்கில் இருந்து
வெளியேற்றிய இராணுவம், தனது வளங்களை வடக்கில் குவிமையப்படுத்தியது.
இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள்
மற்றும் புத்திஜீவிகள் மத்தியில், புலிகள் மீதான இராணுவ வெற்றி, ஒரு புதிய அலைபோன்ற தொந்தரவுகள் மற்றும்
அடக்குமுறைகளை புதிதாக கொண்டுவரும் என்ற உறுதியான பீதி நிலவுகிறது. ஆயினும், தமிழ் பிரிவினைவாத
முன்நோக்கைப் பற்றிக்கொள்வதன் மூலம் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் தம்மை
பாதுகாத்துக்கொள்ள முடியாது. அவர்கள் இனவாத அரசியலில் இருந்து தீர்க்கமாக விலக வேண்டும். இதே
விதத்தில் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலை எதிர்கொள்கின்ற தீவிலும்,
தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்பத்
தொடங்க வேண்டும். சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள
வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை தம்பின்னால் அணிதிரட்டிக் கொண்டு, சமூக சமத்துவமின்மை, இனவாதம்
மற்றும் யுத்தத்தின் உண்மையான தோற்றுவாய்க்கு எதிராக, மொத்தத்தில் இலாப முறைக்கு எதிராக ஒரு
தாக்குதலை முன்னெடுக்க முடியும்.
இந்தியத் துணைக் கண்டத்திலும் இலங்கையிலும் இந்த முன்நோக்குக்காக போராடும்
ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும்
சோசலிசத்துக்கான போராட்டத்தின் இன்றியமையாத பாகமாக மட்டுமே ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச
குடியரசுக்கான புரட்சிகர போராட்டம் சாத்தியமாகும். இலங்கையானது துணைக் கண்டம் பூராவும் அடிநிலையில்
இடம்பெறும் அரசியல் நகர்வுகளின் அறிகுறியாகும். சுதந்திரத்தின் பின்னர் ஆறு தசாப்தங்களாகியும், தெற்காசிய
நாடுகளில் உள்ள ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினர் பொருளாதார பின்னடைவிலும் வறுமையிலும் மூழ்கிப்
போயுள்ளனர். 1947 பிற்போக்குவாத பிரிவினையால் ஏற்படுத்தப்பட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளில்
வேரூன்றியுள்ள யுத்தங்கள் மற்றும் இனவாத வன்முறை வெடிப்புக்களில் முழு பிராந்தியமும் அதிர்ந்து போயுள்ளது.
ஆளும் தட்டுக்கள் திறந்த பொருளாதார திட்டத்தை அணைத்துக்கொண்ட நிலையில், சமூகப் பிளவுகள்
ஆழமடைந்துள்ளன. இதனாலேயே அவர்கள் மீண்டும் ஒரு முறை வகுப்புவாத இனவாத அரசியலை நாடுகின்றனர்.
தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கு நடைமுறைக்குரிய அவசர தேவையாகியுள்ளது.
அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பையும் ஆப்கானிஸ்தானை மீண்டும் காலனித்துவமயமாக்கியதையும்
எதிர்க்க பிராந்தியத்தில் உள்ள ஆளும் தட்டுக்கள் தவறியதில் இருந்து தெளிவான எச்சரிக்கைகளை பெற்றுக்கொள்ள
வேண்டும். பூகோள பொருளாதார நெருக்கடியானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குவதோடு
கூர்மையான பொருளாதார மற்றும் மூலோபாய பகைமைக்கும் வழிவகுக்கின்றது. பிரமாண்டமான மலிவு உழைப்பு
வளத்தைக் கொண்டுள்ள இந்தியத் துணைக்கண்டம், தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமான விளைவுகளுடன் இந்த ஏகாதிபத்திய
சதி வலைக்குள் இழுக்கப்பட்டு வருகின்றது. கடைசியாக நடந்த பூகோள காட்டுத் தீயில், உள்ளூர் அரசியல் முகவர்கள்
மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலட்சக்கணக்கான இந்தியர்களை
பீரங்கிக்கு இரையாக்கியது. ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்துக்கு ஆதரவளிக்க இந்திய, பாகிஸ்தான், இலங்கை
மற்றும் பங்களாதேஷ் அரசாங்கமும் விரும்பியமை, மீண்டும் ஒரு முறை ஏகாதிபத்திய மோதல்களுக்காக உழைக்கும்
மக்களை அர்ப்பணிக்கச் செய்ய முதலாளித்துவம் தயாராகி வருவதற்கான நிச்சயமான அறிகுறியாகும்.
1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, சோசலிச
சமத்துவக் கட்சி சோசலிச அனைத்துலகவாதக் கொள்கைகளுக்காக போராடி வந்துள்ளது. இதன் விளைவாக,
அரச இயந்திரம் அதே போல் ஜே.வி.பி. மற்றும் புலிகள் உட்பட சகல பக்கங்களில் இருந்தும் துன்புறுத்தல்களை
எதிர்கொண்டது. கட்சி மிக உறுதியான அத்திவாரங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதனால் உறுதியாக
நிற்க முடிந்தது. அந்த அத்திவாரம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால்
முன்னெடுக்கப்படும், சகல விதமான தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்துக்கும்
எதிரான மார்க்சிசத்துக்கான போராட்டமே ஆகும்.
பிராந்தியம் பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் சக்திவாய்ந்த சோசலிச இயக்கத்தை
கட்டியெழுப்புவதற்கான முதல் நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்தையும், சகலவிதமான
தேசியவாதம், இனப் பாகுபாடுகள் மற்றும் இனவாதத்தையும் எதிர்க்குமாறு தெற்காசியா முழுவதிலும் உள்ள
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. உலக சோசலிச வலைத் தளத்தில்
அன்றாடம் அபிவிருத்தி செய்யப்படும் அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும்
கவனமாக படிப்பதோடு சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும்
கட்டியெழுப்ப இணையுமாறும் நாம் எமது வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். |