WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP
stands in Colombo election against war and social inequality
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி யுத்தத்துக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக
கொழும்பில் தேர்தலில் போட்டியிடுகின்றது
By the Socialist Equality Party
9 March 2009
Use this version
to print | Send
this link by email | Email
the author
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, ஏப்ரல் 25 நடக்கவுள்ள மேல் மாகாண
சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. கடந்த மாதம் நடந்த மத்திய மற்றும் வடமேல்
மாகாண சபைக்கான தேர்தலில் போலவே, அரசாங்கத்தின் இனவாத யுத்தம், ஜனாநாயக உரிமைகள் மீதான
தாக்குதல்கள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்காக
சோ.ச.க. வேட்பாளர்கள் மட்டுமே போராடுகின்றனர்.
சோ.ச.க. நிறுத்தியுள்ள 46 வேட்பாளர்களில் பெருந்தோட்ட மற்றும்
கைத்தொழில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்கள், குடும்பப் பெண்கள்
மற்றும் சட்டத்தரணிகளும் அடங்குவர். அரசியல் குழு உறுப்பினரான விலானி பீரிஸ் வேட்பாளர்களுக்கு தலைமை வகிக்கின்றார்.
பீரிஸ், 1969ல் தனது 21வது வயதில் சோ.ச.க. யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க.)
இணைந்ததோடு, சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஊடாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காக்க தனது
முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்தவராவார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் முன்னேறுகின்ற நிலையில் வெற்றி
ஆரவாரம் கிளறிவிடப்பட்டுவருகிற ஒரு பிற்போக்குவாத சூழ்நிலையை தனக்கு சாதகமாக சுரண்டிக் கொள்ளும்
நம்பிக்கையிலேயே ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மாதம் நடந்த
தேர்தலில் தனது கட்சி பெற்ற வெற்றி, யுத்தத்துக்கான வாக்காளர்களின் ஆதரவை வெளிப்படுத்துவதாக இராஜபக்ஷ
கூறிக்கொள்கின்றார். இதற்கு மாறாக, அரசாங்கத்தின் யுத்தத்துக்கு பின்னால் அணிதிரண்டுகொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளிடம்
இருந்து எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளாததையே அது எடுத்துக்காட்டியது.
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இழைக்கப்படும் யுத்தக் குற்றங்களுக்கு முழு
கொழும்பு அரசாங்கமும் ஊடக ஸ்தாபனங்களுமே பொறுப்பாளிகள். இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் மற்றும்
குண்டுவீச்சுக்களால் நூற்றுக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள்
காயமடைந்துள்ளனர். யுத்த வலையத்தில் இருந்து வெளியேறுபவர்கள் முட்கம்பிகளாலும் பாதுகாப்பு படையினராலும்
சூழப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் விரட்டப்படுகின்றனர்.
தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க வேண்டும்மென சோ.ச.க. கோருகின்றது. இந்தக் கோரிக்கையின் நோக்கம்
புலிகளுக்கு ஆதரவளிப்பதல்ல. கொழும்பு அரசாங்கத்தாலும் முதலாளித்துவ முறையாலும் பாதுகாக்கப்படுகின்ற தமது
பொதுவர்க்க எதிரிக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை பலப்படுத்துவதற்கு மாறாக, புலிகளின்
பிரிவினைவாத வேலைத் திட்டமானது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் மரணப் பொறி என்பதை நிரூபித்துள்ளது.
புலிகள் மீதான இராணுவத்தின் வெற்றிகள் வேலை நிலைமை, சம்பளம், தொழில்
மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான தாக்குதல்களை துரிதமாக உக்கிரமாக்கும். ஜனாதிபதி இராஜபக்ஷ தனது
யுத்தத்துக்கு செலவிடுவதற்கு அரசை அடகு வைத்துள்ளதோடு, இப்போது 1930களின் பின்னர் தோன்றியுள்ள மிக
மோசமான பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பணத்துக்காக பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
உழைக்கும் மக்கள் ''யுத்தத்துக்காக அர்ப்பணிக்கவேண்டும்'' என நெருக்கப்பட்டு வந்ததைப் போலவே,
"நாட்டுக்காக அர்ப்பணிக்கவேண்டும்'' என்று தவிர்க்கமுடியாமல் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
வெளிநாட்டு நாணய இருப்பு ஜூலையில் 3.56 பில்லியன் அமெரிக்க டொலரில்
இருந்து டிசம்பரில் 1.75 டொலர் வரை குறைந்துபோயுள்ளது. இது ஒன்றரை மாதத்துக்கான இறக்குமதிக்கு
மட்டுமே போதுமானது. சர்வதேச கடன் சந்தையில் கடன் பெறமுடியாத மத்திய வங்கி, சர்வதேச நாணய
நிதியத்திடம் செல்லத் தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியமும் மார்ச் 2 அன்று, "ஒரு தசாப்தத்தில் மிக
மோசமான அந்நிய செலாவனி நெருக்கடி" நிலவுகிறது என இலங்கையின் ஆபத்தான நிலைமையை விவரித்துள்ளது.
எந்தவொரு சர்வதேச நாணய நிதிய கடனும், மேலும் தனியார்மயப்படுத்தல் மற்றும் சமூக செலவுகளில்
கடுமையான வெட்டுகளுடன் இணைந்த நிபந்தனைகளுடனேயே கிடைக்கக் கூடும்.
சமூக அமைதியின்மை அச்சுறுத்தலை விபரிக்க அரசாங்கம் ஏற்கனவே இராணுவவாத
மொழியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பெப்பிரவரி 25 நடந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய
நாடுகளின் அமைப்பின் (சார்க்) கூட்டத்தில் ஜனாதிபதி இராஜபக்ஷ தெரிவித்ததாவது: "உண்மையில், இந்த
[பூகோள பொருளாதார] நெருக்கடியால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்திரமின்மையை எமது சமூகத்திற்கு
பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கு மிகவும் சமமாக கருத முடியும்."
கடந்த இரு ஆண்டுகளாக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டம்
செய்யும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளை "புலி பயங்கரவாதிகளுக்கு" உடந்தையானவர்கள்-உதாரணமாக
பணத்துக்காக நாச வேலை செய்பவர்கள்- என மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்துள்ளார். இப்போது,
பிரமாண்டமான பாதுகாப்பு இயந்திரங்களும் கடந்த 25 ஆண்டுகால யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட
ஜனநாயக-விரோத சட்டங்களும் ஏற்கனவே தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன. மத்திய
வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கடன் பற்றிய நிபந்தனைகளை கலந்துரையாடிக்கொண்டிருக்கின்ற நிலையில்,
மார்ச் 3 அன்று அரசாங்கம் மின்சார சபையை தனியார்மயப்படுத்துவதற்கு களம் அமைப்பதன் பேரில்
நீண்டகாலமாக தாமதமாகி வந்த சட்டத்தை பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றியது. அதே தினம் இந்தச்
சட்டத்துக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்திய பல நூறு தொழிலாளர்களை சுமார் 600 பொலிசார்
சூழ்ந்துகொண்டிருந்ததோடு தொழிலாளர்கள் மின்சார சபை தலைமையகம் நோக்கி நடக்க முயற்சித்தால்
யுத்தநேர அவசரகாலச் சட்டத்தின் அதிகாரங்களை பயன்படுத்துவதாக அச்சுறுத்தினர்.
பல்கலைக்கழக மாணவர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில்
வன்முறைகளுக்கு முடிவுகட்டும் சாக்குப் போக்கில், களனி பல்கலைக்கழகத்தை மூடியதையும் ஆர்பாட்டம் செய்த
மாணவர்களை கைதுசெய்து தாக்கியதையும் அரசாங்கம் ஆதரித்தது. "பல்கலைக்கழக பயங்கரவாதிகளை
விரட்டியடிக்க" பொலிசைப் பயன்படுத்த வேண்டும் எனக் கோரிய ஐலண்ட் பத்திரிகை பிரகடனம்
செய்ததாவது: "சில நாட்களுக்குள் வடக்கில் பயங்கரவாதம் துடைத்துக் கட்டப்படும். நாட்டின் அந்தப் பாகத்தில்
யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் உயர்கல்வி பீடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது."
அனைத்து பிரதான கட்சிகளும் இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்தின் மீதான
யுத்தத்தை" ஆதரிப்பதோடு தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அவரது தாக்குதல்களையும் ஆதரிக்கவுள்ளன.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) 2002 யுத்த நிறுத்தத்தையும்
அதை தொடர்ந்து நடந்த புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களையும் முழுமையாக கைவிட்டுள்ளது. ஐக்கிய
தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது முழு ஆதரவையும் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு
வழங்கியுள்ளதோடு, இராஜபக்ஷவை போல், ஏனைய "பயங்கரவாத" அச்சுறுத்தல்களுக்கும் எதிராக நடவடிக்கை
எடுப்பதற்காக அரசை பலப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி சாதாரண
உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் அபிலாஷைகளைப் பற்றி கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக,
யுத்தம் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றியே அக்கறை காட்டுகிறது. தீவை வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புக் களமாக திறந்துவிடுவதற்கு ஒரு அதிகாரப் பங்கிட்டுக்கொள்ளும்
உடன்பாடுகளையே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது.
தொடக்கத்தில் இருந்த புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்து வந்த மக்கள் விடுதலை
முன்னணி (ஜே.வி.பி.) தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு குழி பறிப்பதில் தீர்க்கமான பாத்திரம்
வகித்துள்ளது. அதன் போர்குணம்மிக்க வாய்வீச்சுக்கள் ஒரு புறம் இருக்க, தொழிலாளர்களின் தேவையை விட யுத்த
முயற்சிக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தும் போதெல்லாம் ஜே.வி.பி. தொழிற்சங்கத்
தலைவர்கள் வளைந்து கொடுத்தனர். மின்சாரசபை தனியார்மயமாக்கப்படுவது பற்றிய ஜே.வி.பி. யின் எதிர்ப்பு,
தேசிய வளங்களை பாதுகாத்தல் என்ற "தேசப்பற்றையே" அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதே விதத்திலான
பிற்போக்கு பொருளாதார தேசியவாதமே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தேசிய அரசுக்கும் தொழிலாளர்களை
அடிபணியச் செய்வதற்காக உலகம் பூராவும் கிளறிவிடப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும்
ஐக்கிய சோசலிசக் கட்சியின் (யூ.எஸ்.பி.) சோசலிச பாசாங்குகளை தொழிலாளர்களும் இளைஞர்களும்
நிராகரிக்க வேண்டும். இந்த இரு கட்சிகளும், உத்தியோகபூர்வ அரசியலினதும் முதலாளித்துவ கட்சிகளினதும்
இனவாத வேலைத்திட்டத்துக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்ய முயற்சிக்கின்றன. இந்தத் தேர்தலில்,
பொறிந்துபோன சர்வதேச சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்ப வலதுசாரி ஐக்கிய தேசியக்
கட்சியை நெருக்க முடியும் என்ற மாயையை குறிப்பாக சிங்கள உழைக்கும் மக்கள் மத்தியில்
முன்னிலைப்படுத்துகின்றன.
"தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்" என்ற புலிகளின் போலி உரிமைகோரலை
தமிழர்கள் மத்தியில் ந.ச.ச.கட்சியும் மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் முன்நிலைப்படுத்துகின்றன. உண்மையில்
புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனரே அன்றி, தொழிலாள வர்க்கத்தை
பிரதிநிதித்துவம் செய்யவில்லை. புலிகள் எந்தவொரு அரசியல் விமர்சனத்தையும் இரக்கமின்றி நசுக்குவதிலும்,
பலாத்காரமாக ஆள்சேர்க்கும் திட்டத்திலும் மற்றும் தற்போது வடக்கு யுத்த வலயத்தில் இருந்து பொதுமக்களை
வெளியேற அனுமதிக்க மறுப்பதிலும் உழைக்கும் மக்களை அவர்கள் அலட்சியம் செய்வது மீண்டும் மீண்டும்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சிங்கள மேலாதிக்கவாதத்தை போலவே, புலிகளின் தமிழ்
பிரிவினைவாதமும் தமது சொந்த முதலாளித்துவத்துக்கு உழைக்கும் மக்களை கட்டிப்போட சேவையாற்றுவதோடு
அவர்களை இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக நிறுத்துகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை பொறுத்தளவில் அவை எப்போதும் மோசடியானதாகும்.
ஐக்கிய தேசிய கட்சியைப் போலவே, அவர்களுக்கு ஆதரவளித்த பெரும் வல்லரசுகளும் மற்றும் சிறிய அரசுகளும்,
தெற்காசியாவை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ளும் மற்றும் தமது நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் யுத்தத்துக்கு
முடிவுகட்டும் ஒரு வழிமுறையாகவே அவர்களை ஆதரித்தனர். "சமாதான முன்னெடுப்புகள்" கவிழ்ந்த பின்னர், அமெரிக்கா,
இந்தியா மற்றும் ஏனைய "சர்வதேச சமூகத்தவர்களும்" புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கு அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும்
ஆதரவளித்தன. புலிகள் இராணுவத் தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில், இப்போது இந்த "சர்வதேச சமூகத்தவர்கள்"
இலங்கையிலும் மற்றும் பிராந்தியத்திலும் தமது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நிலைமைக்கான விவாதத்துக்காக
இந்த அழிவை சுரண்டிக்கொள்ளும் உறுதிப்பாட்டுடன் கழுகுகள் போல் தீவைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டுள்ளனர்.
இராஜபக்ஷ அரசாங்கம் அதிகாரத்தில் தனது கையைப் பலப்படுத்திக் கொண்டு
அடுத்து வரவுள்ள வர்க்க மோதல்களுக்காக தயார் செய்வதன் பேரில் இந்த மாகாண சபை தேர்தலை பயன்படுத்திக்கொள்கிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் இருந்து தேவையான அரசியல் பாடங்களை பெறவும்
தமது சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களை காப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்யவும்
தனது சொந்த தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக தொழிலாள வர்க்கம் சகல விதமான தேசியவாதம்
மற்றும் இனவாதத்தை நிராகரிக்க வேண்டும். சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவத்தின் பல்வேறுபட்ட எதிர் கும்பல்கள்
இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் இயற்கையான பங்காளிகள் அல்ல.
மாறாக தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களே பங்காளிகளாவர்.
இத்தேர்தலின்போது சோசலிச சமத்துவ கட்சி தொழிற்சாலை, அலுவலக
தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் சோசலிச கொள்கைகளை
அடித்தளமாக்கொண்டு ஒரு தொழிலாளர்கள், விவசாயிகள் அரசுக்கான சாத்தியமான பரந்தவொரு பிரசாரத்தை
மேற்கொள்ளும். உலக, தெற்காசிய சோசலிச குடியரசிற்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல்
போராட்டத்தின் ஒரு பாகமாகவே ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமானது சாத்தியமானது
என்பதை எமது வேட்பாளர்கள் தெளிவுபடுத்துவார்கள்.
எமது முன்னோக்கை ஆதரிக்கும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின்
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக கலந்துகொள்ளுமாறும், கட்சிக்கு நிதியுதவி செய்யுமாறும், கட்சியின் கூட்டங்களில்
கலந்துகொள்ளுமாறும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக்
கட்சியில் இணைந்துகொள்ள விண்ணப்பிப்பதனூடாக அதன் பிரச்சார வெளியீடுகளை விநியோக்கிக்க உதவுமாறும்
கேட்டுக்கொளுகின்றோம்.
சோசலிச சமத்துவக் கட்சியுடனான தொடர்புகளுக்கு தொலைபேசி- 271-2104
(இலங்கை) அல்லது மின்னஞ்சல்- wswscmb@sltnet.lk.
|