World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைUS plans for military intervention in Sri Lanka அமெரிக்கா இலங்கையில் இராணுவத் தலையீட்டுக்கு திட்டமிடுகிறது By Wije Dias இலங்கையின் வடக்கு யுத்த வலயத்தில் இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் உக்கிரமான மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்களை அப்புறப்படுத்துதல் என்ற போர்வையில், அங்கு அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் குழுவொன்றை இறக்குவதற்கான திட்டங்கள் பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. பத்திரிகையின் படி, அமெரிக்க பசுபிக் படைத்துறை (PACOM) உடன் சம்பந்தப்பட்ட மெரைன் படையெடுப்பு அணி ஒன்று இந்தப் பணியை முன்னெடுக்கும். அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையும் கூட இதில் பங்குபற்றும். சண்டே டைம்ஸ், இந்த நடவடிக்கைக்கு வழியமைப்பதற்காக பி.ஏ.சி.ஓ.எம். உயர் மட்டக் குழுவொன்று கொழும்பில் இருப்பதாக பெப்பிரவரி 22 வெளியிட்ட முதலாவது கட்டுரையில் தெரிவித்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தால் அல்லது அமெரிக்க இராணுவத்தால் அறிவித்தல்கள் எதுவும் விடுக்கப்படாத போதிலும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அமெரிக்க தலைமையிலான "கூட்டு மனிதாபிமான கடமைப் படை" சம்பந்தமான திட்டம் பற்றி தான் அறிந்திருந்ததாக சண்டே டைம்சுக்குத் தெரிவித்துள்ளார். சிவிலியன்களை அப்புறப்படுத்துவதற்கு பிரான்சும் உதவியளிப்பதாக கடந்த வார இறுதியில் வெளியுறவு அமைச்சர் அந்த பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். அப்புறப்படுத்துவதில் ஈடுபடுவதற்கான தனது சொந்த விருப்பத்தை தெரிவித்துள்ள இந்தியா, கடந்த வாரம் கூட்டு நடவடிக்கைக்கும் தனது ஆதரவை வெளிக்காட்டியது. எந்தவொரு அப்புறப்படுத்தும் திட்டம் பற்றியும் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் உடன்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. இரு தரப்பினரும் சிக்கிக்கொண்டுள்ள சிவிலியன்களை அரசியல் அடைமானப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரதேசத்தை முழுமையாக தரைமட்டமாக்குவதற்கு அனுமதிப்பதன் பேரில், புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை விரட்ட இராணுவம் முயற்சிக்கின்றது. சுவரில் சாய்ந்துகொண்டுள்ள புலிகள், பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதற்கு முன்னர் ஒரு யுத்த நிறுத்தத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை நிராகரித்துள்ள அரசாங்கம் முழுமையான நிபந்தனையற்ற சரணடைவை கோருகின்றது. புலிகளின் உடன்பாடு இன்றி இந்த அமெரிக்கத் தலைமையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என சண்டே டைம்ஸ் சமிக்ஞை செய்துள்ளது -இத்தகைய ஆத்திரமூட்டும் நகர்வு அமெரிக்க மெரைன்களுக்கும் கொரில்லாக்களுக்கும் இடையில் மோதல்களை துரிதப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. "புலிகள் தொடர்ந்தும் மறுக்கின்ற நிலையில், புலிகளின் எதிர்ப்புக்களை ஓரங்கட்டிவிட்டு இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்க அரசாங்கம் தள்ளப்படலாம், என சண்டே டைம்ஸ் உணர்ந்துள்ளது," என அது தெரிவிக்கின்றது. ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கிட்டத்தட்ட 200,000 தமிழ் பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ளதாக மதிப்பிட்டுள்ளன. இந்தப் பிரதேசம் இப்போது 50 சதுரக் கிலோமீட்டருக்கும் குறைவாக சுருங்கியுள்ளது. இராணுவத்தின் ஷெல் வீச்சுக்களால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட உணவு விநியோகங்களையே அனுமதித்துள்ளது. தப்பிச் செல்லும் சிவிலியன்கள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதோடு சமாளித்துக்கொண்டு முன்னரங்கு பகுதிகளை கடப்பவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் தோல்விகண்ட "சமாதான முன்னெடுப்புகளை" மேற்பார்வை செய்த, இணைத் தலைமை நாடுகள் என்று சொல்லப்படும் சர்வதேச குழுவின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வேயும் இந்த மனிதாபிமான நெருக்கடி பற்றி தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன. எவ்வாறெனினும், அவர்களின் கவலை, அகதிகளின் தலைவிதி தொடர்பான எந்தவொரு உண்மையான அனுதாபத்தினாலும் தோன்றியதல்ல. மாறாக, வட இலங்கையில் ஓடும் இரத்தக்களரி பிராந்தியம் பூராவும் கடுமையான ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தக் கூடும் என்ற பீதியே அவர்களின் அனுதாபத்துக்குக் காரணம். 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி, 2006 நடுப்பகுதியில் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு இரகசியமாக ஆதரவு வழங்கியதில், இந்த இணைத் தலைமை நாடுகள் என சொல்லப்படுவதன் பாசாங்கை காண முடியும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் இராணுவ அனுசரணையிலான கொலைப் படைகளால் இளம் தமிழர்கள், எதிர்க் கட்சி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். "சமாதான முன்னெடுப்புகளை" மேற்பார்வை செய்த அந்த சக்திகள் இந்த சம்பவங்கள் தொடர்பாக அடக்கமாக வாசித்ததோடு நின்றுகொண்டன. உண்மையில், சிவிலியன்களை பீதிக்குள்ளாக்கி, அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து விரட்டி, அந்தப் பிரதேசத்தை சுதந்திரமாக தாக்குதல் நடத்தக்கூடிய வலயமாக மாற்றுவதன் பேரில் கண்மூடித்தனமான ஆட்டிலறித் தாக்குதல்களையும் விமானக் குண்டுவீச்சுக்களையும் பயன்படுத்தும் இலங்கை இராணுவத்தின் தந்திரோபாயத்துடன் அமெரிக்கத் தலைமையிலான "மனிதாபிமான படையெடுப்பு" வசதியாகப் பொருந்துகிறது. தீவின் கிழக்கிலும் மற்றும் வடக்கிலும் புலிகளின் கோட்டைகளை இராணுவம் கைப்பற்றிய போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தால் இந்த வழிமுறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இலங்கையில் தனது சொந்த மூலோபாயத்தை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த மோதல்கள், தெற்காசியாவில் குறிப்பாக பிராந்தியத்தில் வாஷிங்டனின் மிகவும் முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதார பங்காளியாகிவரும் இந்தியாவிலும் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அதை முடிவுக்குக் கொண்டுவரும் வழியாக புஷ் நிர்வாகம் இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு" ஆதரவளித்தது. இந்த 25 ஆண்டுகால மோதல்கள், புலி "பயங்கரவாதத்தின்" உற்பத்தி அல்ல. மாறாக, அது தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக தசாப்த காலங்களாக முன்னெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ பாரபட்சங்களின் உற்பத்தியேயாகும். கடந்த ஆண்டின் கடைப்பகுதியில் புலிகளுக்கு எதிராக இராணுவம் வெற்றிகளைக் கண்டவுடன், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய சக்திகளும் யுத்தத்துக்கு முடிவுகட்ட "அரசியல் தீர்வு" காணுமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை மேலும் மேலும் உறுதியாக நெருக்கி வந்தன. இந்தப் பதத்தின் அர்த்தம், வாஷிங்டன் திட்டமிட்டு தடைசெய்துள்ள புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அன்றி, தீவின் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்துவதே ஆகும். அத்தகைய கொடுக்கல் வாங்கல் இன்றி, முதலில் யுத்தத்துக்கு வழிவகுத்த சீழ்பிடித்து அழுகிப்போன இனவாத பதட்ட நிலைமைகள் மீன்டும் இன்னொரு வடிவில் தோன்றலாம் என அவை அச்சமடைந்துள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாட அமெரிக்காவின் வெளியுறவுக்கான செனட் கமிட்டி கடந்த வாரம் கூடியது. இலங்கை அரசாங்கம் இப்போது எடுத்துள்ள முடிவுகள் பல தசாப்தங்களுக்கு தாக்கத்தை எற்படுத்தும் என அந்தக் குழுவுக்கு முன்நாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி லன்ஸ்டன்ட் தெரிவித்தார். "அது அதன் தமிழ் சிவிலியன்களை தக்கமுறையில் நடத்தத் தவற முடியும், அரசியல் சீர்திருத்தத்தில் தக்கமுறையில் ஈடுபடத் தவறக் கூடும், மற்றும் மனித உரிமைகள் மீறுவதை தொடர்ந்தும் அனுமதிப்பதோடு மாற்றுக் கருத்துக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடும். அப்படி நடந்தால், அமைதியின்மை தொடரும், வன்முறைகள் திரும்பவும் நிச்சயமாக நிகழும், எப்பொழுதும் நிறைவேற்றும் சாத்தியம் இல்லாததாகவே தோன்றும், எதிர்காலத்தைப் பற்றிய வாக்குறுதிகள் மேலும் மேலும் தள்ளிச் செல்லும்," என அவர் எச்சரித்தார். "இலங்கையின் எதிர்காலத்தை அமைப்பதில் முக்கியமான பாத்திரத்தை வகிக்குமாறு" லன்ஸ்டட் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரமாண்டமான இராணுவ செலவுகள் மற்றும் தற்போதைய பூளோக பொருளாதார பின்னடைவால் உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் கடுமையான நிதி நெருக்கடி பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ள லன்ஸ்டட், "விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே" நிதி உதவிகள் கிட்டும் என வலியுறுத்துமாறு சர்வதேச நிதி உதவியாளர்களுக்கு பிரேரித்துள்ளார். இனவாத பதட்ட நிலைமைகளை குறைக்க தனது "திருத்தங்களை" சித்தரித்த பின்னர் அவர், "அத்தகைய மாற்றங்கள் இன்றி, இன மோதல்கள் தவிர்க்க முடியாமல் மீண்டும் நிகழும் வாய்ப்பு உண்டு" எனக் கூறி முடித்தார். எவ்வாறெனினும், தமிழர்களுக்கு எதிரான உத்தியோகபூர்வ பாரபட்சங்களுக்கு முடிவு கட்டவும் மற்றும தீவின் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடையில் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்தவும் லன்ஸ்டட் முன்வைத்துள்ள பிரேரணை, நிச்சயமாக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் இட்டு நிரப்ப முடியாது என நிரூபிக்கப்பட்டவையாகும். 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தனது சொந்த ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் இலங்கை முதலாளித்துவம் சிங்கள மேலாதிக்கவாதத்திலேயே தங்கியிருந்தது. புலிகள் மீதான அண்மைய இராணுவ வெற்றிகள், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் சிங்கள பெளத்த தேசத்தை காட்டிக்கொடுக்கும் செயலாகக் கருதும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள மிகவும் எதிர்ப்போக்கு சக்திகளின் கைகளை மட்டுமே பலப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், தீவின் வடக்கில் பெருமளவு அமெரிக்க இராணுவப் படை நிலைகொள்வதானது யுத்தத்தின் முடிவுகளை தனது மூலோபாய நலன்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்பதன் பேரில் கொழும்பை நம்புவதற்கு வாஷிங்டனுக்கு கணிசமான அரசியல் நெம்புகோளை வழங்கும். இராணுவத் தலையீடு பற்றி லன்ஸ்டட் சமிக்ஞை செய்யாத அதே வேளை, தனது செல்வாக்கிலான பிராந்தியத்தில் இலங்கையை ஒரு பாகமாக மரபுரீதியாக கருதிக்கொண்டுள்ள "இந்தியாவுடனான நெருக்கமான ஒத்துழைப்புடனேயே" அமெரிக்காவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இலங்கை யுத்தம் பற்றி தென்னிந்தியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அரசியல் அமைதியின்மை இந்திய அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதோடு இந்திய-அமெரிக்க மூலோபாய பங்களிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அமெரிக்க பீதியடைந்துள்ளது. இலங்கையில் அமெரிக்கத் தலையீட்டை இயக்கியுள்ள காரணி இந்தியா பற்றிய அக்கறை மட்டுமல்ல. தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரத்தில் ஒரு நடவடிக்கைத் தளமாக தீவில் கால்பதித்துக்கொள்ள பல ஆண்டுகளாக அமெரிக்க முயற்சித்து வருகின்றது. தற்போது மோதல் நடந்துவரும் பிரதேசத்துக்கு தெற்காக, கிழக்கு கடற்கரை பிரதேசமான திருகோணமலையில் உள்ள ஆழ்கடல் துறைமுகம் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இடமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. இந்த விடயம் 2002ல் இலங்கையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க பி.ஏ.சி.ஓ.எம். குழுவினாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2004 நடந்த அழிவுகரமான சுனாமியை அடுத்து, தென் இலங்கைக்கு மரெயின் படைகளை அனுப்பிய அமெரிக்க இராணுவம், தற்போதைய "மனிதாபிமான" திட்டங்களுக்கு ஒரு முக்கியமான முன்னோடி நடவடிக்கையை அமைத்தது. இந்து சமுத்திரத்தினதும் மற்றும் அதனால் இலங்கையினதும் நீண்டகால பூகோள அரசியல் முக்கியத்துவம் பற்றி, கடைசியாக வெளிவந்த வெளி விவகாரம் என்ற அமெரிக்க சஞ்சிகையில், "இருபத்தியோராம் நூற்றாண்டின் மத்திய நிலை: இந்து சமுத்திரத்தில் அதிகார ஆளுமை" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அனுபவமுள்ள ஊடகவியலாளரான ரொபட் கப்லன், ஆசியாவில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள பூகோள அரசியல் சம்பந்தப்பட்ட மூன்று சவால்களை சுட்டிக் காட்டியுள்ளார்: "பெரும் மத்திய கிழக்கு பற்றி மூலோபாய கனவு, முன்நாள் சோவியத் ஒன்றியத்தின் தென் பகுதி மீதான செல்வாக்குக்கான போராட்டம், மற்றும் இந்து சமுத்திரத்தில் இந்தியாவினதும் சீனாவினதும் வளர்ச்சி கண்டுவரும் இருப்பு." இந்து சமுத்திரத்தில் சீனா மற்றும் இந்தியாவின் கடற்படை சக்தியின் வளர்ச்சி, சமுத்திரத்தின் வர்த்தக பாதைகளின் முக்கியத்துவம், அருகில் உள்ள வளங்கள் நிறைந்த பிராந்தியமான மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் மூலோபாய முக்கியத்துவம், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஒப்பீட்டளவிலான பின்னடைவின் ஆபத்து பற்றி அந்தக் கட்டுரை வலியுறுத்தி இருந்தது. இலங்கை தொடர்பாக அவர் சுட்டிக் காட்டியதாவது: "அராபிக் கடலும் வங்காள விரிகுடாவும் கூடும் மூலோபாய இடத்தில் அமைந்துள்ள இலங்கையில் ஒரு தளம் அமைப்பது பற்றிய அவதானத்தில் இருந்து அமெரிக்க கடற்படை தளபதிகளை இனவாத யுத்த நடவடிக்கைகள் திசை திருப்பும் வாய்ப்பு உள்ள நிலையில், சீனர்கள் அங்கு தமது யுத்தக் கப்பல்களுக்காக ஒரு மீள் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்." இந்து சமுத்திரத்தில் பெரும் மூலோபாய குவிமையப்படுத்தலுக்கான தேவையே, தீவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டின் பின்னணியில் உள்ள பிரதான குறிக்கோள் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையினதும் கடைசி காரணம், வடக்கில் சிக்கியுள்ள தமிழ் சிவிலியன்களின் தலைவிதியாக இருக்கலாம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மக்களுக்கு பெரும் அழிவுக்கு வழிவகுத்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கள் போல், இலங்கையிலான தலையீடானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தும் எதிர்பார்ப்பைக் கொண்டதாக இருப்பதால், அது இலங்கையிலும், தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தால் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டியதாகும். |