World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காReject UAW sellout at Ford! Mobilize autoworkers to defend jobs and living standards! ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் போர்டில் காட்டுக்கொடுப்பை நிராகரிக்கவும்! வேலைகளையும், வாழ்க்கை தரத்தையும் பாதுகாக்க கார்த் தொழிலாளர்களை அணிதிரட்டு! 26 February 2009 அமெரிக்கா முழுவதும் உள்ள கார் தொழிலாளர்கள் UAW-Ford ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி வாக்களிக்க இருக்கின்றன; இம்மாற்றங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் இப்பொழுதுள்ள 42,000 தொழிலாளர்கள், 186,000 ஓய்வு பெறவுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பியிருப்பவர்கள் அனைத்தையும் தாக்குகின்றன. ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கும் வழிவகை மார்ச் 9ம் தேதி முடிவடைய இருக்கிறது. UAW செய்யும் இக்காட்டிக்கொடுப்பை நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுவதுடன் கார்த் தொழிலாளர்கள் தொழில்துறை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணிதிரட்டப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுகிறது. கார்த் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் இந்த அறிக்கையை நகல்கள் எடுத்து மிகப் பரந்த அளவில் வழங்குமாறும் ஊக்கம் அளிக்கிறோம்.போர்ட் தொழிலாளர்கள் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களை விற்றுவிடும் ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும்; வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், பணி நிலைமைகள் இவற்றிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராட அனைத்து கார்த் தொழிலாளர்களும் திரட்டப்பட வேண்டும். UAW கையெழுத்திட்டுள்ள உடன்பாடு 2007 ல் பறிக்கப்பட்டுவிட்ட ஏராளமான சலுகைகளுக்கு அடுத்து வருகிறது; இது பல தசாப்தங்கள் போராடிப் பெற்ற வெற்றிகள் அனைத்தையும் அழித்துவிடும்.இந்த உடன்பாடு வாழ்க்கை செலவின உயர்வுகளுக்கான படிகள், மற்றும் கடந்த ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்டிருந்த ஊதிய முடக்கத்திற்கு ஈடு செய்யும் வகையில் வழங்கப்பட இருந்த மேலதிக கொடுப்பனவுகள் ஆகியவற்றை அகற்றிவிடும். UAW எட்டு மணி நேரத்திற்கு பின்னர் கூடுதல் பணிக்கான ஊதியத்தை அகற்றிக் கொள்ளவும் ஒப்புக் கொண்டுள்ளது; இடைவேளை நேரத்தை குறைக்க தயாராக இருப்பதுடன், இரண்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களையும் குறைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. Jobs Bank எனப்படும் வேலைகள் வங்கி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு, வேலையின்மை உதவி நலன்கள் ஒரு வருடத்திற்கு மட்டும்தான் என்பதும் ஏற்கப்பட்டுள்ளது. இதன்போது கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் முன்னோடியில்லாத வகையில் ஆலைகள் மூடல், பெரும் பணி நீக்கங்கள் என்ற அலையை தொடங்குகின்றன.போர்ட்டின் ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதியை பாதியாக்கி கொள்ள அனுமதித்த விதத்தில், அதுவும் கிட்டத்தட்ட மதிப்பற்ற பங்குகளுக்கு ஈடாக என்றவிதத்தில், இந்த ஒப்பந்தம் 186,000 ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அவர்களை நம்பியிருப்பவர்களுக்கும் சுகாதார நலன்கள் பெரிதும் இல்லாதொழிக்கப்படும் நிலைமைக்கு தள்ளிவிடுகிறது. மேலும் அவர்கள் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் மேலதிக செலுத்து தொகையாகவும், இணைத் தொகையாகவும் செலுத்த வேண்டும். கார் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கார் தொழிலாளர்கள் பொறுப்பு அல்ல. பெறுநிறுவன நிர்வாகிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் பங்கு மதிப்புக்களை உயர்த்துவதற்காக நீண்டகால தொழில்துறை ஸ்திரத்தன்மையை நீக்கி, பெரும் தனிச் சொத்து குவிப்பு அடைவதற்காக செய்த செயல்கள் பற்றிய முடிவுகளுக்கு கார் தொழிலாளர்கள் பொறுப்பு அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவிற்கு தொழிலாளர் வர்க்கம் பொறுப்பு அல்ல; அந்த முறிவு 1930களுக்கு பின்னர் மிக மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. 1980 கிறைஸ்லர் பிணை எடுப்பில் தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களாக கார்த் தொழிலாளர்கள் பெற்ற சலுகைகளை ஒன்றன்பின் ஒன்றாக இழந்து கொண்டிருக்கின்றனர். 2007ல் இது உச்சக்கட்டத்தை அடைந்து, ஊதியங்கள் பாதியாக போனதுடன் முதலாளிகள் கொடுத்துவந்த ஓய்வூதியங்கள் புதிய தொழிலாளிகளுக்கு இல்லை என்ற நிலையையும் ஏற்படுத்தியது. இப்பொழுது UAW உறுப்பினர்கள் டோயோடா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் அமெரிக்க ஆலைகளில் பணிபுரியும் தொழிசங்க உறுப்பினரல்லாத கார்த்தொழிலாளர்கள் வாங்கும் அளவு அல்லது அதற்கும் குறைவான ஊதியத்தைத்தான் வாங்குகின்றனர். மீண்டும் UAW அதிகாரத்துவம் இந்த பாரிய விட்டுக்கொடுப்புக்கள் "வேலைகளைக் காப்பாற்ற" தேவை என்று கூறுகிறது. UAW தலைர் ரோன் கெட்டில்பிங்கர் இப்படியான விட்டுக்கொடுப்புகள் இல்லாமல், "போர்ட் நீண்ட கால அடிப்படையில் செயல்பட முடியாது" என்று கூறுகிறார். ஆனால் UAW கையெழுத்திட்ட "வேலைகள் காப்பு ஒப்பந்தங்கள் எதுவும் ஆலைகள் மூடலையோ பெரும் பணி நீங்கங்களையோ நிறுத்திவிடவில்லை. 1978ல் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கார்த் தொழிலாளர்களில் நான்கில் மூன்று பகுதியினர் வேலைகளை இழந்துள்ளனர். போர்டில் மணித்தியால அடிப்படையில் வேலைபார்ப்பவர்களின் அளவு 174,000ல் இருந்து 42,000 எனக் குறைந்துவிட்டது. ஜெனரல் மோட்ட்ஸ் ஏற்கனவே மற்றும் ஒரு 47,000 பணிகளை அகற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது; இதில் அமெரிக்காவில் உள்ள 21,000 மணித்தியால தொழிலாளர்களும், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் அடங்குவர்; மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 14 ஆலைகள் மூடபபடும். கிறைஸ்லர் மற்றும் போர்ட் ஆகியவையும் தங்கள் ஆலைகள் எண்ணிக்கையை குறைத்து கார் விற்பனையில் பெரும் சரிவை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. முந்தைய விட்டுகொடுப்புகளில் இருந்து தொழிலாளர்களிடம் பறிக்கப்பட்ட பணம் தொழில்துறையின் காத்திரமான வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை; மாறாக பங்குகள் வாங்குவதற்கு பயன்பட்டன; அதே போல் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் பெரிய முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை உயர்த்தவும் அவர்களுடைய பங்கு மதிப்பை உயர்த்தவும்தான் பயன்படுத்தப்பட்டன. "பங்குபோடப்படும் தியாகங்கள்" என்று கார்த் தயாரிப்பு நிர்வாகிகள் பேசுவது அனைத்தும் மோசடி ஆகும். போர்டின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் முலாலே தன்னுடைய அடிப்படை சம்பளத்தை சற்று குறைத்துக் கொள்ளுகிறார்; இதற்குப் பின் அவரிடம் "நிதானமான $1.4 மில்லியன்", போர்ட் தொழிலாளர்களின் ஊதியம் போல் 28 மடங்காக இருக்கும். 2007ல் முலாலேயின் மொத்த ஊதியத் தொகுப்பு, மேலதிககொடுப்பனவுகள், பங்குகள், பங்கு விருப்பங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தது $21.6 மில்லியன் ஆகும். இவரும் மற்ற உயர்மட்ட நிர்வாகிகளும் தங்கள் "தியாகங்கள்" பின்னர் ஈடுகட்டிக் கொள்ளும் வகையில் பரந்த இலாபங்களை "மறுகட்டமைக்கப்பட்ட" கார்த் தொழிலில் கிடைக்கும் இலாபத்தில் இருந்து ஈட்டுவர்; இதற்காக அவர்கள் ஓய்வூதிய, சுகாதார கொடுப்பனவுகளை இல்லாதொழித்துள்ளனர். அதிக சம்பளம் பெற்று வந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை அகற்றி விட்டு, அரைச் சம்பளத்தில் புதிய தொழிலாளர்கள் வாடகைக்கு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இப்புதிய விட்டுக்கொடுப்புகள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வரும்போது GM, Ford, Chrysler இன்னும் பல உலகந்தழுவிய நிறுவனங்களால் முன்னோடியாக காட்டுப்படும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, "GM, Chrysler இரண்டும் UAW இடம் இருந்து கூடுதலான விட்டுக்கொடுப்புகளை பெற்றால், போர்டும் அதே போன்ற விட்டுக்கொடுப்புகளை எதிர்பார்க்கும்; அப்பொழுதுதான் அது அரசாங்கம் கொடுக்கவிருக்கும் பிண எடுப்புக்களின் விதிகளுக்கு உடன்பட முடியும்; அல்லது திவால் பதிவு செய்துவிடும்." ஒபாமா நிர்வாகம் மிக இரக்கற்ற நிதிய மூலதனத்தின் பிரிவுகளின் சார்பில் செயல்பட்டு வருகிறது; இந்த நெருக்கடியை அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் வர்க்க உறவுகளை நிரந்தரமாகவும் அடிப்டை ரீதியாகவும் மாற்ற ஒரு வாய்ப்பாக பயன்படுத்த விரும்புகின்றன. ஒரு வீடு, ஒரு ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு என்று ஓரளவு பொருளாதாரப் பாதுகாப்பை பெற்றிருந்த "மத்தியதர வகுப்பு தொழிலாளர்" என்று அழைக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவை இலக்கு கொண்டுள்ளன. கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் படரவல்லதாகும். வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்களையும் மற்றும் சொத்துக்களை அழிப்பவர்களையும் ஒபாமா தன்னுடைய கார்த்தொழில் பணிக்குழுவிற்கு தேர்ந்தெடுத்துள்ளதனூடாக மக்களுக்கு இது தெளிவாக தெரியும். அவர்களுள் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பில் முக்கிய உரு கொடுத்திருந்த நிதி மந்திரி டிமோதி கீத்னர், கிளன்டர் நிர்வாகத்தில் நிதி மந்திரியாக இருந்த, வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லோரன்ஸ் சம்மர்ஸ் ஆகியோர் உள்ளனர். இருவரும் வரிப்பணத்தை பெறும் வங்கிகள் மீது பெயரளவு தடைதவிர வேறு ஏதும் கூடாது என்று கூறியுள்ளனர்; மேலும் காங்கிரஸ் இயற்றிய ஊக்கப்பொதிச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தன வங்கி நிர்வாகிகள் ஊதியத்தில் வரம்பிற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் . இவர்களுக்கு ஆலோசகராக ஸ்டீவன் ரட்னர் இருப்பார்; இவர் நிறுவனங்கள் இணைப்பு மற்றும் ஒரு நிறுவனத்தை மற்றைய நிறுவனம் கையேற்றுகொள்ளப்படல் ஆகியவற்றில் நிபுணரும், பல மில்லியன் டாலர் மதிப்புடைய தனியார் பங்கு நிறுவனத்தை நடத்துபவருமாவர். மேலும் ரோட் ப்ளூமும் உள்ளார்; அவர் மற்றொரு வோல்ஸ்ட்ரீட் நிதியாளர் ஆவார். எஃகுத் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தின் உறுப்பினர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட உதவியவர்; அது எஃகுத் தொழிலை "காப்பாற்ற" பல நிதிய பெரும் சுறாக்களுடன் அது கூடிச் செயல்பட்டபோது இது நடந்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றை இழந்தனர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, கார்த் தயாரிப்பு நிறுவனங்களை அத்தியாயம் 11 திவாலுக்கு தள்ளும் வழிவகையும் சிந்திக்கப்படுகிறது; இதையொட்டி அவை இலாபம் தரக்கூடிய சொத்துக்களை பெரு முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட்டு சுகாதார, ஓய்வூதிய கொடுப்பனவுகளை திவால் நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கக்கூடும். அதே நேரத்தில், தொழிலாளர்கள் ஏதேனும் வேலைநிறுத்தம் அல்லது வேலைப் புறக்கணிப்பு செய்து இந்நிறுவனங்களை திவாலுக்குத் தள்ளினால் GM, Chrysler க்குக் கொடுத்துள்ள கடன்களை உடனே கேட்கும் அதிகாரத்தையும் வெள்ளை மாளிகை கொண்டுள்ளது. இத்தாக்குதலில் UAW உடந்தையாக உள்ளது. இதன் ஒத்துழைப்பிற்காக UAW பல நூற்றுக்கணக்கான மில்லியன் பங்குகளை போர்டின் பொது பங்குகளிடம் இருந்து பெறும் எனக் கூறப்படுகிறது; இதையொட்டி அது நிறுவனத்தின் மிகப் பெரிய ஒற்றைப் பங்குதாரர் என்று ஆகும்; தொழிற்சங்க அதிகாரத்துவம் இதையொட்டி நிர்வாகக் குழுவில் ஒரு இடம் பெறும். இது தொழிற்சங்கத்திற்கு அதன் உறுப்பினர்களை சுரண்ட கூடுதலான அனுமதிப்பதிலேயே நேரடி நிதிய ஊக்கம் கிடைக்கும். UAW ஒரு தொழிற்சங்கமாக இருக்கும் உண்மை அதை ஒரு தொழிலாளர் அமைப்பாக்கிவிடவில்லை. நீண்டகாலம் முன்னரே அது தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதை நிறுத்திவிட்டது; ஆனால் அவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்கிறது. பல ஆண்டுகளாக அது தன்னை ஒரு வணிக நிறுவனம் போல் காட்டிக்கொள்ளத்தான் முற்பட்டுள்ளது. அதையொட்டி அது தன்னுடைய வருமானம், சலுகைகள் ஆகியவற்றை அதிகரித்துக் கொள்ள முடிவதுடன், இது பெயரளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களின் விதியில் இருந்தும் இயன்றளவு தன்னை பிரித்துகொள்ளவும் முடியும்.இத்தகைய தொழிற்சங்க-நிர்வாக பெருநிறுவனத்துடன் UAW "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்னும் தேசியவாதத்தையும், வெளிநாட்டு எதிர்ப்பு வெறியையும் வளர்த்துள்ளது. இது மற்ற நாடுகளில் இருக்கும் கார்த் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்ட போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தை கொண்டதுடன், அதே நேரத்தில் இது டெட்ரோயிட் கூடுதலாக ஐரோப்பிய, ஆசிய கார்த் தயாரிப்பாளர்களுக்கு சமமாக "போட்டியிடும் தன்மைக்காக" பல விட்டுக்கொடுப்புகளை தொழிலாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. கார்த் தயாரிப்பு முதலாளிகள், ஒபாமா நிர்வாகம் மற்றும் UAW ஆகியவற்றால் இத்தகைய அச்சுறுத்தல்கள் விடப்படுவதை கார்த் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் தகர்ப்பை நிறுத்த போராட்டத்தை தொடங்க வேண்டும். அத்தகைய போராட்டம் UAW ல் இருந்து சுயாதீனமாக, ஆங்காங்கு ஆலைகளில் தொழிலாளர்களின் குழுக்களை நியமிப்பதின் மூலமும், தொழிலாளர்கள், இளைஞர்கள், வேலையற்றோரை கொண்ட குழுக்கள் மூலமும் நடத்தப்பட வேண்டும். ஒரு உறுதியான நிலைப்பாடு கார்த் தொழிலாளர்களால் எடுக்கப்பட்டால், அது மகத்தான ஆதரவை அமெரிக்காவிலும் உலகம் முழுவதில் இருந்தும் தொழிலாளர் மக்களிடத்தில் இருந்து பெற்றுத் தரும். அவர்களும் பணி நீக்கங்கள், வீடுகள் விற்பனைகள் ஆகியவற்றில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையை காண முற்படுகின்றனர்; இவை அனைத்தும் நிதியப் பிரபுத்துவத்திற்கு தொடர்ந்து பிணை எடுப்பு கொடுப்பதால் ஏற்பட்டுள்ளன. போர்ட் தொழிலாளர்கள் ஒரு தேசிய வேலைநிறுத்தத்தை தொடக்கி GM, Chrysler இல் இருக்கும் தொழிலாளர்களையும் அதில் சேருமாறு வலியுறுத்த வேண்டும். இத்துடன் கார் பாகங்கள் தொழிற்துறையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களும் பங்கு பெற வேண்டும். கனடா, இலத்தின் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அமெரிக்க தொழிலாளர்களுடன் இணைந்து பொதுப் போராட்டத்தில் வேலைகள் இழப்பு, வாழ்க்கைத் தர இழப்பு ஆகியவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற அழைப்பு விடப்பட வேண்டும். தொழில்துறை போராட்டம் முற்றிலும் புதிய அரசியல் மூலோபாயம் மற்றும் முன்னோக்கை கொண்டிருக்க வேண்டும். கார்த் தொழில் நெருக்கடி என்பது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வியுடன் முற்றுமுழுதாக ஒன்றிணைந்ததாகும். அதற்கு ஒரே மாற்றீடாக உள்ளது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கும் வகையில் சோசலிசத்திற்காக போராடுவது ஆகும். இதன் பொருள் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகத் திரளுதல், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியுடன் முறித்துக்கொள்ளுதல் என்பது ஆகும். இந்த பெருவணிகத்தின் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கத்தின் தலையில் சுமத்த செயற்படுகின்றன. தொழிலாளர்கள் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக நெருக்கடிக்கு தங்கள் சொந்த தீர்வை முன்வைக்க கட்டமைத்துக் கொள்ள வேண்டும். கார்த்தயாரிப்பு தொழில் பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் நிதிய ஊகக்காரர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவர்கள்தான் இதை வீழ்ச்சியடைய செய்துள்ளனர். இது பொதுச் சொத்தாக மாற்றப்பட்டு ஜனநாயக ரீதியாக தொழிலாளர்களின் உடமையாக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். வோல் ஸ்ட்ரீட்டின் வங்கியாளர்களால் சூறையாடப்பட்டுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்கள் கைப்பற்றப்பட்டு, உலகெங்கிலும் இருக்கும் கார்த் தொழிலாளர்களுடன் ஒத்துழைப்புடன் கார்த் தொழிற்துறை பாதுகாப்பான, அனைவருக்கும் இயலக்கூடிய போக்குவரத்து நலனைத் தரும் கார்த்தொழிலாக மறு ஊக்கம் கொடுக்க பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி போராடும் சோசலிச சர்வதேச முன்னோக்காகும். வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராட ஒரு வழியை தேடும் கார்த் தொழிலாளர்களை ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு நாங்கள் அழைப்பு விடுகிறோம். |