WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : வட
அமெரிக்கா
Gordon Brown's visit to Washington
கோர்டன் பிரெளன் வாஷிங்டன் வருகை
By Bill Van Auken
5 March 2009
Use this version to
print | Send
this link by email | Email
the author
புதனன்று அமெரிக்க தேசிய சட்டமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரிட்டனின்
பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் உரை நிகழ்த்தினார்; உலக முதலாளித்துவ சரிவை ஒரு நிதிய "புயல்" என்று
விளக்கிய அவர், "உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது, பூமியே பேராபத்திற்கு உட்பட்டுள்ளது" என்றும்
எச்சரித்தார்.
அலங்காரச் சொற்கள் அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் உள்ளது என்ற விதத்தில்
கூறப்படும் "சிறப்பு உறவுகளை" பற்றிய கருத்துக்கள், மற்றும் போர்க்கால கூட்டுக்கள் "நோர்மண்டி கடற்கரைகளில்
இருந்து ஆப்கானிஸ்தான் சமவெளி வரை" என்று நிறைந்த விதத்தில் விவரித்த கோர்டன் பிரெளனின் உரையின் முக்கியத்துவம்
பெருகிய பாதுகாப்புவாதம் "கீழ்நோக்குச் சரிவிற்கு பந்தயத்தை" கட்டவிழ்த்து விடும் மற்றும் அதையொட்டி உலக
முதலாளித்துவத்திற்கு பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையாக இருந்தது.
கூட்டு இராணுவ தீரச்செயல்கள் பற்றிய வனப்புரை பெரும் கரவொலியை எழுப்பிய
நிலையில், பாதுகாப்புவாதக் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் ஆர்வத்துடன் ஏற்கப்படவில்லை.
தற்போதைய நெருக்கடிக்கு இவரும் ஓரளவு காரணம் என்று கருதியுள்ள பிரிட்டிஷ் மக்களிடம்
இருந்து பெருகிய முறையில் விரோதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், கோர்டன் பிரெளன் ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு
கிடைத்துள்ள பெருமையின் பிரதிபலிப்பில் ஓரளவிற்கு திளைக்கலாம் என்று வாஷிங்டனுக்கு வந்துள்ளார்; வாஷிங்டன்
டி.சி.யை "ஒரு குன்றின் மேல் ஒளிவீசும் நகரமாக" ஒபாமா மாற்றியுள்ளார் என்றும் புகழ்ந்தார்.
லண்டனில் உள்ள ஃபைனான்சியல் டைம்ஸ் பிரெளனின் உரைக்கு முன்பு வெளியிட்ட
தலையங்கம் ஒன்றில், பிரிட்டிஷ் பிரதமரின் "சிறப்பு உறவுகள்" என்று தனக்கே நன்மை தேடிக்கொள்ளும் பாசாங்கு
நிலை பற்றி எள்ளி நகையாடியுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு வாதத்தின் அச்சுறுத்தல், பார்த்தால் நிறுத்தமுடியாதது
போல் தோன்றும் அதன் வளர்ச்சி பிரிட்டனிலும் இருப்பது பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
"ஒபாமாவால் ஒரு ஆழ்ந்த நண்பர் உலக புதிய உடன்பாட்டிற்கு இணைச் சிற்பி என
தழுவிக்கொள்ளப்பட வேண்டும் என்னும் பிரதம மந்திரியின் விருப்பம், தகுதி இருந்தாலும்கூட, வெளிப்படையாக எள்ளி
நகையாடப்பட மாட்டாது" என்று ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது. "இத்தகைய முக்கியமான
சிதைந்த கற்பனைகளை ஒதுக்கிவைக்க முடியும் என்றால், திரு பிரெளன் சில பயனுடைய தகவல்களை அளிக்க
முடியும். "பிரிட்டிஷ் வேலைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே" என்று கோரிய நபரிடம் எதிர்பார்ப்பது பொருத்தமற்றது
என்றாலும்கூட, பாதுகாப்புவாதக் கொள்கை, தேசியப் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு திரும்புவதின் ஆபத்தை அவர்
வலியுறுத்தத்தான் வேண்டும்."
இதேபோன்ற உணர்வுகள்தான் சமீப காலத்தில் பொருளாதார மந்தநிலை
தோன்றியுள்ளதற்கு விடையிறுப்பாக பெருகிய முறையில் பாதுகாப்புவாதக் கொள்கை வந்துள்ளதின் பெருகிய
அடையாளங்களுக்கு வந்துள்ளன; அவற்றில் அமெரிக்க காங்கிரஸ் $787 பில்லியன் ஊக்கப் பொதியை இயற்றியபோது
அதில் "அமெரிக்கப் பொருட்களை வாங்கவும்" என்று விதிகளில் குறிப்பிட்டிருப்பதும் ஒன்றாகும்.
OECD உடைய தலைமைப்
பொருளாதார வல்லுனர் Klaus Schmidt Hebben
கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார்: "சந்தைகளை திறந்து வைத்தல், புதிய பாதுகாப்புவாத முறைகளைத்
தவிர்த்தல் ஆகியவை உலகம் முழுவதும் செழிப்பை வலுப்படுத்தும் திறவுகோல் ஆகும்." அரசாங்கங்கள் முக்கிய நிதிய
அமைப்புக்களை பிணை எடுப்பதற்கும் முக்கிய தொழில்துறைகளான கார்த்தயாரிப்பு பிரிவுகளைப் பிணை எடுப்பதற்கும்
இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிய வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நிதிய விவகாரங்களின் தலைவரான
Joaquin Alumnia
திங்களன்று பிராக்கில் நடத்திய உரை ஒன்றில், "எமது உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்று பாதுகாப்புவாத
எழுச்சியைத் தடைக்கு உட்படுத்துவது ஆகும், அது ஆதரவைப் பெறுவதற்கான எச்சரிக்கை அடையாளங்களைக்
காட்டுகிறது."
வாஷிங்டன் வரவிருக்கும் ஆண்டுகளில் கணித்திருக்கும் டிரில்லியன் கணக்கான
பற்றக்குறையைப் பற்றிக் குறிப்பிடுகையில், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் மூத்த பொருளாதார
ஆலோசகரான Igor Yurgens,
"உலகின் மற்றைய பகுதிகளுக்கு நிதிய நீர்மை (எளிதில் பணமாக மாற்றும் தன்மை) கிடைக்காது. எங்களைப்
பொறுத்த வரையில் இது இன்னும் மோசமாக இருக்கும்". வாஷிங்டன் பாதுகாப்புவாதக் கொள்கைகளை
கடைப்பிடித்து "அண்டை நாடுகளைப் பிச்சைக்காரர்களாக்குக" என்ற கொள்கையை செயல்படுத்துவதாக அவர்
குற்றம் சாட்டினார்.
பிரெளன் வாஷிங்டனுக்குத் தான் வந்ததின் நோக்கம் ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்க
இருக்கும் G20
கூட்டத்திற்கு முன்னதாக பாதுகாப்புவாதத்தை தடைக்கு உட்படுத்துதல் மற்றும் நிதிய சந்தைகளை சர்வதேச
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சி ஆகியவற்றிற்கு ஒரு பொதுக் கொள்கையில் ஒபாமாவின் உடன்பாட்டை
பெறுவதற்கு என்றார்.
உரையில் சில கூறுபாடுகள் அபத்தத்தின் எல்லைக்கு அருகே இருந்தன. "வங்கிகள்
தோற்ற நிலையில், சந்தைகள் தடுமாறிய நிலையில், மக்களுடைய பிரதிநிதிகளாகிய நாங்கள் மக்களின் இறுதிக்
காப்பாளர்களாக இருக்க வேண்டும்" என்று பிரெளன் அறிவித்தார்; இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் சிட்டி ஆப்
லண்டனுக்கு அரசாங்கம் பிணை எடுப்பு கொடுத்ததை புனிதமான முறையில் விளக்கியது. இந்த உலகளாவிய நிதிய
நெருக்கடி "சந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் ஆனால் மதிப்புக்கள் இல்லாமல் இருந்துவிடக்கூடாது"
என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
தன்னை ஐரோப்பாவில் உள்ள ஒற்றுமை, ஐரோப்பாவின் "அமெரிக்க ஆதரவு"
செய்தித்தொடர்பாளர் என்று சித்தரித்துக் கொண்டார். முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி டொனால்ட்
ரம்ஸ்பெல்ட் ஈராக் போருக்கு முன்னதாக தூண்டுதல் கொடுக்கக்கூடிய வகையில் கொடுத்த அறிவிப்பு பற்றி
குறிப்பிட்டு பிரெளன், "பழைய அல்லது புதிய ஐரோப்பா என ஒன்றும் கிடையாது; உங்கள் நட்பு கண்டமான ஒரே
ஐரோப்பாதான் உள்ளது" என்றார். கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் கடந்த வாரம் ஒரு ஐரோப்பிய ஒன்றிய
உச்சிமாநாட்டில் "ஒரு புதிய இரும்புத்திரை" கண்டத்தின் மீது வந்துகொண்டிருக்கிறது, இதற்குக் காரணம் முக்கிய
சக்திகள் ஒருங்கிணைந்த முறையில் வறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பிணை எடுக்காததுதான் என்று கூறிய ஒரு
வாரத்திற்குள், இவர் கொடுக்கும் அறிவிப்பு ஆகும்.
பிரெளன் தன்னை ஒரு பிற்கால வின்ஸ்டன் சேர்ச்சில், ஒபாமா ஒரு ரூஸ்வெல்ட் என்று
காட்டிக் கொள்ளும் முயற்சி பிழையறத் தெரிந்தது. அதே போல் ஒரு "புதிய உலக உடன்பாடு" இயலும் என்று
ஆலோசனை தெரிவித்ததுடன், இரண்டாம் உலகப் போர் முடிவில் வாஷிங்டன் தொடக்கி வைத்த "உலகப்
பொருளாதார ஒற்றுமை" மீண்டும் வரக்கூடும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள சிறப்பு உறவு இரண்டாம் உலகப்
போர் கூட்டணிக் காலம் என்ற சிறந்த நாட்களிலேயே பெரிதும் மிகைப்படுத்தி பேசப்பட்ட கற்பனையுரையாகும்.
ரூஸ்வெல்ட் நிர்வாகம் இரக்கமற்ற முறையில் போர்க்காலத்தில் சேர்ச்சிலின் பெரும் திகைப்பு நிறைந்த
நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்காக மிக அதிக அரசியல் மற்றும் நிதியச் சலுகைகளை
எடுத்துக் கொண்டு, தன்னை சிதைந்த பிரிட்டிஷ் பேரரசின் துண்டுகளை எடுத்துக் கோத்துக் கொள்ளும் நிலைமையில்
இருத்திக் கொண்டது.
இன்று அமெரிக்கா உலகெங்கிலும் இருக்கும் முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளைக்
கூட்டாக அதன் அட்லாண்டிக் கடந்த நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை; ஒரு புதிய
பொருளாதார ஒழுங்கிற்கு அஸ்திவாரங்களை போடக்கூடிய நிலையிலும் அது இல்லை.
அமெரிக்கா 65 ஆண்டுகளுக்கு முன்பு பிரெட்டன் வூட்ஸில் நிறுவிய உலக முறை அமெரிக்க
முதலாளித்துவம் நிதியம் மற்றும் உற்பத்தித் துறைகளின் ஒவ்வொரு பிரிவிலும் சவாலுக்கு உட்படாது கொண்டிருந்த மேலாதிக்கத்தால்
சாதிக்கப்பட்டது ஆகும். இன்றைய உலக நெருக்கடி மிகப் பெரிய அளவிற்கு அதன் நீடித்த, விரைந்த சரிவின் வெளிப்பாடு
ஆகும். அமெரிக்காவின் உற்பத்தித் தளம் சிதைந்துள்ள இலையில், ஆளும் உயரடுக்கு கூடுதலான ஒட்டுண்ணித்தனம் மற்றும்
குற்றம் சார்ந்த விதத்தில் நிதிய சூழ்ச்சிக்கையாளலில் ஈடுபட்டுள்ளதின் வெளிப்பாடு ஆகும்.
இந்த ஆளும் உயரடுக்கு மற்றும் இரு முக்கிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டும்
கொள்கைகளில் மேலோங்கி நிற்கும் கோட்பாடு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அது தன்னுடைய செல்வம் மற்றும்
சலுகை எதையும் அது தியாகம் செய்யாது என்ற உறுதிப்பாடுதான்; மாறாக இதையும் அது பயன்படுத்தி சுமை
முழுவதையும் உள்நாடு மற்றும் வெளியில் அதன் போட்டி நாடுகளில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திடம் சுமத்திவிட
முற்படும்.
கடந்த பெரு மந்த நிலைக்கு சற்று முன்னதாக லியோன் ட்ரொட்ஸ்கி
ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் உறவுகளின் அடிப்படைக் கூறுபாடுகள் பற்றி ஒரு
பகுப்பாய்வை செய்திருந்தார்; அது இன்றைய பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையிலும் முழு ஆற்றலுடன்
நன்கு பொருந்துகிறது.
"நெருக்கடிக் காலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் இன்னும் முழுமையாக,
வெளிப்படையாக, இரக்கமற்ற முறையில், செழுமைக்காலத்தில் இருந்ததைவிட செயல்படும்" என்று ட்ரொட்ஸ்கி
எழுதியிருந்தார். "அமெரிக்கா தன்னுடைய கஷ்டஙகளையும், துன்பங்களையும் கடப்பதற்கும் அவற்றில் இருந்து
மீள்வதற்கும் ஐரோப்பாவின் இழப்பில்தான் முக்கியமாக செயல்படும்...இது சமாதான முறையில் நடந்தாலும் சரி
அல்லது போர் மூலம் நடந்தாலும் சரி."
கோர்டன் பிரெளனின் பயனற்ற முறையீடு உலக முதலாளித்துவப்
பொருளாதாரத்திற்குள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் மகத்தான பொருளாதார அழுத்தங்களைக் குறைக்க ஏதும்
செய்யாது; அதுவோ புதிய போர்கள், புரட்சிகளின் சகாப்தத்திற்கான நிலைமைகளை தோற்றுவித்துள்ளது. |