World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the worst monthly selloff since 1933

US stocks hit lowest level in 12 years

1933க்கு பின்னர் மோசமான மாத விற்பனையை அடுத்து

அமெரிக்கப் பங்குகள் 12 ஆண்டுகளில் ஆகக்குறைந்த மட்டத்தை அடைந்தன

By Andre Damon
3 March 2009

Back to screen version

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிவுற்றதை தொடர்ந்து திங்கள்கிழமையன்று Dow Jones Industrial சராசரி 4.24 சதவிகிதம் குறைந்து முடிவு பெற்றது. S&P 500 4.66 சதவிகிதமும் சரிவுற்றது. உலகம் இன்னும் ஆழ்ந்த மந்த நிலையை நெருங்குகையில் பங்குச் சந்தைகளின் விலைகள் தொடர்ந்து சரிவைச் சந்திக்கையில் விற்றுத்தள்ளல் தொடருகின்றது.

திங்கள் சரிவைத் தொடர்ந்து அமெரிக்க இன்டர்நேஷனல் க்ரூப் (AIG) 2008 கடைசிக் காலாண்டில் தான் $61.7 பில்லியனை இழந்துவிட்டதாகக் கூறிய அறிவிப்பு வெளிவந்தது. திங்களன்று காலைதான் ஒபாமா நிர்வாகம் தலையிட்டு இன்னும் கூடுதலான நிதியப் பீதியை தவிர்க்கும் வகையில் நலிவுற்றுள்ள காப்பீட்டுப் பெருநிறுவனத்திற்கு மற்றும் ஒரு மிகப் பெரிய பிணை எடுப்பை அறிவித்திருந்தது. (See "Obama administration announces billions more in bailouts to AIG".)

மார்ச் மாத முதல் நாள் வணிகத்தில் ஏற்பட்ட சரிவு பெப்ருவரியின் நடந்த மொத்த பேரழிவுதரக்கூடிய சரிவை ஒட்டி வந்திருந்தது. அப்பொழுது Dow Jones இன் சராசரி 11.7 சதவிகிதம் குறைந்தது. இது பெரு மந்த நிலையின் உச்சக்கட்டத்தில், 1933ல் இருந்து மிக மோசமான நிலையாகும். பங்குச் சந்தைக் குமிழியின் தொடக்கமான 1997ல் இருந்து முதல் தடவையாக 7,000 புள்ளிகளுக்கு கீழே Dow 6,763 ல் முடிவுற்றது.

நிதியப் பங்குகள் தொடக்கி வைத்த விற்றுத்தள்ளல் முக்கிய பங்குக் குறியீடுகளின் அனைத்துக் கூறுபாடுகளுக்கும் பரவியது. Bank of America வின் பங்கு மதிப்புக்கள் 16 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்தன. Citigroup மற்றும் J.P.Morgan பங்குகள் ஒவ்வொன்றும் 6 சதவிகிதம் சரிந்தன. "உண்மைப் பொருளாதாரத்திற்குள்" General Electric மிக மோசமான சரிவைக் கண்டது; அதன் பங்குகள் இப்பொழுது $8 ஒரு பங்கிற்கு என்று, ஒரே நாளில் 11 சதவிகிதம் குறைந்து விற்பனையாயிற்று.

2009 ம் ஆண்டு பொருளாதர வளர்ச்சி தொடர்ந்து சரியக்கூடும் என்று மதிப்பீடுகள் காட்டுவதால், நிதிய வருமான வாய்ப்புக்கள் மோசமாகக்கூடும் என்ற உந்துதலில் தொடர்ந்து நிதியப் பங்குகள் விற்பனையாவது நடைபெறுகின்றன. ஒவ்வொரு வாரமும் உடனடியான வருமானங்கள் வாய்ப்பை பெரிதும் குறைக்கும் தகவல்களைத்தான் கொடுக்கிறது; இதையொட்டி மீட்பு நடவடிக்கை இன்னும் தள்ளிப் போடப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் 2008 கடைசிக் காலாண்டுப் பகுதியில் 6.2 சதவிகிதம் ஆண்டுவிகிதத்தில் என்று சுருங்கிப் போயிற்று; 2009ல் இது இன்னும் அதிகமாகக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.

ஹாங்காங்கில் State Street Globl Markets இல் ஒரு மூலோபாய வல்லுனராக இருக்கும் Dwyvor Evans, "எல்லா இடங்களிலும் பெரும் சோகம்தான் கவ்வியுள்ளது" என்று நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார்: "சரி, சில முக்கிய குறியீடுகள் ஓரளவிற்கு உறுதிப்பட்டு வருகின்றன என்பதற்கான அடையாளங்கள் உள்ளன; ஆனால் அவை மிக மிகக் குறைந்த தரத்தில்தான் உள்ளன; நாம் ஒன்றும் பெருநிறுவன முதலீடு உடனே அதிகமாகிவிடும் என்றோ நுகர்வோர் மீண்டும் செலவழிக்கத் தொடங்குவர் என்றோ எதிர்பார்க்கவில்லை; வேறுவிதமாகக் கூறினால், மந்தநிலையில் இருந்து பொதுவாகப் பொருளாதாரம் மீளும் மரபார்ந்த செயல்முறைகள் இம்முறை தோன்றவில்லை." மற்ற வர்ணனையாளர்களும் "முடிவில்லா தீய கனா" போன்ற நிலைமைப் பற்றித்தான் பேசுகின்றனர்.

ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து வங்கிகள் பிணை எடுப்பு நடத்தியும் கூட இத்தகைய விற்பனைகள் நடந்து வருகின்றன; நிர்வாகத்தின் செயல்களோ அரசாங்கத்தின் இருப்புக்கள் அனைத்தையும் வங்கிளுக்கும் பெரிய நிதி நிறுவனங்களான AIG போன்றவற்றிற்கும் கொடுக்கின்றன.

அமெரிக்கப் பங்குகளின் சரிவு என்பது ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வியத்தகு பெரும் குறைந்த மதிப்பு விற்பனையை அடுத்து நிகழ்ந்துள்ளது. லண்டன் FTSE 100 புள்ளிகள், 5.33 சதவிகிதம் குறைந்தது; ஸ்பெயினின் IBEX 4.6 சதவிகிதம் குறைந்தது; ஜேர்மனியின் DAX 3.48 சதவிகிதம் குறைந்தது. FTSE உடைய Eurofirst 300 5.16 சதவிகிதம் சரிந்தது.

ஆசியாவிலும் இதேபோன்ற இழப்புக்கள் ஏற்பட்டன; ஜப்பானிய Nikkei குறியீடு 3.81 சதவிகிதமும், ஹாங்காங்கின் Hang Seng 3.86 சதவிகித இழப்பையும் கண்டன.

ஐரோப்பிய இழப்புக்கள் நிதிய நிறுவனங்களிலும் ஏற்பட்டன; இது இங்கிலாந்தின் HSBC வங்கி அமெரிக்க நுகர்வோருக்கு கடன் கொடுப்பதை நிறுத்த உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது; தான் கிட்டத்தட்ட 12 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான பங்குகளை அதிக தள்ளுபடி விலையில் விற்க இருப்பதாகவும் அது கூறியது.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் இன்னும் ஆழ்ந்த மந்ந நிலை வரக்கூடும் என்ற பொருளாதார அறிவிப்புக்களினால் பாதிப்பிற்கு உட்பட்டன. பொதுவாக உற்பத்தி நடவடிக்கைகளை அளவிடும் Markit Euro zone உடைய வாங்கும் திறன் குறியீடு, ஜனவரி மாதம் இருந்த 34.4 புள்ளியைவிட மிகக்குறைந்த அளவான 33.5 புள்ளிக்கு போன மாதம் சரிந்தது. Golden Sachs ல் ஐரோப்பியப் பொருளாதார வல்லுனராக இருக்கும் Javier Perez de Azpillaga பைனான்ஸியல் டைம்ஸிடம் இப்புள்ளிவிவரம் "தொழில்துறை எவ்வளவு ஆழமாகவும், விரைவாகவும் சுருக்கம் அடைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்றார்.

நேற்று ஜப்பான் கார் விற்பனையாளர்கள் சங்கம் ஜப்பானிய கார்கள் விற்பனை தொடர்ந்து ஏழாவது மாதத்தில் 34.2 சதவிகித சரிவைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது ஜப்பானிய ஏற்றுமதிகள் கடந்த ஆறு மாதங்களில் பாதியாகக் குறைந்துவிட்டன. இதற்கிடையில் தென் கொரியா நாட்டின் ஏற்றுமதிகள் கடந்த மாதம் 17 சதவிகிதம் குறைந்தது என்பதற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

அமெரிக்க சொத்து மதிப்புக்களின் சமீபத்திய சரிவு 90 களின் நடுப்பகுதியில் தொடங்கிய பங்கு விலை ஏற்றத்தின் பெரும் பகுதியை அழித்து விட்டது. அப்பொழுது இன்டர்நெட் குமிழி (Internet bubble) முதலில் ஏற்பட்டது. மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த அலன் கிரீன்ஸ்பான் "பகுத்தறிவற்ற குதூகலத்தின்" ஆபத்து பற்றி வெற்றுத்தனமாக எச்சரிக்கை விடுத்தார்; அதே நேரத்தில் செயற்கையாக பங்கு மதிப்பை உயர்த்திய கொள்கையையும் கடைப்பிடித்தார். அதற்காக மத்திய வங்கிக்கூட்டமைப்பு எந்த நெருக்கடியின்போதும் அதன் மதிப்பை உயர்த்தும் வகையில் உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியிருந்தார்.

1987 பங்குச் சந்தை சரிவில் இருந்து அமெரிக்க ஆளும் வர்க்கமும் மற்றும் அதற்கு இயக்கம் தரும் மத்திய வங்கிக்கூட்டமைப்பும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் ஒவ்வொரு சரிவையும் ஈடுகட்ட வட்டி விகிதத்தை குறைத்தது மூலம் பிரதிபலித்தது. இந்த குறைந்த வட்டி கடன் ஊக பெருக்கத்திற்கு உதவி அளித்தது. அந்தப் பணம்தான் சொத்துக்கள் வாங்க, பங்குகள், அடைமான ஆதரவுப் பங்குபத்திரங்களை வாங்க பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், ஒரு பாதுகாப்புப் பத்திரத்தின் விலை இறுதியில் உண்மை மதிப்பு உற்பத்தியை ஒட்டித்தான் இருக்கும். இப்பொழுது சந்தைகள் மிகப் பெரிய உயரத்தில் இருந்து விழுந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் இதை எதிர்கொள்ள வட்டிவிகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலைக்கு குறைத்துள்ளது. மேலும் பாரிய நிதியங்களை வங்கிகளுக்கும் நிதிய நிறுவனங்களுக்கும் உட்செலுத்தியுள்ளது. ஆனால் சொத்து விலைகளையோ வங்கி இருப்புநிலைக் குறிப்புக்களை உயர்த்தவோ எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை.

நெருக்கடியின் மிகப் பெரிய பரிமாணம் மட்டும் இதைப் பிரத்தியேகமாக காட்டவில்லை. அனைத்து அமெரிக்க அரசாங்கங்களும் முந்தைய சரிவுகளைச் சமாளிக்கும் வகையில் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போய்விட்டன என்பதுதான் உண்மை. இவ்விதத்தில் இந்த நெருக்கடி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய வீழ்ச்சி என்று இல்லாமல் ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாகவும் உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved