World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: Terrorist attack targets international cricket match

பாக்கிஸ்தான்: சர்வதேச கிரிக்கெட் விளையாட்டை பயங்கரவாத தாக்குதல் குறிவைக்கிறது

By Keith Jones
4 March 2009

Back to screen version

லாகூரில் ஒரு பாக்கிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்காக விளையாட்டு வீரர்கள் மற்றும் நடுவர்களை அழைத்துச் சென்றிருந்த வரிசையான வாகனங்கள் மீது செவ்வாய் காலை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கமாண்டோ பாணி தாக்குதலை நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், டஜனுக்கும் மேலானவர்கள் காயமுற்றனர்.

செய்தி அறிக்கைகளின்படி, ரைபிள்கள், எறிகுண்டுகள், ராக்கெட் அனுப்பும் கருவி ஆகியவற்றைக் கொண்ட ஒரு டஜன் அல்லது அதற்கு சற்றே மேற்பட்ட நபர்கள், இலங்கை கிரிக்கெட் குழுவை அழைத்துச் சென்ற ஒரு பஸ்ஸை மூன்று புறங்களில் இருந்தும் தாக்கினர்; பஸ் அப்பொழுது பாக்கிஸ்தானின் இரண்டாம் மிகப் பெரிய நகரத்தில் ஒரு முக்கிய சாலைகள் இணைப்பிற்கு அருகே இருந்தது.

பஸ்ஸிற்கு காவலாக வந்திருந்த போலீசார் திருப்பி தாக்கியதில் ஒரு போர் மூண்டது; சில தகவல்கள்படி கிட்டத்தட்ட 25 நிமிஷங்கள் நீடித்தது. 6 போலிஸ் அதிகாரிகள், நடுவர்களை அழைத்துச் சென்ற பஸ், மற்றும் ஒரு குடிமகன் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். இலங்கையின் தேசிய கிரிக்கெட் குழுவில் குறைந்தது ஐந்து பேர், ஒரு துணை பயிற்சியாளர் மற்றும் ஒரு நடுவர் ஆகியோர் மற்றும் ஆறு போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் காயமுற்றனர்.

தாக்கியவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர் பல மணி நேரம் கழித்து பாக்கிஸ்தானிய அதிகாரிகள் செவ்வாய் நிகழ்வை ஒட்டி நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தது; ஆனால் இவர்களில் எவரேனும் தாக்குதலில் பங்கு பெற்றனரா அல்லது எந்தவிதத்திலாவது தொடர்பு கொண்டிருந்தனரா என்பது பற்றித் தகவல் ஏதும் கொடுக்கவில்லை.

எந்தக் குழுவும் செவ்வாய் கமாண்டோ தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்கவில்லை; இது எளிதில் இரு மடங்கு அல்லது மும்மடங்கு இறப்பை எண்ணிக்கையை ஏற்படுத்தியிருக்கக்கூடும். மிக அதிகமான சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தை இது தெளிவாகக் கொண்டிருந்தது--தெற்கு ஆசியாவில் கிரிக்கெட் மிக உயர்ந்த மட்ட, மக்கள் விரும்பும் விளையாட்டு ஆகும்; நாட்டின் முக்கிய நகரங்களில்கூட பாக்கிஸ்தானிய அதிகாரிகள் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையையும் நிரூபித்தது.

கடந்த ஒன்றரை ஆண்டில் பாக்கிஸ்தானின் பெரிய நகரங்களில் பல முறை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. கைது செய்தல் தண்டனை அளிக்கப்படல் ஆகியவை ஒருபுறம் இருக்க, இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. 2007ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) வாழ்நாள் தலைவர் பெனாசீர் பூட்டோ சென்றிருந்த கார்வரிசையின்மீது, அது கராச்சி வழியே சென்றிருந்துபோது குண்டுகள் சிதறி வெடித்து 135 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இரு மாதங்களுக்கு பின்னர் பூட்டோவே படுகொலை செய்யப்பட்டார்; மற்றும் 20 பேர்கள் ராவல்பிண்டியின் மத்திய பகுதியில் ஒரு குண்டுவீச்சு, துப்பாக்கித் தாக்குதலில் இறந்தனர்; இது பாக்கிஸ்தானிய இராணுவத்தின் தலைமையகத்தை கொண்ட நகரம், மிக அதிக போலீஸ் பாதுகாப்புடைய பகுதியாகும். கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் மிகப் பெருமை வாய்ந்த ஓட்டல் ஒன்று தாக்கப்பட்டபோது 54 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய் நிகழ்வுகள் பாக்கிஸ்தான் அரசாங்கக் கருவிகள் மற்றும் கட்சிகள் ஒருவரையொருவர் ஒரு புதிய சுற்று குற்றம் சாட்டுதல், பழிகூறல் ஆகியவற்றில் ஈடுபடவைத்ததுடன் இதன் பல தசாப்தங்கள் போட்டி நாடான இந்தியாவும் சமீபத்திய கொடுமை பற்றிய மக்கள் சீற்றம், அச்சம் ஆகியவற்றை திரிக்க முற்பட்டன.

பாக்கிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் PPP இன் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு நெருக்கமானவரான, பஞ்சாப் கவர்னரான சல்மான் தசீர், செவ்வாய் தாக்குதல் கடந்த நவம்பர் மாதக் கடையில் இந்தியாவில் மும்மையில் நடைபெற்ற தாக்குதலை போன்று இருந்தது என்றும் அதேபோன்ற அமைப்புக்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

"இதே வழிவகைகள்தான் கையாளப்பட்டன, இதே போன்ற மக்கள்தான் மும்பை மீதான தாக்குதலையும் நடத்தினர்" என்று தசீர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாஷிங்டன் மற்றும் புது டெல்லியிடம் இருந்து வந்த பெரும் அழுத்தத்தை ஒட்டி கடந்த மாதம் பாக்கிஸ்தானிய அரசாங்கம் 163 உயிர்கள் இறப்பில் முடிந்த மும்பை தாக்குதல் ஓரளவு பாக்கிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்றும் LeT எனப்படும் லஷ்கர்-இ-தாய்பி, இஸ்லாமிய போராளிகள் தலைமைக் கூறுபாடுகள் தொடர்பு இருக்கக் கூடும் என்றும் ஒப்புக் கொண்டது; இந்த அமைப்பு பாக்கிஸ்தானின் இராணுவ உளவுத்துறை கருவியுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டது ஆகும். இதற்கு முன்னதாக பாக்கிஸ்தானிய அதிகாரிகள் சில LeT நிலையங்களை மூடி அதன் தலைவர்கள் பலரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

ஜர்தாரி மற்றும் PPP தலைமையிலான அரசாங்கம் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாலிபன் ஆதரவுக் குழுக்களின் பெருகும் சக்தியை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆதரிப்பதற்கு இஸ்லாமாபாத் தொடர்ந்து கொடுக்கும் வலுவான ஆதரவை நியாயப்படுத்தியுள்ளது; மேலும் பென்டகனுக்கும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவும் நட்பையும் நியாயப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டுதான் தொடர்ந்து பல வலதுசாரி இராணுவ சர்வாதிகாரஙக்கள் இஸ்லாமாபாத்தில் ஆளுவதற்கு முக்கிய தூணாக இருந்து வருகிறது.

பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் மற்ற கூறுபாடுகள் நேற்றைய தாக்குதலின் அடித்தளத்தில் இந்தியா இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளன.

"எங்களிடத்தில் உள்ள சான்றுகள் இந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லையைக் கடந்து வந்தனர் என்பதைக் காட்டுகின்றன" என்று பாக்கிஸ்தானின் கப்பல் துறை மந்திரியும் PPP சட்ட மன்ற உறுப்பினருமான சர்தார் நபில் அஹ்மத் கபோல் Geo Television இடம் கூறினார். "பாக்கிஸ்தானை சர்வதேச அளவில் இழிவுபடுத்துவதற்கான ஒரு சதித்திட்டமாகும் இது." மும்பைத் தாக்குதலுக்கு இது பதிலடி என்று கூறிய கபோல் "இந்தியா பாக்கிஸ்தான் மீது தொடுத்துள்ள பகிரங்கப் போர் அறிக்கை ஆகும்" என்றார்.

லாகூரின் ஆணையர் குஷ்ரோ பர்வைஸ் இத்தாக்குதலில் இந்தியத் தொடர்பு இல்லை எனத்தள்ளிவிட முடியாது என்று கூறினார்; பாக்கிஸ்தானின் உள்துறை மந்திரி ரெஹ்மன் மாலிக் "ஒரு வெளிநாட்டு நிறுவன" தொடர்பு இருக்கக்கூடும் என்ற விதத்தில் பேசினார். பாக்கிஸ்தானின் மிகப் பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான Jamat-i-Islami தலைவர் Qazi Hussain இந்திய உளவுத்துறைக் கருவிகள்தான் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியல் தலைவர்கள், இதற்கிடையில், லாகூர் தாக்குதலைப் பயன்படுத்தி பாக்கிஸ்தானை ஒரு சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக சித்திரிக்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். இப்பிரச்சாரம் இரு இலக்குகளை கொண்டுள்ளது; ஒன்று பாக்கிஸ்தான் இந்தியாவிடம் இருக்கும் காஷ்மீர் பகுதியில் எழுச்சிக்கு கொடுக்கும் அனைத்து ஆதரவையும் நிறுத்துதல்; இரண்டு ஆப்கானிய போரில் வாஷிங்டன் பாக்கிஸ்தானின் தளவாடங்கள் மற்றும் இராணுவ உதவியைப் பெறுவது இந்திய அமெரிக்க "உலக மூலோபாயப் பங்காண்மையை" வலுவிழக்க செய்யாமல் இருத்தல் ஆகியவையே அவை.

லாகூர் தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகார்ஜி, செய்தியாளர்கள் முன் தோன்றி "பாக்கிஸ்தானிலுள்ள பயங்கரவாத கட்டமைப்பு..... முற்றிலும் நிர்மூலமாக்கப்பட வேண்டும்" என்று கோரினார். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பெரும் பாதுகாப்பு தோல்விக்காக பாக்கிஸ்தானிய பொறுப்பாளர்களை கடிந்துகொண்டார்.

முகார்ஜியும் சிதம்பரமும் பாக்கிஸ்தானிலுள்ள "பயங்கரவாதிகளின் தளங்களை" அகற்றுவதற்கு இந்தியா இராணுவ நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கருத்துரைத்தனர்.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மேலாதிக்கம் செய்யும் பங்காளரான, காங்கிரஸ் கட்சிக்கான பேச்சாளர் பெரிதும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறினார். மணிஷ்திவாரி லாகூர் தாக்குதல், "1979லிருந்து 2009 வரை பாக்கிஸ்தான் பின்பற்றிவந்த கொள்கைகளின் விளைவு" என்று கூறி, அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை சீர்குலைக்கும் அதன் முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவு கொடுக்க பாக்கிஸ்தான் அரசை தூண்டியது அமெரிக்காதான் என்பதை வசதியாக புறந்தள்ளினார்.

"பாக்கிஸ்தானில் ஏதாவது நடந்திருக்குமாயின், அதற்கு பாக்கிஸ்தான் தான் பொறுப்பாகும்" என்று திவாரி கூறினார்.

இந்தியாவின் போர்வெறிக் கூச்சல் கொண்ட இந்து வலதுசாரியினர் பாக்கிஸ்தான் "பயங்கரவாத அரசு" என முத்திரையிடப்பட வேண்டுமென்று நீண்டகாலமாகவே நம்பிக்கை கொண்டு வலியுறுத்தி வருகின்றனர். திவாரி இக்கோரிக்கையை வைக்காதிருப்பினும், அதற்கு நெருக்கமாக சென்றார்: "பாக்கிஸ்தான் அணு ஆயுத நாடு. ஒரு தோல்வி அடைந்த அரசாக இருந்து தெற்காசியாவின் சோமாலியாவாக வரம்பு கடந்த வகையில் போவது சர்வதேச சமூகத்தை கவலை கொள்ள செய்கிறது..... பாக்கிஸ்தான் ஒரு காலத்தே வெடிக்கும் வெடிகுண்டாக மாறிக்கொண்டிருப்பது."

இந்திய மேற்தட்டினர் காஷ்மீர் கிளர்ச்சியையும் இந்தியாவில் மிக சமீபத்திய இஸ்லாமிய பயங்கரவாத இயல்நிகழ்ச்சியையும் பாக்கிஸ்தானிய தலையீடு மற்றும் கடும்வெறுப்பு இவற்றின் விளைவு என காட்டுவதற்கு நீண்டகாலமாகவே முயன்று வந்துள்ளனர். உண்மையில் இரண்டுமே, 1947ல் தெற்காசியா பிற்போக்கு வகுப்புவாத பிரிவினைக்கு பின்னால் நீண்டு செல்லக்கூடிய, அதற்குள்ளேயான நீண்ட வேர்களைக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரையில் ஐந்து கட்டங்களாக தேசிய தேர்தல்கள் நடக்க இருக்கையில், காங்கிரஸ் கட்சியானது, அது பயங்கரவாதம் பற்றியதில் "மென்மையாக" நடந்துகொள்கிறது என்ற இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சியின் பிற்போக்கு வகுப்புவாத கூற்றுக்களை எதிர்கொள்வதில் கூர்மையான கவனத்துடன் உள்ளது. அது பாக்கிஸ்தானை "அதன் இடத்தில்" வைப்பதாக காட்டுவதன் மூலம் அவ்வாறு செய்வதற்கு விருப்பம் கொள்கிறது மற்றும் "பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு" அடிப்படை மனித உரிமைகள் மீதாக இரக்கமின்றி நடந்துகொள்வது பற்றி அதற்கு குமட்டவில்லை.

வெளியில் பார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட் குழு பயங்கரவாதிகளின் இலக்காக இருந்தபோதிலும், நேற்றைய நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் பதிலானது ஒப்பீட்டளவில் இதுவரை குறைந்த தொனியில் கருத்து தெரிவித்தலாக இருந்து வருகிறது. சில செய்தி வெளியீடுகள் இத்தாக்குதலுக்கு பின்னே தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கக்கூடும் என்று கருத்துரைத்திருந்த போதிலும், கொழும்பு அத்தகைய குற்றச்சாட்டை வைக்கவில்லை.

கடந்த வருடங்களில் இலங்கை அரசாங்கமானது தீவின் 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கு ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை நாடுவதாக கூறிய எந்தவித பாசாங்கையும் கைவிட்டுவிட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பூண்டோடு ஒழித்துக் கட்டும் தண்டிக்கும் யுத்தத்த்தை அதிகரித்தது, அந்த யுத்தம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக அது இப்பொழுது கூறுகின்றது.

லாகூர் குண்டுவீச்சு பாக்கிஸ்தானிய அரசாங்கம் மற்றும் அரசாங்கக் கருவிகள் ஆகியவற்றின் உறுதியை இன்னமும் கூடுதலாகக் குலைக்கத்தான் செய்யும்; ஏற்கனவே அவை நெருக்கடியினாலும் பிளவுகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒபாமா நிர்வாகம், படா எனப்படும் மரபார்ந்த வகையில் தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி நிர்வாகப் பழங்குடிப் பகுதியில் இருக்கும் தாலிபன் ஆதரவு, அமெரிக்க எழுச்சியை முற்றிலும் அகற்றும் முயற்சியை பாக்கிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று கோரிவருகிறது. ஆயினும்கூட இராணுவத்தின் மிருகத்தனமாக வழிவகைகள் இங்கு உள்ளூர் மக்களை அதிகம் எதிர்க்கத்தான் உதவியுள்ளன; பாக்கிஸ்தானிய மக்கள் பாக்கிஸ்தானை வாஷிங்டன் அதன் கொள்ளை முறை வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு கருவியாக பயன்படுத்துவதையும் மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு அதன் ஆதரவையும் கண்டு சீற்றமடைந்துள்ளனர்.

IMF அதிகாரிகளிடம் இருந்து இன்னும் கூடுதலாக நிதியை கடனாகக் கேட்கும் நிலையில் பாக்கிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது; அக்கடன் ஏற்கனவே கொடுக்கப்பட இருக்கும் $7.6 பில்லியன் பொதியை விட கூடுதலாக இருக்கும்.

கடந்த வாரம் PPP க்கும் நாட்டின் இரண்டாம் பெரியகட்சியான பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) [PML(N)] கட்சிக்கும் இடையே உள்ள நீண்ட கால போட்டி கொதி நிலைக்கு வந்தது; ஜர்தாரியும் PPP யும் தெளிவான ஜனநாயக விரோத நீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி PML(N) அரசாங்கத்தை பாக்கிஸ்தானின் பெரிய மாநிலமான பஞ்சாபில் இருந்து அகற்றியது. (See "Pakistan rocked by protests after opposition leaders stripped of political rights")

ஜர்தாரியும் PPP தலைமையிலான அரசாங்கமும் இந்த மாதப் பிற்பகுதியில் நாட்டின் பாராளுமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த இருப்பதை தடுத்துவிடுவதாக உறுதி பூண்டுள்ளனர். புஷ்ஷின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரஃப்பால் அகற்றப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் இருத்த அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதை எதிர்த்து வழக்கறிஞர்கள் இம்முடிவிற்கு வந்துள்ளனர்.

இந்த வாரத் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஜர்தாரி ஒரு நிர்வாக ஆணையை பிறப்பித்து விரைவான "நீதி கிடைப்பதற்காக நடமாடும் நீதிமன்றங்களை நிறுவியுள்ளார். இந்த ஆணை பரந்த அளவில் அரசாங்க எதிர்ப்பு இயக்கங்களை நடத்துபவர்களை அடக்குவதற்கு ஏராளமாகச் சிறையில் தள்ளுவதற்கான தயாரிப்பு என்று கருதப்படுகிறது; இதில் வழக்கறிஞர்கள் இயக்கமும் அடங்கும். கடைசிமுறையாக இத்தகைய நீதித்துறை ஆட்சி 1919ல் தான் திணிக்கப்பட்டது என்றும் அப்பொழுது பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் லாகூரில் மக்கள் எழுச்சியை நசுக்க அம்முறையைக் கையாண்டனர் என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved