WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
War, poverty cause high
rates of mental illness in Sri Lanka
யுத்தம், வறுமை காரணமாக இலங்கைக்குள் மன நோயாளிகள் வீதம் உயர்ந்து
செல்கின்றது
By Sampath Perera
9 December 2008
Use this version to
print | Send
this link by email | Email
the author
உலக சுகாதார அமைப்பு (உ.சு.அ) அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையும்
நாட்டின் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வும் இலங்கையில் மன நோயாளிகளின் வீதம் அதிகரித்துச் செல்வதை வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கான பிரதான காரணங்களாக, நீண்டகால உள்நாட்டு யுத்தமும் அதனுடன் பிணைந்துள்ள வறுமை, வேலையின்மை,
ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பற்றாக்குறை போன்ற இழிந்த சமூகப்
பொருளாதார நிலைமைகளையும் அந்த இரண்டு அறிக்கைககளும் அடையாளம் கண்டுள்ளன.
உலக சுகாதார அமைப்புக்காக மனநிலை சுகாதார நிலைமைகள் பற்றி தரவு சேகரிக்கும்
கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: "மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் மோதல்களும் சுனாமியின்
பாதிப்பும் [2004 டிசம்பரில்] இலங்கை வெகுஜனங்களின், மிகவும் குறிப்பாக மிகவும் வறிய பகுதியினரின் உள நலத்தில்
கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் இருந்து வெளிவரும் உள நலத் தரவுகள், கடுமையான
மற்றும் பொதுவான உள பாதிப்புகள் ஆயுத மோதல்கள் காலத்திலேயே அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. இந்த
நாடு, உலகிலேயே தற்கொலை வீதம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது."
"இலங்கையின் சனத்தொகையில் 3 சதவீதமானவர்கள் ஏதாவதொரு வகையான மன
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது," என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. இந்த
எண்ணிக்கையை ஏனைய தரவுகளுடன் ஒப்பிடும்போது அவை குறைவாக இருப்பதற்கு காரணம், அவை பிரதானமாக
ஏதாவதொரு விதத்தில் சிகிச்சை பெறுபவர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதேயாகும்.
2007ல் மேற்கொள்ளப்பட்ட சுகாதார அமைச்சின் மதிப்பீடு இன்னமும் பகிரங்கமாக
வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், மனநல சுகாதார சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஹிராந்தி
டி சில்வா, ஒக்டோபரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரை, சில முடிவுகளை வெளிப்படுத்தியது.
மொத்தமாக, சனத்தொகையில் 12.3 வீதமானவர்கள் ஏதாவதொரு வடிவிலான மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது மனச்சோர்வு மற்றும் உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குப் பிந்திய உளவியல் சீரின்மை [post
traumatic stress disorder -PTSD] மட்டுமன்றி [binge
eating] காலநேரமின்றி அதிக உணவு உட்கொள்ளல், திடீர் பீதி மற்றும்
நீண்டகால மனக்கவலை உட்பட பரந்தளவில் வரையறுக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் 2006ல்
மீண்டும் தொடங்கப்பட்ட யுத்தம், வெகுஜனங்களின் மிகப் பெரும் பகுதியினர் எதிர்கொண்ட சரீர ரீதியான
சிரமங்கள் மற்றும் உளவியல் பதற்றநிலைமைகளை மிகக் கூடுதலாக அதிகரிக்கச் செய்துள்ளது. சிவில் யுத்தமானது
1983ல் இருந்து குறைந்த பட்சம் 70000 உயிர்களை பலிகொண்டுள்ளதோடு அண்மைய மோதல்களினால் இலட்சக்கணக்கானவர்கள்
இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக தீவில்
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இந்தக் ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை. அவை
உள்ளடக்கப்பட்டால் ஆய்வின் கண்டுபிடிப்புகள் அதிகரித்திருக்கும். போர் வலயங்களுக்கு அருகில் உள்ள மாகாணங்களில்
யுத்தத்தினால் உளவியல் தாக்கங்கள் ஏற்பட்டிருப்பது தெளிவு.
PTSD முழு நாட்டிலும் உள்ள 1.7 வீதத்துடன்
ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தின் எல்லையில் உள்ள பொலநறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில்,
முறையே 4.2 மற்றும் 3.6 வீதமாக உள்ளது. பல விதமான இயல்புக்கு மாறான மன அழுத்த சம்பவங்களால்
PTSD ஏற்படுத்தப்படுகின்றது என டி சில்வா சுட்டிக்
காட்டினார். யுத்தத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டுமென அவர்
அழைப்பு விடுத்தார்.
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலும் கடுமையான வடிவிலான உளவியல்
பாதிப்பு சம்பவங்கள் அதிகமாக உள்ளன. உயர்ந்த மன
சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் 4.2 வீதமாக இருப்பதோடு வேறு வடிவிலான மனத்தாக்கங்களால்
பாதிக்கப்பட்டவர்கள் 11.9 வீதமாக உள்ளனர். இது முறையே 2.1 வீதம் மற்றும் 7.1 வீதம் என்ற தேசிய
தரவுகளுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். அதி கூடிய சொமாடோபோர்ம் [somatoform]
-உளவியல் சார்ந்த காரணிகளால் ஏற்படுத்தப்பட்ட உடல் உளைச்சல்- தாக்கமும் இந்த மாவட்டத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையான 3 வீதத்தோடு ஒப்பிடும் போது 8.9 வீதமாக உள்ளது.
சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த மாதம் ஆற்றிய ஒரு
உரையில், பின்லாந்துக்கு இரண்டாவதாக இருந்த நாட்டின் தற்கொலை வீதம் குறிப்பிடத்தக்களவு மாற்றம்
கண்டுள்ளது என்றார். எவ்வாறாயினும் அவர் புள்ளி விபரங்களை வழங்கவில்லை. உலகில் தற்கொலை வீதம் மிக
மோசமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று என உலக சுகாதார அமைப்பின் அண்மைய அறிக்கை சுட்டிக்
காட்டுகிறது.
அந்த மதிப்பீட்டின் படி, சனத்தொகையில் 4.2 வீதமானவர்கள் தற்கொலையை
ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்டவர்களாக அல்லது இறந்துவிட வேண்டும் என விரும்புபவர்களாகவும் பதிவு
செய்யப்பட்டுள்ளார்கள். 1.6 வீதமானவர்கள் அல்லது 300,000க்கும் கூடுதலானவர்கள் தற்கொலை எண்ணத்தை
நடைமுறையில் வெளிப்படுத்தியுள்ளனர், அல்லது தற்கொலை செய்துகொள்வதற்கான திட்டத்துடன் அதைப்பற்றி
இடைவிடாமல் சிந்திப்பவர்களாக உள்ளனர்.
டாக்டர் ஹிராந்தி டி சில்வா, கடந்த அக்டோபரில் நடந்த ஒரு கருத்தரங்கில்
பேசுகையில் தெரிவித்ததாவது: "குற்றங்கள், வன்முறை மற்றும் சமூக சச்சரவுகளின் வீதமும், மதுபானம் மற்றும்
வேறு போதைப் பொருட்களை பாவிக்கும் வீதமும், தற்கொலை மற்றும் வேண்டுமென்றே தனக்கே தீங்கு
செய்துகொள்கின்ற வீதமும்" சமூதாயத்தின் உளவியல் நலன் சீரழிந்து கொண்டிருப்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
வேலையின்மை, குறைந்த வருமானம், மனித உரிமை மீறல்கள், மனப்பதட்டம் நிறைந்த வேலைநிலமை மற்றும்
மட்டுப்படுத்தப்பட்ட கல்வியறிவு ஆகிய அனைத்தும், மனச் சோர்வு மற்றும் கவலைக்கு வழிவகுப்பதுடன், இந்த
நிலமைகளுக்கு ஈடு கொடுப்பதிலும் கூடுதலான சிரமங்களை உருவாக்குகின்றது.
அடிப்படைத் தேவைகளுக்கான அரச சார்பற்ற அமைப்பின் முன்நாள் பணிப்பாளர்
கிறிஷ் அண்டஹில், அதே கருத்தரங்கில் உரையாற்றினார். இலங்கையில் 42,433 பேர் ஏதாவதொரு வகையான
மன நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார். சுகாதார சேவை எதிர்கொள்கின்ற
பிரதான நெருக்கடி, பயிற்றப்பட்ட மனநோய் மருத்துவர்கள் பற்றாக்குறை நீண்டகாலமாக இருப்பதே என அவர்
கூறினார். முழு நாட்டுக்கும் தகுதிவாய்ந்த மனநோய் மருத்துவர்கள் 130 பேரும், டிப்ளொமா பட்டம்பெற்ற 63
பேரும் மட்டுமே உள்ளனர்.
அடிப்படைத் தேவைகள் அமைப்பு தனது இணையத்தில் தெரிவித்திருப்பதாவது: "இலங்கை
பாரிய மனநோயாளர் பிரச்சினை கொண்ட நாடாக உள்ளது. மனநோயாளர் சுகாதார சேவைகள் புறக்கணிக்கப்பட்டு
வருவதோடு சுகாதார அமைப்பின் கீழ் அதற்கு நிதி வழங்கப்படுகிறது என்ற உண்மையைப் போலவே, நீண்டகாலமாகவும்
தற்போதும் நடந்து கொண்டிருக்கும் வன்முறை சிவில் யுத்தம், பெருந்தொகையான மன அதிர்ச்சிக் கோளாறுக்கும்
உலகிலேயே தற்கொலை வீதம் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும் காரணமாகியுள்ளது."
2009ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார சேவைக்கான ஒதுக்கீடு 533 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் மட்டுமே. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 525 மில்லியன் டொலரில் இருந்து 8 மில்லியன்
டொலர் மட்டுமே அதிகமாகும். பணவீக்கம் 30 சத வீதமாக இப்பதோடு, அரசாங்கம் இராணுவச் செலவை
அதிகரிக்கின்ற நிலையில், இந்த தரவுகள் அடிப்படை சேவைகளில் அதிகளவிலான வெட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது.
நாட்டின் உடனடித் தேவைகளை அணுகத் தவறியுள்ள மொத்தச் சுகாதாரச் செலவில், மனநோய் மருத்துவத்துக்கான
ஒதுக்கீடு ஒரு அற்ப பகுதியே ஆகும்.
அடிப்படை சேவைகள் மற்றும் பயிற்றப்பட்ட மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை,
இலட்சக்கணக்கான மக்கள் முகங்கொடுத்துள்ள உளவியல் தாக்கத்தை மட்டுமே குவிக்கும். குறிப்பிடத்தக்க வகையில்,
மனநோய் மருத்துவ சேவை பற்றாக்குறையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட
ஆறு மாவட்டங்கள், நாட்டில் தற்போது நடக்கும் யுத்தத்தால் அல்லது அண்மையில் யுத்த வலயங்களாக்கப்பட்டதால்
நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. |