World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Gigantic corporate fraud at Satyam Computers deals body-blow to Indian elite's global ambitions

இந்தியா: சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மாபெரும் நிறுவன மோசடி இந்திய மேற்தட்டின் பூகோள அபிலாசைகளுக்கு விழுந்த பெருத்த அடியை எடுத்துக்காட்டுகிறது

By Deepal Jayasekara and Kranti Kumara
27 January 2009

Back to screen version

இந்தியாவின் நான்காவது மிக பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ரொக்கப்பணம், வருவாய்கள், இலாபங்கள் மற்றும் கடன் சுமைகள் உட்பட, நிறுவனத்தின் நிதியியல் நிலைமைகளை அதன் சேர்மேன் பல ஆண்டுகளாக மோசடியான வகையில் தவறாக எடுத்துக்காட்டியதைத் தொடர்ந்து, அது பொறிவின் விளிம்பில் உள்ளது.

ஜனவரி 7 இல், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிற்கு சத்யம் சேர்மேன் இராமலிங்க ராஜூ எழுதிய கடிதத்தில், நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை விட, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிறுவனத்திடம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சத்யம் நிறுவனத்தின் பங்கு விலைகள் ஏறக்குறைய 90 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், ஒரு கண்மூடித்தனமான முயற்சியில், சத்யமின் வெளிப்படையான பொறிவைத் திசைதிருப்பவும், முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கவும், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை இந்திய அரசாங்கம் மாற்றியமைத்திருப்பதுடன், ஒரு முழுமையான மற்றும் பரந்த புலனாய்விற்கும் வாக்குறுதி அளித்தது. தற்போது நீக்கப்பட்டுள்ள சத்யம் சேர்மன் மற்றும் அவரின் தம்பியும், சத்யம் மேலாண்மை இயக்குனர் ராமா ராஜூ மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி சீனிவாஸ் வட்லமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு PwC (PricewaterhouseCooper) ஆடிட்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் பீடிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் பணிஒப்பந்தங்களை அபகரிப்பதில் பிற தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் போட்டியாளர்கள் தீவிரமாக உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான சத்யம் தொழிலாளர்களின் தலைவிதி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. துல்லியமாக எத்தனை தொழிலாளர்களை சத்யம் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. அது 53,000 தொழிலாளர்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் 10 முதல் 12 ஆயிரம் வரையிலான நிறுவன தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் அவரின் மோசடியில் உள்ளடங்கும் என்று ராஜூ தெரிவித்திருந்தார்.

சத்யத்தின் முடிச்சு அவிழ்ந்திருப்பதானது, இந்திய அரசியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் பூகோள அபிலாசைகளுக்கு ஒரு தடுமாறும் விளைவை அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் (தொழில் சேவை பிரிவு) "மணிமகுடமாக" இருந்த சத்யம், இந்தியாவின் சமீபத்திய பொருளாதார விரிவாக்கம் அல்லது "எழுச்சி" க்கு முக்கியமாக இருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உறபத்தியில் (GDP) தகவல் தொழில்நுட்ப துறை சுமார் 5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது என்பது மட்டுமில்லாமல், இத்துறையில் இந்தியா உலகின் முன்னணியில் இருக்கிறது என்று கூறும் அளவிற்கு தொழில்நுட்பரீதியாகவும் அபிவிருத்தி அடைந்த துறைகளில் ஒன்றாக இருந்தது.

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பின்னடைவுகளால் ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் தள்ளாடி வரும் சமயத்தில், சத்யம் மோசடி இந்தியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குழிதோண்ட அச்சுறுத்துகிறது. அக்டோபர் மற்றும் நவம்பரில், ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதி 10 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சியடைந்தது. ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேலாக ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் 8 சதவீதம் எட்ட முடியும் என்று இந்திய மேற்தட்டு கணித்து திட்டமிட்டிருந்ததன் பின்னர், இந்த வீழ்ச்சி அதன் தயாரிப்பில் ஏற்பட்ட ஒரு பேரழிவைத் தான் குறிக்கிறது.

அதே நேரத்தில் அன்னிய முதலீடும் வறண்டு விட்டிருக்கிறது. அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் பில்லியன்கணக்கான டாலர்கள் திரும்ப எடுக்கப்பட்டு விட்டதால், இந்திய பங்கு மதிப்புகள் ஒரு திடீர் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டுகளில், சென்செக்ஸ் எனப்படும் இந்தியாவின் முதன்மை பங்கு குறியீடு, 2008 ஜனவரியின் தொடக்கத்தில் சாதனையளவாக இருந்த 21,206 புள்ளிகளிலிருந்து நேற்று 8674 புள்ளிகளுக்கு, அதாவது ஏறத்தாழ 60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சத்யம் ஒரே இரவில் பறந்து விடக்கூடிய நிறுவனமல்ல. இந்திய பெருநிறுவனத்தின் மிக புகழ்பெற்ற நபர்கள் அதன் இயக்குனர்கள் குழுவில் அமர்ந்திருக்கிறார்கள். சத்யத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை பங்குதாரரான ராஜூ, பெருநிறுவன மேற்தட்டு மற்றும் இந்திய தொழில்துறையால் ஒரு பிரகாசிக்கும் பெருநிறுவன முன்மாதிரியாக தொடர்ந்து புகழப்பட்டவர். கடந்த செப்டம்பரில் இலண்டனில் நடந்த ஒரு விழாவில், ஸ்வீடன் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி Dr. Ola Ullsten யிடமிருந்து 2008 க்கான "பெருநிறுவனத்தை நடத்துவதில் சிறப்புத்தன்மைக்கான தங்கமயில் பூகோளவிருதினை" ("Golden Peacock Global Award for Excellence in Corporate Governance") பெற்றார்.

சத்யம் மோசடி, இந்தியாவின் மென்பொருள் மற்றும் அவுட்சோர்சிங் தொழில்துறையை மட்டும் பாதித்துவிட வில்லை; அது "இந்தியாவில் தொழில் செய்வதில் உள்ள அபாயங்கள் குறித்தும் - மேலும் அற்புத வளர்ச்சி குறித்த நிறைய தற்பெருமைகளின் உறுதித்திறன் மீதும் தாறுமாறான கேள்விகளையும் எழுப்பியுள்ளது." என்று இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்சின் ஒரு தலையங்கம் குறிப்பிட்டிருந்தது.

தொடர்ந்து நீண்ட காலம் மெளனமாக இருந்த பின்னர், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங், சத்யமில் ஏற்பட்ட மோசடியை ஒரு "அதிர்ச்சியூட்டும் அபிவிருத்தி" என்று குறிப்பிட்டார். "Economic Times' Awards for Corporate Excellence" இன் விழாவில் பேசும் போது, சத்யத்தை (இது முற்றிலும் முரண்பாடாக, சமஸ்கிருதத்தில் "உண்மை" என்று அர்த்தப்படுகிறது) "நமது பெருநிறுவன கெளரவத்தின் மீதான ஒரு கரும்புள்ளி" என்று சிங் குறிப்பிட்டார்.

"ஒரு நிறுவனத்தின் மோசடி மற்றும் தவறான நடவடிக்கை எவ்வாறு பலரை பாதிக்கும் என்பதற்கும், இந்தியாவின் கெளரவத்தை பரந்தளவில் களங்கப்படுத்தும் என்பதை தான்" சத்யத்தின் செயல்பாடு "குறிக்கிறது" என்று சிங் தெரிவித்தார்.

சத்யம் மோசடியால் களங்கப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் வழங்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் இணை-நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, இந்த அவதூறுக்கு முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் "அதிகபிரதிபலிப்பைக்" காட்ட தேவையில்லை என்று வலியுறுத்தினார். அவர் அர்த்தப்படுத்துவதை விட அதிகமாக கூறுகையில், மூர்த்தி தெரிவித்ததாவது: "இந்தியாவின் பெருநிறுவன நிர்வாக தரங்கள் உலகின் சிறந்த தரங்களை விட மேலானதாகவே உள்ளதாக நான் நம்புகிறேன்... என்ரான், வோல்டுகாம், டெய்கோ மற்றும் பல வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் வீழ்ச்சியை நாம் பார்த்திருக்கிறோம். அது அமெரிக்காவின் பெருநிறுவன நிர்வாக தரம் மோசமானது என்று குறிக்காது" என்றார்.

சத்யமும் இந்தியாவின் அரசியல் மேற்தட்டும்

சத்யம் 1987ல் ராஜூ சகோதரர்களால் நிறுவப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அந்நிறுவனம் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. உலகின் முன்னணி உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லெ, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமான டெல்ஸ்டிரா, உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்சிலர்-மிட்டல்; மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆகியவை அதன் வாடிக்கையாளர்களின் சில. நெஸ்லெ, அதன் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பையும் தவிர்க்க பிற அவுட்சோர்சிங் நிறுவனங்களிடம் மாறுவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனவரி 7 இல் எழுதப்பட்ட அவரின் கடிதம் மூலம் சத்யம் சேர்மேன் ராஜூ தம்மைத்தாமே குற்றஞ்சாட்டி கொண்ட போதினும், அவர் திட்டமிட்டு அவரின் பிற நிறுவனங்களுக்கு நிதியை மாற்ற முயல்கிறார் என்ற நோக்கில் எழுதப்பட்ட அந்த கடிதமே ஒரு பொய் என்று நம்புவதற்கு அங்கு பல காரணங்கள் உள்ளன.

டிசம்பர் மத்தியில், ராஜூ குடும்பத்திற்கு சொந்தமான மைதாஸ் சொத்துக்களை வாங்க சத்யம் திட்டமிட்டது. ஆனால் சத்யம் அளிக்கும் விலை செயற்கையாக ஏற்றப்பட்ட விலை என்று கருதிய அதன் பங்குதாரர்கள் அதை ஒதுக்கினார்கள். அது ராஜூ குடும்பத்தை மேலும் செழிக்க செய்வதோடு மட்டுமில்லாமல், மைதாஸ் சொத்துக்களை சத்யம் எடுப்பது என்பது அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பல ஆண்டுகளாக கொள்ளை அடித்ததை மறைக்கும் நோக்கம் கொண்டிருந்தது என்றும் கூறப்பட்டு வருகிறது.

முரண்பாடாக இருப்பதென்னவென்றால், இந்திய அரசியல் மேற்தட்டு, குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசியல் மேற்தட்டு, (சத்யம் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டுள்ளது) அரசாங்க ஒப்பந்தங்களையும், பிற வகையிலான ஆதரவுகளையும் ராஜூ குடும்பத்திற்கு தாராளமாக வழங்கி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சத்யம் தலைமை செயலதிகாரியை ஏறத்தாழ ஓர் உத்தமர் என்று வர்ணித்து தொடர்ந்து பாராட்டி இருந்தார். ராஜூவிற்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான மைதாஸ் இன்ஃப்ராவிற்கு மாநகர கட்டமைப்பில் எந்த அனுபவரும் இல்லை என்றாலும் கூட, தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் ஹைதராபாத்தில் 71 கி.மீ. தூரத்திற்கு மாநகர (விரைவு போக்குவரத்து) அமைப்புமுறை அமைப்பதற்கு ரூ. 120 பில்லியன் (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை அளித்தது.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையிலான மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம், ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகபட்டினத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சந்தை விலை ஏக்கருக்கு ரூ. 50 மில்லியன் என்ற போதினும், ஏக்கர் ரூ. 1 மில்லியன் என்ற விலையில், 50 ஏக்கர் நிலம் வாங்க சத்யம் நிறுவனத்திற்கு கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.

சத்யம் நிறுவனத்தில் அவதூறு வெளியானதை அடுத்து, அந்த நில ஒப்பந்தம் மீண்டும் பரிசீலிக்கப்படாது என்று தெரிவித்தார்: "அது ஒரு நிறுவனத்திற்கு தானே தவிர தனிநபருக்கல்ல" என்றார்.

ராஜூ போலீஸ் காவலில் இருந்த போதினும், அவரின் நெருக்கமான அரசியல் தொடர்புகள் குறித்து பேச வெட்கப்படவில்லை. பத்திரிகை அறிக்கைகளின்படி, அவர் தெரிவித்ததாவது: "இருக்கும் அதிகாரங்களின் முழு ஆதரவும் எனக்கு இருக்கிறது. இல்லையென்றால், இந்த குறுகிய காலத்தில் இந்த அளவு நிலத்தை என்னால் சேர்த்திருக்க முடியாது. எங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்த போதும், அரசாங்க துறைகள் வெளிப்படையாகவே எங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தார்கள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். நிலபதிவு அலுவலகங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தன. சிலவேளைகளில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட எங்கள் நலனுக்காக அவை வேலை செய்தன. நாங்களும் எங்களுக்காக வேலை செய்தவர்களின் வசதிகளைக் (போக்குவரத்து, உணவு மற்றும் பிற பொழுதுபோக்குகள்) கவனித்து கொண்டோம்."

(அவரும், அவர் நிறுவனமும் அவர்களின் அரசியல் கூட்டாளிகளுக்கு எவ்வாறு நன்றி தெரிவித்தார்கள் என்பதை தவிர) அவர் மேற்கொண்டு விபரங்களை அளிக்கவில்லை என்ற போதினும், அவரின் தேவைகள் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கத்தாலும், அதற்கு முன்னாள் இருந்த தெலுங்கு தேசம் அரசாங்கத்தாலும் பூர்த்தி செய்யப்பட்டன என்று ராஜூ குறிப்பிட்டார். "பெயர்களைக் குறிப்பிடுவதோ அல்லது கட்சிகளைக் குறிப்பிடுவதோ உதவாது." என்று குறிப்பிட்ட ராஜூ, "எந்த ஆண்டு என்பதை கூட நான் குறிப்பிடவில்லை. 2004 க்கு முன்னரும், [இந்த ஆண்டில் தான் முந்தைய தெலுங்கு தேச கட்சி அரசாங்கத்தைத் தோற்கடித்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிகாரத்திற்கு வந்தது] தற்போதும் கூட நாங்கள் என்ன செய்து வந்தோமோ, அதில் அவர்களுக்கு என் மீது முழு நம்பிக்கை இருந்ததால், எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது" என்றார்.

அமெரிக்கா பாதுகாப்புவாதியாக மாறினால், இந்தியாவிற்கான தொழில்சார் அவுட்சோர்சிங்கை குறைக்கவும் விழைந்தால், அதற்கு இடைத்தடை நிகழ்வாக பரந்தளவிலான நிலங்களை வாங்க அவர் விரும்பியதாக ராஜூ தெரிவித்திருந்தார்.

நாங்கள் அனைவரும் அஞ்சியபடி, அமெரிக்கா ஒட்டுமொத்தமாக அவுட்சோர்சிங்கிற்கு எதிராக திரும்பும் போது சந்தையைப் பிடித்து வைத்திருப்பதற்கான ஒரு இடைத்தடை திட்டம் - அது என்னுடைய மூலோபாயமாகும்" என்று சத்யம் தலைவர் பெருமையுடன் போலீஸிடம் கூறினார்.

இதற்கிடையில், சத்யம் மற்றும் மற்ற இரண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான, உலகளவில் 95,000 தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸ் மற்றும் மெகாசாப்ட் ஆகியவை ஊழல் அல்லது விமர்சனத்திற்குள்ளாகும் பழக்கங்களில் ஈடுபட்ட காரணத்தால், உலக வங்கியின் பணிகளைச் செய்யும் உரிமை சில காலத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாக உலக வங்கி அறிவித்திருந்தது. உலக வங்கி சில விபரங்களை அளித்திருந்த போதிலும், இந்த நிறுவனங்கள் உலக வங்கி பணியாளர்களுக்கு நலன்களை வழங்குவதன் மூலம் வேலைகளை மறைமுகமாக தங்கள் திசையில் திருப்ப சூழ்ச்சி செய்திருந்திருந்ததாக கூறப்படுகிறது.

உலக பொருளாதார நெருக்கடியால் தள்ளாடி வரும் இந்திய பொருளாதாரத்திற்கு சத்யம் மோசடி, மேலும் ஒரு பலத்தஅடி கொடுத்துள்ளது. மேலும், ஊழல் வலைகளின் மீதும், இந்திய பெருநிறுவன முக்கியஸ்தர்களுடன் அரசாங்கங்கள் மற்றும் இந்தியாவிலுள்ள கட்சிகளைத் தொடர்புபடுத்தும் ஆதரவுகளின் மீதும் வெளிச்சமிட்டு காட்டுவதை இந்திய அரசியல் மேற்தட்டு விரும்பாத நிலையில், சத்யம் மோசடி அதையும் விலக்கி காட்டுமோ என்று அஞ்சப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved