WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government wins a hollow victory in provincial
elections
இலங்கை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களில் அர்த்தமற்ற வெற்றியை பெற்றுள்ளது
By K. Ratnayake
16 February 2009
Back to screen version
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற
மாகாண சபைத் தேர்தல்களில், மத்திய மாகாணத்தில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. மற்றைய மாகாணமான
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் நடந்ததாக சொல்லப்படும் தேர்தல் மோசடியை அடுத்து, குறிப்பிட்ட
சாவடியில் மீண்டும் வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆயினும், ஐ.ம.சு.மு. அந்த
மாகாணத்திலும் வெற்றிபெறும் என்பதை இதுவரை கிடைத்துள்ள முடிவுகள் சுட்டிகாட்டுகின்றன.
ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது அராசாங்கத்தின்
இனவாத யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக இந்த தேர்தல் முடிவுகளை உடனடியாக பற்றிக்கொண்டார். அவர் நேற்று
விடுத்த அறிக்கையில், தேர்தல் முடிவுகள் "தாய்நாட்டை நேசிக்கின்ற சகலரினதும் வெற்றி" எனவும் "எமது யுத்த வீரர்களை
ஊக்குவிக்கக் கூடியது" என்றும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு ஒரு அங்கீகாரம் என்றும் பிரகடனம் செய்தார்.
இராஜபக்ஷ பெருமைப்பட்டுக்கொண்ட போதிலும், தேர்தல் முடிவுகள் யுத்தத்துக்கு அல்லது
அரசாங்கத்தின் கொள்கைக்கு கிடைத்த ஒப்புதல் அல்ல. எல்லாவற்றுக்கும்
மேலாக, பகிரங்கமாக யுத்தத்தை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)
போன்ற பிரதான எதிர்க் கட்சிகளிடம் எந்தவொரு மாற்றீடும் இல்லாமையையே ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகள்
பிரதிபலிக்கின்றன.
பீதி, அச்சுறுத்தல் மற்றும் நடைமுறையில் உள்ள ஊடகத் தணிக்கை உள்ளடங்கிய ஒரு அரசியல்
சூழ் நிலையின் மத்தியிலேயே பிரச்சாரங்கள் நடைபெற்றன. யுத்தம் தொடர்பான எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது அராசாங்கத்தின்
கொள்கைகளை விமர்சிப்பதையும், தேசிய பாதுகாப்பை கீழறுக்கும் மற்றும் "பயங்கரவாத புலிகளுக்கு" உதவும் செயல்
என இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் கண்டனம் செய்தனர். கடந்த இரண்டு வருடங்களாக, பாதுகாப்புப் படைகளுடன்
இணைந்து செயற்படும் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்க் கட்சிகள், புலிகள் மீதான இராணுவ வெற்றியை கொண்டாடுவதில் அரசாங்கத்துடன்
இணைந்து கொள்வதன் மூலம், யுத்தத்தை மட்டுமல்ல அதிலிருந்து தோன்றும் ஜனநாயக உரிமைகள் மீதான மூர்க்கத்தனமான
தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளையும் அங்கீகரிக்கின்றன. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி.,
வாழ்க்கைத்தர சீரழிவு தொடர்பான மக்களின் பரந்த சீற்றத்துக்கு அழைப்புவிடுக்க முயற்சித்த போதிலும், அவர்களது
விமர்சனம் யுத்தம் மற்றும் பூகோள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தையிட்டு அக்கறை செலுத்தாமல், மோசடிகள்
தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
யுத்தம், அதிகரித்துவரும் வேலையின்மை, அத்தியாவசிய சேவைகளின் சீரழிவு மற்றும்
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வாக்காளர்களின் அதிருப்தி மற்றும் பகைமை பற்றி அரசியல்
ஸ்தாபனத்துக்குள் குரல் எழுப்பப்படவில்லை. இராஜபக்ஷ "யுத்தத்திற்கான பொதுசன வாக்கெடுப்பாக" தேர்தலைத்
திருப்பியதோடு எதிர்க் கட்சிகளின் எவ்விதமான எதிர்ப்பையும் சந்திக்கவில்ல. 2002ல் யுத்தநிறுத்த உடன்படிக்கையை
கைச்சாத்திட்டு புலிகளுடன் பேச்சுவார்த்தையையும் ஆரம்பித்த யூ.என்.பி, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை
கிழித்தெறிந்து யுத்தத்தை மீண்டும் தொடங்கிய அரசாங்கத்தை அதன் இராணுவக் கொள்கைகளுக்காக பகிரங்கமாகப்
பாராட்டியது.
இந்த சூழ்நிலையில், 35 வீதமான வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருக்க முடிவு
செய்தனர். ஏனையோர் அவ்வாறு செய்வதில் இருந்தும் தடுக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 60,000 தகுதியுடைய
வாக்காளர்கள், அடையாள அட்டை அல்லது அடையாள பத்திரங்கள் இன்மையால் வாக்களிக்க
முடியாதவர்களாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மத்திய மாகாணத்தில் வாழும் இலங்கையின் தொழிலாள
வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களாவர்.
ஐ.ம.சு.மு. மத்திய மாகாண சபையில் 34 ஆசணங்களைப் பெற்றுள்ளது. 2004ல் நடந்த
தேர்தலில் அது பெற்ற 30 ஆசனங்களையும் விட இம்முறை யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யின் செலவில் 4 ஆசனங்களை
கூடுதலாக பெற்றுள்ளது. ஐ.ம.சு.மு. வடமேல் மாகாணத்தில் கிராமப்புற பிரதேசமான குருணாகல மாவட்டத்திலும்
வெற்றிபெற்றுள்ளது. 2004ல் அது பெற்றிருந்த 20 ஆசனங்கள் இம்முறை 24 ஆக அதிகரித்துள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும்
நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐ.ம.சு.மு. வெற்றிபெறவில்லை. அந்தப் பிரதேசத்தில், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய இரு பாரம்பரியக்
கட்சிகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ள ஆளும் கூட்டணி மீது, பரந்தளவு பகைமையும் அதிருப்தியும் காணப்படுகிறது.
உணவு மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளின் விலைகள் அதிகரிப்பால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், தமது சம்பளம் மற்றும் நிலைமைகளை முன்னேற்றிக்கொள்வதற்காக
முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை அடிபணியச் செய்வதில் இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. இட்டு
நிரப்பிய பாத்திரம் பற்றி கசப்புணர்வு கொண்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் திட்டமிடப்பட்ட தமிழர் விரோத
பாரபட்சங்கள், அதே போல் "புலி பயங்கரவாதிகளுக்கு" ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னெடுக்கப்படும் பொலிஸ்
அடக்குமுறைகள் மற்றும் தொந்தரவுகளுக்கும் உள்ளாகின்றனர்.
தேர்தல் தோல்விகளையிட்டு பீதிகொண்ட இராஜபக்ஷ, வாக்காளர்களை கொள்வனவு
செய்யும் நோக்கில் பிரதேசத்திற்குள் அரச வளங்களை கொட்டினார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக,
தோட்டப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 343 மில்லியன் ரூபாய்களை (சுமார்
3 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கியது. சில அரச போக்குவரத்து சபைகளுக்கு புதிய பஸ்கள் வழங்கப்பட்டதோடு
புதிய கட்டிடங்கள் மற்றும் பாதைகளுக்கு அத்திவாரங்கள் இடப்பட்டன.
இந்த சகல முயற்சிகளின் மத்தியிலும், நுவரெலியா-மஸ்கெலியா தொகுதியில் பெரும்பான்மை
வாக்குகளைப் பெறுவதில் ஐ.ம.சு.மு. தோல்விகண்டது. பெரும்பாலான வாக்குகளை யூ.என்.பி. பெற்றிருந்தது. இது
அரசாங்கத்திற்கு எதிரான கண்டனமே அன்றி எதிர்க்கட்சிக்கான ஆதரவு அல்ல. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 68
வீதம் மட்டுமே செல்லுபடியானது. 8 வீதமானவர்கள் பெரும்பாலும் முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான தமது
அதிருப்தியை வெளிப்படுத்த வாக்குச் சீட்டுகளை செல்லுபடியற்றதாக ஆக்கியிருந்தார்கள்.
ஐ.தே.க. இரண்டு மாகாணங்களிலும் ஆசனங்களை இழந்துள்ளது. 2004 தேர்தலில் மத்திய
மாகாணத்தில் 26 ஆசனங்களை பெற்றிருந்த யூ.என்.பி. இம்முறை 22 மட்டுமே பெற்றுள்ளது. வடமேல் மாகாணத்தில்,
முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாவிட்டாலும், 2004ல் குருணாகல் மாவட்டத்தில் 12 ஆசனங்களை பெற்றிருந்த
யூ.என்.பி., இம்முறை 9 மட்டுமே பெற்றுள்ளது. மத்திய மாகாணத்துக்கான யூ.என்.பி. யின் முதலமைச்சர் வேட்பாளர்
எஸ்.பி. திசாநாயக்க, "அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்" என கூறியதைத் தவிர வேறு
விளக்கங்களை தரவில்லை.
சிங்கள மேலாதிக்கவாதத்தை கிளறிவிடுவதுடன் யுத்தத்தை உறுதியாக ஆதரிக்கும்,
வறியவர்களை காப்பதாக ஜனரஞ்சக வார்த்தைகளையும் வீசும் ஜே.வி.பி. க்கு தேர்தல் முடிவுகள் அழிவுகரமான
பின்னடைவைத் தந்துள்ளது. மத்திய மாகாணத்தில் தனது 12 ஆசனங்களையும் இழந்துள்ள ஜே.வி.பி, வடமேல்
மாகாணத்தில் 2004ல் பெற்ற ஆறு ஆசனங்களுக்கு மாறாக இம்முறை குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் ஒரே ஒரு
ஆசனத்தைப் பெறவுள்ளது. குருணாகல் நீங்கலாக, அதன் வாக்குகள் 3 வீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சிகண்டுள்ளது. மத்திய
மாகாணத்துக்கான ஜே.வி.பி. யின் முதன்மை வேட்பாளர் சமன்சிரி பெர்னான்டோ, கட்சிக்கு புறமுதுகு காட்டியதன்
மூலம் மக்கள் "தம்மையே பறிகொடுத்துள்ளார்கள்" என வாக்காளர்களைக் குற்றஞ்சாட்டினார்.
2004க்கு முந்திய தசாப்தம் பூராவும், இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளான
யூ.என்.பி. மற்றும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி வளர்ச்சிகண்ட நிலையில், ஜே.வி.பி.
அரசியல் ஸ்தாபனத்துக்கு ஒரு பயனுள்ள பாதுகாப்பு வாயிலாக இயங்கியது. 2002 யுத்த நிறுத்தத்தை கசப்புடன்
எதிர்த்த ஜே.வி.பி., ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யூ.என்.பி. அரசாங்கத்தை பதவி விலக்கியதை ஆதரித்தது.
2004 பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. உடன் கூட்டாகப் பிரச்சாரம் செய்ததுடன்,
கணிசமான வாக்குகளைப் பெற்று குமாரதுங்கவின் அமைச்சரவையிலும் பங்கேற்றது.
அப்போதிருந்தே ஜே.வி.பி. முற்றிலும் சமரசமாக செயற்பட்டது. அமைச்சரவையில்
இணைந்துகொண்ட ஜே.வி.பி., உடனடியாக அதன் தேர்தல் வாக்குறுதிகளை மீறியதோடு தமது வறுமை வாழ்க்கையில்
முன்னேற்றம் காண முயன்ற சிங்கள கிராமப்புற ஆதரவாளர்களின் அபிலாஷைகளையும் தூக்கியெறிந்தது. 2005 ஜனாதிபதி
தேர்தலில் இராஜபக்ஷவின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்த ஜே.வி.பி., எதிர்க் கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த
போதிலும் அரசாங்கத்தின் பிற்போக்கு வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றவும் ஆதரவளித்தது.
வெகுஜன ஆதரவின் சரிவு, அரசாங்கத்திலிருந்து தூர விலகுவதா இல்லையா என்பது
தொடர்பில் கடந்த ஆண்டு ஜே.வி.பி. யை பலவீனமாக்கும் ஒரு பிளவுக்கு வழிவகுத்தது. ஜே.வி.பி. யின் பாராளுமன்றக்
குழு தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான ஒரு குழு பிரிந்து சென்று இராஜபக்ஷவின் அரசாங்கத்தை வெளிப்படையாக
ஆதரித்தது. மாகாண சபை தேர்தலில், ஜே.வி.பி. யை தனது தாக்குதல் இலக்காகக் கொண்ட வீரவன்ச இராஜபக்ஷவுடன்
பிரச்சாரம் செய்தார்.
இந்தத் தேர்தலில் யுத்தத்தை எதிர்த்து, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்த சகல
பாதுகாப்பு படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக்
கட்சி (சோ.ச.க.) மட்டுமே. அதன் வேட்பாளர்கள் தெளிவுபடுத்தியது போல், கட்சியின் கோரிக்கை புலிகளுக்கோ
அவர்களின் தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்கோ அரசியல் ஆதரவு வழங்குவதாக அர்த்தமாகாது. மாறாக சோசலிச
கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில் ஆளும்
வர்க்கத்தின் சகல கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை
இலக்காகக் கொண்டதாகும். தெற்காசியா மற்றும் பூகோளம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பாகமாக
ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான அழைப்பில் சோ.ச.க. யின் முன்நோக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
சோ.ச.க. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திலும் மத்திய மாகாணத்தில்
நுவரெலியா மாவட்டத்திலும் போட்டியிட்டது. பிரச்சாரத்தின் போது "யுத்தத்துக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல்களுக்கும் எதிராக இலங்கை சோ.ச.க. மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றது" என்ற கட்சி
அறிக்கையில் சுமார் 40,000 பிரதிகளையும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான ஏனைய கட்டுரைகள்,
அறிக்கைகள் மற்றும் குறிப்புகளையும் கட்சியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் சிங்களம், தமிழ்
மற்றும் ஆங்கிலத்திலும் விநியோகித்தனர்.
சோ.ச.க. யின் பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்துக்கு அதன் நலன்களைக்
காக்கக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டிருந்ததே அன்றி, வெற்று
வாக்குறுதிகள் அல்லது தேர்தல் சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தை
பிளவுபடுத்துவதற்காக ஆட்சியில் இருந்த அரசாங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த தசாப்த கால தமிழர் விரோத
பாரபட்சங்களிலேயே யுத்தத்தின் வரலாறு வேரூன்றியிருப்பதாக வேட்பாளர்கள் விளக்கினர். அவர்கள் முதலாளித்துவத்தின்
ஆழமடைந்துவரும் பூகோள நெருக்கடியின் சூழ்நிலையில் இலங்கையின் நிலைமையை இருத்தி ஆராய்ந்தனர்.
நிர்வாகத்தின் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்திய இராணுவவாதத்துக்கு நேரடி
எதிராக, சோ.ச.க. இரண்டு மாவட்டங்களிலும் சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகளைப் பெற்றிருந்தது.
நுவரெலியாவில் கட்சி பெற்ற 98 வாக்குகள் ஏறத்தாழ அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளாகும்.
புத்தளத்தில் கட்சி இதுவரை 114 வாக்குகளைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இலாப அமைப்பாலும் அதன் அரசியல்
பிரதிநிதிகளாலும் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டின் பேரில் வர்க்க நனவுடன் வழங்கப்பட்ட
வாக்குகளாகும். கட்சியின் வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக படிக்குமாறும் அதை தெற்காசிய
பிராந்தியத்திலும் இலங்கையிலும் கட்டியெழுப்ப இணையுமாறும் எங்களது பிரச்சாரத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கும் எமது
வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். |