World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Iran and public opinion

ஈரானும் பொதுமக்கள் கருத்தும்

By Barry Grey and David North
27 June 2009

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் வாரந்தோறும், மகிழ்ச்சியுடன் ஆதரவு தருவதில் இருந்து கடுமையான விரோதப் போக்குவரை பரந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் ஏராளமான கடிதங்களை பெறுகிறது. இவை அனைத்தும் இங்கு ஆர்வத்துடன் படிக்கப்படுகின்றன. சில சமயம், அவை ஆதரவு அல்லது விரோதப் போக்கு என எப்படியிருந்தாலும் ஒரு உறுதியான பரந்த தன்மையுடன் அரசியல் மற்றும் சமூகப் பார்வையில் மிகுந்த தெளிவை வெளிப்படுத்துவதால் குறிப்பிடத்தக்க வகையில் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

ஜூன் 25ம் தேதி "ஈரானிய நெருக்கடியில் உள்ள சர்வதேசப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட முன்னோக்கு கட்டுரையை அடுத்து அத்தகைய இரு கடிதங்களை ஒரு வாசகரிடம் இருந்து கிடைக்கப் பெற்றோம்; அவை கோபத்துடன் ஈரான் நிகழ்வுகளைப் பற்றி நாம் எழுதிவருவதை கண்டித்துள்ளன. அந்த ஒடுக்கப்பட்ட நாட்டில் அமெரிக்காவின் நீண்ட கால, குருதி படிந்த தொடர்பு பின்னணியில் அதிகாரத்திற்கான போராட்டத்தை நாம் ஆராய்ந்த முன்னோக்கை அவர் எதிர்த்துள்ளார். அக்கட்டுரையில் நாம் தேர்தலுக்கு பின்னர் அமெரிக்க செய்தி ஊடகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மகத்தான பிரச்சாரத்தின் பின்னே உள்ள ஆபத்தான அக்கறைகள் பற்றி விளக்கியிருந்தோம்.

அவருடைய முதல் கடிதம் அறிவித்ததாவது:

தடையற்ற பேச்சுரிமைக்காக தெருக்களுக்கு வந்து மடிந்து கொண்டிருக்கும் ஈரானின் தைரியம் மிகுந்த மக்களை நீங்கள் அகெளரவப்படுத்தியுள்ளீர்கள். ஈரானிய தேர்தலில் இருந்த ஊழல் தன்மை பற்றி குறிப்புக்களை அறிய நீங்கள் ஒன்றும் நியூ யோர்க் டைம்ஸைப் பார்க்க வேண்டியதில்லை; பாசிசத்தை எதிர்த்து தெருக்களுக்கு வந்து போரிடும் மக்களை பாருங்கள். சரியான சிந்தனை உடைய எவரும் அஹ்மதிநெஜாட் மூன்றில் இரு பங்கு வாக்குளைப் பெற்று வெற்றி அடைந்தார் என நம்பமாட்டார்கள்.

முன்பு உங்கள் வலைத் தளத்தை நான் ஒரு வழிகாட்டும் ஒளி விளக்கு போல் கண்டு வந்தேன்; ஆனால் இப்பொழுது நீங்கள் ஈரானில் உள்ள பாசிச சர்வாதிகாரிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நீங்கள் உண்மையில் எப்படி தவறான, பொய் கூறும் கூட்டம், தங்கள் சிந்தனைப் போக்கின் நலனுக்காக உண்மையை திரிக்கத் தயாராக இருக்கும் தீவிர வலதுசாரிகளை விட வேறுபட்டவர்கள் அல்லர் என்பதை எனக்குக் காட்டியுள்ளது.

அன்றே, நாளின் பிற்பகுதியில், அந்த வாசகர் இரண்டாம் கடிதத்தை அனுப்பினார்:

உங்கள் "முன்னோக்கு" சீற்றத்தைக் கொடுக்கிறது. ஈரானில் அதிகாரத்தில் உள்ள பாசிஸ்ட்டுக்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை இழிவான, மனிதத்தன்மை அற்ற விதத்தில் நசுக்கித் தள்ளியது பற்றி எவ்வித கண்டனமும் இல்லை. நாங்கள் கேட்பதெல்லாம் அதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பற்றிய சலித்துப்போன உளறல்கள்தான். இது ஒன்றும் மொசடெக் அல்ல. இது ஒன்றும் ஷாவோ சதாம் ஹுசேனோ அல்ல.

மக்கள் தெருக்களுக்கு வந்து ஜனநாயகத்திற்காக போராடி, மடியும் நிலைக்கு உலகம் நகர்ந்துள்ளது; நீங்களோ ஒரே கால வட்டத்திற்குள் முடங்கி நின்று, பழைய கோஷங்களையே கூறுகின்றீர்கள். இது வெட்ககரமானது!

இந்தக் கடிதங்களின் அரசியல், அறிவார்ந்த மற்றும் சமூக சாராம்சம் உலக சோசலிச வலைத் தளத்தின் "அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றிய சலிப்பூட்டும் உளறல்கள்" என்று இழிவான குறிப்பில் வெளிப்படுத்திக் காட்டுகிறதுகிறது. எமது கோபம் மிகுந்த விமர்சகருக்கு ஈரானின் நிகழ்வுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு ஒரு முக்கியத்துவம் அற்ற காரணியாம்; "கால வட்டத்திற்குள் முடங்கியுள்ளவர்களுக்குத்தான்" அது பற்றிய அக்கறையாம்.

வேறுவிதமாகக் கூறினால் "ஏகாதிபத்தியம்" பழங்காலத்திற்குத்தான் பொருந்தும். தற்கால நிகழ்வுகளைப் பற்றி ஆராயும்போது அதைப் பற்றி பேசுவதற்கு அவசியம் இல்லை. ஏன் இவ்வாறு என்று எமது விமர்சகர் நமக்குக் கூறவில்லை. அமெரிக்கா தற்பொழுது ஈரான் எல்லையில் இருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய முன்று நாடுகளில் போர் புரிந்துகொண்டிருக்கிறது என்பது முக்கியம் இல்லாததுபோல் உதறித் தள்ளப்பட்டுவிட்டது. அதே போல் மூலோபாய வகையில் முக்கியமான பாரசீக வளைகுடாவில் ஈரான் உள்ளது, மகத்தான எண்ணெய், இயற்கை எரிவாயு ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது என்பதும் ஒரு பொருட்டல்ல. CIA ஆதரவு மொசடெக் ஆட்சிக்கு எதிரான 1953ம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பும், அதைத்தொடர்ந்து கால் நூற்றாண்டு நடந்த இராணுவ சர்வாதிகாரமும் பொருத்தமில்லாத "உளறல்கள்" போலும்--ஷாவின் ஆட்சியை மறக்காத மில்லியன் கணக்கான ஈரானியர்களின் மனத்தில் அது பெரிதும் நிறைந்துள்ளது என்றுதான் நாம் சந்தேகிக்கிறோம்.

ஈரானில் எதிர்க்கட்சியின் "ஜனநாயக" எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் மேலைச் செய்தி ஊடகம் நடத்திவரும் பிரச்சாரத்திற்கு பரந்த அளவில் தாராளவாத மற்றும் மத்தியதர வர்க்க "இடது" சூழலின் பரந்த பிரிவுகளின் விடையிறுப்பைத்தான் இக்கடிதங்கள் பிரதிபலிக்கின்றன. எமது விமர்சகர் இந்த நேரத்தில் அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள தலைவர்கள் முன்வைக்கும் திட்டம் பற்றியோ அவர்கள் முறையிடும் சமூக சக்திகள் பற்றியோ, ஆராய்வது ஒருபுறம் இருக்க, அவர்களுடைய அரசியல் சான்றுகளைப் பற்றியும் ஆராய விரும்பவில்லை என்பது தெரிகிறது. அப்படிச் செய்தால் அதுவும் கூட "உளறல்" ஆக இருக்கும் போலும்.

எமது விமர்சகர் "பாசிசம்" பற்றிக் குறிப்பிடுகிறார். இது எந்த சமூக சக்திகளை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அவை பற்றி எவ்வித பகுப்பாய்வையும் அவர் அளிக்க முற்படவில்லை. இது முக்கியத்துவம் அற்ற தள்ளுபடி அல்ல. மார்க்சிச மரபின்படியேனும் பாசிசம் என்பது மத்தியதர வர்க்கத்தின் இயக்கம் என்று அறியப்படுகிறது. பூர்ஷ்வா (இந்த சொல்லை நாம் பயன்படுத்த துணியலாமா?) செய்தி ஊடகத்தில் இருக்கும் அஹ்மதிநெஜாட் ஆட்சிக்கு எதிரான மிகத் தீவிர எதிர்ப்பாளர்கள்கூட தங்கள் வெகுஜன ஆதரவை நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடம் இருந்து, குறிப்பாக அரசாங்கத்தின் ஜனரஞ்சக பொருளாதாரக் கொள்கைக்கு விரோதமான தட்டுக்களில் இருந்துதான் பெறுகின்றனர் என்பதை உண்மை என்று ஒத்துக் கொள்கின்றனர்.

அஹ்மதிநெஜாட்டிற்கு எதிரான எதிர்ப்புக்கள் "பாசிசம்" என்று இது பொருள் தராது. பல இயல்புகளை அடக்கியுள்ள சமூக இயக்கங்களுக்கு எளிதான முத்திரைகளை கொடுப்பது பற்றி பெரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஜனநாயக விரோத இஸ்லாமிய ஆட்சியை உளமார எதிர்க்கும் கூறுபாடுகளும் எதிர்ப்புக்களில் அடங்கியுள்ளன என்பது வெளிப்படை. ஆனால் அவர்கள் அரசியல் அளவில் குழப்பமுற்று உள்ளனர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின்பால் நோக்குநிலை கொள்ளவில்லை. அவர்களுடைய நேர்மையானது ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஈடு இணை ஆகாது. மேலும் அத்தகைய கூறுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஆதிக்கமும் கொள்ளவில்லை.

எமது விமர்சகர், ஆர்ப்பாட்டக்காரர்கள் "ஜனநாயகத்திற்காக தெருக்களில் போராடி, மடிந்து கொண்டிருக்கின்றனர்" என்று அறிவிக்கிறார். இந்த சக்திகள் யாவர் அல்லது, இன்னும் சரியாக ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த ஆளும் இஸ்லாமிய நடைமுறையின் கன்னைகளுடைய கை ஓங்கினால் என்ன செய்வர் என்பதை இவர் ஆராயவில்லை. மெளசவியின் பிரிவிற்கு அதிகாரத்தை மாற்றுவதின் விளைவு எப்படி CIA ஏற்பாடு செய்து அமெரிக்க செய்தி ஊடகம் ஊக்கம் கொடுத்த மற்ற "வண்ணப் புரட்சிகளில்" நடந்ததைவிட அடிப்படையில் வேறுபாட்டு இருக்கும் என்பதை இவர் விளக்கவில்லை. உதாரணத்திற்கு ஜோர்ஜியாவில், ஜனநாயகத்தின் பெயரைக் கூறி அதிகாரத்திற்கு வந்த சாகேஷ்விலியின் ஆட்சி அமெரிக்கா முன்னிறுத்திய போரில் பகடைக்காயாக நின்று ரஷ்யாவிற்கு எதிராகப் போர் செய்தது, இப்பொழுது மக்கள் எதிர்ப்புக்களை நசுக்கி வருகிறது.

எமது வாசகர், ஏகாதிபத்திய நலன்கள் ஈரானில் நடக்கும் நிகழ்வுகளில் எந்த பங்கும் கொள்ளவில்லை என்று வலியுறுத்துகிறார்; வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸில் "Warily Moving Ahead on Oil Contracts" என்ற தலைப்பில் ஒரு டைம்ஸ் நிருபர் பாக்தாத்தில் இருந்து கூறுவதை அவர் படித்தால் சிறிது கற்றுக் கொள்ளுவார்: "திங்களன்று ஈராக் அதன மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் சிலவற்றை வளர்க்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் அளிக்க இருக்கும்போது, அந்த ஏலம் ஒரு முக்கியமான கணம் ஆகும்; பெட்ரோலிய பெரும் நிறுவனங்களால் ExxonMobil போன்றவற்றிக்கு முதல் தடவையாக 40 ஆண்டுகளுக்கு முன்பு அவை விரட்டப்பட்ட நாட்டின் இருப்புக்களை பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டும்."

இந்த தகவல் ஒரு முன்னாள் ExxonMobil நிர்வாகியான Daniel Nelson, டைம்ஸுக்கு கூறியதாக மேற்கோளிடுகிறது; "என் ஊகம் உலகில் உள்ள ஒவ்வொரு சர்வதேச எண்ணெய் நிறுவனமும், ஈராக்கில் மிக அதிகமாக இறைவன் அருளிய இயற்கை ஆதாரங்கள் உள்ளன என்பதை நன்கு அறிந்து, ஈராக்கில் அக்கறை கொண்டுள்ளன."

CIA ஆதரவு பெற்ற பிரிவுகள் ஈரானில் வெற்றி அடைந்த ஓரிரு ஆண்டுகளில் இதேபோன்ற தகவல்கள் வரும் என்று கற்பனை செய்வது மிகக் கடினமானதா?

நாம் விமர்சகரின் கடிதம் பற்றி கவனத்தை ஈர்ப்பதின் காரணம் அது ஈரானிய நெருக்கடி பற்றி குறிப்பிடத்தக்க அரசியல் எதிர்கொள்ளல் ஆகும். ஒரு நெருக்கடி பொதுமக்கள் கருத்தில் திடீரென மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு தருணமாக விளங்கும் என்பது அடிக்கடி காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த "திடீர்" நகர்தல் ஒரு நீடித்த காலத்தில் வளர்ச்சி பெறும் சமூக மற்றும் அரசியல் வழிவகைகளின் விளைவுதான்.

ஈரானிய நெருக்கடியின் மிகக் குறிப்பிடத்தக்க கூறுபாடுகளில் ஒன்று பல "முன்னேற்ற" மற்றும் "இடது" பதிப்புக்களும் அமைப்புக்களும் அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகப் பிரச்சாரத்தில் சிறிதும் நாணமின்றி ஐக்கியம் காட்டுவதில்தான் துல்லியமாக உள்ளது. அமெரிக்காவில், தன்னைத்தானே முற்போக்கானது என்று அழைத்துக்கொள்ளும் நேஷன் இதழும், கிட்டத்தட்ட அனைத்து சந்தர்ப்பவாத "இடது" குழுக்களும் ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகத்தின் பின்னே நின்று "வண்ணப் புரட்சிக்கு" ஆதரவு கொடுக்கின்றன. பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி இதையேதான் செய்துள்ளது. பிரான்சில் ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளி எதிர்ப்புக் கட்சியும் தன்னுடைய ஆதரவை ஈரானில் மதகுருமார் ஆட்சியை கவிழ்க்க விரும்பும் "அனைவருக்கும்" கொடுப்பதாக அறிவித்துள்ளதுடன், சார்க்கோசி அரசாங்கத்தின் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதற்கும் தயாரிப்பு செய்து வருகிறது.

ஜேர்மனியில் பசுமைக் கட்சி மெளசவி மற்றும் ரப்சஞ்சானி தலைமையில் இருக்கும் ஈரானிய எதிர்த்தரப்பை தழுவியுள்ளது; அதே நேரத்தில் அது அங்கேலா மேர்க்கெலின் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுடன் கூட்டணியிலே நுழைவதற்குத் தயாரிப்புக்களை நடத்திவருகிறது.

எமது விமர்சகர் நிகழ்வுகளைப்பற்றி சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்கையில் தன்னுடைய நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வது சாத்தியமே, நாம் உறுதியாக அவ்வாறு நம்புகிறோம். ஆனால் இந்த தனிமனிதரிடம் இருந்து விலகிய முறையில், முன்னாள் தாராளவாத-இடதின் கணிசமான பிரிவுகள் தீவிரமாக வலதிற்கு நகர்ந்துள்ளனர் என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை; ஈரானிய நெருக்கடி பழைய அரசியல் விசுவாசங்களை உரத்த குரலில் நிராகரிப்பதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த நிகழ்வின் வேர்கள் உண்மையான சமூக வழிவகைகளில் உள்ளன; அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளின் வர்க்க உறவுகளின் தீவிரமான துருவமுனைப்படல்களில் அவை தொடர்பு கொண்டுள்ளன. இந்த துருவமுனைப்படல் நிலைப்பாடுதான் உலகப் பொருளாதார நெருக்கடியினால் இன்னும் அதிகமாக மோசமாக்கப்பட்டு விட்டது.

பல தசாப்தங்களாக சீர்திருத்த, தாராளவாத, ஏன் "தீவிரப் போக்குடைய" அமைப்புகளில் மேலாதிக்கம் செய்த மத்தியதர வர்க்க தட்டுக்கள், தங்கள் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து ஆகியவை முன்னேறியதைக் கண்டுள்ளன. அவை நிறைவும் திருப்தியும் அடைவதற்குக் காரணம் அவர்களுடைய புகார்கள் கவனிக்கபட்டு களையப்படுவதால்தான்.

அவர்களுடைய அரசியல் பார்வை பெருகியமுறையில் அடையாள, "வாழ்க்கை முறை" என அழைக்கப்படக்கூடிய அரசியலால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. மத்தியதர வர்க்கத்தின் பொதுக்கருத்து தெஹ்ரானில் நன்கு உடை உடுத்திய ஆடவர் பெண்டிரின் எதிர்ப்புக்களை எளிதில் ஈர்ப்பதற்கு பல காரணங்களில் ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் பெரும் சரிவிற்கு உட்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் மத்தியதர வர்க்கத்தின் செல்வம் மிக்க பிரிவுகளின் சமூக தன்னல வேட்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது.

காலம் கடக்கப்பட்டபின், இந்த அடுக்குகள் பெருகியமுறையில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தொலைவில் செல்வதுடன் பிரிந்து நின்று, வெளிப்படையான விரோதப் போக்கு என்ற கூறக்கூடிய வகையில் விளங்குகின்றன. இதுதான், ஈரானில் எதிர்ப்பினருக்கு சமூக தளமாக உள்ள "பிற்போக்கான", மற்றும் "விசுவாசமான தொழிலாளர்களை, தரக்குறைவாக கற்ற, பொருளாதார அளவில் மேலோங்கி நிற்கும் வாழ்க்கைத் தொழிலை கொண்டவர்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் சேர்த்து இழிவாக ஒப்பீடு செய்யும் கணக்கிலடங்காத "இடது" செய்தி ஊடக வர்ணனைகளில் பிரதிபலிக்கப்படுகிறது.

இது எதைக் குறிக்கிறது? ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு இப்பொழுது நேரடியாகவும் வெளிப்படையாகவும் இந்த கிரகத்தில் இருக்கும் தொடர்ச்சியான புரட்சிகர சக்திக்குத்தான் அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குத்தான நகர்கிறது. ஈரானிலும், சர்வதேச அளவிலும் அடிப்படை அரசியல் பணி தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியமைப்பதுதான்.

தாராளவாத மற்றும் முன்னாள் தீவிரப்போக்கின் "இடதின்" சரிவு தொழிலாள வர்க்கம் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும், உலகளவில் வர்க்க அதிர்வுகளின் புதிய சகாப்தத்தின் வருகைக்கும் பிழைக்கிடமில்லாத கட்டியம் கூறல் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved