World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Left Party leader promotes reformist politics

ஜேர்மனியின் இடது கட்சித் தலைவர் சீர்திருத்த கொள்கைகளை முன்னெடுக்கின்றார்

By Peter Schwarz
5 June 2009

Back to screen version

இடது கட்சியின் மாநாடுகள் பொதுவாக சுவாரஸ்யமற்றவையாகும். அத்தகைய கூட்டங்களில் முக்கிய அக்கறை கட்சிக்குள் இருக்கும் பல கருத்தோட்டங்களை திருப்தி செய்யும் வகையில் சமரசத் தீர்மானங்களை இயற்றுவது ஆகும். சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து (SPD) தங்களை வேறுபடுத்திக் கொள்ளுவதற்கு தம்மை தீவிரவாதிகள் என்று காட்டிக் கொள்ளுபவர்கள் மற்றும் அரசாங்கத்தில் பங்கு பெறுபவர்கள் அல்லது பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக தீவிரமயமான கோஷங்களால் அதிருப்தி அடைபவர்கள் என்ற வேறுபாடுகள் இருக்கும். நடைமுறையில் அதிக விளைவுகளைத் தராமல் வெறும் வார்த்தைகளைப் பற்றிய விவாதங்களாக இருக்கும்.

கடந்த வார இறுதியில் பேர்லினில் Max Schmeling Hall ல் நடைபெற்ற ஜேர்மனின் இடது கட்சியின் மாநாட்டிலும் நிலைமை இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல், மாநாட்டிற்கு முன்பு கட்சிப் பிரிவுகளுக்கு இடையே கடுமையான சொற்போர் இருந்தது--இப்பூசல் சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் கட்சி மோசமாக வாக்குகள் பெற்றதை அடுத்து தீவிரமாக இருந்தது. அதில் எதிர்பார்த்த 10 சதவிகிதத்திற்கும் கூடுதல் என்பதற்கு பதிலாக கட்சி 7.5 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.

மாநாட்டிற்கு முன்பு நிர்வாகக் குழுவின் திட்ட வரைவிற்கு 1,400 திருத்தங்கள் அளிக்கப்பட்டிருந்தன. எப்படியும், கட்சித் தலைவர் கிரிகோர் ஹீசி இன் உரை பெரும் ஆரவாரத்தை ஈர்த்து அனைத்து வேறுபாடுகளுக்கும் திடீரென முற்றுப் புள்ளி வைத்தது. கிட்டத்தட்ட மாறுதல் ஏதும் இல்லாத வகையில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் திட்ட வரைவு ஏற்கபட்டது. 560 பிரதிநிதிகளில் 7 பேர்தான் அதற்கு எதிராக வாக்களித்தனர், 4 பேர் வாக்குகளைப் போடவில்லை. முரண்பாடுகளுக்கு முன் நடந்தவை அனைத்தும் வெறும் காற்று போல் கரைந்துவிட்டன.

உண்மையில் ஹீசி செய்தது அனத்தும் "கட்சி ஒற்றுமைக்கு" அழைப்பு விட்டதுதான்; சமரசங்களுக்கு அழைப்பு விடுத்து, பிரதிநிதிகள் "ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே ஒழிய மற்றவரைப் பற்றி ஒருவரிடம் பேசகற்கூடாது" என்றார் அவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் இடது கட்சி சார்லாந்து, துரின்ஜியா மற்றும் சாக்சோனியா ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 30ல் தேர்தல்கள் வரும் இடங்களில் மாநிலஅரசாங்கத்தில் சேர்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், செப்டம்பர் 27ல் பிரெண்டன்பேர்க் கூட்டாட்சித் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடப்பதிலும் பங்கு பெறும் நோக்கத்தைக் கொண்டதாகக் கூறினார். கட்சியின் வேலைத்திட்டம் பற்றிய விவாதத்தை நெரித்துவிட இதுவே போதுமானதாக இருந்தது.

இடது கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் துரின்ஜியிலும் சார்லாந்திலும், முறையே போடோ ராமலோவும் ஒஸ்கார் லாபொன்டைனும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் அரசாங்கக் கூட்டணி வேண்டும் என்று சிறிதுகாலமாக ஆதரவு திரட்டுகின்றனர். ஏப்ரல் மாதம் ராமலோ FAZ செய்தித்தாளிடம் "கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CDU) பொட்டல் காட்டிற்கு அனுப்பிவிட்டு ஒரு சீர்திருத்தச் சார்புடைய அரசாங்கத்தை நிறுவ விழைகிறோம்." எனக்கூறினார்.

இடது கட்சியின் சார்லாந்து மாநாட்டில், லாபொன்டைன் சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணியில் சேரத் தயாராக இருக்கும் விருப்பத்தை வெளியிடுமாறு கோரினார். நிதி, பொருளாதாரம், சமூகக் கொள்கைகள் என்ற பிரிவுகளில் இரு கட்சிகளுக்கும் இடையே திட்டங்களில் பரந்த முறையில் சில ஒற்றுமைகள் இருப்பதாக அவர் கூறினார்.

ஒரு நீண்ட கால அடிப்படையில், இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டாட்சி அளவிலும் ஒற்றுமையை நிறுவும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதை தெளிவாக பேர்லினில் லாபொன்டைன் தெரிவித்தார். "அரசாங்கத்திற்குள் ஒற்றுமை என்பதை நாங்கள் தள்ளிவிடவில்லை" என்று அவர் வலியுறுத்தினார். "ஜேர்மனிய பாராளுமன்றத்தில் ஒரு இடது பெரும்பான்மை அடைவதற்கு ஒத்துழைப்பை நாங்கள் ஒதுக்கிவிடவில்லை. சமூக ஜனநாயகக் கட்சிதான் எங்களுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை என்ற மடைத்தமான முடிவை எடுத்து தம்முடைய வேலைத்திட்டத்தையும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது."

ஆனால் இப்பொழுது இடது கட்சி ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தில் பங்கு பெறுவதில் அதிக வாய்ப்பைக் காணவில்லை. ஐரோப்பிய தேர்தலில் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் மொத்த வாக்குகள் 30 சதவிகிதத்திற்கும் குறைவாகும். நீண்ட காலமாக சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சியுடன் கூட்டாளிக் கட்சியாக வரலாம் என்று கருதப்பட்ட பசுமைக்கட்சி இன்னும் கூடுதலான பழைமைவாத கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் புறம் சென்று கொண்டிருக்கிறது.

எனவே ஹீசி எதிர்ப்பு வரும் என்ற அச்சமில்லாமல் அறிவித்தார்: "கூட்டாட்சி அளவில் அரசாங்கத்தில் பங்கு பெறும் பேச்சுக்கள் பற்றிய விவாதங்கள் இப்பொழுது பொருள் அற்றவை. இப்பொழுது உள்ள கட்சிகளில் கூட்டாட்சி பங்காளியாக இருக்க எதவும் இலாயக்கற்றவை."

இக்காரணத்தை ஒட்டி, அவர் கட்சியின் கூட்டாட்சித் தேர்தல் திட்டத்தில் மாநில மற்றும் உள்ளுர் கட்சிப் பிரதிநிதிகள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் நடத்தும் வெற்றிகர கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தடை என்று நினைக்கக்கூடிய சில கோரிக்கைகளை ஏற்க முடிகிறது. இவற்றில் சட்டபூர்வ குறைந்த ஊதியம் 10 யூரோக்கள் என்பதை அறிமுகப்படுத்துவது, Hartz IV பொதுநல உதவித் தொகைகளை 500 யூரோக்களாக உயர்த்துவது, ஆண்டு ஒன்றிற்கு 200 பில்லியன் யூரோக்களை ஊக்கப் பொதிக்கு ஒதுக்குவது, வங்கிகளையும் எரிபொருள் நிறுவனங்களையும் தேசியமயம் ஆக்குவது. ஜேர்மனிய இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவது மற்றும் நேட்டோவை கரைத்துவிடுதல் ஆகியவை உள்ளன. ஆனால் பேர்லின் காங்கிரஸ் முக்கிய தொழில்களை தேசியமயமாக்குல், வார நேரத்தை 30 மணியாகக் குறைத்தல், ஓய்வூதியம் பெறத் தகுதிக்கு வயது 60 எனக் குறைத்தல் போன்ற பல கோரிக்கைகளையும் நிராகரித்தது.

சற்று நெருக்கமாக ஆராய்ந்தால், ஏற்கப்பட்ட திட்டம் பல முன்நிபந்தனைகளை கொண்டிருக்கிறது. நேட்டோவை கலைத்தல் என்று மட்டும் இல்லாமல் அதற்குப் பதிலாக ரஷ்யாவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு புதிய "கூட்டுப் பாதுகாப்பு முறை" வரவேண்டும் என வேலைத்திட்டம் கோருகின்றது. இங்கு இடது கட்சி அட்லான்டிக் இடையிலான அழுத்தங்களினால் நேட்டோ கலைக்கப்படலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டை எதிர்பார்க்கிறது.

10 யூரோக்கள் குறைந்த ஊதியம் என்பது முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கு சவால் என்று பொருளில்லை என்பதையும் லாபோன்டைன் விளக்கினார். கத்தோலிக்க தொழிலாளர் அமைப்பு குறைந்த ஊதியமாக 9.20 யூரோக்களைக் கோருகிறது. லக்சம்பேர்க்கிலும், பிரான்ஸிலும் சட்டபூர்வ குறைந்த ஊதியம் சமூக ஜனநாயகக் கட்சியும், ஜேர்மனியத் தொழிற்சங்க கூட்டமைப்பும் (DGB) கோரும் யூரோ 7.50 விட அதிகம். "ஆம், ஜங்கர் மற்றும் சார்க்கோசி (லக்சம்பேர்க் பிரதமர், பிரெஞ்சு ஜனாதிபதி) கோரும் நடவடிக்கை போன்றவற்றை கேட்பதற்கு எங்களிடம் தைரியம் உள்ளது." என்றார் அவர்.

எப்படியும் தேர்தல் திட்டத்தில் அடங்கியிருக்கும் சமூகக் கோரிக்கைகளை எவரும் தீவிரமாக கருதுவது இல்லை. இடது கட்சி அரசாங்கப் பொறுப்பு எடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும், அது சமூக நலன்கள், ஊதியங்கள் ஆகியவற்றைக் குறைத்துள்ளதே ஒழிய அதிகரிக்கவில்லை. ஜேர்மனியத் தலைநகரமான பேர்லின் சிறந்த உதாரணம் ஆகும். இங்கு கடந்த எட்டு ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சியுடன் இடது கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தற்பொழுதைய குறைந்தபட்ச ஊழியம், உயர்ந்த ஹார்ட்ஸ் உதவித் தொகைகளுக்கான கோரிக்கைகள் நயமற்ற முறையில் வாக்காளர்கள் முன் வைக்கப்படும் தூண்டில் மீன் ஆகும். இவை சமூக ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நெம்புகோல் ஆகும். இடதுகட்சிக்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை மீறி அத்தகைய கொள்கைகளை செயல்படுத்தும் நோக்கமோ அல்லது வழிவகையோ கிடையாது.

கிரிகோர் ஹீசி கட்சியின் மனச்சாட்சியை திருப்திப் படுத்த முயலுகையில், ஒஸ்கார் லாபொன்டைன் தன்னுடைய உரையை வேலைத்திட்டங்கள் பிரச்சினைகள் பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் நிகழ்த்தினார். பொருளாதார நெருக்கடியின் நடுவே இடது கட்சிக்கு சமூக முன்னோக்கு ஏதேனும் தேவை என்ற முடிவிற்கு அவர் வந்துள்ளார் என்பது வெளிப்படை. இந்த இலக்கைக் கருத்தில் கொண்டு வரலாறு முழுவதும் விரும்பிய வகையில் புரட்டி உயர் கருத்துக்கள் பலவற்றை ஒட்டுப் போட்டது போல் பொறுக்கி எடுத்து வியக்கத்தக்க வகையில் அளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தொழில்வழங்குனரும் கண்டுபிடிப்பாளருமான ருடொல்ப் டீசல், தத்துவவாதி யூர்கன் ஹாபர்மாஸ், பொருளாதார வல்லுனர் போல் க்ருக்மன் ஆகியோரைத் தன் வேலைத்திட்டத்திற்கு ஊக்கம் கொடுத்தவர்களாக தன் உரையில் அவர் கூறினார். சோசலிசம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக "சுதந்திர மக்களின் பொருளாதாரம்" என்று அவர் கூறிய சமூக முன்மாதிரியைப் புகழ்ந்தார். "நாம் ஒரு சுதந்திர மக்களின் பொருளாதாரத்தை விரும்புகிறோம். அதுதான் வருங்காலத்திற்கு நாம் அளிக்கும் முன்மாதிரி; இது நம்முடைய தொலைநோக்குப் பார்வை, இதற்குத்தான் நாம் பாடுபடுகிறோம்" என்று அரங்கத்தினுள் அவர் கூவினார்.

பொருளாதாரத் துறையில் விலைகள், முதலீட்டு செயல் மற்றும் வணிகம் ஆகியவற்றிற்குத்தான் சுதந்திரம் பொருந்தும். ஆனால் அது உறுதியாக மக்களுக்கும் பொருத்தப்பட வேண்டும் என்று லாபொன்டைன் அறிவித்தார். "அடக்குமுறை இல்லாமல், சுரண்டுதல் இல்லாமல் சுதந்திர மக்களின் பொருளாதாரம் இருக்கும். இதன் பொருள் தேசியமயமாக்குதல் என்றோ தற்பொழுதைய வடிவமைப்பில் தனிச்சொத்துமடையான உற்பத்தி சாதனங்கள் இல்லாது ஒரு சுதந்திர பொருளாதார அரசியலமைப்பின் அடிப்படையில் அனைத்தும் இருக்க வேண்டும் என்பதாகும். வேலை செய்பவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களக இருந்து, ஆலைகளிலும், நிர்வாகத்திலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த முடிந்தால்தான், உண்மையான சமூகச் சந்தைப் பொருளாதரத்திற்கு நாம் பாதையைத் திறக்கிறோம்."

எனவே லாபொன்டைனின் "சுதந்திர மக்களின் பொருளாதாரம்" என்பது இணைந்து முடிவு எடுப்பது, (மரபார்ந்த முறையில் ஜேர்மனிய "Mitbestimmung"), அதாவது ஊழியரின் பங்கு விருப்பங்களையும் இணைத்தல் ஆகும். அவர் உற்பத்திய முறையில் தனியார் உரிமையை அகற்ற வேண்டும் என்றோ முதலாளித்துவச் சந்தை முறையை அகற்ற வேண்டும் என்றோ முற்படவில்லை. இவருடைய திட்டங்களில் எதுவும் புதிது அல்லது முன்னோடியாக வெளிவந்தது என்று இல்லை. லாபொன்டைனின் திட்டம் வைமார் குடியரசில் பிரிட்ஸ் நப்தாலி என்னும் ஜேர்மனிய பொதுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்(ADGB) உறுப்பினர் மற்றும் சமூக ஜனநாயகத்தின் நிதி மந்திரியும் பொருளாதார வல்லுனராமான ருடால்ப் ஹில்பெர்டிங்கும் இயற்றியது ஆகும். இது தொழிலாளர்கள் சோசலிசத்தின்பால் ஈர்க்கப்படுவதைத் தடுக்கும் நோக்கம் உடையது. அதே நேரத்தில் முதலாளித்துவம் தன்னைச் சீர்திருத்திக் கொள்ளும் திறன் பெற்றது என்ற போலித் தோற்றங்களுக்கும் ஊக்கம் கொடுக்கிறது.

போருக்குப் பிந்தைய காலத்தில் நப்தாலியின் கருத்தாய்வுகள் சமூக ஜனநாய கட்சி வட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தன. "இணைந்து முடிவு எடுப்பது''(Mitbestimmung) இனை ஜேர்மனிய தொழில்துறைச் சட்டங்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தியது போருக்குப் பின் பெரிய தொழில்களை கையேற்றுக்கொள்ளுவது (expropriation) என்ற பரந்த கோரிக்கைகளை எதிர்க்கும் நோக்கத்தைப் முக்கியமாக கொண்டிருந்தது. இறுதியில் அத்தகைய பங்கு பெறும் வடிவமைப்பிற்குள், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணை நிர்வாகிகளாக வளர்ந்து தொழிலாளர் பிரிவினருக்கு மேலாக நிறுவனத்தில் நலன்களை உயர்த்தி ஊதியக் குறைப்புக்கள், பணி நீக்கங்கள் ஆகியவற்றைச் செய்தன.

தொழிலாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் நிதிய முதலீடு செய்வதற்கான லாபொன்டைனின் திட்டம் இந்தப் போக்கை வலுப்படுத்தத்தான் உதவும். தொழிலாளிர்களின் விதியை "தங்கள்" நிறுவனத்துடன் இது பிணைத்துவிடும். அதுவோ மூலதனச் சந்தை மற்றும் சர்வதேசப் போட்டியில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாறக்கூடும். தொழிலாளர்களை "சுதந்திரமாக" இருக்க விடாமல், அவை நன்மைக்கோ, தீமைக்கு முற்றிலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் போட்டித்தன்மையை நம்பியிருக்கச் செய்துவிடும். இதன் விளைவு தொழிலாளர் வர்க்கத்தைப் பிரித்து ஒற்றுமை உணர்வு எப்படியும் வராமல் செய்துவிடுவதுதான்.

இத்தகைய முற்றிலும் இழிவுற்றுவிட்ட, பழைய கொள்கைகளைக் கொண்டு லாபொன்டன் தன் பார்வையாளர்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். "பொருளாதார, நிதிய நெருக்கடிக்கு நம்முடைய முக்கிய விடையிறுப்பு தொழிலாளர் பிரிவு அதில் பங்கு பெறுதலாகும்" என்று அவர் Max Schmeling Hall இல் அறிவித்து இதை "ஒற்றுமைப் பொருளாதாரம்" என்றும் கூறினார். உண்மையில் அது அரசியலில் ஒரு முட்டுச்சந்தியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved