World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்Besancenot and the NPA support Sarkozy's policy on Iran elections ஈரானிய தேர்தல் பற்றிய சார்க்கோசியின் கொள்கைக்கு பெசன்ஸநோவும் NPA வும் ஆதரவு By Peter Schwarz போலி இடது அமைப்புக்கள் பல நேரமும் சர்வதேச நிகழ்வுகள் பற்றித் தங்கள் விடையிறுப்பின் மூலம் தங்களின் உண்மையான சமூக நோக்குநிலையை காட்டிக்கொள்கின்றன. வலதுசாரி அரசியல்வாதிகளுடைய வரலாறு பரந்த விதத்தில் அறியப்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் பல நேரமும் அவர்களுடைய சந்தர்ப்பவாதங்களுக்கு, குறைந்தபட்சம் அலங்காரச்சொற்கள் பற்றியேனும் வரம்பைக் கொடுத்து விடுகிறது. ஆனால் சர்வதேச அரங்கைப் பொறுத்த வரையில் அத்தகைய தடைகள் ஏதும் இல்லை; அவை தங்கள் உண்மையான வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. ஈரானின் அண்மைய நிகழ்வுகளுக்கு பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) யின் பதில் இவ்விதத்தில்தான் உள்ளது. அதன் தலைவர் ஒலிவியே பெசன்ஸநோவின் கீழ் NPA இதுவரை ஈரான் நிகழ்வுகள் பற்றி ஒரு சில வரிகளைத்தான் அர்ப்பணம் செய்துள்ளது. [1] ஆயினும்கூட அவர்களின் அணுகுமுறை தெளிவாக உள்ளது; பிரெஞ்சு ஜனாதிபதி, நடைமுறைக் கட்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ ஊடகம் இவற்றின் அணுகுமுறையுடன் இசைந்த வகையில்தான் அது முற்றிலும் உள்ளது. சற்றும் விமர்சனமற்ற வகையில், எந்த சான்றும் இல்லாமல் NPA ஈரானிய தேர்தல்களின் முடிவுகள் கணிசமாக தவறாக்கப்பட்டுவிட்டன என்ற கூற்றை ஏற்றுள்ளது. நிலவும் ஆட்சிக்கு தங்கள் எதிர்ப்பை பகிரங்கமாகவும், தைரியமாகவும் தெரிவிக்கும் அனைவருடனும்" அவ்வமைப்பின் முழு ஐக்கியம் பற்றிக் கூறுவதுடன், இப்பொழுது பதவியில் இருக்கும் மஹ்முத் அஹ்மதிநெஜாட், "உண்மையான ஆட்சி மாற்ற" வழிமுறைகள் மூலம் சீர்திருத்த சக்திகள் என அழைக்கப்படுபவை அதிகாரத்திற்கு வருவதை தடுத்துள்ளார் என இது குற்றம் சாட்டுகிறது. ஜூன் 16ம் தேதி வெளியிடப்பட்ட கட்சியின் உத்தியோகபூர்வ அறிக்கை கூறுவதாவது: "இஸ்லாமிய குடியரசிற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புவர்கள் அனைவருக்கும் NPA ஆதரவைக் கொடுக்கிறது." இந்த அறிக்கை ஈரானில் நடக்கும் சமூக நலன்கள் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்கள் பற்றி எவ்விதப் பகுப்பாய்வும்அவர்கள் செய்யவில்லை. ஈரானிய ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் அனவருக்கும், அவர்கள் பின்பற்றும் நலன்கள் மற்றும் குறிக்கோள்கள் என்ன என்பது பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், தாராளமாய் அதைச் செய்யலாம் என்று NPA கூறுகிறது. "இஸ்லாமிய குடியரசிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறவர்கள்" என்பதில் அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அடங்கும் என்பது பற்றி NPA க்கு தோல்வியுற்ற வேட்பாளரான மீர் ஹொசைன் மெளசவியயைப் போல் சிறிதும் கவலை இல்லை; மெளசவி சமூக நலத்திட்டங்களில் குறைப்பு, அரசாங்க நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குதல், ஈரானை சர்வதேச மூலதனத்திற்கு திறந்துவிடல் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கிறார். அதாவது NPA பெயரளவிற்கு நிராகரிக்கும் பொருளாதார மாதிரியான "புதிய தாராளக் கொள்கைக்குத்தான்" மெளசவி வாதிடுகிறார். பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் ஈரானில் ஒரு மேற்கத்தைய சார்பு ஆட்சியை நிறுவும் முயற்சிக்கு NPA இன் பிரச்சார ஆதரவை நம்பலாம் என்பதற்கு NPA அறிக்கை ஒரு தெளிவான அடையாளம் ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கும் ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் எவ்வித சுயாதீன முனனோக்கையும் NPA கொடுக்கவிலலை. "மாணவர் இளைஞர், மகளிர் மற்றும் தைரியத்தோடு ஆட்சியை எதிர்க்கும் அனைவரிடமும்" ஒற்றுமை உணர்வு கொண்டிருப்பதாக உறுதி கூறுகிறது; ஆனால் எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்தும் வலதுசாரி முதலாளித்துவக் கூறுபாடுகளிடம் இருந்து தன்னை பிரித்துக் காட்டிக் கொள்ளவில்லை. பல ஆர்ப்பாட்டங்களும் மத்தியதர வர்க்க உயரடுக்கில் இருந்து வந்துள்ளது என்பது ஒன்றும் இரகசியமல்ல; அவர்களுக்கு முன்னுரிமை, ஜனநாயகம் அல்ல (நிச்சயமாக சமூக நீதி அல்ல); ஆனால் மதகுருமார் சார்பு ஆட்சியால் வரம்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள தங்கள் சமூகச் சலுகைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்பதுதான். இவ்விதத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ராலினிச ஆட்சிகளை வீழ்த்திய ஆர்ப்பாட்டங்களுக்கு சமாந்திரமான தன்மைகள் அங்கு உள்ளன. அந்த நேரத்திலும் ஏராளமான இளைஞர்ககள் பங்கு பெற்றனர்; ஆனால் இறுதியில் பலன் அடைந்தவர்கள் ஒரு சிறிய சலுகை பெற்ற சிறுபான்மையினர்தாம்; அது முதலாளித்துவ முறையை மீட்டு சமூக பொதுநலத்திட்டத்தை அழித்ததின் மூலம் தன்னை செல்வக் கொழிப்பு மிகுந்ததாக்கிக் கொண்டது. NPA வறியவரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் சென்றடைவதற்கு முயற்சியைக் கொள்ளவில்லை; அவர்கள்தான் பெரும்பாலும் அஹ்மதிநெஜாட்டிற்கு வாக்களித்தனர்; ஏனெனில் அவர்களுக்கு மெளசவியும் அவருடைய ஆதரவாளர்களும் கணிசமான சமூகத் தாக்குதல்களுக்கு திட்டமிடுகின்றனர் என்பது தெரியும். தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கு வறிய மக்களுக்கும் இளைய மாணவர்களுக்கும் அனைத்துவித ஆளும் உயரடுக்குப் பிரிவுகளுக்கும் எதிராக இயக்கப்பட வேண்டிய ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியமாகும். ஆனால் NPA அத்தகைய வேலைத்திட்டத்தை நிராகரிக்கிறது. ஆளும் உயரடுக்கின் இரு பிற்போக்குத்தன பிரதிபலிப்பாளர்களான மெளசவிக்கும் அஹ்மதிநெஜாட்டிற்கும் இடையேயான போராட்டத்தில், அவர்கள் சிறிதும் தயக்கமின்றி மெளசவிக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.NPA யின் நிலைப்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கது; ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு தேர்தலுக்கு முன் அது முற்றிலும் மாறுபட்ட மதிப்பீட்டைக் கொண்டிருந்தது. அப்பொழுது தேர்தல்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது என்று நினைத்தது. "கிட்டத்தட்ட 40 சதவிகித மக்கள் வேலையின்றி இருக்கையில், 30 சதவிகித பணவீக்கம் மற்றும் 12 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் நிலையில், பெரும்பாலான மக்களின் வாங்கும் திறன் சரிந்துவிட்டது" என்று அவர்கள் ஜூன் 10ம்தேதி எழுதினர். "ஈரானியர்கள் இந்த வாக்குச்சீட்டில் இருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை." [2]வாக்குப் பதிவில் இடம் பெற்றுள்ள நான்கு வேட்பாளர்களும் "ஆட்சியின் முக்கிய நபர்கள்" என்று கட்டுரை தொடர்ந்தது. "ஆளும் சக்திகளுக்குள் இருக்கும் பல குழுக்களுக்கு இடையே செல்வாக்கிற்கான கடும் போராட்டம் தொடங்கி விட்டது. ஆனால் மேற்கத்திய நலன்களுக்கு மிக அருகில் வரும் வேட்பாளர் மெளசவி ஆவார்." இவருக்கு "மத்தியதர வர்க்கத்தில் இருந்தும் நகர்ப்புற அடுக்குகளில் இருந்தும் வரும் இளைஞர்களிடம் ஆதரவு உள்ளது". அந்த நேரத்தில் NPA அஹ்மதிநெஜாட்டிற்கு தேர்தலில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டது. "ஆனால் அஹ்மிதநெஜாட்டின் தேர்தல் வாய்ப்புக்கள் உண்மையாக உள்ளன. குறிப்பாக அவருடைய விசுவாசமான, தேசியவாத, ஜனரஞ்சக வார்த்தை ஜாலங்கள் நாட்டின் வறிய அடுக்குகளிடையே வலுவான ஆதரவைத் திரட்ட உதவியுள்ளது. பசதரன் [அல்லது செபா எனப்படும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவு] ஆதரவும் அவருக்கு உள்ளது; அதன் நலன்களுக்கு இவர் உத்தரவாதம் தருகிறார். இறுதியாக அவர்தான் உயர் தலைவரின் வேட்பாளரும் ஆவார்." ஏழு நாட்களுக்கு பின்னர் இவை அனைத்தும் மறந்துவிட்டன. ஆட்சி மாற்றத்திற்கு வாயப்பு தரும் எதிர்ப்புக்கள் வந்தவுடன், NPA "மேற்கத்திய நலன்களுக்கு நெருக்கமாக இருக்கும்" வேட்பாளர் முகாமிற்கு மாறி, தேர்தல் முடிவுகள் தவறாக்கப்பட்டுவிட்டன என்று கோஷமிடுபவர்களுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இத்தகைய வழிமுறை NPA க்கும் அதன் முன்னோடிக் கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் (LCR) மிகவும் கைகூடி வந்தது ஆகும். நிலைமை அமைதியாக இருக்கும் வரை இவை இடதுசாரி என்று தமமைக் காட்டிக் கொள்ளும். ஆனால் நெருக்கடி தென்படத் தொடங்கியவுடன் அவை முதலாளித்துவ ஒழுங்கின் பணிக்கு முற்றிலும் ஆதரவாக நிற்கும். 2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் LCR வேட்பாளராக நின்ற ஒலிவியே பெசன்ஸநோ 1.2 மில்லியன் வாக்குகளை பெற்றார். அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடதில் இருந்த வேட்பாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 10 சதவிகிதத்தை பெற்றனர். ஆனால் பாசிச Jean-Marie le Pen இரண்டாம் சுற்றில் இடம் பெறக் கூடாது என்று மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தபோது, LCR இந்த இயக்கத்தை, பதவியில் இருந்த ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு ஆதரவாகத் திசை திருப்பியது; அவர் மீண்டும் மிகப் பெரிய தேர்தல் வெற்றி பெற முடிந்தது; அது பிரான்சில் வலதுசாரி ஆட்சி உறுதிப்பட காரணமாயிற்று. NPA இன் மெளசவிக்கான ஆதரவு ஒரு இன்னும் பொதுவான நிகழ்வின் வெளிப்பாடு ஆகும். பொருளாதார, சமூக நெருக்கடி மத்தியதர வர்க்கங்களில் வேறுபாட்டிற்கு வழிவகுத்து வருகிறது. கீழ்மட்டத் தட்டுக்கள் சமூகத்தில் சரிந்து போகையில், உயர்மட்ட, கூடுதல் சலுகை பெற்ற தட்டுக்கள் வலதிற்கு மாறுகின்றன. மத்தியதர வகுப்பை முக்கியமாக நம்பியிருக்கும் அரசியல் அமைப்புக்கள் இப்பொழுது இந்த உயரடுக்கைத்தான் நாடி நிற்கின்றன.இது மிகத் தெளிவாக பசுமைக் கட்சியின் வளர்ச்சியில் காட்டப்படுகிறது; அதன் முக்கிய தலைவர்கள் --LCR/NPA உடையதைப்போல்-- 1968 மாணவர் இயக்கத்தில் தோன்றினர். பசுமைவாதிகள் சமூக ஜனநாயம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவில் இருந்து ஓரளவு ஆதாயம் பெற்றுள்ளனர், இந்த வழிவகையை ஒட்டி வலதிற்கு அதிகமாவும் நகர்ந்துள்ளனர். இன்று அவர்கள் முதலாளித்துவ அமைப்பின் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ளனர். ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சியுடன் (SPD) சேர்ந்து அவர்கள் வெளியுறவுக் கொள்கையின் மீண்டும் இராணுவமயமாக்கல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக அதிக சமூகநலக் குறைப்புக்கள் செயல்படுத்தப்படல் ஆகியவற்றை மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய பசுமைவாதிகள் சிறிதும் தயக்கமின்றி ஈரானில் மெளசவி முகாமிற்கு ஆதரவு கொடுத்து, தற்போதிருக்கின்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். அதன் இடது அலங்காரச் சொற்கள் இருந்தாலும், NPA இதேபோன்ற சமூக சார்பைத்தான் பசுமைவாதிகள் போல் கொண்டுள்ளனர். ஈரானில் நடக்கும் நிகழ்வுகளை NPA எதிர்கொண்டுள்ள விதம் அது உயர்மட்ட மத்தியதர வர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது; மெளசவியின் எதிர்ப்பு இயக்கத்திற்கு தொழிலாளர்களையும் வறியவர்களையும் விட மத்தியதர வர்க்கம்தான் முதுகெலும்பு போல் உள்ளது; அவர்கள் மெளசவி மற்றும் அவருடைய செல்வக்கொழிப்புடைய ஆதரவாளர்களை அஹ்மதிநெஜாட்டைவிடவும், அதிகமாகக்கூட, வெறுக்கின்றனர். Notes: [1] "Iran: vague de colère...",17 juin 2009 (http://www.npa2009.org/content/iran-vague-de-colère); "Fraude électorale et repression en Iran", 16 juin 2009 (http://www.npa2009.org/content/communiqué-du-npa-fraude-électorale-et-répression-en-iran) [2] "Iran: une élection sans grand espoir", 10 juin 2009 (http://www.npa2009.org/content/iran-une-%C3%A9lection-sans-grand-espoir%C2%A0) |