World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Origins and consequences of the 1989 Tiananmen Square massacre

1989 தியனன்மென் சதுக்க படுகொலைகளின் தோற்றங்களும் விளைவுகளும்

பகுதி 2

By John Chan
5 June 2009

Back to screen version

இது ஒரு மூன்று பகுதிக் கட்டுரையில் இரண்டாம் பகுதியாகும். முதல் பகுதிக்கு இங்கு அழுத்தவும்.

மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவரான டெங் ஜியோபிங் ஆரம்பத்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் வெடித்த மாணவர்கள் எதிர்ப்புக்களுக்கு விரோதப் போக்கை காட்டவில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான ஜாவோ ஜியாங் ஆர்ப்பாட்டங்கள் "நாட்டுப்பற்று உடையவை" என்று இசைவு கொடுத்துப் பேசும் அளவிற்கு சென்றார். இது தொழிலாளர்களை தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட ஊக்கம் கொடுத்தது.

உதாரணமாக ஷாங்சியில் பல தொழிலாளர்கள் அடங்கிய 10,000 பேர் கூட்டம் ஒவ்வொரு நாளும் மாநில கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன் ஹுயாவோபாங்கின் மரணத்தைப் பற்றி விவாதிக்க மட்டும் இல்லாமல், பணவீக்கம், ஊதியங்கள், வீடுகளபோன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் கூடியது. எதிர்ப்புக்களின் பாதிப்பு அதிகம் இருந்ததால் ஏப்ரல் 25ம் தேதி சீனா முழுவதில் இருந்தும் மாணவர்கள் பெய்ஜிங்கிற்கு பிரதிநிதிகளை அனுப்பி மே நான்காம் திகதி இயக்கத்தை நினைவுகூர ஒரு தேசிய அமைப்பை நிறுவ முற்படுகின்றனர் என்று அரச பாதுகாப்பு அமைச்சரகம் எச்சரித்தது. "தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் எந்த வெற்றியும் அடையப்பட முடியாது" என்ற அதிக தீவிரமான மாணவர்களிடம் இருந்து வந்த புதிய கோஷம் இயக்கம் இடதிற்கு ஒரு மாற்றத்தை கண்டது.

ஏப்ரல் 20 அன்று பெய்ஜிங் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பு (WAF) நிறுவப்பட்டு தலைநகரத்தில் இருந்து பல இடங்களுக்கும் அதன் செல்வாக்கு பரவியது. இரு நாட்களுக்கு பின்னர் தியனன்மென் சதுக்கத்தில் 100,000 மக்கள் கூடினர் ஹுவின் இறுதி ஊர்வலத்தில் ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் ஆவர். அன்று கூட்டமைப்பு துண்டுப் பிரசுரங்களை வழங்கியது; அதில் டெங் ஜியாவோபிங் குடும்பத்தின் செல்வக்கொழிப்பு, அதிகாரத்துவத்தின் சலுகைகள் மற்றும் சந்தைச் சீர்திருத்தத்தின் "குறைகள்" கண்டிக்கப்பட்டிருந்தன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை பிளவுபட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு ஆகும். மாணவர்களை அடக்குவதற்கு வலிமையை பயன்படுத்த ஜாவோ தயங்கி பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தார். ஆனால் கடினப் போக்குத் தலைவரான பிரதமர் லி பெங் சமரசம் அல்லது சமாதானமான தீர்வை நிராகரித்தார். ஜாவோவின் ஏப்ரல் 23 வட கொரிய பயணத்தை பயன்படுத்திக் கொண்டு, லி முன்முயற்சி எடுத்து டெங்கிடம் ஒரு நாடுதழுவிய அமைதியின்மை ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார். பெருந்தலைவர் கடுமையாக அதை அடக்குவதற்கு தன் ஆதரவைக் கொடுத்தார்.

இதன் விளைவு People's Daily பத்திரிகையில் ஏப்ரல் 26ம் தேதி வந்த தலையங்கம் ஆகும். அதில் அது எதிர்ப்புக்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அகற்றுவதற்காக "கட்சி-விரோத, சோசலிசத்திற்கு எதிரான கொந்தளிப்பு", "திட்டமிட்ட சதி" என்று கண்டித்தது. சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகள் "சோசலிச-விரோதம்" என்று முத்திரையிடப்பட்டது பற்றி சீற்றம் அடைந்து கூடுதலான மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்ப்பில் சேர்ந்தனர். சீனா முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன; 1949 புரட்சி ஒரு சமத்துவ, ஜனநாயக சமூகத்தை கொண்டுவரும் என்ற உறுதிமொழியை காட்டிக் கொடுத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்ட சீற்றத்தை அவை பிரதிபலித்தன.

ஏப்ரல் 30ம் தேதி ஜாவோ சீனாவிற்குத் திரும்பி மாணவர்களை அமைதிப்படுத்தும் விதத்தில் ஏப்ரல் 26 தலையங்கக் கருத்தின் தன்மையை குறைக்க முற்பட்டார். ஆனால் ஏற்கனவே தலையங்கத்தின் பின்னணியில் டெங் இருந்தார் என்பது தெரியவந்ததால் ஜாவோ அதிகம் செய்வதற்கு இல்லாமல் போயிற்று. மாணவர்களுடன் ஒரு உட்பாட்டைக் காண்பதற்கு ஜாவோ ஊழலை எதிர்த்துப் போராடுவதாகவும் பெயரளவிற்கு ஜனநாயக சீர்திருத்தங்கள் செய்யவும் உறுதியளித்தார். மாணவர்கள் இயக்கத்தை தன் பொருளாதார, அரசியல் செயற்பட்டியலை முன்னேற்றுவிக்கும் பழைய அரசாங்க அமைப்பு மற்றும் தொழிற்துறையில் தாங்கள் பெற்றிருந்த சலுகைகளை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்து சந்தையை எதிர்த்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவத்தின் பிரிவுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டது என்று அவர் கருதினார்.

ஜாவோ தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு இடைத்தாங்கியாக மாணவர்களை கண்டார். அவர் நினைவுகூர்ந்தது: "ஆர்ப்பாட்டங்களின்போது மாணவர்கள் பல கோஷங்களையும் கோரிக்கைகளையும் எழுப்பினர்; ஆனால் சமூகத்தின் அனைவரையும் எளிதாகக் கொதிக்க வைக்கக்கூடிய சூடான பணவீக்கப் பிரச்சினை குறிப்பிடத்தக்க வகையில் எழுப்பப்படவில்லை... பின்னோக்கி பார்த்தால் மாணர்கள் இப்பிரச்சினையை எழுப்பாததற்கு காரணம் இது சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடையது என்பதை அறிந்ததுதான். மக்களைத் திரட்டும் நோக்கத்தில் எழுப்பப்பட்டிருந்தால், அது சீர்திருத்த நிகழ்வுப்போக்கை தடுக்கும் வகையில் இருந்திருக்கும்." [6]

ஆனால் ஜாவோ மாணவர்கள் எதிர்ப்பிற்குக் கொடுத்த ஆதரவு தொழிலாள வர்க்கத்திற்கு தைரியத்தை கொடுத்தது. பெய்ஜிங் பல்கலைக்கழக உயரடுக்கு மாணவர்களின் பிரிவுகள் ஆர்ப்பாட்டங்களில் இருந்து விலகிய நிலையில், மற்ற நகரங்களில் இருந்த மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்புக்களில் முக்கிய பங்கைப் பெற ஆரம்பித்தனர். மே 4 இயக்கத்தின் ஆண்டு நினைவை ஒட்டி பெய்ஜிங் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேர் 60,000 மாணவர்களுடன் சேர்ந்து தியனன்மென் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றனர் இதேபோன்ற எதிர்ப்புக்கள் 51 சீன நகரங்களில் ஏற்பட்டடது.

மே 13ம் தேதி மாணவர்களுக்கு இடையே ஒரு கூடுதலான தீவிரவாதப்போக்கு உருவாகியது. ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மாணவர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பை ஒரு சட்டபூர்வ அமைப்பு என அங்கீகரிப்பதற்காக ஒரு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆட்சி இதை ஏற்கவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பிற்கு அங்கீகாரத்தை தொழிலாளர்கள் கோருவதற்கு விரைவாக இட்டுச்சென்றிருக்கும்.

ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈர்த்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதி கோர்ப்பஷேவ் பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முன்னர் உலகின் கவனத்தை எதிர்ப்புக்களுக்கு திருப்புவதுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நெருக்கடியையும் வியத்தகு முறையில் அதிகப்படுத்துவதற்குமாக திட்டமிடப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டம் மற்றும் தியனன்மென் சதுக்க ஆக்கிரமிப்பு ஆகியவை விரைவில் தொழிலாளர்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்களுக்கு ஒரு மத்திய நிலையமாகி தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பு தன்னுடைய போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு அரங்கைக் கொடுத்ததுடன், ஆலைகளுக்கு ஒழுங்கமைத்து செல்லல், புதிய உறுப்பினர்கள சேர்த்தல் இவற்றை ஒருங்கிணைப்பதற்கு உரிய இடமாயிற்று. லி பெங் மற்றும் ஜாவோ ஜியுவாங் இருவரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் குறிப்பாக Capital Iron and Steel ல் இருந்த 200,000 தொழிலாளர்களுடன் "உரையாடலுக்கு" விரைந்தனர். ஆனால் தொழிலாள வர்க்கத்திற்குள் நடக்கும் தீவிரமயமாக்கலை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மே 15ம் தேதி சீன-சோவியத் உச்சிமாநாட்டைத் தடுக்கக்கூடாது என்று ஜாவோ விடுத்த பகிரங்க வேண்டுகோளை மீறி அரை மில்லியன் தொழிலாளர்களும் மாணவர்களும் தியனன்மென் சதுக்கத்தில் அணிவகுத்து நின்றனர். மே 17ம் தேதி இரு மில்லியன் மக்கள் பெய்ஜிங்கில் அணிவகுத்தனர்; பலரும் தங்கள் பணியிடங்களின் பதாகைகளை ஏந்தி நின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலாளர் தன்னாட்சிக் கூட்டமைப்பில் சேர்ந்தனர். இது பெய்ஜிங்கில் மட்டுமின்றி பல நகரங்களிலும் நடைபெற்றது. 18 மாநிலங்கள் பெரிய எதிர்ப்புக்கள் இருந்ததாகத் தகவல் கொடுத்தன. மே 18ம் தேதி மாநிலத் தலைநகரான ஹீபியில் 150,000 மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஷாங்காயில் 100,000 தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகள் என்று பங்கு பெற்றனர்.

தாராளவாத புத்திஜீவிகளைப் போல் இல்லாமல், தொழிலாளர்கள் ஆட்சி முழுவதற்கும் விரோதப் போக்கை வெளிப்படுத்தினர். "ஊழல் மிகுந்த அதிகாரிகளின் கொடுங்கோல் தன்மை மிகத் தீவிரமாக உள்ளது... அதிகாரிகளின் பொய்களை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை, ஏனெனில் எங்கள் பதாகைககளில் அறிவியல், ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்கள் உள்ளன... தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றி முழு கவனத்துடன் ஆவணக்குறிப்புக்களை கொண்டுள்ளோம். சுரண்டலை அறியும் தன்மை மார்க்சின் "மூலதனம்" நூலில் கொடுக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு பற்றி வகைகளைத் தளமாகக் கொண்டது....."மக்களுடைய பொது ஊழியர்கள்" மக்களின் குருதி, வியர்வை ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படும் உபரிமதிப்பு அனைத்தையும் விழுங்கிவிடுவது பற்றி நாங்கள் வியப்பு அடைகிறோம்" என்று தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் துண்டுப் பிரசுரங்களில் ஒன்று கூறியது. [7]

இந்த ஆவணம் ஜாவோ ஜியுவாங் உட்பட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை முழுவதையும் ஊழல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், அவர்கள் சொந்த சொத்துக்களை ஒரு தேசிய மக்கள் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் முடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

இராணுவச் சட்டம்

மே 17 அன்று தொழிலாள வர்க்க எழுச்சி என்னும் அச்சுறுத்தல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் ஒரு உறுதியான மாற்றத்தைக் கண்டது. அது ஜாவோவின் மாணவர்களுடனான சமரசம் என்ற கொள்கையில் இருந்து விலகி இராணுத்தின் மூலம் அடக்குமுறை என்பதைக் கொண்டது. டெங் ஜியோவோபிங்கிற்கு கொடுத்த அறிக்கை ஒன்றில் ஜாவோ பின்வருமாறு ஆலோசனை தெரிவித்தார்: "மக்களுடன் மோதல் நிலைப்பாட்டை நாம் கண்டால், ஒரு ஆபத்தான நிலைமை வரக்கூடும், அதில் நாம் முழுக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம்." [8] ஆனால் டெங் பெரும்பாலான கடினப் போக்கு உடையவர்களை ஆதரித்து "அரசியல் கொந்தளிப்பிற்கு" ஆதரவு கொடுப்பதற்காக ஜாவோவைக் குறை கூறினார்.

"பெய்ஜிங்கிலும், மற்றும் நாடு முழுவதும் நிலைமை எப்படி மோசமாகியுள்ளது என்பதைக் காண்கிறோம். பெய்ஜிங்கில் இருக்கும் உறுதியற்ற தன்மையை முதலில் தீர்க்க வேண்டும்; ஏனெனில் அவ்வாறு செய்யாவிடின் மற்ற மாநிலங்கள், பகுதிகள் மற்றும் நகரங்களில் நாம் தீர்வு காண முடியாது.... நிலைமை இவ்வாறு தொடர்ந்தால், நாம் ஒருவேளை வீட்டுக்காவலில் இருத்தல் என்று கூட முடியக்கூடும். இதைப்பற்றி நீண்ட நேரம் கடுமையாகச் சிந்தித்த பின்னர், மக்கள் விடுதலை இராணுவத்தை கொண்டுவந்து பெய்ஜிங்கில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன். இன்னும் துல்லியமாக பெய்ஜிங்கின் நகர்ப்புறப் பகுதியில். இராணுவ ஆட்சி பிரகடனத்தின் நோக்கம் கொந்தளிப்பை முழுமையாக அடக்கிவிட்டு இயல்பான நிலைக்கு விரைவில் திரும்புதல் என்பதாகும்." என்று டெங் அறிவித்தார். [9]

இராணுவத்தை மாணவர்களுக்கு எதிராக இயக்க உத்தரவிட ஜாவோ மறுத்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதில் இருந்து தடுக்கப்பட்டார். ஏனெனில் அது அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்திவிடும் என்று கருதப்பட்டு ஒதுக்கப்பட்டுவிட்டது. தன்னுடைய அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது என்பதை அறிந்த ஜாவோ தியனன்மென்னில் மாணவர்களை சந்தித்து இராணுவம் வருவதற்கு முன்பு இடத்தை விட்டு அகன்றுவிடுமாறு வலியுறுத்தினார். 2005ல் அவர் மரணம் அடையும் வரை, அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜாவோவிற்கு பின்னர் பதிக்கு வந்தவர் ஷாங்காய் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான ஜியங் ஜேமின் ஆவார். அவர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பாளர்கள் மீது உறுதியாக செயல்பட்டு அடக்க வேண்டும் என்று கூறிவந்தார்.

மே 20ம் தேதி பிரதமர் லி பெங் பெய்ஜிங்கில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார். இது மறுநாள் ஒரு மில்லியன் மக்களை எதிர்ப்புக்களை நடத்தத் தூண்டியது. துருப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தெருக்களில் தடைகளை அமைத்தனர். மோட்டார் சைக்கிள் வைத்திருந்தவர்கள் ஆரம்ப எச்சரிக்கை கொடுக்கும் குழுக்களை அமைத்தனர். மே 23ம் தேதி இராணுவம் வந்தபோது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டாம் என்று படையினரை சமாதானப்படுத்த முற்பட்டனர். படையினர்களில் பலரும் கண்ணீர் விட்டு, சில சமயம் தமது வாகனங்களை திருப்பி எடுத்துச் சென்றனர். மறுநாள் பெய்ஜிங் பகுதியில் இருந்த இராணுவ பிரிவுகள் தொழிலாளர்களுடன் சேரா வகையில் அகற்றப்பட்டு விட்டனர். தொலைதூர மாநிலங்களில் இருந்து துருப்புக்களை கொண்டுவந்து இராணுவச் சட்டத்தை செயல்படுத்துவதென்று டெங் முடிவெடுத்துடன் எதிர்ப்புக்கள் இரு வாரங்கள் தொடரட்டும் என்றும் அனுமதித்தார்.

ஓர் ஆய்வு விளக்குகிறது: "மே 19ம் தேதி நள்ளிரவிற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இராணுவச் சட்டம் நகரத்தின் அரசியல் செயற்பாட்டு வடிவமைப்பை முற்றிலும் மற்றியது. மே 20 அதிகாலை தொடங்கி நகரம் முழுவதும் ஆயுதமற்ற குடிமக்கள் இராணுவப் பிரிவுகளை வெற்றிகரமாக தடைக்கு உட்படுத்தியில் தொடங்கி பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு என்பது திடீரென யதார்த்தமானது. 20ம் தேதி காலை, அதற்கு பின்பிருந்து, தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பு ஒரு பொது வேலைநிறுத்தத்ற்கான அழைப்பை வலியுறுத்தியது (முக்கிய பணிகள், தொடர்பு மற்றும் போக்குவரத்து நீங்கலாக). இது படைகள் திரும்பப்பெறப்படும் வரை இருக்கும் என்று கூறப்பட்டது. தொழிலாளர்களின் அமைப்புக்கள் வெளியிட்ட போர்க்குணமிக்க நிலைப்பாடுகள் மற்றும் முந்தைய வராத்தில் சதுக்கத்தில் அது செதுக்கியிருந்த அமைப்பு ஆகியவை தெருக்களில் வெளிவந்த நிகழ்வுகளில் ஊடுருவி நின்றன. இதற்கிடையில், இராணுவச் சட்டம் பற்றிய மக்கள் சீற்றம் பல புதிதாகச் சேர்ந்தவர்களையும் புதிதாக அறிவிக்கப்பட்ட தொழிலாளர்கள் அமைப்புக்குள் கொண்டுவந்து அதன் எண்ணிக்கையை மிகவும் அதிகரித்தது. [10]

மே 21-22ல் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற எதிர்ப்புக்கள் சீனா முழுவதிலும் 131 நகரங்களில் நடந்தன; இதில் அடிமட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பிரிவினரும் இருந்தன. அவர்களும் பெய்ஜிங் தொழிலாளர்களின் செயல்களுக்கு ஆதரவைக் கொடுத்தனர். ஜூன் 3 க்கு முன்பு தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 20,000 என்று உயர்ந்தது.

பெய்ஜிங்கில் அதிகார அமைப்புக்கள் செயலிழந்த நிலையில், தொழிலாளர்கள் போக்குவரத்தை இயக்குவது போன்ற சிறு விஷயங்களில்கூட தாங்களே பொறுப்பை எடுத்துச் செயல்பட்டனர். உற்பத்தி எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் பங்கு பெற்றதால் நிறுத்தத்திற்கு வந்தது. மே 25ம் தேதி ஒரு மில்லியன் மக்கள் மற்றொரு மகத்தான எதிர்ப்பை பெய்ஜிங்கில் நடத்தினர். தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்று, அடுத்த நாள் வெளியிடப்பட்டது. அது பின்வருமாறு அறிவித்தது: "[தொழிலாள வர்க்கத்தினராகிய] நாம்தான் நாட்டின் உரிமை பெற்ற எஜமானர்கள். தேசிய விவகாரங்களில் எங்கள் கருத்து கேட்கப்பட வேண்டும். நாட்டின் சீரழிந்துபோன ஒரு சிறிய குழுவினரும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இழிந்த சிறு பிரிவு [ஸ்ராலினிசத் தலைமையை] நம் பெயரை எடுத்துக்கொண்டு, மாணவர்களை அடக்க, ஜனநாயகத்தை கொலை செய்ய, மனித உரிமைகள் மிதிக்க, ஒருபொழுதும் அனுமதிக்கக்கூடாது." மற்றொரு அறிக்கை கூறியது: "இறுதிப் போராட்டம் வந்துவிட்டது... பாசிச அரசாங்கங்களும் ஸ்ராலினிச சர்வாதிகாரங்களும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களால் எதிர்க்கப்படுபவை, வரலாற்று அரங்கிலிருந்து தானாகவே வெளியேறவில்லை, வெளியேறவும் செய்யாது... ஸ்ராலினிசத்தின் கடைசித் தளமான இந்த 20ம் நூற்றாண்டு கோட்டையை தாக்குக!" [11]

புரட்சிகர முன்னோக்கின் நெருக்கடி

தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் வினாவை நெருக்கடி எழுப்பியது என்றாலும், அது எவ்வாறு, எந்த அடிப்படையில் என்பது பிரச்சினையாயிற்று. பல தசாப்தங்களாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ஏகபோக உரிமையை செய்தி ஊடகம் மற்றும் கல்வி நிறுவனங்களின்மீது கொண்டு ஸ்ராலினிசம், மார்க்சிசம், சோசலிசம் மற்றும் கம்யூனிசத்திற்கு சமமானது என்ற பொய்யை வளர்த்திருந்தது. ஸ்ராலினிசம் பற்றிய விஞ்ஞானபூர்வமான ஆய்வையும் தொழிலாளர்களுக்கு அதற்காக போராடும் அரசியல் வழிவகையையும் கொடுக்கும் ஒரே அரசியல் இயக்கமான நான்காம் அகிலம் 1950களில் இரக்கமின்றி அடக்கப்பட்டுவிட்டது. சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொலைசெய்யப்பட்டு விட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சீனத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை படிக்கும் வாய்ப்பு இல்லை. உண்மையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது ஸ்ராலிசத்தின் இழிவான குற்றங்கள், காட்டிக் கொடுப்புக்கள் ஆகியவற்றை நியாயப்படுத்திய சீன ஆட்சியின் இழிந்த நியாயப்படுத்திய படைப்புக்கள்தான். 1923ல் இருந்து சோவியத் ஒன்றியத்தில் வெளிப்பட்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அது காட்டிக் கொடுத்தது ஆகியவற்றிற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான இடது எதிர்ப்பு பற்றிய அரசியல் போராட்டங்கள் பற்றி அதற்கு ஏதும் தெரியாது. 1925-27 சீனப்புரட்சியை ஸ்ராலின் காட்டிக் கொடுத்தது பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆழ்ந்த பகுப்பாய்வு தடைசெய்யப்பட்டிருந்தது. அதேபோல் சோவியத் அதிகாரத்துவம் ஹிட்லர் அதிகாரத்திற்கு எதிர்ப்பின்றி வர உதவிய குற்றம் சார்ந்த பங்கு பற்றி 1933ல் அவர் கொடுத்த முடிவுரைகளும் தடைக்கு உட்பட்டிருந்தன. நான்காம் அகிலத்தை நிறுவ வேண்டும் என்ற அவர் முடிவு, ஸ்ராலினிச அதிகாரத்திற்கு எதிராக சோவியத் தொழிலாள வர்க்கம் அரசியல் புரட்சியில் ஈடுபட வேண்டும் என்று விடுத்த அழைப்பு 1989ல் சீனத் தொழிலாளர்களுக்கு மிகமுக்கியமான பொருத்தத்தைக் கொடுத்தது. போருக்குப் பிந்தைய காலத்திய சர்வதேச ட்ரொட்ஸ்கிச வரலாறு முழுவதும், மற்றும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதம், தேசியவாதம் இவற்றிற்கு எதிரான அதன் போராட்டங்கள் ஒரு மூடப்பட்ட நூலாகத்தான் அவர்களுக்கு இருந்தது.

மே-ஜூன் 1989ல் சீனத் தொழிலாளர்கள் தங்கள் உடனடி அனுபவங்களாலும் மாவோவாத ஆட்சிமீது கொண்டிருந்த வெறுப்பினாலும் உந்ததுல் பெற்றனர். அவர்களுடைய கோரிக்கைகள் தங்கள் சொந்த வர்க்கத்தின் சுயாதீன நலன்களை உள்ளுணர்வாகப் பிரதிபலித்து மாணவர்களுடைய கோரிக்கைகளைவிட அதிகமாகச் சென்றன. ஆனால் நிகழ்வுகளின் போக்கு சோகம் ததும்பிய முறையில் உறுதிப்படுத்தியதுபோல், தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையை, மற்றும் வேலைத்திட்டத்தை அக்கணத்தின் அவசரத்தில் தீட்டிக் கொண்டுவருவது என்பது முடியாததாகி விட்டது.

இந்த எதிர்ப்பு இயக்கம் இவ்விதத்தில் மாணவர் தலைவர்களுடைய பொறுப்பில் வந்தது. அவர்களுடைய கருத்துக்கள் பெரிதும் சீர்திருத்தம் அளிக்க வேண்டும் என்று ஆட்சியுடன் உரையாடல் நடத்தினால் சாதிக்கப்பட முடியும் என்ற எளிய போலித்தோற்றத்தின் ஆதிக்கத்தில் இருந்தன. அனுபவமற்ற தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் தலைவர்கள் உலக சோசலிசத்திற்காக சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாக அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் சீனாவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லாமல், அதிகாரத்துவம் மற்றும் வெளிப்பட்டு வரும் முதலாளிகளிடம் நல்ல ஊதியங்கள், நிலைமைகள் ஆகியவற்றிற்காக பேச்சுவார்த்தை நடத்த சுயாதீன தொழிற்சங்கங்கள் இருந்தால் போதும் என்ற தொழிற்சங்கவாத கருத்தாய்வுகளால் வழிநடத்தப்பட்டனர்.

தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் முக்கிய தலைவரான ஹென் டொங்வாங், ஒரு 26 வயது இரயில் தொழிலாளர் ஆவார். "சீனாவின் வலேசா" என்று போலந்தின் சொலிடாரிட்டி இயக்கத்தின் தலைவரைப் போல் நன்கு அறியப்பட்டிருந்தார். தன்னுடைய அரசியல் கருத்துக்களை தியனன்மென் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்களுடன் நடக்கும்போது திரட்டியிருந்தார். மாணவர்கள் "தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை" பற்றி பேசிய உரைகளை கேட்டபின் அவரும் மற்ற தொழிலாளர்களும் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பை ஒரு சுயாதீன அமைப்பாக முறையாக நிறுவ முடிவு எடுத்தனர்.

மே 26ம் தேதி மாணவர்களுடன் பேசிய பின், ஹான் மாணவர் இயக்கதின் மீது மட்டுப்படுத்தப்பட்ட வர்க்க விமர்சனத்தை முன்வைத்தார். ஆயினும்கூட தொடர்ந்து அதன் அரசியல் தலைமையை ஏற்றார். "கோட்பாடு இயற்றும் நீங்கள் இயக்கத்தின் மூளையாகச் செயல்படுங்கள், மாணவர்கள் அதற்குத் தேவையான உணர்வுபூர்வத் தீயை கொடுப்பர். ஆனால் தொழிலாளர்கள் முக்கிய சக்தியாக இல்லை என்றால், ஜனநாயகம் ஒருபோதும் வெற்றி அடைய முடியாது... நீங்கள் "குடிமக்களை" பற்றி, தெருக்களுக்கு வந்துள்ளவர்கள் பற்றி பேசுகிறீர்கள்; அது தொழிலாளர்கள் பற்றி என நீங்கள் பொருள் கொள்ளுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமென்றே அதைக் கூறத் தவிர்க்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது; ஆனால் இம்மக்களை உண்மையான பெயரில் அழைப்பது மிகவும் முக்கியமாகும். [12]

மக்கள் விடுதலை இராணுவத்திற்கு தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பு அமைப்புவிட முடியவில்லை. அதற்கு நகர்ப்புற தொழிலாளர்களின் போராட்டத்தை பல மில்லியன்கள் இருக்கும் கிராமப்புற வறியவர்களுடன் இணைக்க வேண்டும். படையினர் ஒன்றும் மாவோயிச ஆட்சிக்கு முழு ஆதரவளித்து நிற்கவில்லை. பெய்ஜிங்கிற்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட துருப்புக்கள் கூட ஒரு வாரம் செய்திகளைப் படிக்க தடைக்கு உட்பட்டிருந்து பின்னர்தான் திடீரென எதிர்ப்புக்களை அடக்க அனுப்பப்பட்டனர். ஜூன்3, 4 தேதிகளில் பல துருப்புக்கள், குறிப்பாக 28 வது இராணுவப் பிரிவில் இருந்தவர்கள், எதிர்ப்பாளர்களை சுட வேண்டும் என்ற உத்தரவை மீறி தங்கள் துப்பாக்கிகளை கீழே எறிந்தனர். ஜூன் 2ம் தேதி நடைபெற்ற தலைமையிடக் கூட்டத்தில் டெங் இராணுவம் பிளவுறக்கூடும் என்ற அச்சத்தையும் உள்நாட்டுப் போர் வரலாம் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆனால் தொழிலாளர்களின் இயக்கம் படையினரை தன்னுடைய பக்கத்திற்கு அழைக்க அரசியல்ரீதியாக தயாராக இல்லை.

ஜூன்4ம் தேதி தாக்குதலின்போது ஹான் ஒரு டஜன் இளைஞர்கள் உதவியுடன் தப்பினர். சீனத் தொழிலாளர்களின் தலைவர் என்று கருதியவரின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்தனர். அவர்களில் ஒருவர் கூறினார்: "இன்று இரவு எவ்வளவு பேர் உயிரிழப்பர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆறு போல் குருதி பாயும். ஆனால் நீங்கள் இறக்க மாட்டீர்கள்--நீங்கள் சீனாவின் லேக் வலேசா" ஆனால் ஹான் அரசியலளவில் தொழிலாள வர்க்கத்தை ஆட்சிக்கு எதிராக வழிநடத்த போதுமான தயாரிப்புக்களை கொண்டிருக்கவில்லை 2004ல் ராய்ட்டர்ஸிடம் அவர் கூறினார்: "அன்று அந்த இளைஞர் என்னிடம் கூறியது இதயத்தில் கல்லை அழுத்தியது போல் இருந்தது. இன்று அதை நினைத்தாலும் என்னால் மூச்சுவிட முடியவில்லை. ஒரு குழம்பிய மனத்துடன் இயக்கத்திற்குள் நுழைந்த மின்சார ஊழியன் நான். இதைத் தொடர்ந்து அச்சொற்களை கேட்கும்போது பல தோட்டாக்களும் பறந்தன. அது ஒரு விந்தையான கணம் ஆகும்."

புரட்சிகர நெருக்கடிகள் பல நேரமும் வர்க்கப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாத நபர்களை முன்னணியில் நிறுத்துகின்றன. அவர்களை வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்க முன்வைக்கின்றன. ரஷ்ய தொழிலாள வர்க்கம், விவசாயிகளுடைய ஆதரவுடன் 1917 அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடிந்தது என்றால் அதற்கு நீண்ட காலமாக நிறுவப்பட்டிருந்த நேர்த்தியான திறமையுடைய லெனின் தலைமையில் ஒரு கட்சி இருந்தது. அக்கட்சி ரஷ்யாவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் இருந்த அனைத்துவித சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து பல தசாப்தங்களாக உறுதியாகப் போராடியிருந்தது. உண்மையில் தொழிலாளர்கள் தன்னாட்சிக் கூட்டமைப்பின் சரிவு, பின் ஹான் போன்ற தலைவர்களுடைய பிந்தைய வளர்ச்சி ஆகியவை லெனினுடைய முடிவுரையான தொழிலாளவர்க்கத்தின் தன்னியல்பான எழுச்சியானது இருக்கும் சமூக அமைப்பிற்குள் சிறந்த ஊதியம், பிற நலன்களுக்கான போராட்டமான தொழிற்சங்க உணர்மைக்கு மேலாக எழமுடியவில்லை என்பதை நிரூபணம் செய்கின்றன.

1994ல் இருந்து ஹான் தன்னுடைய தொழிலாளர் ஏட்டின் மூலமும் மற்றும் ஹாங்காங்கை தளமாக் கொண்ட வானொலி உரையில் நிகழ்வுகள் மூலமும் தொழிலாளர் சீர்திருத்தத்த பகுதியின் உத்தியோகபூர்வ ஆலோசகரானார். இவருடைய செயல்களுக்கு மேலை தொழிற்சங்க அதிகாரத்துவம் நிதியளித்தது அவற்றின் நோக்கும் தொழிலாளர்கள் சீனாவில் வெளி முதலீட்டாளர்களின் நலன்களை சவாலுக்கு உட்படாமல் தடுக்க வேண்டும் என்பதுதான். ஹாங்காங் வணி ஏடான Standard இடம் ஹான் தான் ஒருபொழுதும் சீனாவில் தொழிலாளர்கள் எழுச்சிக்கு தலைமை தாங்க விரும்பியதில்லை என்றார் "அவ்வாறு வந்திவிடுவதைத் தடுக்கத்தான் நான் முயன்றேன்...ஆனால் சில நேரம் பெரும் திகைப்பிற்கு உட்படுகிறேன்."

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமூக சீர்திருத்தங்களுக்காக தெருக்களில் எதிர்ப்பு என்பதற்கு பதிலாக தொழிலாளர்களின் சட்டபூர்வ நடவடிக்கையூடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது ஹானின் முன்னோக்கு ஆகும். தொழிலாளர்களுக்கக அரசாங்கக் கட்டுப்பாட்டில் நிறுவும் தொழிற்சங்கங்கங்கள் முதலாளிகளுடன் "கூட்டுப் பேரத்தை" செயல்படுத்த தேவை என்று அவர் வாதிட்டார். அத்தகைய கருவிகள் சமூக அமைதியின்மையை குறைக்கும் என்று அவர் நம்பினார். இப்பொழுது வர்க்கப் போராட்டத்தை எதிர்த்த வகையில், ஹான் கிறஸ்துவ மதத்திற்கு மாறினார். "என்னுடைய வாழ்வு முழுவதும் இறைவனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.... சீனத்த தொழிலாளர்களுக்கு இறைவன்தான் திட்டங்களைக் கொண்டிருக்கிறார்." என்று அவர் Standard இடம் கூறினார்.

தொடரும்

Notes:

6. Prisoner of the State, p.34

7. The Deng Xiaoping Era: an inquiry into the fate of Chinese socialism 1978-1994, Maurice Meisner, p. 446

8. Prisoner of the State, p.28

9. The Tiananmen Papers, p.189

10. Cited in Workers in the Tiananmen protests: The politics of the Beijing Workers Autonomous Federation, by Andrew G. Walder and Gong Xiaoxia, first published in the Australian Journal of Chinese Affairs, No. 29, Jan 1993

11. Ibid

12. From comrade to citizen: the struggle for political rights in China, Merle Goldman, Harvard University Press, 2005, p.64


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved