World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குFor a socialist, not a "color" revolution in Iran ஈரானில் "வண்ண" புரட்சிக்கல்ல, சோசலிசப் புரட்சிக்காக By Peter Symonds கடந்த வார இறுதியில் தெஹ்ரானில் நடந்த எதிர்ப்புகள் மேலாதிக்கம் செலுத்தும் ஈரானிய மதகுரு சார்பு ஆட்சியின் அரசியல் எதிர்ப்பாளர்கள் கொண்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட் சமூகத் தளத்தை துலக்கமாய் காட்ட உதவின. உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளை ஈர்ப்பதில் எதிர்க்கட்சி இயக்கம் தோற்றுள்ளது மட்டுமின்றி, இயக்கமே குறிப்பிடத்தக்கவகையில் வலுவிழந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே வண்ண அடையாளம் கூறப்பட்ட பிரச்சாரம் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டிற்கு பதிலாக மீர் ஹொசைன் மெளசவியை பதவில் இருந்துவதற்கு பெருமளவில் அமெரிக்காவின் ஆதரவுடன் அரசியல் செயல்பாடாக இயக்கப்பட்டது; இது ஆளும் உயரடுக்கின் எதிர்ப்புக் கூறுகளால் --குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் பில்லியனர் வணிகருமான அலி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி-- தங்களின் சொந்த நோக்கங்களுக்குக்காக இயக்கப்பட்டது. அவர்களுடைய நோக்கங்களில் முற்போக்காக ஏதும் கிடையாது. தங்களுடைய முந்தைய நண்பர்களிடம் அவர்கள் வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்றால், அது மெளசவியும் அவருடைய ஆதரவாளர்களும் கொள்கைகளை இன்னும் வலதிற்கு விரைவாக மாற்றும் விதத்தில் அமெரிக்காவுடன் உறவுகளை சீராக்குவதும், சந்தைச் சீர்திருத்தம் பெரிதும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதிலும்தான். அவர்கள் உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் ஏதும் விடுக்கவில்லை; எனெனில் அத்தகைய திட்டம் அவர்களுக்கு பொருளாதாரப் பேரழிவைத்தான் கொடுக்கும்; எனவே மெளசவியும் அவருடைய ஆதரவாளர்களும் தங்களுக்கு முதலாளித்துவ பிரிவுகள் மற்றும் கூடுதல் சலுகைகள் பெற்ற, நகர்ப்புற மத்தியதர வர்க்கங்களின் வெளிப்படையான தன்னல அடுக்குகளைத்தான் அடித்தளமாகக் கொண்டுள்ளனர். தேர்தலில் தோற்றபின்னர், மெளசவி முடிவுகள் இரத்து செய்யப்பட்டு மறு தேர்தல்கள் வேண்டும் என்பதற்கு குறைவாக எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. எதித்தரப்பு முகாம் தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்துள்ள என்பதற்கு எந்தச் சான்றையும் கொடுக்கவில்லை; அதன் சர்வதேச செய்தி ஊடக ஆதரவையும் மேலை அரசாங்கங்களின் ஆதரவையும் நெம்பு கோலாக பயன்படுத்தி அரண்மனை ஆட்சி மாற்றத்தை காண விரும்புகிறது. அவர்கள் அரசு எந்திரத்துடன் கூட மோதலை விரும்புகின்றனர்; பின் அதுவும் அவர்களுடைய கன்னைவாத எதிர்ப்பாளர்களுடனான போராட்டத்தில் மற்றொரு நெம்புகோலாக பயன்படுத்தப்படும். பல மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மெளசவிக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கபடமின்றி இவர் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் இருக்கக்கூடும். ஆனால் தன் கரங்களில் குருதியைக் கொண்ட ஆட்சியில் நீண்ட காலமாக மெளசவி இருந்துள்ளார் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இருபதாம் நூற்றாண்டில் அத்தகைய உதாரணங்கள் ஏராளமாக உள்ளன; ஈரானிலும் சற்றும் குறைவில்லாமல் உள்ளன. அத்தகைய இயக்கங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதேனும் ஒரு "முன்னேற்றகரமான" பிரிவிற்கு கீழ்ப்படுத்தப்பட்டு பின்னர் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டன. ஈரானின் முழு வரலாறும் முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவும், உழைக்கும் மக்களுக்கு போதுமான வாழ்க்கைத் தரத்தை கொடுப்பது என்பது ஒருபுறம் இருக்க, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுவ இயலாத தன்மையை கொண்டிருப்பதைத்தான் நிரூபணம் செய்கிறது. ஈரானில் இஸ்லாமிய இயக்கத்தின் தோற்றம் ஸ்ராலினிச டுடே கட்சி நடத்திய பல தசாப்தக் காட்டிக் கொடுப்பின் நேரடி விளைவு ஆகும். அது ஷாவிற்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டத் தயாராக இல்லை என்பதுடன் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சியின் பல பிரிவுகளின் தன்மை பற்றி பிரமைகளையும் வளர்த்தது. அவ்வாறு செய்கையில் டுடே கட்சி ஷாவிற்கு எதிரான பெருகிய இயக்கத்தின் செல்வாக்கை அயதுல்லா கோமேனி மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு கொடுத்து தன்னுடைய அழிவிற்கு வழி தேடிக் கொண்டது. 1979ல் ஷாவை அகற்றுவதற்கான அரசியல் எழுச்சிகள் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் தலைக்கு மேலே சென்றன. புதிய மதகுருமார் சார்பு ஆட்சி விரைவில் டுடேக் கட்சியையும் பிற இடது சக்திகளையும் அடக்கியது. 1980 களின் பெரும்பகுதியில் பிரதம மந்திரியாக இருந்த மெளசவி ஆயிரக்கணக்கான இடதுசாரிகளைக் கொன்றதற்கும் இன்னும் பலரை சிறையில் அடைத்ததற்கும் பொறுப்பாவார். அரசியல் படிப்பினைகள் கிரகித்துக் கொள்ளப்பட வேண்டும். உண்மையான ஜனநாயக உரிமைகளை நிறுவுதல் என்பது, முதலாளித்துவத்தின் அனைத்துக் கன்னைகளுக்கும் எதிராக சோசலிசத்திற்காக போராடுவதற்கு வெளியே இயலாதது ஆகும். தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் ஒரு சில செல்வந்தர்களுடைய இலாப நோக்கிற்கு பதிலாக பெரும்பாலான மக்களின் தேவை முழுவதையும் பூர்த்தி செய்வதற்கு சமுதாயம் ஒட்டுமொத்தத்தையும் மீள வடிவமைப்பதற்கு அத்தகைய புரட்சிகரப் போராட்டங்களை வழிநடத்தும் திறன் பெற்ற ஒரே சமூக சக்தியாகும். தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையை கட்டியமைப்பதற்குத் தேவையான கடினமான பணியைச் செய்யாமல் விலகிச்செல்வது, ஆபத்தான தீரச்செயல்களும் அரசியல் பேரழிவுக்கும்தான் இட்டுச்செல்லும். கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்திலும் ஏற்பட்ட ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவின் விளைவுகளை 20 ஆண்டுகளுக்குப் பின் காண்பது முக்கியமாகும். ஸ்ராலினிசத்திற்கு எதிராக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் படிப்பினைகளில் வேரூன்றி உள்ள ஒரு சோசலிச மாற்று இல்லாத நிலையில், அமெரிக்கா மற்றும் மேலை சக்திகளால் ஆதரிக்கப்படும் அதிகாரத்துவ உயரடுக்குகளின் பெரிதும் கிரகிக்கும் கூறுபாடுகள் அரசியல் ரீதியாக நீடிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் முதலாளித்துவ சந்தையின் பெரும் வருங்காலம் பற்றிய அவர்களது உறுதிமொழிகள் விரைவில் கரைந்துவிட்டன; புதிய ஊழல் நலிந்த முதலாளித்துவ ஆட்சிகள் தங்கள் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவத்துடன் வெகு விரைவில் ஒருங்கிணைக்க முயலுகையில் முன்னோடியற்ற தன்மையில் சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரங்களில் பின்னடைவு ஏற்படுவது விளைவாய் அமையும். 1991ம் ஆண்டு சம்பரதாய ரீதியாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது தொடர்ச்சியான "வண்ணப் புரட்சிகளை" கொண்டுவந்தது; அவை ஜனநாயக உரிமைகளுக்கான எந்த உண்மையான மக்கள் இயக்கத்துடனும் தொடர்பை கொண்டிருக்கவில்லை. 2000ம் ஆண்டில் நடைபெற்ற "புல்டோசர் புரட்சி" சேர்பிய தலைவர் சுலோபோடன் மிலோசெவிக்கின் ஆட்சியைக் கவிழ்த்து ஜோர்ஜியாவின் 2003ல் நடைபெற்ற "ரோஜா மலர் புரட்சிக்கு" முன்னோடியாக இருந்தது. அது மிகைல் சாகேஷ்விலியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. உக்ரைனில் 2004ல் நடந்த "ஆரஞ்சுப் புரட்சி", 2005ல் கிரிகிஸ்தானில் நடந்த இளம் சிவப்பு, மஞ்சள் வண்ண "துலிப் புரட்சி" ஆகியவை பிற வண்ணப் புரட்சிகள் ஆகும். இந்த "புரட்சிகள்" அனைத்தின் கூறுபாடுகளும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆளும் உயரடுக்கின் மேலை சார்புடைய எதிர்ப்புக் கூறுபாடுகள் கவனத்துடன் தயாரிக்கப்பட்டு, நிறைந்த நிதி கிடைத்த பிரச்சாரங்களை தொடக்கி தங்கள் போட்டியாளர்களை பதவியில் இருந்து இறக்கினர்; அவற்றில் பெரும் திகைப்பு அடைந்த மத்திரயதர வர்க்கங்களும் இளைஞர்களும் ஈர்க்கப்பட்டிருந்தனர். பல அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள், சில அமெரிக்க சிந்தனைக் குழுக்கள் மற்றும் அறக்கட்டளைகளுடன் நேரடித் தொடர்பு கொண்டவை தேவையான தயாரிப்புக்களை நடத்தி, மாணவர்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள், உள்ளூர் செய்தி ஊடகம் மற்றும் குழுக்களுடன் சேர்ந்து செயல்படுத்தும் திட்டத்திற்கு வழிகோலின. எல்லா விதத்திலும் எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோற்றன, அது ஒரு போலிக்காரணமாக பரபரப்பாக அதிகாரத்தை அடைய கருவியாக கொள்ளப்பட்டது, ஆதாரமாற்ற வாக்கு தில்லுமுல்லு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன--இவை அனைத்தும் சர்வதேச செய்தி ஊடகத்தின் ஆதரவுடன் நடைபெற்றன. இதன் விளைவு கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் அமெரிக்க சார்புடைய ஆட்சிகள் நிறுவப்பட்டன; இவை ஒன்றும் முன்பு இருந்த ஆட்சிகளைவிட ஜனநாயகத் தன்மையை பெற்றிருக்கவில்லை. இந்த "புரட்சிகளின்" வழிகாட்டும் கொள்கை தொழிலாளர்களின் தேவைகள், விழைவுகளை பூர்த்தி செய்தல் என்று இல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள், அவற்றின் ஆதிக்கத்தை விரிவாக்குதல், குறிப்பாக முன்னாள் சோவியத் ஒன்றிய குடியரசுகளான விசைத்துறை செழிப்பு உடைய காகசஸ், மத்திய ஆசியாவில். இவற்றின் இடையே மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் மீண்டும் மேலாதிக்க செல்வாக்கை நிறுவுதல் என்பது ஒரு நீண்ட கால அமெரிக்க விழைவு ஆகும். ஒபாமா நிர்வாகத்தின் நோக்கங்களும் அதற்கு முன்பு பதவியில் இருந்தவர்களுடைய கொள்கை முறைக்கு சற்றும் குறைந்ததல்ல. உண்மையில், அமெரிக்க அரசியல் நடைமுறையின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக தங்கள் செல்வாக்கைக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் புஷ் நிர்வாகத்தின் பொறுப்பற்ற, குற்றம் சார்ந்த ஈராக்கிய ஆப்கானிஸ்தானப் போர்கள் உலகம் முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வை பரந்து தூண்டிவிட்டு, வாஷிங்டனின் தூதரக, அரசியல் நெம்புகோல்தன்மையை கீழறுத்ததுதான். கடந்த மூன்று ஆண்டுகளில் பல வண்ணப் புரட்சிகளும் வெற்றிக்கு பதிலாக தோல்வியைத்தான் அடைந்துள்ளன --உதாரணமாக அஜர்பைஜானிலும் பேலரஸ்ஸிலும். பிற்போக்குத்தன இலக்குகளை மறைக்க ஒரு புதிய முகம் தேவைப்பட்டது. தற்போதைய ஈரானிய "பசுமைப் புரட்சி" மாறுபட்டது என்று நினைப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் அல்லது இழிந்த நோக்கத்தை கொண்டிருக்கின்றனர். மைய அரசியல் பணி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்திற்கும் மத்திய கிழக்கிலும் சர்வதேச அளவிலும் ஐக்கிய சோசலிச அரசுளின் ஒரு பகுதியாக சோசலிச ஈரானைக் கட்டிமைப்பதற்கும் போராடுவதாகும். அதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரக் கட்சியை விஞ்ஞான சோசலிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாக்கி, இருபதாம் நூற்றாண்டின் அனைத்து மூலோபாய அனுபவங்களையும் அடித்தளமாகக் கொண்டு கட்டியமைப்பது தேவையாகும். |