:
இலங்கை
Two legal cases challenge Sri Lanka's mass detention of
Tamil civilians
இலங்கையில் பெருந்தொகையான தமிழ் பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து
இரு நீதிமன்ற வழக்குகள்
By Nanda Wickremasinghe
19 June 2009
Use this version
to print | Send
feedback
இலங்கையின் வடக்கில் இராணுவக் கட்டுப்பட்டிலான தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள
தமிழ் பொது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை மீறலுக்கு எதிராக இரு வழக்குகள் இந்த வாரம் இலங்கையின்
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த தடுத்து வைப்புக்கள் சட்ட விரோதமானது
என்பதும், நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள "அடிப்படை உரிமைகளை" மீறும் செயல் என்பதுமே
இரு வழக்குகளதும் வாதமாகும்.
மனுவை எதிர்த்ததோடு அதை ஒத்தி வைப்பதில் வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின்
அரசாங்கம், அது அடிப்படை ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வதையும், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை
நிராகரித்து பொதுமக்களை தடுத்து வைப்பதில் அதன் உறுதிப்பாட்டையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதலின்
கடைசி கட்டத்தில், கடுமையான இராணுவ ஷெல் தாக்குதல்களை எதிர்கொண்டு யுத்த வலயத்தில் இருந்து வெளியேறிய
சுமார் 300,000 தமிழ் சிவிலியன்களை இராணுவம் சிறை வைத்திருக்கின்றது. அகதிகளில் பெரும்பகுதியினர் வவுனியாவில்
தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு ஏனையவர்கள் யாழ்ப்பாணக் குடநாடு பூராவும் உள்ள நிலையங்களில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
இராஜபக்ஷவின் இராணுவமும் இந்த முகாங்கள் "நிவாரண நிலையங்கள்" அல்லது "நலன்புரி
நிலயங்கள்" என தெரிவிக்கின்றன. உண்மையில், அவை சிப்பாய்களின் காவலின் கீழ் உள்ள மற்றும் முட்கம்பிகளால்
சூழப்பட்ட தடுப்பு முகாம்களாகும். இந்த யுத்த அகதிகளால் வெளியில் செல்ல முடியாது மற்றும் முகாங்களுக்குள்ளேயும்
அவர்களது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
புதன் கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட முதலாவது உயர் நீதிமன்ற வழக்கு, தடுத்து
வைப்பதன் மூலம் பிரிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் சார்பில் தாக்கல்
செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்த மனு, அரசாங்கத்தின் இரக்கமற்ற இராணுவத்
தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட சொல்லனா மனித துன்பங்களின் காட்சியை வெளிப்படுத்துகிறது.
68 வயதான பாட்டி மாணிக்ராஜா சிவபாக்கியம், ஒரு அரசாங்க ஊழியரான தாய்
ஜெயரானி சுரேந்திரநாதன்; தந்தை பொன்னுசாமி சுரேந்திரநாதன்; மற்றும் பேரன் பேத்திகளான 13 வயது
சோபிகா மற்றும் 10 வயது நேசனா ஆகியோர் வன்னியில் விஸ்வமடுவில் இருந்து இடம்பெயர்ந்து இறுதியாக
வடகிழக்கு கடற்கரையான புதுமாத்தளனை வந்தடைந்தனர். அவர்கள் அங்கு யுத்த வலயத்தில் சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் அங்கிருந்து தப்பி வரும்போது வெவ்வேறாகப் பிரிந்துவிட்டனர். ஜெயரானி,
பொன்னுசாமி மற்றும் நேசனாவை வவுனியாவில் உள்ள சைவப்பிரகாச பாடசாலையில் உள்ள முகாமுக்கு இராணுவம்
கொண்டு சென்றது. புது மாத்தளனில் சிக்கிக்கொண்ட பாட்டியும் இரு பிள்ளைகளும் மோட்டார்
தாக்குதலுக்குள்ளானார்கள். சோபிகா காயமடைந்ததோடு இன்னொரு பேரனான கிஷோர் கொல்லப்பட்டான்.
பின்னர் பாட்டியும் சோபிகாவும் வவுனியாவில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணக்
குடாநாட்டில் கொடிகாமம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறுதியாக பாட்டி முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டபோது வவுனியா
முகாமில் இருந்து விடுதலையான 70 வயது கனவருடன் மீண்டும் ஒன்று சேர்ந்தார். ஆயினும் சோபிகாவை அவருடன்
அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே காயமடைந்த பேத்தியை விட்டுவிட்டுச் செல்ல அவர்
மறுத்துவிட்டார்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்து குழும்பமாக ஒன்று சேர கட்டளையிடுமாறு
மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்கள். அந்த விதத்தில், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை
நியாயமாகக் காணும் பட்சத்தில், விடுதலைக்காக இடைக்கால உத்தரவையும் மற்றும் வழக்கு முடியும் வரை
சோபிகா பெற்றோரிடம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரினர். சட்டவிரோத தடுத்து வைப்பில் இருந்து
விடுதலையை அங்கீகரிக்கும் அரசியலமைப்பின் 13(2) பிரிவையும் மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரத்தையும்
இலங்கையினுள் வதிவதற்காக ஒரு இடத்தை தேர்ந்துகொள்வதற்கான உரிமையையும் அங்கீகரிக்கும் 14(1)
பிரிவையும் அதிகாரிகள் மீறியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு வீடுகள், சொத்துக்கள் மற்றும் உறவினர்கள்
இருக்கும் போது, அவர்கள் "இடம்பெயர்ந்த நபர்கள்" அல்ல என மனுதாரர்கள் பிரகடனம் செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்கு அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானக்க வழக்கை ஜூன் 24 வரை நீதிபதிகள் ஒத்தி
வைத்தனர்.
ஒரு குடும்ப உறவினரும் சட்டத்தரணியுமான அண்ணபாக்கியம் சிதம்பரம்பிள்ளை,
வழக்கை ஆதரித்து சத்தியக் கடிதம் கொடுத்துள்ளார். அவர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு
குழும்பத்தின் துன்பகரமான அனுபவத்தை விளக்கினார். "மகன் கிஷோர் ஷெல் வீச்சில் கொல்லப்பட்டார். அவரது
சிறுநீர் பையில் ஷெல் துண்டுகள் துளையிட்டிருந்தன. சேதமான சிறுநீர்ப் பையில் சிறு நீர் கசிய, எந்தவொரு தக்க
மருத்துவ பராமரிப்பும் இன்றி மூன்று நாட்கள் அவர் துன்பப்பட்டார்.
"தேவையான மருத்துவ பராமரிப்பின்றி அவர் உயிரிழப்பதை அவரது பாட்டியும்
சகோதரியும் பார்த்துக்கொண்டிருக்க நேர்ந்தது. பெண் பிள்ளை கடுமையாக காயமடைந்துள்ளதோடு தம்பியின்
இழப்பால் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நிலைமையில், ஆகவும் மோசமான தலைவிதி எங்களுடையதல்ல.
குழந்தைகள், வயதானவர்கள் உட்பட முழு குடும்பமே துடைத்துக் கட்டப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன."
இரண்டாவது அடிப்படை உரிமை வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை
கொழும்பைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் நிர்வாக இயக்குனர்
பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்தார். அதில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி
இராஜபக்ஷ, அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, அதே போல்
சட்டமா அதிபர் மற்றும் முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதியையும் பொறுப்பாளிகளாக
குறிப்பிடப்பட்டிருந்தது. (ஜனாதிபதி என்ற முறையில் இராஜபக்ஷ மீது வழக்குத் தொடர முடியாது. ஏனெனில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் விலக்களிப்பு உள்ளது.)
உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் மார்ச் மாதத்தில் இருந்து முகாமுக்கு வந்து
சேரத் தொடங்கினர். அவர்கள் இப்போது 300,000 ஆக இருப்பதோடு முட்கம்பிகளால் சூழப்பட்ட 40
முகாங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ அதிகாரிகளின் அனுமதியின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் முகாங்களை
விட்டு வெளியில் செல்ல முடியாது. மற்றும் இராணுவ அனுமதியின்றி ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க
அதிகாரிகள் கூட உள்ளே செல்ல முடியாது என அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போசாக்கின்மை மற்றும் பட்டினியால் 30 முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக வவுனியா
நீதவான் பதிவு செய்திருப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முகாம்களில் உள்ளவர்களில் முடமானவர்கள்,
3,100 அரசாங்க ஊழியர்கள், 60 வயதைக் கடந்த 6,700 தனி நபர்கள் மற்றும் 780 கர்ப்பிணித்
தாய்மாரும் அடங்குவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சமத்துவத்துக்கான உரிமை மற்றும் சட்டத்தில் சமமான பாதுகாப்பு,
எதேச்சதிகாரமான கைதிகள் மற்றும் தடுத்து வைத்தலில் இருந்து விடுதலை, சட்டப்பூர்வமான தொழில்
நிபுனத்துவம், வர்த்தகம், வியாபாரம் அல்லது நிறுவனங்களை முன்னெடுப்பதற்கான சுதந்திரம், அதே போல்
நடமாடும் சுதந்திரம் மற்றும் வதிவிடத்தை தேர்வு செய்வதற்கான உரிமை போன்ற தனிநபர்களுக்காக
அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பொறுப்பாளிகள்/அல்லது அரசு மீறியுள்ளதாக பிரகடனம் செய்யுமாறு
மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச
ஒப்பந்தத்திலும் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வழிநடத்தும் கொள்கைகளிலும் வலியறுத்தப்பட்டுள்ள
சர்வதேச தரத்தின்படி, அகதிகளுக்கு நடமாடும் உரிமையும் மற்றும் முகாம்களுக்கு வெளியிலும் உள்ளேயும்
சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையும் அகதிகளுக்கு உண்டு என மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி இராஜரட்னம், தனது வாதங்களை
தயார் செய்யவும் மற்றும் பொருத்தமான அதிகாரிகளிடம் ஆலோசனை பெறவும் காலம் தேவை எனக்
கோரினார். மனுதாரர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி கனகேஸ்வரன், அத்தகைய கால அவகாசம் தேவையில்லை
என்றும், சாதாரணமாக வழக்கைத் தொடர்வதற்கான அனுமதியை தான் எதிர்பார்ப்பதாகவும் மற்றும் வழக்கின்
போது அரசு தனது கருத்தறிவிப்பை செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். ஆனால், மனுவை ஏற்றுக்கொள்வது
தொடர்பான தீர்மானத்தை ஜூலை 10 வரை ஒத்திவைத்த நீதிபதிகள், அரச தரப்பு சட்டத்தரணி கோரிய கால
அவகாசத்தை வழங்கினர்.
எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முகாங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்
என கோரி தாக்கல் செய்யப்பட்ட இன்னுமொரு அடிப்படை உரிமை வழக்கு, ஜூலை 27 வரை ஒத்தி
வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் ஏனைய எதிர்க் கட்சி உறுப்பினர்களால் தாக்கல்
செய்யப்பட்ட இந்த மனு, பொது மக்கள் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கூட
எதிர்க்கவில்லை.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்த யூ.என்.பி., அதன் மக்களைத் தடுத்து
வைக்கும் கொள்கையையும் அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் தடுத்து வைக்கும் முறையை யூ.என்.பி. விமர்சிக்காது
என யூ.என்.பி. பேச்சாளர் கயன்த கருணாதிலக புதன் கிழமை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் அவலத்தை சுரண்டிக்கொள்ள எவருக்கும் அரசாங்கம்
இடமளிக்காது என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி
மறுக்கப்படுவதை நியாயப்படுத்தியதன் மூலம், ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சட்ட நியாயம்
மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அரசாங்கத்தின் அலட்சியத்தை காட்சிப்படுத்தினார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, உயர் நீதிமன்றத்தில் இருந்து
ஓய்வுபெறுதவற்கு சற்று முன்னதாக, இந்த முகாங்கள் சட்டவிரோதமானவை என பகிரங்கமாக அறிவித்து இப்போது
இரண்டு வாரங்கள் ஆகியுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் "நாட்டின் சட்டத்தில் இருந்து பாதுகாப்பு
இன்றி வாழ்கின்றனர்," என அவர் தெரிவித்தார். அரசாங்கமும் இராணுவமும் மேலும் மேலும் நாட்டின் சட்டம்
மற்றும் அரசியலமைப்பு வரம்புக்கு புறம்பாக இயங்கிக்கொண்டிருப்பதையே அவரது கருத்துக்கள்
உறுதிப்படுத்துகின்றன.
அரசாங்கம் சட்ட ஒழுங்குகளை அலட்சியம் செய்வதும் மற்றும் அதன் எதேச்சதிகார
வழிமுறைகளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வெகுஜனங்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிடலாம் என
கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பிரிவுகள் மத்தியில் கவலை எழுந்துள்ளதையே சில்வாவின் தலையீடு
பிரதிபலிக்கின்றது. தமிழ் மக்களின் அல்லது மிகவும் பரந்தளவில் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை
காப்பதற்கு மாறாக, அவர் "சட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை" நிராகரிப்பது "இன்னுமொரு
கிளர்ச்சியை" தூண்டிவிடும் என எச்சரிக்கின்றார்.
சட்டவிரோதமாக மக்களைத் தடுத்துவைப்பதன் மூலம், இராஜபக்ஷவும் அவரைச்
சூழவுள்ள இராணுவ ஜெனரல்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் தமது ஆட்சிக்கு விரோதமான எந்தவொரு
அச்சுறுத்தலையும் அல்லது எதிர்ப்புக்கும் எதிராக பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கப்
போவதில்லை என்பதையே சமிக்ஞை செய்துள்ளனர்.
|