World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan workers comment on victory celebrations

இலங்கை தொழிலாளர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் பற்றி கருத்துக் கூறுகின்றனர்

By our correspondents
9 June 2009

Use this version to print | Send feedback

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் தோற்கடித்ததில் இருந்து இலங்கை அரசாங்கம் உக்கிரமான வெற்றிப் பிரச்சாரமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் சிங்கள மேலாதிக்கவாத பண்பை மீண்டும் வெளிக்காட்டும் கூட்டங்கள், அணிவகுப்புக்கள் மற்றும் விசேட பெளத்த மத விழாக்களும் பல வாரங்களாக நடந்து வருகின்றன.

கேர்னல்கள், மேஜர்கள் மற்றும் கப்டன்களைக் கூட கெளரவிப்பதற்காக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளால் உள்ளூர் மட்டத்தில் சிறிய அளவிலான கொட்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பெரிய மற்றும் சிறிய நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை தெரிவிக்கும் ஊடகங்கள் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதோடு பாதுகாப்பு தளபதிகளின் பேட்டிகளை அடுத்தடுத்து வெளியிடுகின்றன.

இந்த இனவாத மற்றும் இராணுவவாத பிரளயம், அரசாங்கத்தைப் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் அடக்குவதற்காக திட்டமிடப்பட்டவையாகும். இது, ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்ட இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றி, அல்லது வவுனியாவுக்கு அருகில் தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப்பட்டுள்ள 300,000 மக்களின் அவலம் பற்றிய எந்தவொரு கலந்துரையாடலையும் நசுக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

அதே சமயம், இந்தப் பிரச்சாரம், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மீதான பெரும் தாக்குதலுக்கான தயாரிப்புமாகும். பிரமாண்டமான பொருளாதாரப் நெருக்கடியின் தாக்கத்தால் தடுமாறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஏற்கனவே புதிய "பொருளாதர யுத்தம்" பற்றி பேசியுள்ளதோடு "தேசத்தைக் கட்டியெழுப்புவதன்" பேரில் இராணுவம் காட்டிய அதே ஆர்வத்துடன் ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கோரினார்.

யுத்தத்துக்குப் பின்னர் உள்ள நிலமை பற்றி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பல தொழிலாளர்களுடன் கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) யுத்தத்தை எதிர்ப்பதைப் பற்றியும் வடக்கு கிழக்கில் இருந்து நிபந்தனையின்றி இராணுவத்தை வெளியேற்றுமாறும் தடுப்பு முகாம்களை கலைக்குமாறும் அது கோருவதையும் பற்றி எமது நிருபர்கள் விளக்கினர்.

கொழும்பில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் தெரிவித்ததாவது: "இராணுவ வெற்றி பற்றிய ஒரு பெரும் பிரச்சாரம் நடப்பதால் பலர் தங்களது வாகனங்களில் தேசியக் கொடிகளை ஏற்றியுள்ளனர். குண்டு வெடிப்புகள் இன்றி இப்போது எம்மால் கொழும்புக்குள் பயணிக்கலாம் என நான் நினைத்ததால், பல பேரைப் போல் நானும் சிறிது பதற்றக் குறைவை உணர்ந்தேன். யுத்தம் முடிந்து விட்டது ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு? இந்த விடயங்கள் பற்றி நான் மட்டுமல்ல ஏனைய பலபேரும் இது பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்."

யுத்தக் காலத்தில் எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் இராஜபக்ஷ நிராகரித்ததை அவர் நினைவு கூர்ந்தார். "யுத்தம் முடிந்துவிட்டாலும் சம்பள அதிகரிப்பு இன்னமும் இடைநிறுத்தப்பட்டே உள்ளது. சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்கள் 'நாட்டை நேசிக்காதவர்களாக' நடத்தப்படுவர். எதிர்காரத்தைப் பற்றி சிந்திக்கும் போது எந்தவொரு தீர்வும் கிடைக்காது போலவே தெரிகிறது. தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் பிரச்சாரத்துடன் இணைந்து கொண்டன," என அவர் தெரிவித்தார்.

"வெற்றிக் கொண்டாட்ட அணிவகுப்புக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட இராணுவச் சிப்பாய்களுக்கு தங்குமிடம் அளிக்க மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டன. ஆனால் ஆசிரியர்கள் வேலைக்கு வரத் தள்ளப்பட்டார்கள். இந்த முறையில் பாடசாலைகள் மூடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. [கடந்த புதன் கிழமை] வெற்றி அணிவகுப்பு நடந்த அன்று பாடசாலைக்கு சுமார் 200 ஆசிரியர்கள் வந்திருந்தனர். எங்களுக்கு தொலைக் காட்சி வசதி இருந்தாலும் 10 ஆசிரியர்களே அதை பார்த்தனர்.

"என் மகள் வீட்டில் இருந்து இராணுவ அணிவகுப்பை பார்த்தார். யுத்தத்தின் போது முடமாக்கப்பட்ட சிப்பாய்கள் சக்கர நாட்காலிகளில் அமர்ந்து அணிவகுப்பில் பங்கெடுப்பதை பார்த்து அவள் திகைப்படைந்தாள். யுத்தத்தின் போது 20,000 சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவள் கேள்விப்பட்டிருந்தாள். ஜனாதிபதி சிப்பாய்களுக்கு வணக்கம் தெரிவித்து கெளரவிக்க விரும்பினால், அவர் ஏன் மேடையில் இருந்துகொண்டு சிப்பாய்களின் மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என எனது மகள் ஏளனமாகக் கேட்டாள்.

"உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிப்பாய்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் இருந்து அரசாங்கம் அதன் கைகளைக் கழுவிக்கொண்டு சுமைகளை எங்களது தோளில் கட்டப் போகிறது. அவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக அரசாங்கம் பல நிதி திரட்டும் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது."

கொழும்புக்கு வடக்கே சிலாபத்தைச் சேர்ந்த ஒரு சிறிய களஞ்சிய உரிமையாளர் ஒருவர் தெரிவித்ததாவது: "ஊடக அடக்குமுறையின் காரணமாக, மக்களுக்கு செய்திகளைத் தெரிந்து கொள்ள வழியில்லை. அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் ஊடகங்களும் யுத்தத்தின் யதார்த்தத்தை சகல வழிகளிலும் மறைக்கின்றன. யுத்தத்தில் கொல்லப்பட்ட சிப்பாய்களின் எண்ணிக்கை மற்றும் இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை என்னவென்று தெரியாது. உயிரிழந்த சிப்பாய்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கையை பற்றி மக்கள் விழிப்புடன் இருந்திருந்தால் இளைஞர்கள் இராணுவத்தில் சேர மாட்டார்கள்.

"அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அப்படியானால் அவர் ஏன் 300,000 மக்களை பலாத்காரமாக முகாம்களில் வைத்திருக்க வேண்டும்? அரசாங்கம் பொய் சொல்கிறது."

பண்டாரவளையைச் சேர்ந்த ஜயசேன தெரிவித்ததாவது: "யுத்தத்தில் வென்ற இராணுவத்தால் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நான் நினைக்கவில்லை." 1989-1990ம் ஆண்டுகளில் கிராமப்புற சிங்கள இளைஞர்களுடனான யுத்தம் சுமார் 60,000 கிராமப்புற சிங்கள இளைஞர் படுகொலையுடன் முடிவடைந்ததை ஜயசேன ஒப்பிட்டுக் காட்டினார். கிராமப்புற இளைஞர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தேயிலை விளயும் பிராந்தியமான மத்திய மலையகப் பகுதியிலேயே பண்டாரவளை உள்ளது. தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளி குறிப்பிட்டதாவது: "1983ல் [யுத்தம் ஆரம்பித்த போது] சில சிங்களவர்கள் எங்களது தோட்டத்துக்கு வந்து எங்களது லயன் காம்பராக்களுக்கு [வீடுகள்] தீ மூட்டினர். எங்களை காத்துக்கொள்வதற்காக நாங்கள் இன்னுமொரு தோட்டத்துக்கு இடம்பெயர்ந்தோம். பல மாதங்களின் பின்னர் எந்தவொரு திருத்தமும் செய்யாமல் நாங்கள் அதே வீடுகளில் மீண்டும் குடியேறினோம். புலிகள் தோல்வியடைந்ததன் பின்னர் 1983 மீண்டும் வருமோ என்ற பீதி எங்களுக்கு உள்ளது.

"நாங்கள் இந்த நாட்டில் தமிழர்-விரோத பாகுபாட்டை எதிர்கொள்கின்றோம். தோட்டத் தொழிலாளர்கள் என்ற வகையில் நாம் அற்ப ஊதியத்துக்காக வேலை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு எங்களுக்கு வெறும் 290 ரூபா [2.50 அமெரிக்க டொலர்] மட்டுமே கிடைக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகம். எங்களுடைய அன்றாடத் தேவைக்கு குறைந்தபட்சம் 500 ரூபா சம்பளமாவது எங்களுக்கு கொடுக்க வேண்டும்.

"யுத்தத்தின் காரணமாக சம்பளத்தை கூட்ட முடியாது என கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கம் கூறி வந்தது. வடக்கில் புனர்வாழ்வு வேலைகள் இருப்பதன் காரணமாக சம்பளத்தை கூட்ட முடியாது என இப்போது அவர்கள் சொல்வார்கள். நாளுக்கு நாள் எங்களது வாழ்க்கை நிலமைகள் மோசமடைந்து வருகின்றன. சகல ஆளும் வர்க்க கட்சிகளும் ஒன்று தான். எமது பெருந்தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களாக இருக்கின்றனர். தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம், தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை என சொல்லப்படுவதற்கு ஆதரவளியுங்கள் என அவர்கள் நிச்சயமாக எங்களுக்கு சொல்வார்கள்.

பிரபாகரனைப் பற்றி குறிப்பிட்ட அவர், வடக்கில் உள்ள மக்கள் அவரின் கீழும் துன்பம் அனுபவித்ததாகத் தெரிவித்தார். "நாங்கள் கொழும்பு அரசாங்கத்தால் எவ்வாறு நடத்தப்படுகிறோமோ அதே போலவே அவர்களும் புலிகளால் நடத்தப்படுகிறார்கள் என வடக்குப் பிரதேசத்தில் வாழும் எங்களது உறவினர்கள் தெரிவித்தனர்."

ஹட்டனைச் சேர்ந்த ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளி தெரிவித்ததாவது: "இலங்கை வரலாற்றில் நான் பார்த்ததில் இராஜபக்ஷ அரசாங்கமே மிக மோசமானது. இந்த அரசாங்கம் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதன் மூலமே யுத்தத்தில் வெற்றி பெற்றது. எங்களது தோட்டத்தில் தொழிலாளர்கள் [கொண்டாட்டத்துக்கு] தேசியக் கொடிகளை ஏற்றவில்லை."

யுத்தம் முடிவடைந்ததில் இருந்தே தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவாத ஆத்திரமூட்டல்கள் ஏற்கனவே இருந்ததாக அவர் கூறினார். தலவாக்கலை மற்றும் மஸ்கெலியா பகுதி தோட்டங்களுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தொலைக்காட்சி டிஷ் அன்டனாக்களை அகற்றுமாறு தொழிலாளர்களை நெருக்கினர். தோட்டத் தொழிலாளர்கள் இந்திய தொலைக்காட்சி சேவைகளை பார்ப்பதை நிறுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

"ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பெ. சந்திரசேகரனும் [தோட்டத் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலைய மக்கள் முன்னணியின் தலைவர்களும் அமைச்சரவை அமைச்சர்களும்] இந்தக் கொலைகார அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் கலந்துகொண்டதையிட்டு நாம் வெட்கப்படுகிறோம்.

"இது போல் இதற்கு முன்னர் இவ்வளவு மோசமான வாழ்க்கை நிலைமையை சந்தித்ததில்லை. வாழ்க்கைச் செலவு தாங்க முடியாததாக இருப்பதோடு சம்பளம் அதே இடத்திலேயே உள்ளது. முன்னைய போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்த நிலையில் வேலை நிறுத்தங்களோ போராட்டங்களோ இடம்பெறவும் இல்லை. இதுவும் இராஜபக்ஷ யுத்தத்தை வெல்ல உதவியது. அரசாங்கத்துக்கு யுத்தத்தை முன்னெடுக்க இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உதவியும் கிடைத்தது."

கண்டியைச் சேர்ந்த ஒரு தொழிலாளியான ஞானரத்ன தெரிவித்ததாவது: "யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதுமான உணவு, மருந்து மற்றும் தண்ணீர் இல்லை. அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. இது நல்லதல்ல. யுத்தம் முடிவடைந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவடையவில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை என நான் நினைக்கின்றேன்."

"அரசியல் தீர்வு" என்னவாக இருக்கும் என்பது பற்றி ஞானரத்னவுக்கு தெளிவில்லை. ஆனால், அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதானால் சகல சமூகத்தையும் சேர்ந்த கும்பல்களுக்கு எதிராக சகல இனத்தையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். "யுத்தம் முடிவடைந்த பின்னரும் எதற்காக அரசாங்கம் இராணுவத்தை 50 வீதம் அதிகரிக்க வேண்டும்? அது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கா?" என அவர் கேள்வியெழுப்பினார்.

"யுத்தம் முடிவடைந்ததில் இருந்து, அரசாங்கம் அதன் ஆட்சியை பராமரித்துக் கொள்வதற்காக வெற்றியை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. அவர்களின் விருப்பத்தின்படி அவர்களால் அதைச் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. தொழிலாளர்களின் சம்பளம் அவர்களது அன்றாட செலவுக்கு போதுமானதல்ல. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம். டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுகின்றன. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டுள்ளது. கடன் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த நேரும். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வருவார்கள்."