World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா While pledging its devotion to the poor India's government lurches further right ஏழைகளிடம் பற்றை உறுதியாகக் கூறுகையில் இந்திய அரசாங்கம் இன்னும் வலதிற்குப் பாய்கிறது By Deepal Jayasekera இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம், கடந்த வாரம் "ஜனாதிபதி உரையில்" பல வலதுசாரி குறிக்கோள்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. இவற்றில், பொதுத்துறை பிரிவுகளில் "முதலீட்டை திரும்பப் பெறல்", பொது-தனியார் பங்காளித்தனத்தை வளர்த்தல், "எழுச்சிகள், இடது தீவிரவாதத்தை கையாள கடுமையான நடவடிக்கைகள்", இந்தியாவின் இராணுவத்தை நவீன ஆயுதங்கள் மூலம் வலுப்படுத்துதல், அமெரிக்காவுடனான இந்தியாவின் மூலோபாய பங்காளித்தனத்தை இன்னும் விரிவாக்குதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஜனாதிபதியின் உரையானது, அரசாங்கத்தின் பரந்த விருப்பங்களை அறிவிக்கும் விதத்தில், ஒரு புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் சார்பில் இந்தியாவின் பெயரளவிலான அரசுத் தலைவரால் வழங்கப்படும். ஜூன் 4ம் தேதி பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதிபா பாட்டில், கடந்த மாதம் தேர்தல்களில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள UPA அரசாங்கத்தின் முதல் பணி, "உலகப் பொருளாதார மெதுவான சரிவின் விளைவுகளை துறைவாரியான மற்றும் பருவினப் பொருளாதாரக் கொள்கைகளின் இணைந்த வகையினால் எதிர்கொள்ளுவதாக இருக்கும்" என்று கூறினார். இந்தியாவின் மத்திய வங்கி மற்றும் சர்வதேச கடன் தர அமைப்புக்களும் இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் வளரும் பட்ஜேட் பற்றாக்குறைகள் பற்றி கவலை தெரிவித்துள்ளன. ஆனால் பாட்டிலோ தன்னுடைய அரசாங்கம் அதன் உடனடி இலக்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் இந்தியா விரைவில் 8+ சதவிகித வளர்ச்சிக்கு விரைந்து திரும்பும் என்றும் அடையாளம் காட்டினார். இந்த உரை பொருளாதாரத்தின் மிக அதிக பாதிப்பு உடைய பிரிவுகளுக்கு குறிப்பிடப்படாத ஆதரவை உறுதி கூறியுள்ளது; இதில் ஏற்றுமதித் தொழில்களும் அடங்கும். (ஆண்டு அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் தீவிரமாக சரிந்து கொண்டிருக்கிறது; இதில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் டாலர் ஆதிக்கம் உடைய சரிவுகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கும் உள்ளடங்கும்.) அரசாங்கம் "பொது உள்கட்டமைப்பு பிரிவுகளில் மாற்று சுழற்சி விரிவாக்கங்களையும்" வளர்க்கப் போவதாக கூறியுள்ளது. குறுகிய காலத்தில் பொருளாதார ஊக்கத்தின் தேவையை வலியுறுத்திய உரை UPA அரசாங்கம் "ஒரு நடுத்தரக் கால மூலோபாய விதத்தில் நிதானமான நிதிய நிர்வாகத்தை தொடரும்" என்று உறுதி கொடுத்துள்ளது, அதாவது, வரவிருக்கும் ஆண்டுகளில் வருமானம் மற்றும் செலவுகள் நல்ல சமசீருடன் இருக்கும் என்றும் அந்த இலக்கிற்காக, வருமானத்தை உயர்த்த "தேர்ந்த நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. "தேர்ந்த நடவடிக்கைகள்" என்பது பரந்த முறையில், அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் அல்லது மிக அதிக இலாபம் தரும் பொதுத் துறைப் பிரிவுகள் எண்ணெய், நிலக்கரி, விசை உற்பத்தி, தொலைத் தொடர்பு ஆகியவை உள்ள பொதுத்துறை பிரிவுகள் (PSU) ஓரளவு அல்லது முழுமையாக தனியார் மயமாக்கப்படுதல் என்று கூறுவதற்கான மறைமுக சொல் என்று அறியப்படுகிறது. பெருவணிகம் நீண்ட காலமாகவே அரசாங்கம் PSU க்களிடம் இருந்து "மூலதனத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று கோரி வந்துள்ளது. ஜனாதிபதியின் உரை UPA அரசாங்கம் இந்த மூலதனத்தை திரும்பப் பெறுதலுக்கு "சாலை வரைபடம்" ஒன்றை அபிவிருத்தி செய்யும் என்றும் அதே நேரத்தில் மக்கள் எதிர்ப்பைக் குறைக்கும் வகையில், அரசாங்கம் பெரிய, இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களில் 51 சதவிகிதப் பங்குகளை கொள்ளும் என்றும் கூறுகிறது. PPP எனப்படும் (Public Private Partnerships,) பொது, தனியார் பங்காளித்தனம் பற்றியும் உரை அறிவிக்கிறது; இவை தனியார்மயத்திற்கான கருவி ஆகும்; இது இந்தியாவின் போக்குவரத்து, தொலைத் தொடர்புகள், விசை உற்பத்தி மற்றும் பகிர்வுக் கவலைகளுக்கு தீர்வாக - முதலாளித்துவ முதலீட்டாளர்கள் மகத்தான முறையில் பொது உதவித்தொகைகள் பெறவும் அதிக இலாபம் அதிக பணயம் இல்லாத விதத்தில் உறுதியளிக்கும் உடன்பாடுகளைக் கொடுக்கவும் உதவும்.உள்கட்டமைப்புத் திட்டங்கள் "அடுத்து ஐந்து ஆண்டுகளில் முக்கிய குவிப்பு பெறும்" என்று கூறிய ஜனாதிபதியின் உரை, அரசாங்கம் பெருவணிகத்தால் இந்தியாவின் பெரும் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை இலாபகரமாக பயன்படுத்தும் விதத்தில் திட்டங்களை செயல்படுத்தும்போது கருதப்படும் "இடைத் தடைகளையும் தாமதங்களையும்" தவிர்க்க முற்படும் என்றும் கூறுகிறது. "பொது தனியார் பங்காளித்தன திட்டங்கள் மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடுகள் ஆகும்....PPPs களுடைய கட்டுப்பாட்டு மற்றும் சட்ட வடிவமைப்புக்கள் இன்னும் நலன் தரும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்." என்று பாட்டில் அறிவித்தார். இதேபோல் ஜனாதிபதியின் உரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு புதிய நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது. "நம் நாடு சமீப ஆண்டுகளில் அதிகமான மூலதன வரத்துக்களால் நலன் பெற்றுள்ளது. இந்த வரத்துக்கள், குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீடு தக்க கொள்கை வழிமுறைமூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்." காங்கிரஸ் தலைமையிலான UPA "வளர்ச்சிக்கு ஆதரவு" என்று வலியுறுத்துவதை நியாயப்படுத்த முற்படுகிறது; அதாவது, முதலீட்டாளருக்கு ஆதரவுக் கொள்கை பற்றி; விரைவான மூலதன விரிவாக்கம் ஒன்றுதான் அரசாங்கம் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கான செலவினங்களை அதிகரிக்கும் என்று கூறுகிறது. இந்த உரை சாதாரண மனிதன் பற்றிய காங்கிரஸின் கவலைகள் பற்றி நிறையக் கூறுகிறது; ஒரு "உள்ளடங்கிய பொருளாரத்திற்கு" ஆதரவைத் தெரிவிக்கிறது; (சமூக ஆதரவிற்காக) "நடந்து கொண்டிருக்கும் முன்னோடித் திட்டங்கள் விரிவாக்கப்பட்டு, சேர்க்கப்படும் என்றும் கூறுகிறது. அதன் முதல் பதவிக் காலத்தின்போது, இந்தியா சராரசரியாக ஆண்டு வளர்ச்சியை 8.5 சதவிகிதம் என்று கண்டபோது, UPA சமூக நலன்களை நிதானமாக அதிகரித்தது; ஒரு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை நிறுவியது; இதன்படி கிராமப்புற வீடுகளில் ஒரு உறுப்பினருக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்த பட்ச ஊதியத்தில் 100 நாட்கள் வேலை அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகப் பொருளாதார சரிவு விரைவில் முடிவிற்கு வந்துவிடும் என்று அரசாங்கம் நம்புகிறது; அதே போல் இந்தியாவில் அதிக வளர்ச்சி புதுப்பிக்கப்படும் என்றும் அதையொட்டி பெருவணிகத்தின் திட்டமான இந்திய முதலாளித்துவத்தை மறுகட்டமைத்தல் தொடரும் என்றும் அதே நேரத்தில் ஏழைகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் நம்புகிறது. இந்தியச் செய்தி ஊடகம் காங்கிரஸின் "உள்ளடக்கிய வளர்ச்சி" கொள்கை ஒரு வெற்றிகரமான தேர்தல் மூலோபாயம் என்று கூறியுள்ளது. ஆனால் இதில் கூடுதலான விஷயங்கள் தொடர்பு உடையவை ஆகும். ஸ்ராலினிச இடது முன்னணி UPA க்கு "மக்கள் ஆதரவு" ஆட்சி என்று மே 2004 முதல் ஜூன் 2008 வரை கொடுத்த மறைப்பை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் தலைமை, இந்தியா ஒரு சமூக வெடி மருந்துக் கிடங்கு" எனபதை நன்கு அறியும். இதைப்பற்றி மறைமுகமாக ஜனாதிபதி உரை குறிப்புக் காட்டி, இந்திய மக்கள் "பொருளாதார, சமூக, பண்பாட்டுக்கூறுபாடுகள் உள்ளடங்கிய நிலையை பெரிதும் விரும்புகின்றனர்" என்றும் "மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் எழுச்சியுறும் சவால்கள்" பற்றி எச்சரிக்கவும் செய்துள்ளது. இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கே இந்தியா 8 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆண்டு வளர்ச்சியை தக்க வைக்காவிட்டால் "பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு" அதாவது உலக முதலாளித்துவத்திற்கு ஒரு முக்கிய உற்பத்தி, பணியிடமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற உந்துதலுக்கு போதிய ஆதரவு இருக்காது என்று எச்சரித்துள்ளார். ஜனாதிபதியின் உரை காங்கிரஸின் தேர்தல் உறுதிமொழிகளான ஒரு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், மிக வறுமையில் வாடும் குடும்பங்கள் மாதம் 25 கி.கிராம் கோதுமை அல்லது அரிசியை 75 ரூபாய்க்கு வாங்க அனுமதித்தில் (கிட்டத்தட்ட அமெரிக்க $1.50) ஆகியவற்றை மீண்டும் கூறியுள்ளது. ஆனால் அவ்வாறு கூறுகையில், அரசாங்கம் பெருவணிகத்தில் இருந்து பட்ஜேட் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று வந்துள்ள அழுத்தம் பற்றியும் கவனம் கொண்டுள்ளது; உதவித் தொகைகள் வழங்குவது சீராக்கப்படும் பொது (உணவு) பங்கீட்டு முறையில் "முறையான சீர்திருத்தங்கள்" செய்யப்படும் என்ற அதன் நோக்கத்தை அறிவித்துள்ளது. "அரசாங்கம் அயராமல் நிதியப் பொறுப்பை செயல்படுத்தும்... இதற்கு அனைத்து உதவித் தொகைகளும் உண்மையில் தேவை உடையவர்களுக்கும் ஏழைகளுக்கும் மட்டும் செல்லுவது முக்கியமாகும்" என்று பாட்டில் அறிவித்தார். "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் பிற்போக்குத்தனம் UPA அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பரில் மும்பை பயங்கரவாதக் கொடுமையை கடுமையான முறையில் எதிர்கொண்டது--கடுமையான பயங்கரவாதச் சட்டங்களை இயற்றி பாக்கிஸ்தானுக்கு எதிராக பெரும் மிரட்டல்களையும் விடுத்தது--இது பயங்கரவாதம் பற்றி "மிருதுவாக" இருக்கிறது என்று இந்து தீவிர வெறியுடைய BJP இடமிருந்து வந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள, பொதுத் தேர்தலை ஒட்டிய உந்துதலினால் தேவைப்பட்டது.ஆனால் UPA மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் BJP பெரும் தோல்வி அடைந்ததும் (1989க்குப் பின்னர் மிகக் குறைந்த எம்.பி.க்களையே அது கொண்டுள்ளது) அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, ஜனாதிபதியின் உரை "உள்நாட்டுப் பாதுகாப்பு" அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று பட்டியலிட்டுள்ளது. "பயங்கரவாதத்திற்கு சிறிதும் விட்டுக் கொடுப்பது இல்லை" என்று இது உறுதியளித்து, காஷ்மீர், இந்தியாவின் வடகிழக்கில் தேசிய எழுச்சிகளை அடக்க "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்றும் மாவோவியிச நக்சலைட் எழுச்சிக்கான சங்கேச சொல்லான "இடதுசாரித் தீவிரவாதத்தை", எதிர்த்துப் போரிடவும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பிந்தையது இந்தியாவில் சில ஓரத்தில் உள்ள பழங்குடி பகுதிகளில் ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது; இதற்குக் காரணம் பல தசாப்தங்களாக அரசாங்கம் இவற்றைப் பற்றி பொருட்படுத்தாதது, தவறாகப் பயன்படுத்துவது மற்றும் பெருவணிக ஆதாரத் திட்டங்களுக்காக அடிக்கடி அரசாங்கம் நிலங்களை எடுத்துக் கொள்ளுவதும்தான். பல தொடர்ச்சியான நடவடிக்கைகள் "பாதுகாப்பை" முன்னேற்றுவிப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உரை உறுதி கூறுகிறது; இதில் மத்திய, மாநில போலீஸ் பிரிவுகள் விரிவாக்கப்படுவதுடன், சிறப்புப் படைகள், விரைவில் தாக்கும் குழுக்கள் அமைத்தல், ஒவ்வொரு இந்தியருக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல் ஆகியவை அடங்கும். பாக்கிஸ்தானை பொறுத்தவரையில், புது டெல்லியின் வரலாற்றளவு விரோதியான பாக்கிஸ்தானுடனான உறவுகள், "இந்தியாவின் மீது அதன் பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தும் பயங்கரவாத அமைப்புக்கள் மீது எதிர்கொள்ளும் பாக்கிஸ்தானின் நடவடிக்கைகளின் நேர்மையைப் பொறுத்து இருக்கும்" என்று பாட்டில் கூறியுள்ளார். ஸ்தூலமான வகையில் இந்தியா பாக்கிஸ்தானுடன் கஷ்மீர் எழுச்சிக் குழுக்கள் உட்பட இந்திய எதிர்ப்புப் போராளிகளை அடக்குவதில் இஸ்லாமாபாத் போதுமானவற்றைச் செய்யும் வரை, அத்துடன் "கூட்டு சமாதான உரையாடலை" நிறுத்தி வைத்துள்ளது. UPA அரசாங்கத்தின் விருப்பமான இந்தியா ஒரு வட்டார, ஏன் உலக சக்தியாக வரவேண்டும என்ற உறுதிப்பாட்டை, அவ்வுரை மறுபடியும் வலியுறுத்தியது. இந்தியா இராணுவத்தை அதிகமாகக் கட்டமைக்கும் என்றும் அதை "இந்தியாவின் பெருமிதம்" என்றும் கூறி, "எண்ணெய் ராஜீய சமுறையையும்" அரசாங்கம் தொடரும், அதாவது வெளிநாட்டு எண்ணெய் இருப்புக்களுக்கு புவிசார்-அரசியல் முறையில் நடக்கும் போட்டியில் அரசாங்கமும் பங்கு பெறும் என்றும் கூறினார்.வாஷிங்டன் "ஆப்பாக் போர்" என்பதுடன் தீவிரமாக இருப்பது பற்றியும் அமெரிக்க-சீன இருதரப்பு உறவுகள் இந்தியாவை அமெரிக்க ஒதுக்கக்கூடும் என்பது பற்றிய கணிசமான கவலையும் புது டெல்லியில் உள்ளது. ஆயினும்கூட, ஜனாதிபதியின் உரை UPA அரசாங்கம் அமெரிக்காவுடன் சார்பை அதிகம் கொள்ள விழைகிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. "அமெரிக்காவுடன் நம்முடைய பங்காளித்தனத்தின் மாற்றம் இன்னும் முன்னேற்றுவிக்கப்படும்" என்று பாடில் அறிவித்தார். இந்தியாவின் ஆளும் உயரடுக்கு UPA அதிகாரத்திற்கு ஒரு வலுவான ஆதரவுடன் திரும்பி வந்துள்ளது பற்றி களிப்பு அடைந்துள்ளது; மேலும் ஜனாதிபதி உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அரசாங்கத் திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா "உள்ளடங்கிய வளர்ச்சி" பற்றி அரசாங்கம் கையாளும் உத்திகள், செல்வாக்கற்ற முடிவுகள் எடுப்பதற்கு ஒரு தடையாகிவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளது; இதில் உதவித்தொகைகள் குறைக்கப்படுதல், எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்படுதல் ஆகியவை அடங்கும். "மொத்தத்தில் UPA அதன் அரசியல் நிலையை தன்னிடம் இதயம் உண்டு என்ற முன்கருத்தில் நிறுவியுள்ளது இப்பொழுது அத்துடன் அறிவின் நலன்களும் இணைக்கப்படும் என்பதைக் காட்டும் நேரம் வந்துள்ளது" என்று டைம்ஸ் அறிவிக்கிறது. ஐ.நாவின் குழந்தைகள் நிதி (UNICEF) இதற்கிடையில் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சமீபத்திய "பொருளாதார ஏற்றக் காலத்தில்கூட" 20 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுபவர்கள் அதிகரித்து விட்டபோதிலும் கூட, UPA இன் "உள்ளடங்கிய வளர்ச்சி" பற்றிய கூற்றுக்கள் அடையப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது; 2004-05 ல் 209.5 மில்லியனில் இருந்து 2007-08ல் 230 மில்லியன் என்று எண்ணிக்கை பெருகினாலும் இது அடையப்பட்டுள்ளதாக கூறுகிறது. "ஊட்டமின்மை மற்றும் பட்டினிக்கு எதிராக வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்போது முன்னேற்றம் இல்லை என்றால், இப்பொழுது எப்படி அதைச் செய்ய முடியும்" என்று UNICEF உடைய கொள்கை ஆலோசகரும் பொருளாதார வல்லுனரும் வினா எழுப்பியுள்ளார். |