World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைSri Lankan Chief Justice questions legality of Tamil detention camps இலங்கை பிரதம நீதியரசர் தமிழ் தடுப்பு முகாங்களின் சட்டப்பூர்வத் தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார் By Sampath Perera இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, கடந்த வாரம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக பகிரங்கமாக ஆற்றிய உரையொன்றில், இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்கள் இராணுவத்தாலும் அரசாங்கத்தலும் அமைக்கப்பட்ட தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என பிரகடனம் செய்துள்ளார். ஜூன் 4 அன்று, கொழும்புக்கு வடகிழக்கில் உள்ள மாரவிலவில் புதிய நீதிமன்றக் கட்டிடம் ஒன்றைத் திறக்கும் விழாவில் உரையாற்றிய சில்வா, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் "நாட்டின் சட்டத்திலிருந்து பாதுகாப்பு இன்றி வாழ்கின்றார்கள்," எனத் தெரிவித்தார். "இந்த நாட்டின் சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அகதிகள் பற்றி எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை. நான் பகிரங்கமாக இதைத் தெரிவிக்கிறேன். அதிகாரிகள் என்னைத் தண்டிக்க முடியும். வன்னி அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி கிராமங்களுக்கு நான் சென்றேன். அவர்களது துன்பங்களையும் வேதனைகளையும் விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை," என அவர் மேலும் கூறினார். இறுதியாக வெளியேறிய பொதுமக்கள் முகாம்களுக்கு வந்து சேர்வதற்கு முன்னதாக, மே மாதம் முகாம்களை பார்வையிட ஒரு நாளை செலவிட்ட சில்வா, அங்குள்ள நிலைமைகள் மிகவும் அவலம் நிறைந்தது என தெரிவித்தார். "நாங்கள் ஒரு நீதிமன்றத்தை கட்டுகின்ற அதே சமயம், இந்த முகாம்களில் பத்து பேர்கள் ஒரு கூடாரத்தில் வாழ்கின்றனர். இந்த கூடாரங்களின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்களால் நிமிர்ந்து நிற்க முடியும். கூடாரத்தின் ஒரு ஓரத்துக்கு சென்றால் அவர்களது கழுத்து உடைந்து விடும்," என அவர் தெரிவித்தார். மலசலகூடத்துக்கு 50 முதல் 100 மீட்டர் வரையான வரிசை உள்ளது என அவர் கூறுகிறார். வடகிழக்கு கரையோரத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் கடைசி தாக்குதல்களை முன்னெடுத்தபோது, யுத்த வலயத்தில் இருந்து வெளியேறிய சுமார் 300,000 மக்களை இராணுவம் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. வெளியிடப்படாத ஐ.நா. அறிக்கை ஒன்றின்படி, ஜனவரி முதல் மே முற்பகுதிக்கு இடையில் இராணுவத்தின் உக்கிரமான ஷெல் தாக்குதல்களின் காரணமாக 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துமுள்ளனர். ஐ.நா. ஆதாரங்கள், கண்கண்ட சாட்சிகள் மற்றும் புகைப்பட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஏனைய மதிப்பீடுகள், இறப்பு எண்ணிக்கையை 20,000 என்ற ஆகக் கூடிய எண்ணிக்கையில் காட்டுகின்றன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் இராணுவம் இந்த முகாங்களை "நிவாரண நிலையங்கள்" அல்லது "நலன்புரி கிராமங்கள்" என கூறிக்கொள்கின்றன. உண்மையில், இவை சிப்பாய்களின் காவலில் உள்ள, முட்கம்பிகள் மற்றும் கூரான கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு முகாங்களாகும். இந்த யுத்த அகதிகளால் முகாங்களை விட்டு வெளியேற முடியாததோடு முகாங்களுக்கு இடையிலான நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் அனுமதியின்றி எவரும் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சிறைச்சாலை போல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கச் செல்பவர்கள் அவர்களுடன் பேசும் போது ஒரு காவலாளி அருகில் இருப்பார். அரசாங்கத்தாலும் முகவரமைப்புக்களாலும் வழங்கப்படும் போதாக்குறையான பங்கீட்டிலேயே மக்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் உதவி முகவரமைப்புக்களுக்கான அனுமதியையும் மட்டுப்படுத்தி வைத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 7,000 அரசாங்க ஊழியர்களும் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளனர். இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டத்தையும் பொருள் விளக்கும் அதிகாரத்துடன் கூடிய நாட்டின் அதி சிரேஷ்ட நீதிபதியே சில்வா ஆவார். முகாங்களில் உள்ள தமிழ் பொது மக்கள் "சட்டத்தின் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர்" என அவர் கூறும் போது, அவர்கள் எந்தவொரு சட்ட அல்லது அரசியலமைப்பு அடிப்படையும் இன்றியே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே அவர் கூறுகிறார். பி.பி.சி. நிருபர் கேள்வியெழுப்பிய போது பிரதம நீதியரசரின் கருத்துக்களை ஒரு பக்கம் துடைத்துத் தள்ளிய மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "அது அவரது சொந்தக் கருத்து" என தெரிவித்தார். அவரது அலட்சியமான பதில், அரசாங்கம் அதனது நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ தன்மையை வழங்குவதைப் பற்றி அக்கறைப்படுவதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது. புலி சந்தேக நபர்களை "ஒழிக்கும் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என அரசாங்கம் கூறிய போதிலும், இது எந்தவொரு சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. நாட்டின் சட்ட வரம்புக்கு முற்றிலும் புறம்பாக, கால் மில்லியனுக்கும் அதிகமான மக்களை அரசாங்கமும் இராணுவமும் பலாத்காரமாக சிறைவாசத்தில் வைத்துள்ளது என்பதையே பிரதம நீதியரசரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. விசாரணையின்றி தனிநபர்களை தடுத்து வைக்க கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த கொடூரமான அவசரகால விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் கூட இத்தகைய நடவடிக்கைகளை அங்கீகரிக்கவில்லை. இரண்டு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சார்பில், சட்டத்தரணிகள் கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். "அடிப்படைக் காரணங்கள் இன்றி கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது, எதேச்சதிகாரமானது மற்றும் சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு முரணானதுமாக இருப்பதோடு, எதேச்சதிகாரமான தடுத்து வைப்பில் இருந்து விடுதலை பெறுவதற்கான கைதியின் அடிப்படை மனித உரிமையை மீறுவதையும் உள்ளடக்கிக்கொண்டுள்ளது," என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையினுள் தான் வதியும் இடத்தை பிரஜைகள் தேர்வு செய்துகொள்வதையும் உள்ளடக்கிய, "இலங்கையினுள் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் சட்டத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் முரணானதாகும்" என அந்த மனு மேலும் தெரிவிக்கின்றது. ஒரு முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரட்னவேல் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: "இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் இத்தகைய முகாங்களுக்கு எந்தவிதத்திலும் சட்ட அடிப்படை கிடையாது. அவர்களது உறைவிடங்களில் இருந்து அரசாங்கத்தால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு, ஆயுதப் படைகளின் காவலின் கீழ் முட்கம்பிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள இலட்சக் கணக்கான எண்ணிக்கையிலான மிகப் பெருந்தொகையான மக்கள் இந்த முகாங்களில் உள்ளனர்." முனனாள் பிரதம நீதியரசரான சில்வா, சிங்கள சட்ட ஸ்தாபனத்தில் மிகவும் பழமைபேணும் புள்ளியாவார். கடந்த காலத்தில் அவர் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களப் பேரினவாத குழுக்களின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு சில பிரதான தீர்ப்புகளை வழங்கியவராவார். 2005ல் அவர் தலைமையிலான உயர் நீதிமன்றம், புனர்வாழ்வு நிதியை பயன்படுத்த புலிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வழிவகுக்கும், சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை (பொதுக் கட்டமைப்பு) செல்லுபடியற்றதாக பிரகடனம் செய்தது. அரசாங்கத்தை வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கக்கோரும் தீர்ப்பு ஒன்றையும் 2006ல் சில்வா வழங்கினார். இந்த மாகாணம் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட சலுகையாக 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்டது. இராஜபக்ஷ அரசாங்கம் அரசியலமைப்புக்கும் மற்றும் முழு சட்ட வரம்புக்கும் புறம்பாக இயங்குகிறது என்பதையிட்டு கொழும்பு அரசியல் ஸ்தாபன தட்டினரின் மத்தியில் உள்ள கவலையையே சில்வாவின் அண்மைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. சட்ட ஒழுக்கங்களை கைவிடுவதானது முதலாளித்துவ ஆட்சியை முன்னறிந்திராத நிலைமைக்குள் தள்ளிவிடும் என்பதையிட்டு அவர்கள் பீதியடைந்துள்ளனர். தனது உரையில் சில்வா எச்சரித்ததாவது: "சட்டத்தால் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பை தமிழர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமான சட்ட மற்றும் சமூகத் திட்டம் இல்லாவிட்டால், ஆயுதப் போராட்டமாக இல்லாவிட்டாலும், இன்னுமொரு எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன." சில்வா தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை அல்லது மிகவும் பரந்தளவில் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கவில்லை. மாறாக, ஜனநாயக உரிமைகளை பகிரங்கமாக அலட்சியம் செய்வதும், மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் எதேச்சதிகார வழிமுறைகளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வெகுஜனங்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பை கிளப்பிவிடும் என்ற அச்சத்தை அவரது குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்கும் இராஜபக்ஷ, தன்னைச் சூழவுள்ள இராணுவ-அரசியல் குழுவின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளார். இராஜபக்ஷவின் சகோதரர்கள், இராணுவ ஜெனரல்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் குழுவில் அடங்குவர். அவர்கள் மேலும் மேலும் அரசியலமைப்பையும் பாராளுமன்றத்தையும் மற்றும் சட்டத்துறையையும் அலட்சியம் செய்து சட்டத்துக்கு மேலாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே எரிபொருள் விலையை குறைப்பது மற்றும் அரசியலமைப்புச் சபை ஒன்றை நியமிப்பது உட்பட பல உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை இராஜபக்ஷ சாதாரணமாக நிராகரித்துள்ளார். இந்த அரசியலமைப்புச் சபையானது ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் அரசியலமைப்பில் கோரப்பட்டுள்ள ஒரு சபையாகும். அரசாங்க-சார்பு கும்பல்களும் பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைகளும் தண்டனையிலிருந்து விலக்களிப்புடன் செயற்படுகின்றன. அவை கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளையும் செய்துவருகின்றன. அரசாங்கத்தை அல்லது இராணுவத்தை கொஞ்சமேனும் விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு, முடமாக்கப்பட்டு, தடுத்து வைக்கப்படுகின்றனர் அல்லது அச்சுறுத்தப்படுகின்றனர். இப்போது இன்னும் முன்செல்லும் அரசாங்கம், ஆளும் வர்க்கம் பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் ஜனநாயக மற்றும் சட்ட ஒழுக்கங்கள் அனைத்தையும் மீறி இலட்சக்கணக்கான மக்களை தடுத்து வைத்துள்ளது. முன்னெப்போதுமில்லாத இத்தகைய அபிவிருத்திகள் முழு தொழிலாள வர்க்கத்துக்கும் தெளிவான எச்சரிக்கையாகும். பிரமாண்டமான இராணுவச் செலவு மற்றும் பூகோள பொருளாதாரப் பின்னடைவால் உக்கிரமாகி வரும் பொருளாதர நெருக்கடியின் சுமைகளை திணிக்கும் போது சமூகப் போராட்டங்கள் வெடிக்கும் என்பதையிட்டு அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ள இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், "தேசத்தைக் கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுத்துள்ளதோடு அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் உழைக்கும் மக்களுக்கு எதிராக பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை. |