World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைSri Lankan police interrogate doctors who witnessed war crimes யுத்தக் குற்றங்களுக்கு சாட்சியாக உள்ள வைத்தியர்களை இலங்கை பொலிஸ் விசாரிக்கிறது By Nanda Wickramesinghe இலங்கை அரசாங்கமானது துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்தியமூர்த்தி, வி. சண்முகராஜா ஆகிய மூன்று வைத்தியர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்கின்றது. இந்த வைத்தியர்கள் இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்குண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க தமது உயிரை பணையம் வைத்தவர்களாவர். பெரும்பாலான தொண்டு ஊழியர்களும் பத்திரிகையாளர்களும் யுத்த வலயத்துக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்த நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, சுற்றி வளைக்கப்பட்டிருந்த சிறிய பிரதேசத்துக்குள் கால் மில்லியனுக்கும் அதிகமான சிவிலியன்கள் எதிர்கொண்ட கொடூரமான நிலைமைகள் பற்றி அரைகுறை விளக்கத்தையேனும் தந்தவர்கள் இந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளே. இவர்களது சாட்சிகள், பொதுமக்கள் வாழும் பிரதேசங்கள் மீது ஷெல் வீசி, இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான நேரடி ஆதாரங்களாகும். கடைசி வாரங்களில் மோதல்கள் நடந்துகொண்டிருந்த போது, இவர்களது இடைத்தங்கல் மருத்துவ நிலையங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டன. இந்த மூன்று வைத்தியர்களும், இராணுவம் புலிகளின் கடைசி பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான பொது மக்களுடன் இடம்பெயர்ந்தனர். அவர்கள் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் தனது சொந்தக் குற்றங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, இந்த வைத்தியர்கள் புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டியுள்ளதோடு அவர்களது மதிப்பீடுகளை ஒரு பிரச்சாரம் என கண்டனம் செய்கின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மட்டுமே அவர்களைப் பார்க்க வழியிருக்கின்றது. "புலிகளுடன் ஒத்துழைத்துள்ளார்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே" இந்த வைத்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பி.பி.சி. க்கு கடந்த வாரம் தெரிவித்தார். "விசாரணைகள் எதை வெளிப்படுத்தும் என எனக்குத் தெரியாது, ஆனால், சில வேளைகள் அரசாங்கப் படைகளை ஷெல் வீசின மற்றும் ஆஸ்பத்திரிகளை இலக்கு வைத்தன மற்றும் ஷெல் வீச்சுக்களின் விளைவாக சிவிலியன்கள் கண்மூடித் தனமாக இலக்கு வைக்கப்பட்டார்கள் என்ற கதைகளை முன்வைத்து முழு சூழ்ச்சிக்கும் பங்காளியாகவும் இருக்கலாம்," என அவர் மேலும் கூறினார். "ஒரு சூழ்ச்சி" என சமரசிங்க குறிப்பிடுவது என்னவெனில், இலங்கை அரசாங்கமும் இராணுவமும் பொறுப்புச் சொல்லவேண்டிய அட்டூழியங்கள் பற்றி சாட்சிகள் குவிந்து வரும் ஆதாரங்களையே ஆகும். இராணுவமும் மற்றும் புலிகளும் இழைந்த யுத்தக் குற்றங்கள் பற்றி ஒரு சுயாதீன விசாரணையை தடுப்பதற்கு இந்த மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொழும்பு முன்வைத்த பிரேரணையை சீனா, ரஷ்யா, மற்றும் இந்தியாவும் ஆதரித்தன. புலிகள் மீதான கடைசி இராணுவத் தாக்குதலில் ஜனவரி பிற்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டு ஐ.நா. அறிக்கையொன்று கசிந்துள்ளது. பொது மக்கள் உயிரிழந்ததற்கான குற்றச்சாட்டை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் புலிகள் மீது சுமத்தும் அதே வேளை, செய்மதிப் படங்களும் மற்றும் உயிர்தப்பியவர்களின் கருத்துக்களும், இராணுவம் சிவிலியன்கள் நிறைந்திருந்த பிரதேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்ற அரசாங்கத்தின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளன. ஐ.நா. தரவுகளையும் விமானத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் அடிப்படையாக் கொண்ட ஏனைய மதிப்பீடுகள் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. "பாதுகாப்பு வலயங்கள்" என இராணுவம் சிடுமூஞ்சித்தனமாக உரிமைகோரிய, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசத்தில் இருந்த இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்களின் அவநம்பிக்கையான நிலைமையை இந்த மூன்று வைத்தியர்களும் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் அம்பலப்படுத்துகின்றன. உணவும் தண்ணீரும் மிகக் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போதாத மருத்துவ விநியோகங்களோடு, பயங்கரமான நிலைமையில் இருந்த நூற்றுக்கணக்கான காயமடைந்த நோயாளர்களை ஒவ்வொரு நாளும் சமாளிக்க இந்த டாக்டர்கள் போராடினர். மே 13 அன்று, இடைத்தங்கல் ஆஸ்பத்திரி இரண்டு நாட்களில் இரண்டாவது தடவையாக தாக்கப்பட்டது என டாக்டர் வரதராஜா தெரிவித்ததாக ஏஜன்சி பிரான்ஸ் பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு மருத்துவ உதவியாளர் உட்பட குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டிருந்ததோடு மேலும் 60 பேர் காயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதல் அதே மாதத்தில் நடந்த மூன்றாவது தாக்குதல் என டாக்டர் வ. சண்முகராஜா அசோசியேடட் பிரஸ்சுக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். இறுதியாக, வைத்தியர்கள் வெளியேறத் தள்ளப்பட்டனர். அங்கிருந்து வேலை செய்வது ஆகவும் ஆபத்தானதாக இருந்ததால், அந்த ஆஸ்பத்திரி கைவிடப்பட்டது என அசோசியேடட் பிரஸ் தெரிவித்திருந்தது. மருத்துவ பராமரிப்புக்காக ஏங்கியவாறு மோசமாக காயமடைந்த 400 பேர் அங்கிருந்தனர். ஒரு மருத்துவ ஊழியர் தெரிவித்ததாவது: "விடுதிகளைப் பார்க்கும் போதும் மற்றும் பொது மக்கள் அழுவதைக் கேட்கும் போதும், உங்களால் அழிவை மட்டுமே உணர முடியும்". மே 18 அன்று இராணுவம் புலிகளின் கடைசி நிலையையும் கைப்பற்றியது. ஓமந்தைக்கு அருகில் இடம்பெயர்ந்தவர்களை பரிசோதிக்கும் ஒரு இடத்தில் மே 15 அன்று இந்த வைத்தியர்களைக் கண்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அவர்களது தலைவிதி பற்றி கேள்விகள் குவிவதை தடுப்பதன் பேரில், அவர்கள் இருக்கும் இடம் தெரியாது என இராணுவத் தளபதி மறுத்துவிட்டார். ஆயினும், மே 20 அன்று, ஒரு செஞ்சிலுவைச் சங்க குழு அதே பகுதியில் அவர்களை கண்டது. பின்னர் இராணுவம் அவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்து அவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள் உறவினர்களுமாக அனைவரும் இந்த மூன்று வைத்தியர்களைப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என ஜூன் 3ம் திகதி செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் சரசி விஜேரட்ன உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். அவர்களது உடல்நலம் மற்றும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்ட போது, இலங்கை அதிகாரிகளுடனான ஒரு உடன்படிக்கையின்படி, செஞ்சிலுவைச் சங்கம் மெளனத்தைக் கடைப்பிடிக்கத் தள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இன்டிபென்டன்ட் சஞ்சிகைக்கு கருத்துத் தெரிவித்த, டாக்டர் சண்முகராஜாவின் மைத்துனர் சதிஸ் குமார், வைத்தியருக்காக சில ஆடைகளை கொடுத்து விட்டுச் செல்ல முடியும் என்றும் "அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை" என்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்தாக கூறினார். "பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு" எதிராக சரீரரீதியான நிர்ப்பந்தங்களைக் கொடுத்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று, பின்னர் அவற்றை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு இழிபுகழ்பெற்றது என்ற வகையில், சித்திரவதைகள் பற்றிய கவலைகள் மிகவும் உண்மையானதாகும். இந்த மூன்று வைத்தியர்களைப் பொறுத்தளவில், அவர்கள் முன்னர் கூறியதை மறுதலிக்க வைக்கும் தேவை அரசாங்கத்துக்கு பெருமளவில் உள்ளது. குமார் அந்த பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "அரசாங்கம் அவர்கள் மீது குற்றஞ்சாட்டும் என்றால், எங்களால் சட்டத்தரணிகளை அணுக முடியும். பொது மக்களுக்கு உதவுவதோடு அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் உயிர்ச்சேத எண்ணிக்கைகளை வழங்கியிருக்கலாம், அது குற்றமா? எவ்வளவு பேர் காயமடைந்தார்கள் என்பது தெளிவானது -அவர்கள் அனைவரும் இப்போது முகாங்களில் இருக்கின்றார்கள்." எவ்வாறெனினும், மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க, இறுதியாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதற்கு முன் வைத்தியர்களுடனான விசாரணை ஒரு வருடத்துக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ இழுபடலாம் என தெரிவித்தார். நாட்டின் கொடூரமான அவசரகாலச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேக நபர்களை ஏறத்தாழ குற்றச்சாட்டுக்கள் இன்றி காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியும். புலிகள் "அவர்களது தலையில் கைத்துப்பாக்கிகளை" வைத்துக்கொண்டு மிரட்டியதன் விளைவே அவர்கள் சர்வதேச ஊடங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் என சமரசிங்க பிரகடனம் செய்தார். "ஆஸ்பத்திரி ஒன்றின் மீது நாங்கள் தாக்குதல் தொடுத்துவிட்டதாக பெருமளவு பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த மூன்று வைத்தியர்களாலேயே அவை மிகவும் பிரசித்தமாகியது. அவர்கள் இப்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில், தடுப்புக் காவல் உத்தரவில் உள்ளனர். அவர்கள் விரைவில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவார்கள். உண்மையில் நடந்தது என்ன என்பதை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்," என அவர் மேலும் தெரிவித்தார். சமரசிங்கவின் கருத்துக்கள் கேள்விகளை மட்டுமே எழுப்புகிறது: அவர்களது முன்னைய கருத்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கூறப்பட்டவை என்றால், வைத்தியர்களை ஏன் தடுத்து வைக்கவேண்டும்? பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதை ஏன் தடுக்க வேண்டும்? உண்மை என்னவெனில், இந்த வைத்தியர்கள் ஒரு வருடத்துக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அடுத்தவர்களுடன் தொடர்பு இன்றி தடுத்து வைக்கப்படவுள்ளார்கள் என்பது, அரசாங்கம் பெரும் விவகாரம் ஒன்றை மறைக்க முயற்சிக்கின்றது என்பதையே காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளது போல், டாக்டர் சத்தியமூர்த்தி கொழும்பில் உள்ள குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டதாக நேற்று பி.பி.சி. தெரிவித்தது. அவர் குறுகிய நேரம் நீதிமன்றத்தில் இருந்த போது எதுவும் சொல்லவில்லை. அவர் மீண்டும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் விடப்பட்டார். |