World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The decline of social democracy

சமூக ஜனநாயகத்தின் சரிவு

By Peter Schwarz
10 June 2009

Use this version to print | Send feedback

கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களின் மிக குறிப்பிடத்தக்க நிகழ்வு வியத்தகு முறையில் சமூக ஜனநாயகம் சரிவுற்றதாகும்.

ஐரோப்பாவில் சராசரியாக சமூக ஜனநாயகக் கட்சிகள் 22 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள்ளன; இது 2004 முந்தைய ஐரோப்பிய தேர்தலைவிட 6 சதவிகிதம் குறைவு ஆகும். 43 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இதன் பொருள் வாக்காளர்களில் பத்தில் ஒருவருக்கும் குறைவாகத்தான் இக்கட்சிகளுக்கு வாக்களித்தனர் என்பதாகும்.

சராசரி ஐரோப்பிய புள்ளிவிவரங்கள் சரிவின் உண்மைத் தன்மையை சிதைக்கின்றன. பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்களை தலைமை ஏற்று நடத்தி வந்துள்ள அல்லது முக்கிய எதிர்க்கட்சிகளாக செயல்பட்டுவந்துள்ள மேற்கு ஐரோப்பாவில் --இந்த கட்சிகள் இப்பொழுது ஆட்சியில் இருந்தாலும், எதிர்த்தரப்பில் இருந்தாலும் அவர்களுடைய இழப்பு மிக அதிகம் ஆகும்.

பிரித்தானியாவில் கடந்த 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து வரும் தொழிற்கட்சி, அதன் அதிகாரம் மிகக்குறைந்த தன்மையில் 16 சதவிகிதம் சரிவுற்றதைக் காண்கிறது--இது மிகத் தீவிர வலது சாரி UK Independence Party பெற்றுள்ளதைவிட குறைவு ஆகும். ஸ்பெயினில் ஆளும் சோசலிஸ்ட் கட்சி ஐந்து சதவிகிதப் புள்ளிகளை இழந்து வலதுசாரி மக்கள் கட்சிக்கு பின் வந்துள்ளது. ஜேர்மனியில், 11 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மிக மோசமான நிலையில் 21 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. போர்த்துக்கலில் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கான ஆதரவு 45ல் இருந்து 27 சதவிகிதம் குறைந்துவிட்டது.

சோசலிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக கடந்த ஏழு ஆண்டுகளாக இருக்கும் பிரான்சில், கட்சி 17 சதவிகித வாக்கைத்தான் பெற்றது--ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது 12 சதவிகித புள்ளிகள் குறைவு ஆகும். இத்தாலியில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற "இடது" கட்சிகளுக்கு வழித்தோன்றலான ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு 31ல் இருந்து 26 சதவிகித புள்ளிகள் குறைந்துவிட்டது. டென்மார்க்கில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் 12 சதவிகிதப் புள்ளிகளை இழந்தனர்; மொத்தம் 21 ஐத்தான் பெற்றனர். டச்சு தொழிற் கட்சிக்கான வாக்குகள் பாதியாக 12 சதவிகிதம் ஆக போயின; ஆஸ்திரியாவில் இது 33 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதம் ஆக குறைந்துவிட்டது.

இந்தச் சரிவு 1930 களுக்கு பின்னர் மிகக் கடுமையான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தேர்தல் நடைபெற்றது என்பதை கருத்தில் கொள்ளும்போது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். வேலையின்மை விரைவாகப் பெருகிக் கொண்டிருக்கையில், மக்களின் பரந்த அடுக்குகளின் வாழ்க்கைத் தரங்கள் கணிசமாக மோசமாகியிருக்கையில், வாக்காளர்கள் சமூக ஜனநாயக வாதிகளிடம் இருந்து கூட்டம் கூட்டமாக விலகிவிட்டனர்.

இந்த மாற்றத்திற்கான காரணம் சமூக ஜனநாயகக் கட்சிகளின் அரசியல் மற்றும் தன்மையில் காணப்படலாம்; இவை பல ஆண்டுகளாக மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போல்தான் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரு தசாப்தங்களில் அவை தொழிற்சங்கங்களின் நெருக்க உடன்பாட்டுடன், பழமைவாத அரசாங்கங்களால் முயற்சிக்கப்பட்ட பொழுது பரந்த எதிர்ப்பை தூண்டிவிட்ட ஒரு வகை சமூகத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தங்களது செல்வாக்கை பயன்படுத்துகின்றனர்.

பிரிட்டனில் டோனி பிளேயரின் தலைமையில் தொழிற் கட்சி, கன்சர்வேடிவ் கட்சியின் "இரும்பு சீமாட்டி" மார்கரெட் தாட்சரின் வேலைத்திட்டத்தைத்தான் செயல்படுத்தினார்; அதேவேளை ஜேர்மனிய SPD, ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமயில் பொதுநல எதிர்ப்பு Hartz சட்டங்களை இயற்றி முந்தைய அனைத்து கன்சர்வேட்டிவ் அரசாங்கங்களையும் விட சமூக உரிமைகள் மீது கூடுதலான தாக்குதலை நடத்தியது.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் செவ்வாயன்று ஒரு தலையங்கத்தில் முதலாளித்துவத்திடம் மக்கள் பெருகிய முறையில் ஏமாற்றத்தைக் கண்டுள்ள நிலையில், சோசலிசத்துடன் வரலாற்றுத் தொடர்புடைய கட்சிகளின் தேர்தல் இழப்பு என்ற ஒவ்வாத் தன்மையை சுட்டிக்காட்டியுள்ளது. உண்மையில் சமூக ஜனநாயக மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையே பொருளாதார, சமூகக் கொள்கைகளில் தீவிர வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதை இது சரியாக குறிப்பிட்டுள்ளது. செய்தித்தாள் எழுதியது " 'முதலாளித்துவத்தின் முடிவு என்பது ஒரு தீவிர கருத்தாக எழுப்பப்பட்டிருக்கும் நேரத்தில், முதலாளித்துவத்திற்கு பதிலாக சோசலிசத்தை கொண்டுவர வேண்டிய வரலாற்றுப் பணி உடைய கட்சிகள் எந்த ஆளும் தத்துவத்தையும் கொடுக்கவில்லை. இவற்றின் நெருக்கடிக்கு எதிரான கொள்கைகள் அவர்களுடைய போட்டியாளர்களிடம் இருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை."

இன்று சமூக ஜனநாயக கட்சிகளில் தொழிலாளர்கள் எவரும் இல்லை; கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் அவர்கள் பெரிதும் குறைந்துவிட்டனர். இக்கட்சிகளில் சேர்பவர்களில் பலர் அரசியல் இலக்குகளை அடைவதற்கு என்று இல்லாமல் தங்கள் சொந்த வாழ்க்கைப் போக்கை உயர்த்திக் கொள்ளுவதற்குத்தான் சேர்கின்றனர். சந்தர்ப்பவாதம், கொள்கை சிறிதும் இல்லாமல் இருப்பது, தொழிலாள வர்க்கத்திடம் திமிர்த்தனத்தை காட்டுவது ஆகியவை இந்த அமைப்புக்களுள் முன்னேற முக்கியமான முன் தேவைகளாக உள்ளன.

ஜேர்மனியில், SPD யில் வாழ்க்கைப் போக்கு என்பது பொதுப்பணி அல்லது தனியார் பொருளாதாரத்தில் நல்ல ஊதியம் கிடைக்க வசதியளிக்கும் என்றுதான் கருதப்படுகிறது. முன்னாள் SPD தலைவரான ருடோல்ப் ஷார்பிங் இன்று ஒரு பெரிய வணிக ஆலோசகராக உள்ளார்; இவருடைய வாடிக்கையாளர்களில் ஒதுக்கு நிதிய அமைப்பான Cerberus மற்றும் பில்லியனர் மரியா எலிசபத் ஷாப்ளர் ஆகியோர் உள்ளனர்.

பல மில்லியன் தொழிலாளர்கள் சமூக ஜனநாயகத்திற்கு ஒரு பொருளாதார நெருக்கடிக் காலத்தில் தங்கள் முதுகைக் காட்டுகிறார்கள் என்றால், இது ஒன்றைத்தான் குறிக்கிறது: அவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் இக்கட்சிகளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே அது.

தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தை பரந்த முறையில் நிராகரித்ததையும் வெளிப்படுத்துகின்றன. பாராளுமன்றத்தின் பணி ஒரு போலித்தன ஜனநாயக மறைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுக்கும் அன் 40,000 நல்ல ஊதியம் பெறும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரத்துவத்தினருக்கும் கொடுப்பது ஆகும்; அவை இதற்கு ஈடாக பெரும் படையென உள்ள வணிக செல்வாக்கு நாடுபவர்களின் குரலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.

ஏராளமான வாக்காளர்கள், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தில் இருந்து வாக்குகளை போடவில்லை. தேர்தலில் மிகப் பெரிய கட்சி வாக்குப் போடாதவர்கள் கட்சியாகும். 43 சதவிகிதத்தினர்தான் வாக்குப்போட்டனர் என்ற நிலையில் வாக்காளர்கள் பங்கு, முந்தைய மிகக்குறைவான 2004 ஆண்டுப் பதிவை விட 2.5 சதவிகிதப் புள்ளிகள் குறைவு ஆகும். ஹாலந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது.

இதையொட்டி வந்துள்ள அரசியல் வெற்றிடம் கன்சர்வேட்டிவ் மற்றும் வலதுசாரிக் கட்சிகளால் பயன்படுத்தப்பட்டன. இது பல வர்ணனையாளர்கையும் ஐரோப்பாவில் "வலதிற்கு" மாற்றம் என்று கூறவைத்துள்ளது. அத்தகைய முடிவு தேவையற்றது, மேலெழுந்தவாரியானது. வலதுசாரிக் கட்சிகள் சமூக ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவுச் சரிவு மற்றும் மிகக் குறைவான வாக்குப் பதிவை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அவை தங்கள் வாக்குகளை அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை; சில இடங்களில் அவற்றின் ஆதரவும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.

தீவிர வலதுசாரிகள், நாட்டுவெறிக் கட்சிகள் ஆகியவையும் கணிசமாக ஆதாயம் அடைந்துள்ளன-- ஹாலந்தில் Geert Wilders' Freedom Party (17 சதவிகிதம்), இங்கிலாந்தின் Independence party (17 சதவிகிதம்), பிரிட்டிஷ் நேஷனல் கட்சி (6 சதவிகிதம்)--இது குறைந்த வாக்காளர் பதிவான 35 சதவிகிதத்தை இரு நாடுகளிலும் கொண்டது; அவற்றின் முடிவு கூறுவதை விட குறைந்த ஆதரவுதான் அவற்றிற்கு உண்டு.

ஐரோப்பிய தேர்தல்களில் வெளிப்படையாவது தீவிர சமூகப் பிளவு ஆகும். இதுவரை ஆளும் வர்க்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சிளையும் தொழிற்சங்கங்களையும் சமூகப் போராட்டங்களை நசுக்குவதற்கு நம்ப முடிந்தது. இந்த அமைப்புக்களின் சரிவு என்பதின் பொருள் வருங்காலத்தில் வர்க்க மோதல்கள் இன்னும் வெளிப்படையான, வெடிப்புத் தன்மையை கொண்டிருக்கும் என்பதாகும்.

இத்தகைய இறுதி நிலைக்குத் தொழிலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முன்முயற்சி ஆளும் வர்க்கத்திடம் மட்டும் விடப்பட முடியாது. தீவிர வலது குழுக்களின் தேர்தல் வெற்றிகள் ஒரு எச்சரிக்கை ஆகும். ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு, ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட அதன் சொந்தக் கட்சி தேவையாகும்.