World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: JVP vehemently opposes any concessions to Tamils

இலங்கை: ஜே.வி.பி. தமிழர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை தீவிரமாக எதிர்க்கிறது

By Wije Dias
11 June 2009

Use this version to print | Send feedback

வியாழக்கிழமை ஆற்றிய உரை ஒன்றில், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் சோமவன்ச அமரசிங்க, தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்குவதன் மூலம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவத்தின் வெற்றியைக் "காட்டிக் கொடுக்க" வேண்டாம் என இலங்கை அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கவாத பண்பை சீர்திருத்தும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது. இந்தப் பண்பை பாதுகாக்கவே புலிகளுக்கு எதிரான நீண்டகால உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரத்தைப் பரவலாக்குவது சம்பந்தமான ஒரு "அரசியல் தீர்வு" பற்றிய அவரது தெளிவற்ற அறைகூவல், தமிழ் முதலாளித்துவத்தின் பகுதிகளின் ஆதரவை வெல்வதை இலக்காகக் கொண்டதே அன்றி, தமிழர்களின் உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதல்ல.

2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவைத் தேர்ந்தெடுக்க உதவிய ஜே.வி.பி., எதிர்க் கட்சியில் இருக்கும் அதே வேளை, அவரது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை முழுமையாக ஆதரித்தது. யுத்தத்தை புதுப்பித்ததில், இராஜபக்ஷ ஜே.வி.பி. யின் சிங்கள பேரினவாத வாய்வீச்சுக்களின் பலனை பெருமளவில் பயன்படுத்திக்கொண்டார். ஜே.வி.பி. அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவ செலவை ஆதரித்ததோடு தொழிலாளர்களின் போராட்டங்கள் யுத்த முயற்சிகளை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றன என பிரகடனம் செய்த போதெல்லாம் ஜே.வி.பி. யின் தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் போராட்டங்களை கீழறுத்தன. இப்போது, இராணுவத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்வதன் பேரில் இராஜபக்ஷ முன்வைக்கும் இராணுவவாத இனவாத வாய்வீச்சுக்களை விஞ்சுவதற்கு முயற்சிப்பதன் மூலம், ஜே.வி.பி. தனது சரிந்துவரும் ஆதரவை பெருப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றது.

கடந்த வாரம் ஜே.வி.பி. யின் கூட்டத்தில் அமரசிங்க தெரிவித்ததாவது: "எங்களால் பாதுகாப்புப் படைகளைப் போல் போராட முடியாது. ஆனால், இராணுவ வெற்றியின் மூலம் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்தை நிராகரிப்பதன் மூலம் தொடர்ந்தும் தேசத்தைக் காட்டிக்கொடுத்தால் நாம் அரசாங்கதுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கத் தள்ளப்படுவோம்." புலிகளுக்கூடாக இலங்கைக்கு எதிராக ஒரு சதி யுத்தத்தை முன்னெடுத்ததாக இந்தியாவைத் தாக்கிய பின்னர், "அரசாங்கம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளதோடு [அரசியலமைப்பில்] 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளதற்கும் மேலான ஒன்றின் அடிப்படையில் அதிகாரத்தைப் பரவலாக்க தயாராகின்றது," என பிரகடனம் செய்தார். அது நடக்க ஜே.வி.பி. அனுமதிக்காது என அமரசிங்க எச்சரித்தார்.

சிங்கள மேலாதிக்கவாத சிந்தனையின் தர்க்கத்தில் இந்திய-விரோத பேரினவாதம் எப்போதும் மத்திய இடம் வகித்துள்ளது. மாவோவாதம், குவேராவாதம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தின் தேர்ந்தெடுத்த கலவையின் அடிப்படையில் 1960களில் உருவாக்கப்பட்ட ஜே.வி.பி., தமிழர்களை "இந்திய ஏகாதிபத்தியத்தின்" ஐந்தாம் படை என கண்டனம் செய்தது. இந்தியா, தென்னிந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் அழுத்தத்தின் கீழ் ஆரம்பத்தில் புலிகளுக்கும் ஏனைய தமிழ் பிரிவினைவாத குழுக்களுக்கும் உதவிகளை வழங்கிய போதிலும், புலிகளின் போராட்டம் இந்தியாவில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்ட அச்சுறுத்தியதை அடுத்து அது துரிதமாக மாற்றமெடுத்தது.

1987ல், புலிகளின் கொரில்லா யுத்தம் விரிவடைந்த நிலையில், "இந்திய-இலங்கை" உடன்படிக்கையை கைச்சாத்திட்டு புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்காக தீவின் வடக்குக்கு அமைதிப் படையை அனுப்பியதன் மூலம் இந்தியா இலங்கை அரசாங்கத்தின் உதவிக்கு வந்தது. அதே சமயம், இந்திய தலையீட்டுக்கு எதிராகவும் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பகிரவும் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கும் எதிராக ஜே.வி.பி. "தேசத்தைக் காக்கும்" பிற்போக்கு பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தது.

அதன் தேசப்பற்றுக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்த நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிலாளர்களையும் ஜே.வி.பி. யின் பாசிச கும்பல்கள் படுகொலை செய்தன. அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய-இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களையும் ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்தனர்.

1990களில், ஜே.வி.பி. உத்தியோகபூர்வமாக அதன் "ஆயுத போராட்டத்துக்கு" முடிவுகட்டியதோடு ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளுக்கு விரோதமாக குவிந்த எதிர்ப்புக்களுக்கு ஒரு பயனுள்ள பாதுகாப்பு வாயிலாக அரசியல் நீரோட்டத்துக்குள் ஜே.வி.பி. வரவேற்பைப் பெற்றது. தனது சோசலிச வாய்வீச்சுக்களையும் கைவிட்ட ஜே.வி.பி., இன்னமும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் பக்கம் நிற்பதாக காட்டிக்கொள்ளும் அதே வேளை, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் மேலும் சீரழிவுகளை ஏற்படுத்திய ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தில் 2004ல் பங்கெடுத்துக் கொண்டது.

இந்திய-விரோத கூச்சலுக்கு அமரசிங்க புத்துயிர்பு கொடுப்பதானது ஜே.வி.பி. யின் குன்றிவரும் நல்வாய்ப்புகளை புதுப்பிப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியே அன்றி வேறொன்றும் அல்ல. அது, குறிப்பாக மோதலில் சிக்கியிருந்த இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களின் அவலத்தை தணிக்க யுத்த நிறுத்தமொன்றுக்காக இந்தியா விடுத்த மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கை தொடர்பாக கசப்புடன் சீற்றமடைந்த இராணுவ மற்றும் அரச இயந்திரம் உட்பட அதி தீவிரவாத சிங்கள பேரினவாதத் தட்டுக்களையே குறிப்பாக இலக்கு வைத்துள்ளது. உண்மையில், புது டில்லி இராணுவத் தளபாடங்களையும் பயிற்சிகளையும் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்துக்கு முழு ஆதரவும் கொடுத்தது.

வடக்கு கிழக்குக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் எந்தவொரு முயற்சியையும் அமரசிங்க எதிர்ப்பதானது, தமது தமிழ் சமதரப்பினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்படுவதை விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் சிங்கள ஆளும் கும்பலின் அதே தட்டுக்களுக்கே அழைப்பு விடுக்கின்றது. "தேசத்தை முன்கொண்டு செல்ல" அது மே 27 அன்று வெளியிட்ட 14 அம்ச வேலைத்திட்டத்தில், ஜே.வி.பி. மேலும் முன்னேறி, "இனப் பிரச்சினையை" தீர்ப்பதற்காக அனைத்துக் கட்சிக் குழுவால் முன்வைக்கப்பட்ட சோடிப்புக்களைக் கூட நிராகரிக்க அழைப்பு விடுக்கின்றது.

"தேசிய ஒருமைப்பாடு" மற்றும் "சகல பிரஜைகளுக்கும் சம வாய்ப்புகள்" என்ற பெயரில் "பொலிஸ், காணி, நிதி மற்றும் மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரங்களையும் வழங்கும் சகல அதிகாரப் பரவலாக்கல் பிரேரணைகளையும் ஜே.வி.பி. யின் வேலைத்திட்டம் நிராகரிக்கிறது. அரசாங்கத்தின் பேச்சில் கடைசியாக உள்ள இத்தகைய வசனங்கள், இதுகாறும் உள்ள நிலையை பேணுவதையும் மற்றும் முதலாவதாக யுத்தத்துக்கு வழிவகுத்த, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் தசாப்தகாலங்களாக கட்டி வளர்த்த திட்டமிட்ட தமிழர்-விரோத பாரபட்சங்களை பேணுவதையுமே சாதாரணமாக அர்த்தப்படுத்துகிறது.

இராணுவத் அதிகாரிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுத்த அமரசிங்க, இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களால், கடைசி மாத மோதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டது சம்பந்தமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச ரீதியில் விடுக்கப்படும் வேண்டுகோள்களை கண்டனம் செய்தார். "யுத்தக் குற்றங்களுக்காக அரசாங்கத்தில் இருந்தோ அல்லது இராணுவத்தில் இருந்தோ ஒருவரை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வதானால், அது எங்களது பிணங்களின் மீதே செய்ய முடியும்," என அவர் கூறினார்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களை விமர்சித்த அமரசிங்க பிரகடனம் செய்ததாவது: "புலிகளை தோற்கடிப்பதில் பெரும் பாத்திரம் ஆற்றியவர்களை பலர் மறந்துவிட்டனர்... பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரான் போன்ற நேச நாடுகளின் பங்களிப்பும் மறக்கப்பட்டுவிட்டது." ஜே.வி.பி. இன்னமும் சீன ஸ்டாலினிச கம்யூனிசக் கட்சியுடன் தொடர்புகளைப் பேணுவதோடு சீன மலிவு உழைப்புக் களத்தை இலங்கைக்கான வடிவமாக தூக்கிப்பிடித்து வரும் நிலையில், சீனாவைப் பற்றிக் கூறியது குறிப்பிடத்தக்கதாகும். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கிய சீனா, இப்போது இந்தியா உட்பட அதன் எதிரிகளின் செலவில் கொழும்பில் தனது அரசியல் செல்வாக்கை பெருப்பித்துக்கொள்வதன் பேரில் யுத்தத்துக்கு அது வழங்கிய வரம்பற்ற ஆதரவைப் பயன்படுத்திக்கொள்கிறது.

அதே கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு" தமது கட்சி ஆதரவு வழங்கியதையிட்டு பெருமை பாராட்டிக்கொண்டார். "பயங்கரவாதத்துக்கு" எதிரான வெற்றி பற்றி நூறு பக்க புத்தகம் ஒன்றை எழுதினால் அதில் 75 பக்கத்தில் மட்டுமே அரசாங்கத்தின் பெயர் இடம்பெறும். பயங்கரவாதத்தைப் பற்றி எப்பொழுதும் தெளிவான எண்ணம் கொண்டிருந்த ஜே.வி.பி., பிரிவினைவாத போராட்டத்துக்கு எதிராக அதன் தொடக்கத்தில் இருந்தே போராடி வந்துள்ளது, என அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை வெளியிட்ட ஆசிரியர் தலைப்பு, அரசாங்கத்தை ஸ்திமற்றதாக்குவதற்கு எதிராக ஜே.வி.பி. யை எச்சரித்தது. இராணுவத்தின் வெற்றியை அடுத்து அமரசிங்கவுக்கு இராஜபக்ஷ எடுத்த தொலைபேசித் தொடர்பு, "ஜே.வி.பி. யின் தற்பெருமையை உப்பச் செய்திருக்க" வேண்டும் என தெரிவித்துள்ளது. "சகல சமூகத்தாலும் ஏற்றுகொள்ளக் கூடிய ஒரு சாத்தியமான அரசியல் சிகிச்சையைத் தேட" இந்த வெற்றி இராஜபக்ஷவுக்கு ஒரு சந்தர்ப்பமாகும் என பிரகடனம் செய்த ஆசிரியர் தலைப்பு, "முரண்பாடுகளை இலங்கையின் மீது சுமத்துவதற்கான வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குவதன் மூலமே இந்த சந்தர்ப்பத்தில் அவரை முன்நகர வைக்க முடியும்," என அது எச்சரித்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் ஆபத்தான நிலைமையிட்டு மிகவும் விழிப்புடன் இருப்பதோடு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற, நகர்ப்புற வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது பெரும் தாக்குதலுடன் முன்செல்ல இராஜபக்ஷவை நெருக்கிவரும் ஆளும் வர்க்கத்தின் தட்டுக்களுக்கே ஐலண்ட் கருத்துக் கூறுகிறது. இராஜபக்ஷ மீது அக்கறை காட்டுவது, உழைக்கும் மக்கள் மீது புதிய பொருளாதார சுமைகளை திணிக்க முயற்சிக்கையில் அவரது கூட்டரசாங்கத்துக்கான ஆதரவு துரிதமாக சரியும் என்பதை அங்கீகரிக்கின்றது. ஜே.வி.பி. யின் மக்கள்வாத ஆர்ப்பாட்டங்கள் சமூக அமைதியின்மையை ஊக்குவிக்கும் என அந்த செய்தித்தாள் அஞ்சுகிறது.

அமைச்சரவையின் அளவைக் குறைக்கக் கோரும் ஜே.வி.பி. யின் 14 அம்ச திட்டம், மோசடிக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு கொண்டுவருமாறும் கோருகிறது. பொருளாதார தேசியவாதம் என்ற பிற்போக்கு முன்நோக்குக்கு அழைப்புவிடும் அது, தனியார் மயமாக்கத்தை நிறுத்துவதுடன் சேர்த்து தேசிய வளங்களை விற்பதை நிறுத்துமாறும் கோருகிறது. ஆயினும், குறிப்பிடத்தக்க வகையில், அந்த வேலைத் திட்டம், யுத்தக் காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் சம்பள இழப்பீடு, சமூக சேவைகள் மற்றும் விலை மானியங்கள் பற்றி எதுவுமே கூறவில்லை.

இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை தீவிரமாக பாதுகாப்பது ஜே.வி.பி.யின் திசையமைவில் மிகவும் கெடுநோக்குள்ள இலட்சியமாகும். ஜே.வி.பி.யின் இந்திய-விரோத மற்றும் தமிழர்-விரோத வாய்வீச்சுக்கள், அரசாங்கத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான பொலிஸ் அரச நடவடிக்கைகளை பயன்படுத்தத் தயங்காத கொழும்பு ஸ்தாபனத்தின் மிக மிக பிற்போக்கு சக்திகளுடன் சமரசம் செய்துகொள்வதை இலக்காகக் கொண்டது. "நாட்டை முன் கொண்டு செல்வதற்கு" அத்தகைய வழிமுறைகளை ஆதரிப்பதோடு அவர்களது சேவை தேவைப்படின் அதையும் செய்வதற்கான தயார்நிலையையும் ஜே.வி.பி. சமிக்ஞை செய்கின்றது.