World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The assassination of Dr. George Tiller

டாக்டர் ஜோர்ஜ் டில்லர் படுகொலை

By Kate Randall
3 June 2009

Back to screen version

ஒரு வலதுசாரி கருக்கலைப்பு எதிர்ப்பு வெறியனால் டாக்டர் ஜோர்ஜ் டில்லர் படுகொலை செய்யப்பட்டது ஒரு தனிப்பட்ட பெரும் துன்பியல் மட்டும் அல்லாமல் அடிப்படை ஜனநாயக உரிமைகள்மீது ஒரு மிருகத்தனமான தாக்குதலும் ஆகும். அமெரிக்க அரசியல் வாழ்வின் இழிந்த உடற்கூற்றை இது அம்பலப்படுத்தியுள்ளதுடன் நாட்டின் ஆளும் உயரடுக்கு ஜனநாயகத்தைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாத தன்மையையும் காட்டுகிறது.

பொது இடங்களுக்கு வரும்போது எப்பொழுதும் குண்டு துளைக்காத கவசத்தை அணியும் டாக்டர் ஜோர்ஜ் டில்லர் ஞாயிறன்று அவருடைய திருச்சபைக்கு வெளியே தலையில் ஒரு குண்டு பாய்ந்ததின் மூலம் கொல்லப்பட்டார். தாமதித்த கருக்கலைப்புக்களை செய்யும் நாட்டின் ஒரு சில மருத்துவ மனைகளுக்கு அவர் மருத்துவ இயக்குனராக இருந்தார். அவருடைய மரணத்தின்போது 67 வயதாகி இருந்த அவர் தன் மனைவி ஜேன், மூன்று மகள்கள்--இருவர் மருத்துவர்கள்--- ஒரு மகன் மற்றும் பத்து பேரக்குழந்தைகளை விட்டுச் சென்றார்.

குடும்பம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது: "பல முறை அச்சுறுத்தல்கள் வன்முறைகள் என்று வந்த போதிலும், ஜோர்ஜ் மகளிருக்கு உயர்தர சுகாதாரப் பாதுகாப்பை அளிக்கத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். ஒரு நல்ல கணவர், தந்தை, பாட்டனார், எல்லா இடங்களிலும் உள்ள மகளிருக்கு உழைத்துப் பணிபுரிந்தவர் என அவர் நினைக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்."

சுட்டதாகக் கூறப்படுபவன், 51வயது ஸ்கொட் ரோடர், புதனன்று கன்சாஸில் விச்சிடா நீதிமன்றத்தில் வீடியோவில் சிறையில் இருந்து தோன்றினான்; டாக்டர் டில்லர் கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளான். இதைத்தவிர அவனை நிறுத்த முயன்ற இருவரை அச்சுறுத்தும் வகையில் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

நீண்ட காலமாக கருக்கலைப்பு எதிர்ப்பு வெறிச் சான்றுகளையும் தீவிர வலதுசாரி பாசிச அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்ட சான்றையும் ரோடர் கொண்டுள்ளான். Envelope தயாரிக்கும் ஆலையில் முன்பு பணிபுரிந்த வந்த இவன் சமீபத்தில் சிறு வேலைகளைச் செய்து வந்தான்.

வரி-எதிர்ப்பு Freemen இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் கூட்டாட்சி, மாநிலச் சட்டங்களுக்கு கட்டுப்படாத "இறைமை பெற்ற குடிமக்கள்" என்று பிரகடனப்படுத்தும் One Supreme Court அமைப்பின் உறுப்பினராகவும் இவன் இருந்தான்.

டாக்டர் டில்லரின் விசிட்டா மருத்துவமனை ஊழியர்கள் அனைவராலும் ரோடர் நன்கு அறியப்பட்டிருந்தான். இம்மருத்துவமனை முன்பு கருக்கலைப்பு வெறியர்கள் அன்றாடம் வாடிக்கையாக வந்து "கொலைகார டில்லர்!", "இங்கு குழந்தைகள் கொலை செய்யப்படும்!", "டில்லரின் படுகொலைக்களம்!" என்றெல்லாம் கூச்சலிடுவர்.

கருக்கலைப்பு-எதிர்ப்பு வெறி, ஸ்கொட் ரோடர் மற்றும் அவனுடைய செயல்களில் முற்றிலும் உருவகப்பட்டிருந்தது; இதற்கு சமய வெறியாளர்கள், வலதுசாரி செய்தி ஊடக பிரமுகர்கள் மற்றும் குடியரசுக் கட்சியிலேயே முக்கிய நபர்கள் ஆகியோரடங்கிய இணையம் ஆதரவைக் காட்டியது.

டாக்டர் டில்லரின் கொலையை அடுத்து, கருக்கலைப்பு-எதிர்ப்புக் குழுவான Operation Rescue வின் நிறுவனர் Randall Terry, டாக்டரை "ஏராளமானவர்களை கொன்றவர்" என்று விவரித்து அறிவித்தார்: "எதை விதைத்தாரோ, அதைத்தான் அவர் அறுவடை செய்தார்." "வரலாற்றின் கொடுமையானவர்களுள் ஒருவராக அவர் நினைவு கொள்ளப்படுவார்" என்றும் அவர் கூறினார்.

Fox News ஐச் சேர்ந்த Bill O'Reilly பல முறை தன்னுடைய உரை நிகழ்ச்சியில் டாக்டர் டில்லருக்கு எதிராகச் சாடி, அவர் "நாஜி குணம்" படைத்த குற்றவாளி என்றும் "தீர்ப்பு நாளை" அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தீயமுறையில் எச்சரித்துள்ளார்.

டில்லர் மீதான தன்னுடைய தாக்குதல்களை அவர் இறந்தபின்னும் ஓ ரீய்லி காத்துள்ளார். தன்னைக் குறைகூறுபவர்களை உதறித்தள்ளும் வகையில் அவர் எழுதினார்: "டில்லரைப் பற்றி நாங்கள் கூறிய ஒவ்வொன்றும் உண்மைதான்."

Women's Health Care Services என்று ஜோர்ஜ் டில்லர் மருத்துவ இயக்குனராக இருந்த அமைப்பு அளித்த பணிகள் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உட்பட்டவை, அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டவை.

கடந்த ஞாயிறு டாக்டர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, விச்சிட்டா மருத்துவமனை, 20வது வாரத்திற்கு பின்னர் கொடூரமான கருக் குறைபாடுகள் அல்லது கருவினால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதை எதிர்கொள்ளும் மகளிர் கருவை கலைக்கும் பெரும் வேதனை தரும் முடிவை எடுத்தபின் மருத்து உதவியை நாடும் மூன்று அமெரிக்க மருத்துவமனைகளில் ஒன்றாகும். நாடு முழுவதில் இருந்து மகளிர் டாக்டர்களாலும், மருத்துவமனைகளினாலும் டில்லரின் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்; ஆனால் பிற மகளிர் மருத்துவமனைகள் நாடெங்கும் எதிர்கொள்ளுவது போல் இங்கும் பெரும் அச்சுறுத்தலை கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள் மூலம் எதிர்கொண்டனர்; கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள் இழிசொற்களை கூறுவதுடன் கொடூர புகைப்படங்கள் அடங்கிய அட்டைகளையும் உயர்த்திக் காட்டுவர்.

1973 TM Roe v. Wade தீர்ப்பு அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியதில் இருந்து, இந்த மருத்துவமனைகள் கருக்கலைப்பு எதிர்ப்பாளர்களுக்கு இலக்காகத்தான் உள்ளன. டாக்டர்களும் மற்ற மருத்துவமனை ஊழியர்களும் "வாழ்க்கைக்காக" என்ற குழுக்களின் உறுப்பினர்கள் ஏற்பாடுசெய்த வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமுற்றுள்ளனர்.

* மார்ச் 10, 1993: புளோரிடாவில் Pensacola மருத்துவமனைக்கு வெளியே டாக்டர் டேவிட் கன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* டிசம்பர் 30, 1994: போஸ்டன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் இரு வரவேற்பு உதவியாளர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் ஐவர் காயமுற்றனர்.

* அக்டோபர் 23, 1998: நியூ யோர்க் புறநகரான பபலோவில் இருந்த தன்வீட்டில் டாக்டர் பார்நெட் ஸ்லெபியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* டாக்டர் ஜோர்ஜ் டில்லரே ஆகஸ்ட் 19, 1993 அன்று ஒரு படுகொலை முயற்சிக்கு உட்பட்டிருந்தார்; அப்பொழுது தப்பிப் பிழைத்தார்; அவருடைய விச்சிட்டா மருத்துவமுனையில் இரு தோள்களிலும் அன்று சுடப்பட்டிருந்தார்.

கொலராடோவில் பொல்டரில் மருத்துவராக உள்ள டாக்டர் வாரன் ஹெர்ன் தன்னுடைய நண்பரும் சக ஊழியருக்கும் நடந்த கொலையை ஒட்டி வெளியாகியுள்ள அச்சுறுத்தலைப் பற்றிக் கூறினார். "நான் ஆழ்ந்த வேதனையில் உள்ளேன், பெரும் சீற்றத்திலும் உள்ளேன்; இந்நாட்டில் ஒரு பாசிச இயக்கம் உள்ளது என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." Colorado Indpendent ஏட்டிடம் ஞாயிறன்று ஹெர்ன் கூறினார்: "நாம் ஒன்றும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க ஈராக் மீது படையெடுக்கத் தேவையில்லை. அவர்கள் இங்கேயே நம் டாக்டர்களைக் கொன்று கொண்டிருக்கின்றனர்."

இந்த மிரட்டல் பிரச்சாரத்தை குடியரசுக் கட்சி பயன்படுத்துவதைப் பற்றி அவர் குறிப்பாக தாக்கினார்; அது பல ஆண்டுகளாக இதை தன்னுடைய அரசியல் துணைக்கருவியாக கருதி வந்துள்ளது.

"ஒரு கருக்கலைப்பு எதிர்ப்புப் படுகொலையாளியால் டாக்டர் டில்லர் கொலையுண்டார்; 35 ஆண்டுகளாக கருக்கலைப்பு எதிர்ப்பு வெறித்தன அலங்காரச் சொற்கள் மற்றும் மிரட்டல், படுகொலை வன்முறை, இந்த இயக்கத்தை குடியரசுக் கட்சி பயன்படுத்துதல் ஆகியவற்றின் தவிர்க்க முடியாத விளைவினால்தான் அது நேர்ந்துள்ளது."

ஹெர்ன் அப்பட்டமாக பெரும் குற்றங்களின் அடித்தளத்தில் இருக்கும் அரசியல் உண்மைகளை விளக்கியுள்ளது ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனம் மற்றும் உடந்தையாக நிற்பதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளது.

ஜனாதிபதி ஒபாமா ஒரு வெற்றுத்தன இரு சொற்றொடர்களை கொண்ட அறிக்கையை கொலை பற்றி வெளியிட்டுள்ளார்: "டாக்டர் ஜோர்ஜ் டில்லர், திருச்சபைக்கு இக்காலை தன் துதிகளைக் கூற சென்று கொண்டிருக்கையில் கொலையுண்ட செய்தி பற்றி நான் அதிர்ச்சியும் சீற்றமும் அடைகிறேன். கருக்கலைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளில் அமெரிக்கர்களாகிய நம்மிடையே எத்தகைய ஆழ்ந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவை இழிந்த வன்முறையினால் தீர்க்கப்பட முடியாதவை."

கடந்த மாதம் நோத்ர் டாம் பல்கலைக்கழகத்தின் துவக்க உரையில் அவர் கொடுத்த முக்கிய கருத்தை மீண்டும் நினைவுறுத்தும் வகையில் அவர் மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டபூர்வ உரிமைகள், மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையானதை அளித்தல் என்பது பற்றியும் வேறு சிலர் மிரட்டுதல் மூலம் அந்த உரிமையை மகளிருக்கு மறுப்பது பற்றியும், இம்முறை படுகொலையில் ஈடுபட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்டார்.

ஆனால் கொலைகாரனையோ அல்லது கிறிஸ்துவ வலதில் இருக்கும் அந்த சக்திகள் வலதுசாரி செய்தி ஊடகம் அல்லது இத்தகைய வன்முறையை வளர்க்கும் குடியரசுக் கட்சி ஆகியவற்றை அவர் கண்டிக்கவில்லை.

ஜனநாயகக் கட்சி முழுவதும் இருப்பதைப் போலவே, ஒபாமாவும் இச்சக்திகளால் மிரண்டு போய் இருக்கிறார். வெளிப்படையாக இருப்பதைக் கூறுவதற்கு அவருக்கு விருப்பமும் இல்லை, அவருக்குத் திறனும் இல்லை.: அரசியல், சமய மற்றும் செய்தி ஊடக அமைப்புக்களின் இத்தீய இணைப்பு அமெரிக்காவில் வீட்டிலேயே வளர்க்கப்படும் பாசிசத்தை போற்றிப் பாதுகாப்பது பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

இந்தக் காரணிகள் அரசியல் மற்றும் அறநெறித்தன்மையில் வன்முறைச் செயல்களை தூண்டிவிடுவதில் பொறுப்பை கொண்டுள்ளன --9/11 தாக்குதல்களுக்கு புறத்தே; இவை அமெரிக்காவிற்குள் பயங்கரவாதம் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ள இறப்புக்கள், அழிவுகள் ஆகியவற்றில் பெரும்பாலானவற்றிற்கு காரணம் ஆகும். ஆயினும் கூட அவை அரசியல் நடைமுறை, செய்தி ஊடகத்தால் மிருதுவாக நடத்தப்படுகின்றன.

இன்று மனச் சிதைவுற்ற கூறுபாடுகள் விச்சிட்டா கொலைகாரன் போன்றோர் மகளிர் மருத்துவமனைகள், அவற்றிலுள்ள ஊழியர்களை தாக்கும் அளவிற்கு ஊக்கம் பெற்றுள்ளனர். நாளை அவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக வேலைகள் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரங்களைக் காக்கும் இயக்கத்திற்கு எதிராகவும் இயக்கப்படலாம்.

ஜனநாயகக் கட்சி மற்றும் ஒபாமாவின் டாக்டர் டில்லர் இழிந்த முறையில் படுகொலைக்கு காட்டும் வெற்றுத்தன எதிர்கொள்ளல் இவர்கள் பாசிச கூறுபாடுகளுக்குத்தான் மதிப்பு கொடுப்பர் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; ஏனெனில் அவர்கள் அமெரிக்க அரசியல் நடைமுறையின் குறிப்பிடத்தக்க பிரிவுகளின் ஆதரவிற்கு உட்பட்டவர்கள்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு--சட்டபூர்வ உரிமையான கருக்கலைப்பு உட்பட-- தொழிலாளர்களில் பரந்த பிரிவுகள் சுயாதீனமாக திரட்டப்பட்டு, ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் முதலாளித்துவம் மற்றும் அது ஆதரவு கொடுக்கும் பிற்போக்குத்தன அரசியல் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதின் மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved