World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands of soldiers perished in Sri Lankan war

இலங்கை யுத்தத்தில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்

By Sarath Kumara
28 May 2009

Back to screen version

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்ட யுத்தத்தில் அரசாங்க படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களின் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையை முதற் தடவையாக கடந்த வாரம் வெளியிட்டார்.

அரசுக்குச் சொந்தமான ஐ.டி.என். தொலைக் காட்சி சேவையில் உரையாற்றிய இராஜபக்ஷ, 2006 ஜூலையில் அரசாங்கம் இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்து 6,261 பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 29,551 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் ஏற்றுக்கொண்டார். காயமடைந்தவர்களில் 2,556 பேர் நிரந்தரமாக முடமாக்கப்பட்டுள்ளனர்.

இராணுவம் வடக்கில் புலிகளின் கோட்டையான கிளிநொச்சிக்கு எதிரான அதன் தாக்குதல்களை துரிதப்படுத்திய நிலையில், கடந்த அக்டோபரில் இருந்து உயிர் மற்றும் உடல் சேதங்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்தியது. இந்த முடிவுக்கு "பாதுகாப்புக் காரணங்களை" மேற்கோள் காட்டிய போதிலும், உயிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது யுத்தத்துக்கு எதிரான பரந்த வெகுஜன எதிர்ப்புக்கும், அதே போல் இராணுவத்தினர் மத்தியில் அதிருப்திக்கும் தூண்டுகோளாகும் என்ற அச்சம் அரசாங்க வட்டாரத்தில் இருந்தமையே உண்மையான காரணமாகும்.

கோட்டாபயவின் சகோதரரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் ஏறத்தாழ நடைமுறையில் தணிக்கையை திணித்ததோடு, முன்னரங்குப் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கும் தடை விதித்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி மீது இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை பற்றி இராணுவமும் அரசாங்கமும் மீண்டும் மீண்டும் பொய் கூறுகின்றன. ஜனவரி 20 முதல் மே 7ம் திகதி வரை, 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 16,781 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

மே 19 அன்று புலிகளின் கடைசி எதிர்ப்பையும் நசுக்கியதில் இருந்து நடந்துவரும் அதன் "வெற்றிக்" கொண்டாட்டங்களின் பாகமாகவே இராணுவத்தின் சேத எண்ணிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. ஜனாதிபதி இராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளும் புலிகளின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ளவும் எந்தவொரு விமர்சனத்தையும் நிராகரிக்கவும் முயற்சிக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக அடுத்து அடுத்து கொடியை ஆட்டும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஊடகங்கள் ஊடாக எதிரொலித்த இந்த பிரச்சாரத்தின் இலக்கு, சிங்கள பெளத்த அரசுக்கு தமது உயிர்களைக் கொடுத்த "யுத்த வீரர்களை" இடைவிடாது பாராட்டுவதாக இருந்தது. எடுத்துக் காட்டாக, சண்டே லக்பிம பத்திரிகைக்கு எழுதிய பேராசிரியர் குலதுங்க, வீரர்கள் நிச்சயமாக பெளத்த சொர்க்கத்துக்கே சென்றுள்ளனர் என பிரகடனம் செய்தார். "யுத்தக் களத்தில் உயிரிழக்கும் சிப்பாய்கள், பண்டைய யுகத்து ஞானிகள் அடைவதற்காக பிராயச்சித்தம் செய்த சுவர்க்கத்தின் முழுச் சிறப்பையும் அடைவர், என்பது வட பாரதத்தின் ஒரு நிலைப்பாடாகும்," என அவர் எழுதுகிறார்.

இவ்வாறு உயிரிழந்த சிப்பாய்களுக்கு புகழைக் குவிப்பது, பொருளாதாரத் தேவைகளால் ஆயுதப் படையில் இணைந்துகொள்ளத் தள்ளப்பட்ட பெரும்பாலானவர்களின் துன்பகரமான யதார்த்தத்தை மறைத்துவிடுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் படி, இலங்கையில் வேலையின்மை 22.4 வீதமாகும். கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் வேலையற்றோர் வீதம் மிகவும் அதிகமாகும். வறுமையில் இருந்து விடுபடவும் தமது குடும்பங்களுக்கு உதவவும், ஆண்களும் பெண்களும் 18 வயதாகும் போதே ஆயுதப் படைகளில் இணைந்துகொள்கின்றனர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் பலர், வெறும் மூன்று மாத பயிற்சியின் பின்னர் யுத்தத்துக்கு அனுப்பப்பட்டனர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படி, கடந்த ஆண்டில் மட்டும் இராணுவம் கிட்டத்தட்ட 80,000 இளைஞர்களை சேர்த்துக்கொண்டுள்ளதோடு அதன் மொத்த எண்ணிக்கை 200,000 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை கொழும்பைத் தளமாகக் கொண்ட நேஷன் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய ஜெனரல் பொன்சேகா, "80,000 பேர் இராணுவத்தில் சேர்ந்திருக்காவிட்டால் யுத்தம் சாத்தியமானதாக இருந்திருக்காது, இராணுவத்தில் சேர்வதற்கு விரும்புபவர்களை துணிவிழக்கச் செய்யும் செய்திகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும்," என கூறியதன் மூலம் யுத்தத்தைச் சூழவுள்ள இரகசியத்தை நியாயப்படுத்தினார். சிப்பாய்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய "சிறு காயங்களுக்கு" உள்ளான சிப்பாய்களை இராணுவம் மீண்டும் முன்னரங்குப் பகுதிகளுக்கு அனுப்பியது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.

எந்தத் தரத்துடனும் ஒப்பிடும் போதும் இந்த இராணுவச் சேத எண்ணிக்கை உயர்ந்ததாகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பில், அமெரிக்க இராணுவம் முறையே 4,301 சிப்பாய்களையும் 690 சிப்பாய்களையும் இழந்தது. ஒப்பீட்டு அடிப்படையில், 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் 6,000 சிப்பாய்களின் இழப்பானது, 306 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 92,000 சிப்பாய்கள் உயிரிழப்பதற்கு சமமாகும்.

மொத்தத்தில், 1983ல் வெடித்த இரத்தக்களரி தமிழர்-விரோத படுகொலைகளோடு தொடங்கிய யுத்தம், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் 26 ஆண்டுகால யுத்தத்தின் உயிர்ச் சேதம் 80,000 க்கும் 100,000 க்கும் இடைப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. பெருந்தொகையானவர்கள் முடமாக்கப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இலட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். யுத்த வலயங்களில் இருந்து அண்மைய வாரங்களில் வெளியேறிய கிட்டத்தட்ட 300,000 பொது மக்கள் இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இராஜபக்ஷ அரசாங்கம் 602 பில்லியன் ரூபாய்களை அல்லது சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை யுத்தத்தில் வீண் செலவு செய்துள்ளது. இது 2008ல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 14 வீதத்துக்கு சமமாகும். இராணுவத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மாறாக, மேலும் 50 வீதத்தால் அதிகரிக்கப்படும் என திங்களன்று ஜெனரல் பொன்சேகா ஐ.டி.என். தொலைக் காட்சிக்குத் தெரிவித்தார். "எங்களது பலம் 200,000 ஆகும். அது விரைவில் 300,000 ஆகும்... இளைஞர்கள் எங்களுடன் வேகமாக இணைவதை காண விரும்புகிறோம். மாதம் 10,000 பேரை சேர்ப்பதில் எங்களுக்கு மறுப்பு இல்லை; எமது இலக்கை அடைவதற்கு எங்களுக்கு மேலும் ஒரு தொகை சிப்பாய்கள் தேவை."

உலகிலேயே பெரிய படையணியில் ஒன்றான இந்த பிரமாண்டமான இராணுவம், குறிப்பாக தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்காகப் பயன்படுத்தப்படும். "முன்னர் செய்தது போல் ஒரு பயங்கரவாத குழுவை கட்டியெழுப்புவது அவர்களுக்கு இலகுவாக இருக்காது," என பொன்சேகா ஐ.டி.என். சேவைக்குத் தெரிவித்தார். இராணுவத்தின் இந்த விரிவாக்கம் மோதல்களின் இனவாதப் பண்பை கோடிட்டுக் காட்டுகிறது. "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பதற்கு அப்பால், இந்த நீண்டகால உள்நாட்டு யுத்தமானது உழைக்கும் மக்களை இனவாத வழியில் பிளவுபடுத்த தமிழர்-விரோத பேரினவாதத்தை சுண்டிக்கொண்ட தீவின் சிங்கள முதலாளித்துவக் கும்பலின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்க வைத்துக்கொள்ளவே முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் செலவை உழைக்கும் மக்கள் மீது கட்டியடிக்க அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில், எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்காகவும் யுத்தகாலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பிரமாண்டமான பொலிஸ் அரச இயந்திரம் பயன்படுத்தப்படும். "யுத்த வீரர்கள்" காட்டிய அர்ப்பணிப்பின் ஆர்வத்தை தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இராணுவத்துக்குள் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தில் பீரங்கிக்கு இரையாகப் பயன்படுத்தப்பட்ட உயிரிழந்த சிப்பாய்கள், அவர்களது குடும்பத்தின் மீதும் மற்றும் மிகவும் பொதுவில் உழைக்கும் மக்கள் மீதும் புதிய பொருளாதார சுமைகளை திணிக்க நயவஞ்சகமாக சுரண்டிக்கொள்ளப்படுகின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved